வெள்ளி, ஜூன் 30, 2006

இந்தியாவின் மதச்சார்பின்மை - 2

சாணக்கியன், வஜ்ரா ஷங்கர், அருணகிரி ஆகியோர் கேட்ட அனுப்பிய கேள்விகளுக்கான என்னுடைய பதில்கள். இன்னும் பல கேள்விகள் எழுந்துள்ளன. என்னால் முடிந்த வரை பதிலளிக்க முயல்கிறேன்:

கேள்வி 1. முஸ்லீம் நாடுகளில் ஹஜ் மானியம் அளிக்கப்படுவதில்லை. இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. முஸ்லீம் நாடுகளில் சிறுபான்மையினருக்குச் சலுகைகள் எதுவும் அளிக்கப்படுவதில்லை.
கேள்வி 10. ஹஜ் பயணத்துக்கு மானியம் இருப்பது போல இந்துப் பயணங்களுக்கு ஏன் மானியம் இல்லை.

விடை
இதற்குத்தான் நான் என்னுடைய கருத்துக்களின் அடிப்படையைக் குறிப்பிட்டிருந்தேன். நாம் மட்டும் ஒரு முஸ்லீம் நாடாக இருந்திருந்தால் நமக்கும் ஹஜ் மானியம் கிடைக்குமே என்று முஸ்லீம்கள் கருதினால் இந்தியாவிலும் அவர்களுக்கு அதை கொடுப்பதை சரி என அவர்கள் நினைக்கலாம். அரசு மானியங்கள் ஒழிக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

http://masivakumar.blogspot.com/2006/06/blog-post_20.html

அதைச் சொல்ல வேண்டியது யார் என்பதுதான் கேள்வி. முஸ்லீம்கள் சமூகப் பெரியவர்கள் நம்முடைய மதக்கடமையைச் செய்ய அரசு உதவியை ஏற்றுக் கொள்வது சரியல்ல என்று உணர்ந்தால் "அவர்கள்" தம் சமூகத்தைத் திருத்த வேண்டும். அதன் மூலம் அரசுக் கொள்கையை மாற்ற வேண்டும். வெளியிலிருந்து இந்து அமைப்புகள் சுட்டிக் காட்டும் போது வீம்புதான் அதிகமாகும்.

கேள்வி 2. இந்தியாவில் குடியரசுத் தலைவரும், பிரதம் மந்திரியும் இந்துக்கள் அல்லாதவர்கள். ஒரு முஸ்லீம் நாட்டில் ஒரு முஸ்லீம் அல்லாதவர் நாட்டுத் தலைவர் ஆக முடியாது.
விடை
இந்திய அரசியலமைப்பு படி மதத்தின் காரணமாகவோ, மொழியின் காரணமாகவோ எவருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படல் கூடாது. பெரும்பான்மையினர் மட்டும்தான் அரசுப் பதவிகளுக்கு வரலாம் என்ற முஸ்லீம் நாடுகளின் கொள்கையும் இந்தியாவுக்கு வர வேண்டுமா? இந்தி மொழி பேசும், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் மத்தியப் பதவிகளுக்கு வரலாம் என்று நிலமை மாற வேண்டுமா?

இந்தியாவில் தகுதியுள்ள யாரும் நாட்டின் குடியரசுத்தலைவராக முடியும் என்று இருப்பது இந்தியாவின் மாட்சி. இந்த விஷயத்தில் இசுரேலிடமிருந்தோ, சவுதி அரேபியாவிடமிருந்தோ நாம் கற்க வேண்டியதில்லை. அவர்கள் நம்மைப் பார்த்துத் திருந்த வேண்டும்.


கேள்வி 3. முஸ்லீம் மதத் தலைவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக கட்டளைகள் பிறப்பிப்பதில்லை.
விடை: இதையும் சரி செய்ய வேண்டியது முஸ்லீம் மதச் சீர்திருத்தவாதிகளே தவிர வெளியிலிருந்து பிற மதத்தினர் குற்றம் சாட்டுவது உதவாது. எங்கெல்லாம் வறுமையும் பின் தேக்கமும் உள்ளதோ அங்குதான் முஸ்லீம்களோ பிற மதத்தினரோ வன்முறையில் ஈடுபடுகின்றனர். அதை மதத்தைக் குறித்து முத்திரை குத்துவது தகாது.

கேள்வி 4. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்களில் முஸ்லீம் முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம் பெரும்பான்மை ஜம்மு காஷ்மீரில் அது இதுவரை நடக்கவில்லை.

விடை: இதுவும் இந்துக்களுக்குப் பெருமை, நம்முடைய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. காஷ்மீர் மக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை வளரும் போது அவர்களும் மதத்தைப் பார்க்காமல் வாக்களிக்கலாம். காஷ்மீரின் மன்னர் இந்துவாக இருந்ததை வரலாற்றில் படித்திருப்பீர்கள்.

கேள்வி 5. பாகிஸ்தானிலும், வங்காள தேசத்திலும் இந்துக்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது. இந்தியாவில் வளர்ந்து கொண்டே போகிறது.
விடை: பாகிஸ்தான், வங்காளதேச அரசுகள் சிறுபான்மையினரை ஒடுக்குவது கடும் கண்டனத்துக்குரியது. அதனால் விளையும் விளைச்சலை அவர்கள் அனுபவிக்கிறார்கள், அனுபவிப்பார்கள். இந்திய மக்களும் அரசும் நல்லபடி நடந்து கொள்வதை, யாரோ ஒரு சில முரட்டு நாடுகள் செய்வதைப் பார்த்து மாற்றிக் கொள்ள முடியாது. நம்மை விடச் சிறப்பாக இருப்பவர்களைப் பார்த்து மேம்பட முயல வேண்டுமே தவிர, நம்மை விட கீழே இருப்பவரை நகல் செய்யக் கூடாது.

கேள்வி 6. இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதியை முஸ்லீம்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்ட இந்தியர்கள் தமது கோயில்களை மீட்க ஏன் இன்னும் போராட வேண்டியிருக்கிறது.
விடை: பிரிவினை பற்றி என்னுடைய கருத்தை ஏற்கனவே எழுதி விட்டேன். இந்தியாவில் இருக்கும் பகுதிகள் இந்துக்களுக்களின் ஏகபோகம் கிடையாது. எந்த மாறுதல்கள் ஏற்பட வேண்டுமானாலும், தொடர்புள்ள எல்லோரின் சம்மதமும் வேண்டும்.

கேள்வி 7. சோமநாதர் கோயிலை சீரமைக்க அரசு பணத்தைச் செலவளிக்காமல் பொது மக்களிடம் நிதி திரட்ட வேண்டும் என்று வலியுறுத்திய காந்தி, தில்லியில் இடிக்கப்பட்ட மசூதிகளை அரசு செலவில் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியது ஏன்?

விடை: அப்படி காந்தி சொல்லியிருந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. கோயில்கள் கட்டுவதும், மதத்தைப் பரப்புவதும் அரசின் வேலை இல்லை என்பதுதான் காந்தியின் கருத்து என்று எனது புரிதல். சோமநாதபுரம் கோயிலைப் பற்றி அந்த அடிப்படையில் கூறியிருக்கலாம். பரவலான மக்களிடம், கோயிலை மறுசீரமைக்க ஆதரவு இருந்தால் அதற்கான நிதியை அவர்களிடமிருந்து திரட்டி பணியைத் தொடங்க வேண்டும். அரசுப் பணத்தை அதற்குச் செலவளிக்கக் கூடாது என்பதில் இருக்கும் நியாயம் எனக்குப் புரிகிறது.

தில்லியில் மசூதிகளை அரசு செலவில் சரி செய்ய வேண்டும் என்பதின் பின்னணி என்ன என்று தெரியவில்லை. மசூதிகளை கலவரக் கூட்டத்தினிடமிருந்து பாதுகாக்கத் தவறிய அரசுதான் அதைச் சரி செய்ய வேண்டும் என்ற பொருளில் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

கேள்வி 8. காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்தது ஏன்? அதன் மூலம் அவருக்குக் கிடைத்த நன்றி என்ன?

விடை: இமாலயத் தவறு என்று வேறு ஒரு காரணத்துக்காக மன்னிப்புக் கேட்ட ஒத்துழையாமை இயக்கத்துக்கு முந்தைய முயற்சிகள்தான் கிலாபத் இயக்கம். முஸ்லீம்களின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும், இந்திய மக்கள் முஸ்லீம்கள் விரும்பினால் அவர்கள் குரலையும் உலகுக்குக் காட்ட இந்திய மக்கள் தயாராக இருப்பார்கள் என்று கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் முஸ்லீம்களுக்கே அது ஒரு தர்மசங்கடமான முடிவாகப் போய் விட்டது.

இன்றும் பல மதங்களைக் கொண்ட நாடு என்ற முறையில் இந்தியா முஸ்லீம்களை பாதிக்கும் விஷயங்களில் உலக அரங்கில் முஸ்லீம் சார்பான நிலையை இந்திய அரசு எடுப்பதுதான் நியாயம். இதற்காக என்னை இன்னும் தீவிரமாக போலி மதச்சார்பின்மைவாதி என்று சொல்லாமல் என்னுடைய அடிப்படை நம்பிக்கைகளை புரிந்து கொள்ள முயலுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி 9. இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் இந்திய மாநிலங்களில் அவர்களுக்கு ஏன் சிறுபான்மை பாதுகாப்பு இல்லை?
விடை: அப்படி இல்லையென்றால் அது கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு குழுவும், கூட்டமும், இன்னொரு குழுவுக்கு அதன் உரிமைகளை மறுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

கேள்வி 11. சிறுபான்மை மதப் பள்ளிகளில் அவர்கள் மத நூல்கள் போதிக்கப்படும்போது, இந்துப் பள்ளிகளில் ஏன் இந்து மத நூல்கள் போதிக்கப்படுவதில்லை?
விடை: இந்து மதப்பள்ளிகளில் இந்து நூல்கள் போதிக்கப்படுகின்றன. நான் படித்த இந்து பள்ளியில் தினசரி இந்து மதப்பாடல்கள்தான் பாடப்படும். ஆனால் அரசுப் பள்ளிகளில் இந்து மத நூல்கள் போதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொன்னால் அது விவாதத்துக்குரியதாகி விடும்.

கேள்வி 12. கோத்ராவுக்குப் பிறகான கலவரங்களை பெரிது படுத்திக் காட்டும்போது, காஷ்மீரில் கொல்லப்பட்ட 4 லட்சம் இந்துக்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?
விடை: கோத்ராவுக்குப் பிறகான கலவரங்கள் ஒரு பொறுப்பான அரசும், காவல் துறையும் வேண்டுமென்றே தூண்டி விட்டு அல்லது அடக்க முனையாமல் எரிந்த ஒன்று என்பது குற்றச்சாட்டு. காஷ்மீரில் கொல்லப்பட்ட இந்துக்களைப் பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுத்தும் தீவிரவாதிகளின் அடாவடியால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இரண்டுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

கேள்வி 13. கோயில் பணத்தை சிறுபான்மையினர் நலனுக்காகச் செலவளிப்பது ஏன்? சிறுபான்மையினரின் பணம் அவர்கள் விருப்பப்படி செலவளிக்கப்படுகிறதே?
கேள்வி 16. இந்துக் கோயில்களின் நிர்வாகியாக ஒரு முஸ்லீம் நியமிக்கப்படலாம். சிறுபான்மையினரின் மதத் தலங்களை நிர்வகிக்க ஒரு இந்து நியமிக்கப்பட முடியுமா?

விடை: எந்தக் கோயிலின் பணம் சிறுபான்மையினர் நலனுக்காக செலவிடப்படுகிறது? கோயில்களும் வழிபாட்டுத் தலங்களும் நம்பிக்கை உடைய மக்களின் பிரதிநிதிகளால்தான் நிர்வாகிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் தாம்தான் அந்தப் பிரதிநிதி என்று நினைத்தால் அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து கொள்ளலாம்.

இதுவே சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.

கேள்வி 14. பள்ளிகளின் சீருடை இருப்பது போல, சட்டத்தில் ஏன் ஒரே மாதிரியான சமூகச் சட்டங்கள் இல்லை?f
விடை: பள்ளியில் சேரும்போது சீருடை போடுவேன் என்று ஏற்றுக் கொண்டு சேர்கிறோம். இந்திய அரசியலமைப்பு உருவாக்கும் போது பல்வேறு பிரிவினர் தமது வாழ்க்கையை தமது கோட்பாடுகளின் படி நடத்தலாம் என்ற உறுதிமொழியுடன் இன்றைய இந்திய நாடு உருவானது. சீரான ஒரே சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அனைவரது சம்மதமும் வேண்டும். அதை இந்துப் பெரும்பான்மை மட்டும் முடிவு செய்ய முடியாது.

கேள்வி 15. காஷ்மீருக்கு 370வது பிரிவு ஏன்?
கேள்வி : நீங்கள் இந்தியக்குடிமகன் தானே? ஆம் எனில் காச்மீரத்தில் நிலம் வாங்க உங்களுக்கு உரிமை இல்லையே? எங்கே இருக்கிறது சமத்துவம்?

விடை: 370வது பிரிவின் கீழ்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. அதன் விதிகள் அனைத்தும் காஷ்மீர் மக்களே விரும்பி சொல்லும் வரை அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

370வது பிரிவு மாநிலம் ஒன்றுக்கு அதிக அதிகாரம் கொடுக்கிறது என்றால் அதை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்பதற்கு என்ன சொல்வீர்கள் தமிழ்நாட்டிலிருக்கும் நான் ஏன் காஷ்மீரில் போய் நிலம் வாங்க வேண்டும்? மும்பையிலிருந்து ஒருவர் ஏன் காட்டங்கொளத்தூரில் நிலம் வாங்கும் உரிமை இருக்க வேண்டும்? அது தேவையில்லாத சிக்கல்களைத்தானே வளர்க்கிறது?

இது ஒரு பெரிய கேள்வி. எனது அறிவுக்கு எட்டிய வரையில் இந்தியா முழுவதுமே நிலம் வாங்கிவிற்பதில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பது நல்லது.

கேள்வி 1. தமிழ் நாடு உட்பட 4 மாநிலங்களில் டாவின்சி கோட் திரைப்படம் ஆட்சியாளர்களால் தடை செய்யப் பட்டுள்ளது, அதுவும் பார்க்கப்படாமலேயே. உலகெங்கிலும் கிருத்தவ தலைமையிடம் உள்ள நாடுகளிலும் நகரங்களிலும் இந்தப்படம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஏன் இந்தியவின் மற்ற மாநிலங்களில் இந்தப்படம் கிருத்தவர்களின் மன நிலையை பாதித்துவிட்டதா? பதில், 'இல்லை' யெனில் ஏன் தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாஅது? இங்குதான் ஓட்டுவங்கி போலிமதச்சார்பின்மை ஓங்கி ஒலிக்கிறது.

விடை: டாவின்சி கோட் படத்தின் மீதான தடை கடுமையான கண்டனத்துக்குரியது. தீபா மேத்தாவின் தண்ணீர் படத்தை முடக்கியது போல உசைனின் ஓவியங்களைப் பழிப்பது போல இந்தத் தடையும் குறுகிய மனம் படைத்த மத சக்திகள் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதுதான்.

கேள்வி 2. பங்களாதேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் 1 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறதே, அவர்களை வெளியேற்றவேண்டுமா? அவர்கள் குறிப்பிட்ட ஓட்டு வங்கி மதத்தை சார்ந்தவர்கள் என்பதால்தானே மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? வேறு காரணங்கள் இருந்தால் சொல்லுங்கள்.

விடை: மக்கள் புலம் பெயருதல் என்பது பல காரணங்களுக்காக நடைபெறுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை ஒரே பகுதியாக இருந்தவை சில தலைவர்கள் சேர்ந்து கோடு கிழித்து விட்டதால், எல்லைப் புற மக்கள் ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருத வேண்டும், அந்தப் பக்கம் வறுமையில் வாடும் மக்கள், வேலை வாய்ப்புகளுக்காக இந்தப் பக்கம் வரக் கூடாது என்பது எவ்வளவு செயற்கையானது என்பதை நினைத்து பாருங்கள்.

நாளைக்கே சென்னையும், செங்கல்பட்டும் தனித்தனி நாடுகளாக ஆக்கப்பட்டால், செங்கல்பட்டிலிருந்து சென்னை வருபவர்கள் எல்லோரும் சட்டப்படி குற்றவாளிகள்தான். தர்மப்படி அது அவர்களது அடிப்படை உரிமை. இதிலும், பொருளாதார, அரசியலமைப்புகளின் ஆழ்ந்த விவாதங்கள் நடக்க வேண்டும்.

கேள்வி 2. இதுபோல் 1 கோடி இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தங்கி இருந்தால் இந்திய அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? மேம்போக்காக பதிலளிக்காமல் கேள்விக்குறி இட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

விடை: இலங்கைத் தமிழர்களுக்கு இங்கு வந்து பிழைப்பு நடத்த தேவை இருந்தால் அதை இங்கு வாழும் மக்களும் ஏற்றுக் கொண்டால் எந்த அரசும் எதையும் செய்ய முடியாது. அமெரிக்காவின் தென் பகுதிகளில் மெக்சிகோவைச் சேர்ந்த வேலைக்காரர்கள் லட்சக் கணக்கில் "சட்ட விரோதமாக" பணி புரிகிறார்களாம். அதை எதிர்த்து அரசியல்வாதிகள் வாய் கிழிய பேசுவதுதான் மிச்சம். ஒவ்வொரு வீடும், வணிக நிறுவனமும் அத்தகைய வேலைக்காரர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை நம்பி இருக்கும் போது, வாஷிங்டனில் இருக்கும் அரசுக்கு பேச்சு மட்டும்தான் மிஞ்சுகிறது.

அதே நிலைமைதான் பீகாரிலும், அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும் வாழும் வங்காள தேச குடியேறிகளுக்கும். தமிழ் ஈழ நண்பர்களுக்கு அந்த நிலைமை ஒரு போது வராது. தமிழ் நாட்டை விட வளமான நாடு கண்டு போர் நின்று ஈழம் கண்டதும், நம்ம ஊர் மக்கள் அங்கு குடி பெயரப் போகிறார்கள்.

கேள்வி 3. அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து உரிமைகள் மற்றும் சிறப்புச் சலுகைகளுடன் எல்லா வாய்ப்புகளையும் கல்வி, வேலை, அரசியல் ஆகிய துறைகளில் அதிகமாகவே பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும்போது புதிதாக இப்போது மத ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு காங்கிரச் உட்பட சில கட்சிகள் குரல் கொடுக்கின்றனவே, இது போலி மதச்சார்பின்மையின்றி வேறு என்ன?

விடை: உங்களுக்கும் இசுலாமிய நண்பர்கள் இருப்பதாகச் சொல்லியுள்ளீர்கள். முஸ்லீம்களுக்குச் சிறப்புச் சலுகைகள் அரசு ஆதரவு கொடுத்து உதவிகள் தேவையில்லை என்று நீங்கள் மனதார நம்புகிறீர்களா? நான் பார்த்த வரையில், சராசர் முஸ்லீமின் பொருளாதார, சமூக நிலைமை இன்னும் பல படிகள் உயர வேண்டும். அதற்கு இட ஒதுக்கீடுதான் தீர்வா என்றால் தெரியவில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கும் போது, அவர்களை விட வாய்ப்புகள் குறைவாக இருக்கும் முஸ்லீம்கள் பொது பிரிவில் போட்டி போட வேண்டும் என்பது சரி என்று படவில்லை.

இதற்கும் போலி மதச்சார்பின்மைக்கும் என்ன தொடர்பு? சமூகத்தின் ஒரு பகுதிக்கு அரசு உதவ வேண்டும் என்றால் அது போலி மதச்சார்பின்மை ஆகி விடாது. இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்த்ப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுக்கும் எல்லோரும் இந்துத்த்துவாவாதிகள் என்று சொல்வீர்களா என்ன?

கேள்வி 4: சிவில் சட்டங்கள் மதப்படி இருக்கலாமென்றால் கிரிமனல் சட்டஙகளும் ஏன் மதப்படி இருக்கக்கூடாது? ஒரு இச்லாமியர் திருடினால் கையை வெட்டவேண்டும் இச்லாமிய பெண் நடத்தை தவறினால் தெருவில் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்று இந்தியாவிலும் கடைபிடிக்கலாமே?

விடை:
நான் ஏற்கனவே சொன்னபடி முஸ்லீம் சமூகம் அப்படி விரும்பினால், கிரிமினல் சட்டங்களும் மதப்படி இருக்கலாம். அது வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். சிவில் சட்டங்களும் அவர்கள் விரும்பும்போது மாற்றப்படலாம். அதைப் பற்றிப் பேச நமக்கு உரிமை கிடையாது.

இந்துக் கோயில்களில் எல்லோரும் அர்ச்சகர் ஆக வேண்டும், இந்துக்கள் சாதியைக் குறிப்பிட்டு திருமண விளம்பரம் கொடுப்பது கூடாது என்று முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்த ஆரம்பித்தால் என்ன ஆகும்? நம்முடைய குறைகளைத்தான் நாம் நீக்க முயல வேண்டுமே ஒழிய, அடுத்தவரை பழிக்க நமக்கு உரிமை கிடையாது.


கேள்வி 5: அதை நமது நாகரீக சமுதாயம் ஏற்காது எனில் அதைப்போலத் தானே பலதார மணமும் 'தலாக்' விவாகரத்துக்களும்? உமது தங்கையை ஓர் இச்லாமியர் மதம் மாற்றி திருமணம் செய்து பின்னர் வேறு சில பெண்களையும் திருமணம் செய்து உங்கள் தங்கையை தலாக் விவாகரத்து செய்தால்தான் உங்களுக்கு அதில் உள்ள தவறுகள் புரியுமா? இதை தனி நபர் தாக்குதலாக தயை கூர்ந்து நினைக்கவேண்டாம். உங்களுக்கு புரிய வைப்பதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. மன்னிக்கவும்.

விடை:
இதில் மன்னிப்புக் கேட்க எதுவும் இல்லை. என் தங்கை மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் அதன் சாதக பாதகங்களைப் புரிந்து கொண்டுதான் செய்திருப்பாள். அந்த மதத்தின் சட்டங்கள் அநீதியானவை என்று நான் நினைத்தாலும் நானும் முஸ்லீமாக மாறினால் ஒழிய அதைப் பற்றி விவாதிக்க, குரானைப் படித்துப் புரிந்து கொண்டு குரானில் சொல்லியிருப்பது அப்படியில்லை என்று விவாதம் புரிய எனக்குத் தகுதி கிடையாது.

பல முஸ்லீம் நாடுகளில் முத்தலாக்கை தடை செய்துள்ளார்கள் என்று படித்தேன். அதே மாதிரி இந்திய முஸ்லீம் சமுதாயமும் தடை செய்ய முடிவு செய்யலாம். அதற்கு ஒரு மிகப் பெரிய தடைக் கற்கள் இந்துத்துவா சக்திகள்தான் என்பது எனது கருத்து. வெளியிலிருந்து அச்சுறுத்தல்கள் இருக்கும் போது, சீர்திருத்தவாதிகளின் பேச்சு சமூகத்தில் எடுபடாது. நாம் இதை விட்டுக் கொடுத்தால் இன்னும் என்ன என்ன கேட்பார்களோ என்று பழமை வாதிகள் நடுநிலையாளர்களை பயமுறுத்த்தி சீர்திருத்தங்களை முடக்கி விடுவார்கள்.

4 கருத்துகள்:

வஜ்ரா சொன்னது…

//
இன்றும் பல மதங்களைக் கொண்ட நாடு என்ற முறையில் இந்தியா முஸ்லீம்களை பாதிக்கும் விஷயங்களில் உலக அரங்கில் முஸ்லீம் சார்பான நிலையை இந்திய அரசு எடுப்பதுதான் நியாயம். இதற்காக என்னை இன்னும் தீவிரமாக போலி மதச்சார்பின்மைவாதி என்று சொல்லாமல் என்னுடைய அடிப்படை நம்பிக்கைகளை புரிந்து கொள்ள முயலுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
//
என்ன உளரல்..?
இந்தியா உலக அரங்கில் தன் நலன் பாதுகாக்கும் பொருட்டு தான் முடிவு எடுக்கவேண்டும். இந்தியாவின் நலன் அமேரிக்காவை ஆதரிப்பது, ஈரானை எதிர்ப்பது, இஸ்ரேலை ஆதரிப்பதில் உள்ளது என்றால் இந்தியா அதைச் செய்யவேண்டும். இஸ்லாமியர்கள் அதை விரும்பவில்லை என்பதற்காக அதைச் செய்யாமல் இருக்க முடியுமா?

முஸ்லீம்களின் போலி பயத்திற்கும், அவர்களது Fetish களுக்கும் இணங்கும் வகையில் முடிவு எடுக்கவேண்டும் என்று சொல்வது சிறிதும் ஞாயமற்ற சற்றும் சிந்திக்காத பதில்.

//
நான் ஏற்கனவே சொன்னபடி முஸ்லீம் சமூகம் அப்படி விரும்பினால், கிரிமினல் சட்டங்களும் மதப்படி இருக்கலாம்.
//
என்ன கொடுமை...காட்டுமிராண்டித்தனைத்தை கேட்டுக்கொண்டு அனுமதிப்பது போல் உள்ளது உங்கள் பதில்.

உங்கள் பதில்கள் பார்க்கும் பொழுது.

முஸ்லீம் சமுதாயம் என்ன சொல்கிறதோ அது சரி. அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது தவறு.

அவர்களுக்கு இந்துக்கள் வாழ்வதே பிடிக்கவில்லை என்று சொன்னால், நாங்கள் எல்லாம் தற்கொலை செய்து கொள்வதா?

முஸ்லீம்களின் மதச்சார்புநிலை தான் உங்கள் மதச்சார்பின்மை என்றால் அது எப்படி பட்ட மதச்சார்பின்மை?

மா சிவகுமார் சொன்னது…

இல்லை ஷங்கர்,

முஸ்லீம்கள் விரும்பினால் முஸ்லீம்களுக்கு மட்டும் தனி கிரிமினல் சட்டம் இருக்கலாம். தனி சிவில் சட்டம் இருக்கும் போது, கையை காலை வெட்டும் கிரிமினல் சட்டம் மட்டும் பொது என்று சாணக்கியன் கேட்டதற்கு என்னுடைய பதில் அது.

முஸ்லீம்கள் தொடர்பான விஷயங்களைப் பொறுத்த வரை அவர்களது விருப்பங்கள் கருத்தில் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

நான் முதல் பகுதியில் எழுதியது போல இந்தியா என்ற நாடு அமைந்ததன் அடிப்படை ஒவ்வொரு குழுவினரும் தமது குரலை, தமது விருப்பங்களை வெளிப்படுத்திச் செயல்படுத்த உரிமை இருக்க வேண்டும் என்பதுதான். அது இந்துக்களுக்கு எவ்வளவு பொருந்துகிறதோ அவ்வளவு முஸ்லீம்களுக்கும் பொருந்தும். ஆனால், ஒரு குழு இன்னொரு குழுவின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தக் கூடாது.

நமது நாக்குக்குப் பிடிக்கிறது என்று நாம் உண்ணும் பல உணவுகள் நம் வயிற்றுக்குத் தொல்லை கொடுத்து விடுவதில்லையா. அது போல இந்தியாவுக்கு நல்லது என்று நமது நாட்டின் ஒரு அங்கமான முஸ்லீம் பொது விருப்பத்துக்கு எதிராக செயல்பட்டால், கடைசிக் கணக்கில் நமது நலனுக்கு அது கெடுதல்தான். சரியாகப் படுகிறதா?

பதினைந்து கோடி மக்கள் வருத்தமாக இருக்கும் போது ஒரு நாடு பாதிக்கப்படாதா? தமது குரலைப் பலமாக ஒலிக்க முடியாத சிறுபான்மையினரை அணைத்துச் செல்வது பெரும்பான்மைக்கு அழகு. அந்த அழகு நம் நாட்டில் இன்னும் நிறைய இருக்கிறது ஷங்கர்.

அன்புடன்,

மா சிவகுமார்

உலகன் சொன்னது…

அன்புள்ள அறிவு ஜீவி அவர்களுக்கு,

தாங்கள் இது போன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் முன்னர் தாங்களே ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளுதல் நலம்.

தாங்கள் விரும்பும் சட்டங்கள் தங்களுக்கு வேண்டும் என்றும், விரும்பாத சட்டங்கள் வேண்டாம் என்றும் கூறி அதனை ஒரு சமூகம் நியாயப்படுத்த முயலுவது அபத்தம் என்றால் அந்த அபத்தத்தை வழி மொழிந்து அதற்கு சப்பைக்கட்டு கட்டும் தங்களைப் போன்ற நபர்களின் வாதம் வெட்கக்கேடு.

எனக்கு ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது. கொள்ளு என்றால் வாயைத் திறக்கும் குதிரை கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்ளும் என்று. அது போல் தான் இருக்கிறது நீங்கள் சொல்வதும்.

பொதுச் சிவில் சட்டம் நல்ல விஷயம். ஆனால் அதை யார் வடிவமைப்பது. அதில் ஒரு மத விருப்பு வெறுப்புகள் வெளிப்படாது என்று என்ன நிச்சயம் என்று நீங்கள் கேட்டிருந்தால் அதிலிருக்கும் நியாயமோ அல்லது நடைமுறை சிக்கலோ உணரப்பட்டிருக்கலாம். ஆனால் அது அவரவர் உரிமை என்கிறீர்கள். உங்களின் உரிமை மற்றவரின் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருந்தால்?

மற்ற நாடுகளைப் பார்த்து நாம் மாற வேண்டியதில்லை. நம்மைப் பார்த்து தான் மற்றவர்கள் திருந்த வேண்டும் என்கிறீர்கள். நல்லது தான். அவர்கள் திருந்தும் வரை அவர்களது முட்டாள்தனத்திற்கு விலையை நாமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற முட்டாள் தனம் தான் எனக்கு புரியவில்லை.

எல்லைக் கோடுகள் நாம் போட்டது தான் என்பதையும், உண்மையில் எல்லா உயிரும் ஒரே கடவுளின் பிரதிபிம்பங்கள் தான் என்கின்ற உண்மையையும் நம்மிடம் சொல்வதற்கு பதிலாக ஈராக்கிலும் இன்ன பிற இடங்களிலும் மாற்றின சகோதரர்களை குண்டு வைத்து கொல்லும் கொடூர மனம் படைத்தோரிடம் யாராவது உரைத்தால் தேவலாம் போலிருக்கிறது.

அன்பரே, நேரமின்மை காரணத்தால் தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து பதில்களுக்கும் பதில் புள்ளி விவரங்களை அளிக்க என்னால் முடியவில்லை, அதை நான் விரும்பவுமில்லை. ஏனென்றால், தாங்கள் ஆய்ந்து அளிக்கும் ஒரு கட்டுரைக்கு வேண்டுமானால் அது தேவைப்படலாம். உங்களின் ஆய்வே அது போன்ற தீவிர சிந்தனைக்கு இட்டுச் செல்லாமல் மேம்போக்கான பார்வையிலேயே ஏகப்பட்ட குறைபாடுகளுடன் காணப்படுகிறது.அவை எல்லாம் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியமில்லாதவை, சொந்த மன எண்ண ஓட்டத்தைப் புறக்கணித்து எழுதியது என்று நீங்களும் உணர்ந்தவை. உங்களுக்கே நிச்சயமாகத் தெரியும் என்று நம்புகிறேன்.

உலகெங்கும் இஸ்லாமிய சமூகத்தினரின் மீது சமீப வருடங்களில் அடக்குமுறை அதிகரித்து வருகிறது. அதனை ஒன்றுபட்டு எதிர்க்கும் இஸ்லாமியர்கள் அதே சமயத்தில் சுய பரிசோதனையும் செய்து கொண்டு வருகின்றனர். ஏனென்றால், இஸ்லாமை தவறாக புரிந்து கொள்பவர்களே இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணமாகின்றனர் என்று உரைக்கப்படுகிறது. இந்த மாற்றங்களின் நேர்மறையான வெளிப்பாடு உலகமெங்கும் நிகழ்வுகளை கவனிப்பவர்களுக்கு கண்கூடான ஒரு நிகழ்வு. அதனால், உலகில் விரைவில் மாயை பாகுபாடுகள் நீங்கி அமைதி நிலவும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியாவைப் பொறுத்த வரை, இன்னும் ஆயிரம் தொகாடியாக்கள் வந்தாலும் இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்ற முடியாது. ஏனென்றால், மதத்தை ஆழமாக உணர்ந்த விவேகானந்தர் போன்ற ஆயிரக்கணக்கான மகான்கள் வாழ்ந்த பூமி இது. அதே சமயத்தில், அதே காரணத்தினாலேயே, அந்த மக்களை ஓட்டு வங்கி அரசியல்வாதிகள் ஏமாற்றி விடவும், அவர்களது உணர்வுகளை மழுங்கடித்துவிடவும் முடியாது.

உள்ளங்கள் மாறட்டும். உலகம் அமைதி பெறட்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம்.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க உலகன் அவர்களே,

நீங்கள் கூறும் இதே காரணத்துக்காகத்தான் ஒவ்வொரு கருத்தாக எடுத்துப் பதில் கூற முதலில் தயக்கமாக இருந்தது. என்னுடைய முதல் பதிவில் சாணக்கியனுடனான் குறு விவாதத்தைப் பாருங்கள். நான் எழுதிய பதில்கள் ஆராய்ந்து எழுதப்பட்டவை அல்ல. எனக்குப் புரிந்த நிலவரங்களை விளக்க முற்பட்டேன்.

இந்த முறையில் எழுதி விவாதிப்பதால், யாரும் தமது கருத்துக்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று உணர்கிறேன். நான் எனது நிலையில் இருப்பதின் அடிப்படை என்ன, எந்த விதமான அனுபவங்கள், எந்த விதமான தாக்கங்கள் என்னை இப்படி சிந்திக்க தூண்டுகிறது என்று நான் வெளிப்படுத்தி, அதே போல அடுத்தவர்களையும் புரிந்து கொள்ள முயல்வது இதை விட நல்ல பலன் தரும்.

நீங்கள் சொல்வது போல் இந்தியத் திருநாட்டின் சிறப்புகளை எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் மாற்றி விட முடியாது. உள்ளங்கள் மாறி உலகில் அமைதி பெருகட்டும் என்ற உங்கள் பிரார்த்தனையில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

அறிவி ஜீவி என்று ஏசுதலாகத்தான் கூறினீர்கள் என்று நினைக்கிறேன். அதுதான் என்னைப் பொறுத்த வரை உண்மை. உடலுழைப்பைப் பெரிதும் மறந்து மூளையின் உந்தல்களில் பெரும்பகுதி நாளை செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அதை ஓரளவாவது மாற்றி தினமும் ஓரிரு மணி நேரமாவது உடலுழைப்பு செய்ய வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்