செவ்வாய், ஜூன் 27, 2006

தொ(ல்)லைக் காட்சி

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல்

தொலைக் காட்சியை எடுத்துக் கொண்டால் எது அதிகம், குணமா? குற்றமா?

தொலைக்காட்சியின் மோசமான விளைவுகளைப் பற்றி பேச்செடுக்கும் போது எல்லாம், நேஷனல் ஜியோகிராபிக், அனிமல் பிளானட் போன்ற ஓடைகள் அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகளைத் தருகின்றன. குழந்தைகள் ஆங்கில நிகழ்ச்சிகளை பார்த்து ஆங்கில புலமையைப் பெருக்கிக் கொள்கிறார்கள், அதனால் தொலைக்காட்சியில் நல்லதும் கிடைக்கிறது என்ற வாதம் எழுகிறது.

மறு பக்கத்தில் நாள் முழுவதும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள், மெகா தொடர்கள், மணிக்கு ஒரு தடவை செய்திகளை உடைக்கும் செய்தி ஓடைகள் என்று நம் மனதை வெள்ளக்காடாக்கும் வகையில்தான் நிகழ்ச்சிகள் உள்ளன.

இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் என் வீட்டில் பார்த்து விட்டேன். பெரியவரும், சிறியவரும் காலையில் ஜெயா டிவி, சன் டிவியில் பாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து, அரட்டை அரங்கம், 11.30 தமிழ்ப் படம் சன் டிவியில், சன் டிவியில் செய்தி வாசிக்கும் போது1 மணி படம் கே டிவியில், அப்புறம் திரைச்சோலை (சன் டிவியில்), கடைசியாக மாலைத் திரைப்படம் என்று இடைவிடாமல் தொலைக்காட்சி வரவேற்பறையை ஆக்கிரமித்திருந்தது.

குழந்தைகள் போகோ ஓடையிலும், தாய்மார்கள் மெகா தொடர்களிலும், மாணவர்கள் கிரிக்கெட் ஒளிபரப்பிலும், இதை எல்லாம் தாண்டிப் புனிதமான அப்பாக்கள், அண்ணன்கள் செய்தி ஓடைகளிலும் விட்டிப் பூச்சி போல விழுந்து கொண்டிருக்கிறோம்.

மனித வரலாற்றில் இது வரை பார்த்திராத ஒரு ஆக்கிரமிப்பு தொலைக்காட்சி. ஒரு நாளிதழ் வாங்கினால், நாம் அதைக் கையில் எடுத்து படித்து, மூளைக்கு வேலை கொடுத்தால்தான் சரக்கு மனதில் பதிகிறது. தொலைக்காட்சியிலோ, கையில் தானியக்கியுடன் உட்கார்ந்து கொண்டால் கண்களையும், காதுகளையும் முடமாக்கி விட்டு நேரடியாக மூளைக்கு காட்சிகளையும், ஒலிகளையும் அனுப்பி வைக்கின்றன நிகழ்ச்சிகள். திரைப்படக் கொட்டகையில் அத்தகைய நுட்பம் இருந்தாலும் அது மூன்று மணி நேரத்தில் ஓய்ந்து விடுகிறது. திரைப்படம் பார்க்க வீட்டிலிருந்து தயாராகி, உடை உடுத்தி அரங்குக்கு பயணித்து, சீட்டு வாங்கிக் காத்திருந்து மூன்று மணி நேரம் நமது மனதை வெளி ஆதிக்கத்துக்கு உட்படுத்துகிறோம். விடுமுறை நாள் முழுவது, மாலை முழுவதும், இரவு கண் விழித்து என்று வாழ்க்கையில் எந்த வித முயற்சியும் இல்லாமலேயே நுழைத்து விடக் கூடிய தொலைக்காட்சி குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நீண்ட கால ஊறுகளை விளைவித்து வருகிறது.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் கூட விளம்பரங்கள். இள மனங்களை சீக்கிரமே பிடித்து விடுகிறார்களாம். இங்கிலாந்தில் குழந்தைகளை குறிப்பாகச் சுட்டி எந்த விளம்பரமும் செய்யப்படக் கூடாது என்ற சட்டமே உள்ளதாம்.

90களின் மத்தியில் தொடங்கிய இந்தப் போக்கின் முழு விளைவுகள நாம் பார்க்க ஆரம்பித்துள்ளோம். இனி வரும் ஆண்டுகளில் தொலைக்காட்சிகளால் விளைந்த சமூக குடும்ப ஊனங்கள் வெளியில் தெரிய வரும்.

அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டுமா அதற்குரிய குறுந்தகட்டை கடையில் போய் வாங்கி குறுந்தகடு இயக்கியில் போட்டுப் பாருங்கள். குழந்தைக்கு ஆங்கில அறிவுக்கு கார்ட்டூன்களும் கூடக் கடையில் கிடைக்கின்றன.

வீட்டின் கேபிள் இணைப்பை துண்டித்து விட்டு, ஒரு டிவிடி பிளையர் வாங்கி தொலைக்காட்சி பெட்டியுடன் இணைத்து விடுங்கள்.

செய்திகளை அறிந்து கொள்ள செய்தித் தாள்கள் இரண்டு மூன்று வாங்குங்கள். கேளிக்கைக்கு பாடல்களைக் கேளுங்கள், வெளியில் சென்று திரையரங்குகளில் திரைப்படம் பாருங்கள்.

தொலைக்காட்சி என்ற ஆக்கிரமிப்பை வீட்டுக் கூடங்களிலிருந்து விரட்டி அடியுங்கள். உங்கள், குழந்தைகளின், சமூகத்தின் எதிர்காலம் கண்டிப்பாக இன்னும் சிறப்பாக மாறி விடும்.

14 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவகுமார் ,

நீங்கள் கூறுவது சரியான கருத்து.தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகள் எந்த வித கட்டுப்பாடும் ,தார்மீக நியாங்களும் இல்லாமல் மக்களை ஏமாற்றி தங்களது TRP ரேட்டிங்க் உயர்த்தி அதிக விளம்பரம் வாங்கி காசு சம்பாதிப்பதில் தான் முனைப்பாக உள்ளன. விளம்பரங்களொ எந்த வித தணிக்கையும் இல்லை என்பதால் ஆபாசமாக வருகிறது. கொஞ்சம் காலம் முன்பு தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் தணிக்கை வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்,இப்போது சத்தமே காணோம்.

இந்த தொடர்கள் தோன்றிய காலம் தொட்டே நான் ஒரு தொடர் கூடப்பார்த்தது இல்லை. தொலைக்காட்சியும் கிரிக்கெட் போல ஏதாவது சந்தர்ப்பத்தில் தான் பார்ப்பேன்.இந்த கேபிள் எல்லாம் கட் பண்ணி விட்டு தூர்தர்ஷன் போதும் என இருந்தாலே மக்கள் உருப்பட்டுவிடுவார்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வவ்வால்,

ஆனால் படித்தவர்களும் கூட, தெரிந்தே தொலைக்காட்சியின் வலையில் சிக்கியுள்ளார்கள். இதை சரி செய்ய பல ஆண்டுகள் ஆகலாம். ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்து தமது வாழ்வை சரிப்படுத்த ஆரம்பித்தால்தான் வேலை நடக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

துளசி கோபால் சொன்னது…

வணக்கம் சிவகுமார்.

உங்களை இப்பத்தான் 'பார்த்தேன்'.
ரொம்ப லேட் பண்ணிட்டேனோ?

ஆனா, உங்களை வேற எங்கியோ பரிச்சயமானது போல் ஒரு எண்ணம் மனசுலே இருக்கு.

எங்கேன்னு புரியலை.

நானும் தொலைக்காட்சி பார்க்காத ஆளுதான்.

என்றும் அன்புடன்,
துளசி.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க அக்கா,

நீங்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி வாங்க. தொலைக்காட்சி மறுப்பதில் நீங்களும் சேர்த்தி என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை கொஞ்சம் உரக்க அடிக்கடி சொல்லுவோம். கொஞ்சம் மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் மாறி விடலாம் அல்லவா.

சீக்கிரமா என்னை ஒரு படம் பிடித்து வலைப் பதிவில் போடுகிறேன். ஒரு நான்கு ஆண்டு பழைய படம் இங்கே பாருங்கள். அந்தப் பக்கத்திலேயே என் விபரங்களும் இருக்கிறது. ஷாங்காயில் அல்லது தமிழ் மடற்குழுக்களில் பரிச்சயம் ஏற்பட்டிருக்கலாம்.

http://www.ryze.com/go/masivakumar

நான் பதிவு போட்டு அரை மணிநேரத்துக்குள் பிடித்தால் என் பதிவைப் பார்க்க வாய்ப்புண்டு. பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்த மறுப்பதால், தமிழ் மணம் என் பதிவுகளின் மறுமொழி நிலவரத்தைக் காட்ட மறுத்து விடுகிறது :-). அதனால் நீங்கள் இதுவரை பார்க்காமல் இருந்திருக்கலாம்.


அன்புடன்,

மா சிவகுமார்

ஸ்ரீ சொன்னது…

மிகச் சரியாக சொன்னீர்கள் சிவா,எதாவது ஒரு காரணத்தினால் 5,6,மணி நேரம் தொலைக்காட்சி இயங்குவது தடைபடும் போது வீடே மிக அமைதியாகவும்,மனதும் தெளிவாகவும் இருப்பதை உணர்கிறேன்.தொலைக்காட்சி வீட்டிற்குள்ளேயே மனிதர்கள் அன்னியப்படும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஸ்ரீ,

உண்மைதான். தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டால், திடீரென்று நேரம் கை நிறைய இருப்பதை உணர்வோம். ஆக்க பூர்வமான பொழுதுபோக்குகள், வேலைகளில் ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்.

யோசிப்பவர் சொன்னது…

//வாழ்க்கையில் எந்த வித முயற்சியும் இல்லாமலேயே நுழைத்து விடக் கூடிய தொலைக்காட்சி குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நீண்ட கால ஊறுகளை விளைவித்து வருகிறது.//

உண்மைதான்.

//இனி வரும் ஆண்டுகளில் தொலைக்காட்சிகளால் விளைந்த சமூக குடும்ப ஊனங்கள் வெளியில் தெரிய வரும்.
//

இப்பொழுதே மெகா தொடர்களால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து பலர்(சிலர்) பேச ஆரம்பித்துவிட்டனர்


//அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டுமா அதற்குரிய குறுந்தகட்டை கடையில் போய் வாங்கி குறுந்தகடு இயக்கியில் போட்டுப் பாருங்கள். //
//வீட்டின் கேபிள் இணைப்பை துண்டித்து விட்டு, ஒரு டிவிடி பிளையர் வாங்கி தொலைக்காட்சி பெட்டியுடன் இணைத்து விடுங்கள்.
//

இது ஏற்புடைய மாற்று யோசனைகளாக தெரியவில்லை!!


தொலைக்காட்சி பார்ப்பதை பெருமளவு குறைத்த பின் இப்பொழுது என்னால் உண்மையிலேயே கொஞ்சம் ஆக்கபூர்வமாக சிந்திக்கவும், செயல்படவும் முடிகிறது. ஆனாலும் சில நேரங்களில் அந்த கேளிக்கையும் கொஞ்ச நேரம் தேவைப்படத்தான் செய்கிறது!!:((

மா சிவகுமார் சொன்னது…

யோசிப்பவர்,

ஒரு அளவோடு பார்ப்பது என்பது தேவைதான். ஆனால் இப்படி பைத்தியமாகி இருக்கும் போது அளவோடு பார்ப்பேன் என்று மட்டுப் படுத்திக் கொள்வது சிரமமான வேலை. சில நாட்களில் சிறிது சிறிதாக மீண்டும் நமது வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மலைநாடான் சொன்னது…

சிவகுமார்!

ஒரு செய்தியை வலுவாகவும், இலகுவாகவும் பார்வையாளரிடத்தில் செலுத்தும் நல்லதோர் தொடர்பூடகம் தொலைக்காட்சி. ஆனால் அதனை விடவும் வானொலியும், எழுத்தூடகமும், பார்வையாளரின் கற்பனைவளத்தை அதிகரிக்கச் செய்பவை.

தேவைக்குத் தகுந்தமாதிரி தொலைக்காட்சியைப் பாவிக்கப் பழகினால் மிகநன்று. எனக்குத் தெரிந்த ஒரு சுவிஸ் நண்பர்வீட்டில், தொலைக்காட்சியே இல்லை. ஆனால் அவர்களது பிள்ளைகள் ஐந்து மொழிகளில் பரிச்சயமுள்ளவர்கள்.

நல்ல கருத்துப் பதிவு. நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க மலைநாடான்,

//ஒரு செய்தியை வலுவாகவும், இலகுவாகவும் பார்வையாளரிடத்தில் செலுத்தும் நல்லதோர் தொடர்பூடகம் தொலைக்காட்சி. ஆனால் அதனை விடவும் வானொலியும், எழுத்தூடகமும், பார்வையாளரின் கற்பனைவளத்தை அதிகரிக்கச் செய்பவை.//

அழகான வரையறை.

//தேவைக்குத் தகுந்தமாதிரி தொலைக்காட்சியைப் பாவிக்கப் பழகினால் மிகநன்று. எனக்குத் தெரிந்த ஒரு சுவிஸ் நண்பர்வீட்டில், தொலைக்காட்சியே இல்லை. ஆனால் அவர்களது பிள்ளைகள் ஐந்து மொழிகளில் பரிச்சயமுள்ளவர்கள்.//

இந்த முதிர்ச்சியின்றி இருப்பதுதான் கவலைக்குரியது.

அன்புடன்,

மா சிவகுமார்

TBR. JOSPEH சொன்னது…

இதுவரை எழுதியவர்களிலிருந்து மாறுபடவேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை...

ஆனால் எதிலுமே நல்லதும் கெட்டதும் இருக்கத்தான் செய்கிறது..

சிலர் கேபிள் இருந்தால் பிள்ளைகளின் படிப்பு கெட்டு விடுகிறது என்கிறார்கள்..

ஆனால் என் மகள்கள் ஐந்தாவது வகுப்பில் படிக்கும் காலத்திலிருந்தே என் வீட்டில் கேபிள் இருக்கிறது...

துவக்கத்தில் அதில் ஒரு ஈர்ப்பு இருந்து என்பது உண்மைதான்.. ஆனால் நாளடைவில் அது குறைந்து வார நாட்களில் செய்தியைத் தவிர வேறெந்த நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில்லை என்ற மனப்பக்குவத்திற்கு அவர்களை கொண்டு வர முடிந்தது...

ஆனால் சனி ஞாயிறுகளில் அதுவும் மாலை நேரங்களில் எந்த நிகழ்ச்சியையும் பார்க்கலாம் என்ற சுதந்திரம்... எந்த ஒரு நிகழ்ச்சியும் குழந்தைகளை பாதிக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லை..

இதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான்... என் மகள்கள் இருவருக்குமே உலக அறிவும் மொழித்திறனும் வளர்ந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால்தான் என்பது உண்மை..

குடும்பம் முழுவதுமே வரவேற்பறையை பிடித்துக்கொண்டு தொலைக்காட்சியில் மூழ்கிப்போய்விடுவது இப்போதெல்லாம் மிகவும் அபூர்வம் என்று கருதுகிறேன்... பொருளாதாரத்தில் அடித்தளத்தில் இருக்கும் குடும்பங்களில் வேண்டுமானால் இது இருக்க வாய்ப்புண்டு...

ஆனால் நம்மைப் போன்ற நடுத்தர மற்றும் உயர்நடுத்தர குடும்பங்களில் இது குறைந்து வருகிறது...

தொலைக்காட்சியில் பல நல்ல அறிய காட்சிகளையும் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் காண முடிகிறது என்பதையும் மறுக்கவியலாது...

எதில்தான் தீமை இல்லை... நல்லதை தெரிவு செய்து பார்க்கவும் நம்முடைய குழந்தைகளை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பயிற்றுவிக்க வேண்டும்... அதுதான் முக்கியம்...

பெயரில்லா சொன்னது…

Neenal solvadhu 100ku 100 sariye..
enru namellam tholaikatchi pettiai vittu arivu sarndha vishayathil kavanam seluthukiromo anru dhan namadhu sindhanaiyil thelivu pirakkum!

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ஜோசப் சார்,

//ஆனால் எதிலுமே நல்லதும் கெட்டதும் இருக்கத்தான் செய்கிறது..//

அதைத்தான் நானும் சொல்கிறேன்!

//பொருளாதாரத்தில் அடித்தளத்தில் இருக்கும் குடும்பங்களில் வேண்டுமானால் இது இருக்க வாய்ப்புண்டு...

ஆனால் நம்மைப் போன்ற நடுத்தர மற்றும் உயர்நடுத்தர குடும்பங்களில் இது குறைந்து வருகிறது...//

நீங்கள் உங்க வீட்டில் செய்த அக்கறையும் பல குடும்பங்களில் இல்லாமல் இருக்கலாம். இந்த இடுகையின் நோக்கம் அப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்பதுதான்.

//நல்லதை தெரிவு செய்து பார்க்கவும் நம்முடைய குழந்தைகளை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பயிற்றுவிக்க வேண்டும்... அதுதான் முக்கியம்..//

நிச்சயமாக!

அன்புடன்.

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

arivu sarndha vishayathil kavanam seluthukiromo anru dhan namadhu sindhanaiyil thelivu pirakkum!

வணக்கம் அனானி,

அத்தோடு நம் சமூகமும் முன்னேறும்!

அன்புடன்,

மா சிவகுமார்