ஞாயிறு, ஜூன் 25, 2006

நாடாளுமன்றம்

ஒவ்வொரு உறுப்பினரும் தன் சுயநலத்தைப் பற்றியே சிந்திக்கிறார்கள். பயத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்றம் செயல்படுகிறது. அதிமுக்கியமான பிரச்சனை ஒன்று விவாதிக்கப்படும்போது பல உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருப்பதும், பலர் அவைக்கே வராமல் இருப்பதும் சாதாரணம். கவைக்குதவாத பொருள் பற்றி பல மணி நேரம் பேசிக் கொல்பவர்களும் உண்டு.

எந்த அலசலும் இன்றி தனது கட்சியின் கட்டளைப்படி வாக்களிப்பதே ஒரு உறுப்பினரின் கடமையாக உள்ளது. "கட்சிக் கட்டுப்பாட்டின்" கீழ் அப்படி ஒருவர் வாக்களிக்கத் தவறி விட்டால் அவர் பதவியிழந்து விடுகிறார். நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், நடத்துவதிலும் செலவிடப்படும் பணத்தை நல்ல மனிதர்கள் கையில் கொடுத்தால் நாட்டை எவ்வளவோ முன்னேற்றியிருக்கலாம். நாடாளுமன்றம் நாட்டின் விலை உயர்ந்த பொம்மை போல ஆகி விட்டது.

பிரதம மந்திரி தனது அதிகாரத்தையும் தன் கட்சியின் நலனையும் மட்டுமே சிந்திக்கிறார். நாட்டின் நலனும் நாடாளுமன்றத்தின் நோக்கங்களும் இரண்டாம் பட்சமாகி விட்டன. கையூட்டு வாங்க அல்லது கொடுக்காததாலேயே ஒரு பிரதமர் நேர்மையானவராகி விட மாட்டார். தான் விரும்பியதைச் சாதித்துக் கொள்ள பதவிகளையும் பட்டங்களையும் பயன்படுத்தும் பிரதமர் பெயரளவுக்குத்தான் நேர்மையாளர். அவரும் ஊழல்வாதி என்றே கருதப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கோ பத்திரிகைகளும் ஊடகங்களும்தான் வேத வாக்கு. ஊடகங்களோ ஒன்றிற்கு ஒன்று முரணாக தாம் சார்ந்த கட்சிக்கு வசதியாக செய்திகளை வெளியிடுகின்றன. ஒவ்வொருவரும் தாம் படிக்கக் கேட்க விரும்புவதை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

இவை அனைத்தும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைப் பற்றி காந்தி 1913-ல் சொன்னது. இன்றைய இந்தியாவிற்கு இது பொருந்துகின்றதா?

6 கருத்துகள்:

மிதக்கும்வெளி சொன்னது…

நிச்சயமாக.இதிலென்ன சந்தேகம்?

மா சிவகுமார் சொன்னது…

சுகுண திவாகர்,

எதற்கு இப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் திருவிழா நடத்தி 540க்கும் அதிகமான பேருக்கு செலவு செய்து மாய்ந்து போகிறோம்?

அன்புடன்,

மா சிவகுமார்

ஸ்ரீ சொன்னது…

மகாத்மா காந்தி அன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தை குறிப்பிட்டு சொன்னது இன்றைய நமது இந்திய நாடாளுமன்றத்தை குறிப்பிட்டு ஞானதிருஷ்டியோடு சொன்னதாகவே எனக்குப்படுகிறது.அண்ணலின் கருத்துக்களை சரியான நேரத்திலே எடுத்துக்காட்டியமைக்கு நன்றி

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்,

நாடாளுமன்றத்துக்கு நம்ம எம்.பிக்கள் போரதே அங்கே இருக்க கேண்டீன்ல சாப்பாடு விலை மலிவு ,சுவையாகவும் இருக்கும் என்பதால் தான்.சபைக்குள்ள போகாம தினசரி கேண்டீன்ல மட்டும் போய் உட்காறும் எம்.பிக்கள் அதிகம்னு முன்னர் ஒரு பத்திரிக்கைல ஆதாரத்தோட போட்டான்.

இதை விட இந்த எம்.பிக்கள் அனுபவிக்கும் சம்பளம் அல்லாத இதர சலுகைகளுக்கு மாதம் 10 லட்சம் செலவிடப்படுகிறது அதெல்லாம் வாங்கிட்டு என்ன பண்றாங்க நாடாளுமன்றத்தில மக்கள் பற்றி கேள்விக்கேட்கவே லஞ்சம் தான் வாங்குறாங்க!

மா சிவகுமார் சொன்னது…

வாங்க Sree,

தஞ்சை விவசாயிகளின் பிரச்சனை தில்லி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று இருக்கும் இந்த நாடாளுமன்ற அமைப்பு இந்தியாவுக்கு ஒத்து வராது என்பதுதான் காந்தியின் கருத்து. ஒரு வேளை 1930களில் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்திருந்தால் அரசியலமைப்பில் காந்தியின் கருத்துகளுக்கு இன்னும் முழுமையான வடிவம் கிடைத்திருக்கலாம்.

அன்புடன்,


மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வவ்வால்,

தனி உறுப்பினர்களின் ஒழுக்கத்தில் கேள்விகள் இருந்தாலும், மிக நேர்மையானவர் கூட பெரிதாக ஒன்றும் சாதித்து விட முடியாது என்பதுதான் நடைமுறையாக உள்ளது. நாம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே போவோம், நல்ல தீர்வுகள் வெளிவரும் என்ற நம்பிக்கையுடன்.

அன்புடன்,

மா சிவகுமார்