வியாழன், ஜூன் 22, 2006

கம்யூனிசம் - என் பார்வையில்

சந்தையும் சுயநலமும்

ஒவ்வொருவரும் தமது சுயநல நோக்கத்தில் செயல்படுவதன் மூலம் சமூகத்தின் பொருளாதார வளங்கள் மிகச் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் சந்தைப் பொருளாதரத்தின் தாரக மந்திரம். கடந்த இருநூற்றைம்பது ஆண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பொருளாதார வளர்ச்சி இந்த மந்திரத்தின் மகிமைக்கு சாட்சி அளிக்கின்றன.

இதில் குறைகள் இல்லாமல் இல்லை. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் தொழில்கள், பொருட்களில் கலப்படம் செய்யும் வியாபாரிகள், ஏழைகளாகப் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமை எனப் பலவிதமான பிணிகள் இந்த பொருளாதார விரிவாக்கத்தைப் பீடித்துள்ளன. உலகில் எந்த மூலையிலோ விளையும்/உற்பத்தியாகும் பொருள் நம் சந்தைகளுக்கும், கடைகளுக்கும் பல் பொருள் அங்காடிகளுக்கும் வந்து சேர்ந்து விடுகின்றன.

இங்கு கம்யூனிசம் பற்றி மட்டும் எழுதப் போவதில்லை. வர்க்கப் போராட்டம், சோவியத் யூனியனின் தவறுகள், மேற்கு வங்காளத்தில் சீர்திருத்தம் வெளியில் கட்டுப்பெட்டித்தனம் என்று கம்யூனிசம் என்றாலே ஒரே மாதிரியான விஷயங்களை மட்டுமே பேசாமல், கம்யூனிசம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளும் முனைவில் நான் தெரிந்து கொண்டவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சமூகப் பொருளாதார வல்லுநர்களின் ஒரு செல்ல அலுப்பு, "யார் வேண்டுமானாலும் பொருளாதாரம் பற்றி கருத்து சொல்ல வந்து விடுகிறார்கள். பல ஆண்டுகள் பொருளாதாரம் படித்த பேராசியரை எதிர்த்துக் கருத்துச் சொல்ல பொருளாதாரமே படிக்காத பாமரக் குடிமகன் கூட வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்". அதுதான் நானும் வந்து விட்டேன்.

முதலில் இருந்து ஆரம்பிப்போம். பொருட்களின் பரிமாற்றம்தான் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை. என் தேவைக்கு அதிகமாக இருக்கும் பொருளை இன்னொருவருக்குக் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக எனக்கு வேண்டிய அவரிடம் இருக்கும் அதிகப் படி பொருளை வாங்கிக் கொள்வதுதான் பண்ட மாற்று.

இன்னும் அடிப்படையாகப் பார்த்தால் என்னுடைய நேரத்தை/உழைப்பை விற்று இன்னொருவரின் நேரத்தை / உழைப்பை வாங்குவதுதான் பரிமாற்றம். இடையில் பணம் என்று ஒன்றும் நுழைகிறது. என்னுடைய நேரத்தை, உழைப்பைப் பயன்படுத்தி நான் உருவாக்கும் பொருளை நானே பயன்படுத்தலாம், அல்லது தேவை போக மிஞ்சியதை இன்னொருவருக்கு விற்று விடலாம். அவர் என்னுடைய நேரத்தை வாங்கி விட்டு, அவர் நேரத்தைச் செலவளித்து ஈட்டிய பணத்தைக் கொடுக்கிறார்.

வேறு எந்த வித சிக்கல்களும் இல்லாத உலகில் வேலை செய்யும் உழைப்பு மட்டுமே காரணியாக இருக்கும். ஆனால், நடைமுறையில் இன்னும் இரண்டு கூறுகள் குறுக்கிடுகின்றன. நான் கடைக்குப் போய் கத்திரிக்காய் வாங்கும் போது கடையில் விற்கும் காய்கறியின் விலை மூன்றாகப் பிரிகிறது. நிலத்துக்கான குத்தகை, பாட்டளிக்கான கூலி, விவசாயிக்கான முதலீட்டு ஆதாயம். சில சமயம் இந்த மூன்றுமே ஒருவருக்கே போய்ச் சேரும்.

நான் என் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு, சொந்தமாக பராமரித்து, சந்தைக்கு வண்டியில் எடுத்து சென்று விற்று காசாக்கினால், நிலத்தின் உரிமையாளன் என்ற பேரில் ஒரு பகுதி நிலக் குத்தகைத் தொகையாகவும், நிலத்தில் வேலை செய்து, சந்தைக்கு எடுத்துச் சென்று விற்ற உழைப்புக்குக் கூலியாக ஒரு பகுதியும், விதை வாங்கி, வண்டி வாடகை கொடுத்து கைக்காசை வேறு வழியில் செலவளிக்காமல் முடக்கிப் போட்ட முதலீட்டுக்கான ஆதாயம் (அல்லது லாபம்) என்று ஒரு பகுதியும் கிடைத்த காசு என்னைச் சேருகிறது.

அந்தக் காசில் பேருந்துச் சீட்டு வாங்கும் போது அதில் ஒரு பகுதி பேருந்து நிறுவன ஊழியர்களின் சம்பளத்துக்கும், ஒரு பகுதி நிறுவனம் போட்டுள்ள முதலீட்டுக்கு ஆதாயமாகவும் போகிறது. இங்கு வெளிப்படையாக நில வருமானம் இல்லை.

இந்த மூன்று பகுதியையும் பார்த்தால் ஒன்று விளங்கும். நிலக் குத்தகை என்பது இயற்கையின் உழைப்பில் உருவாகும் மதிப்பு. நிலம், கடல், சூரிய ஒளி, காடுகள் இவை எல்லாம் தானே செல்வத்தை உருவாக்குகின்றன. இதற்கான பங்கு யாரிடம் போய்ச் சேர வேண்டும் என்பதில் குழப்பம் அதிகம் இருக்க வழியில்லை. ஆனாலும் இருக்கிறது. இன்றைய உலகில் கடலின் செல்வத்துக்கு மீனவர்கள் எந்த கடல் உரிமையாளருக்கும் குத்தகைக் கொடுக்க வேண்டியதில்லை. உள்நாட்டு நீர் நிலைகளில் மீன் பிடிப்பு உள்ளூர் நிர்வாகத்துக்கு காசு கொடுத்து விட்டு நடைபெறுகிறது.

தாதுப் பொருட்களான உரிமையும் பொது மக்களின் அரசுகளிடம்தான் உள்ளது. அரசு என்றால் எதிர்மறையாகப் பார்க்க வேண்டாம். உண்மையாக மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசுக்குப் போய்ச் சேரும் செல்வங்கள் பொது நலத்துக்காகப் பயன்படுத்தப்படும்.

நிலம் மட்டும்தான் தனி மனிதர்களிடம் மாட்டிக் கொள்கிறது. ஒருவர் இறந்த பிறகு அது வாரிசுகளுக்குப் போவதும், நிலத்தை வாங்கி விற்பதும் அன்றாட நடப்புகளாக உள்ளன.

இரண்டாவதாக மனித உழைப்பு. எந்தப் பொருளுக்கு அதிக உழைப்புத் தேவைப்படுகிறதோ அதன் விலை அந்த அளவுக்கு அதிகமாகி விடும். அந்தப் பணம் உழைப்பாளிக்குப் போய்ச் சேருகிறது.

மூன்றாவதாக முதலீடு. இயற்கை பணி புரிந்தாலும், உழைப்பாளிகள் உழைக்க தயாராக இருந்தாலும் இரண்டையும் ஒருங்குபடுத்தி தேவையான கருவிகளையும் மூலப் பொருட்களையும் கொடுத்து விளை பொருளை உருவாக்க ஒருவர் காசு செலவளிக்க வேண்டும். அவர் தன்னுடைய உடனடிச் செலவுகளைக் குறுக்கிக் கொண்டு பணத்தை இதற்குச் செலவிட வேண்டும். அதற்குப் பதிலாக விளை பொருள் விலை போன பிறகு, செலவளித்த மூலதனத்தை விட அதிகமாகப் பணம் கையில் நிற்க வேண்டும். இந்த கூடுதல் வருமானம்தான் அவருக்குக் கிடைக்கும் ஆதாயம்.

இந்த மூன்றும் சேர்ந்து செயல்பட்டால்தான் எந்தப் பொருளும் சந்தைக்கு வந்து சேர முடியும்.

கடையில் விற்கும் தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்துக் கொள்வோம். இதில் இயற்கையின் பங்கு, அதை செய்யத் தேவையான பொருட்களான தாதுப் பொருட்கள், மின்சாரம் உற்பத்தியாகப் பயன்பட்ட நிலக்கரி, அருவி அல்லது அணு ஆற்றல். தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள், கடையில் விற்பனை செய்பவர்கள் மற்றும் பலரின் உழைப்பு தொழிலாளியின் பங்கு. பல நிலைகளின் முதலீடு செய்த தொழில் முனைவோரின் ஆதாயம் முதலின் பங்கு.

இப்படி எந்த பொருள் அல்லது சேவையை எடுத்துக் கொண்டாலும் அதில் மூன்று காரணிகளைப் பார்க்கலாம். மூன்று காரணிகளும் ஒருவருக்கே போய்ச் சேரலாம் அல்லது பல நூறு பேருக்குப் பிரிந்து போகலாம். ஆனால் இவைதான் அடிப்படை காரணிகள்.

உழைப்பவருக்கு அவர் செய்த வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதில் மறு பேச்சே இல்லை. கிடைத்த பணத்தை செலவளிக்காமல் முதலீடு செய்த தொழில் முனைவருக்கு ஆதாயம் போய்ச் சேர வேண்டும் என்பதும் நியாயமே. இயற்கை வளத்துக்கான பங்கு யாருக்குச் சேர வேண்டும்?

யாருக்கும் சேரக்கூடாது என்பது வெளிப்படை. அது சமூகத்துக்குப் பொதுவில் இருக்க வேண்டும். உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்பது நிலத்தை பயன்படுத்தும் வரை அவர் யாருக்கும் குத்தகை கொடுக்க வேண்டாம் என்று இருக்க வேண்டும். நிலம் கை மாறும் போது யாரிடம் போய்ச் சேர வேண்டும் என்பதை முடிவு செய்வதில்தான் சந்தை வழி உதவுகிறது. ஒரு அரசு அலுவலகம் யாருக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நிச்சயம் சோவியத் யூனியன் போன்ற குழப்பத்தில்தான் முடியும். இதற்கு ஒரு வழி, உனக்கு இந்த நிலத்துக்கு இனிமேல் பலன் இல்லையா விட்டு விட்டுப் போய் விடு. வேறு யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர் வந்து எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லலாம். அது அடிதடிக்குத்த்தான் வழி வகுக்கும். அதனால்தான் இன்றைய நில வாங்கல் விற்றலும் சூதாட்டங்களும்.

பெரும்பாலான அரசுகள் நில விற்பனை மீது பதிவு வரி என்றும், விற்ற பணத்தின் மீது வருமான வரி என்றும் விதித்து நில மதிப்பு அதிகரிப்பின் பெரும்பகுதியை சமூகத்துக்கு எடுத்துக் கொள்ள முனைகின்றன.

இதற்கு ஒரு தீர்வு வேண்டும். விளை பொருளுக்கான விலையில் உழைக்காத தனி நபருக்குக் காசு போய்ச் சேரக் கூடாது, அதே நேரம், யார் நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு சரியான மாற்று வழியும் வேண்டும்.

சந்தைப் பொருளாதரத்தின் இரண்டாவது பெரும் சிக்கல் முதலீட்டு ஆதாயத்துக்கும், தொழிலாளி ஊதியத்துக்குமான இழுபறி. நியாயமான உலகில், என்னை வேலைக்கு வைப்பதால் நிறுவனத்தின் வருமானம் எவ்வளவு கூடுகிறதோ அந்தப் பணத்தை எனக்கு ஊதியமாகக் கொடுப்பதுதான் நடக்க வேண்டும். ஆனால் நடை முறையில், முதலாளியின் ஓங்கிய கை, தொழிலாளிகளை எவ்வளவு குறைவாகக் கொடுத்து வேலை வாங்க முடியுமோ அவ்வளவு சம்பளமாகக் கொடுத்து, எஞ்சியதை ஆதாயமாகப் பையில் போட்டுக் கொள்ள உதவுகிறது.

முதலாளிக்கு உடனடித்தேவைகள் எல்லாம் நிறைவேறிய பிறகு எஞ்சிய பணம்தான் எதிர்கால வருமானத்துக்காக பயன்படுத்தப்பட வேண்டும். தொழிலாளிக்கோ தன் உழைப்பைப் பயன்படுத்திக் காசு ஈட்டி வீட்டில் அடுப்பெறிய வைக்க வேண்டிய அவசரம். அந்த அவசரத்தைப் பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவுக் ஊதியத்தைக் குறைக்க முயல்வார் முதலீட்டாளர்.

இதைத்தான் உழைப்பாளியின் கூடுதல் மதிப்பு என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். (கெட்ட பெயரை இப்போதைக்குச் சொல்லவில்லை :-)

அது என்ன கூடுதல் மதிப்பு?

இது எங்கும் நிறைந்து கிடக்கிறது. கடைக்குப் போய் வாழைப்பழம் சாப்பிடப் போகிறோம். விலை என்ன என்று கேட்கிறோம், கடைக் காரை ஒரு பழம் இரண்டு ரூபாய் என்று சொன்னாலும் வாங்கும் மன நிலையில் இருக்கிறோம். அவரோ ஒன்று ஒரு ரூபாய் என்று சொல்லவும், பேசாமல் வாங்கி விட்டுப் போகிறோம். இரண்டு ரூபாய்க்கான பலன் நமக்கு ஒரு ரூபாயிலேயே கிடைத்து விடுகிறது. அந்த ஒரு ரூபாய் நமக்குக் கிடைத்த கூடுதல் மதிப்பு.

கடைக்காரர் ஏன் ஒரு ரூபாய்க்கு விற்கிறார். அவருக்கு ஒரு ரூபாய் விலை கட்டுப்படியாகிறது. இப்போது இரண்டு ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தால் நாம் வாங்கிக் கொண்டாலும், ஒரு ரூபாய் மட்டும் கொடுக்கத் தயாராக இருக்கும் ஒருவர் பழம் வாங்காமல் போய் விடுவார், பழம் மீந்து போய் இழப்பாகி விடும்.

இப்போது கடைக்காரரிடம் ஒரு மந்திரக் கோல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கடைக்கு வரும் ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுப்பார் என்று அவர் தெரிந்து கொண்டால் ஆளுக்குத் தகுந்த விலையில் பழத்தை விற்று விடலாம். நியாயமான சந்தை பரிமாற்றத்தில் நமக்கு வர வேண்டிய ஒரு ரூபாய் நுகர்வோர் கூடுதல் மதிப்பை அவர் கொள்ளை அடித்து விடுகிறார். ஒரு ரூபாய்க்கு வாங்குபவருக்கும் விற்று இழப்பையும் தவிர்த்துக் கொள்கிறார்.

இதே கதைதான், முதலாளி தொழிலாளி உறவிலும். இவனுக்கு எவ்வளவு குறைவாக கொடுத்தால் வேலை பார்ப்பான் என்று மதிப்பிடும் அவகாசமும், வசதியும் இருப்பதால் முதலாளியின் கை எப்போதும் ஓங்கியே இருக்கிறது. அந்த அனுகூலத்தைச் சமன் செய்யத்தான் தொழிலாளர் சங்கங்கள், கூட்டுப் பேரம் பேசுதல், பேரம் பேசுவதில் விவரம் தெரிந்த வெளியாள் உதவுதல் என்ற கோட்பாடுகள் பெரும்பாலான சமூகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. என்னதான் செய்தாலும், முதல் போடுபவருக்கு இருக்கும் அனுகூலத்தை முற்றிலும் சமன் செய்ய முடியாது.

இப்படிக் கிடைக்கும் கூடுதல் ஆதாயத்தை மீண்டும் முதலீடு செய்து தனது நிலையை முன்னேற்றிக் கொண்டே போவார்கள் முதலீடு செய்பவர்கள். ஆனால் இப்படி முதலீட்டின் அளவு அதிகமாகும் போது வேலைக்குத் தேவைப்படும் ஆட்களின் அளவும் அதிகமாகி தொழிலாளிகளின் வருமானமும் அதிகமாகி விடும்.

ஆனால், அப்படி வரும் அதிக வருமானத்தில் அதிக குழந்தைகளைப் பெற்று எதிர்கால தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி விடுகிறார்கள். இந்த கூடுதல் தொழிலாளர்களின் போட்டியால் ஊதியங்கள் அதிகரிப்பது மெதுவாகி விடுகிறது.

இப்படி மூலதனம் உழைப்பை உறிஞ்சிக் கொண்டே போகும் போது, உற்பத்தியாகும் பொருட்களின் அளவு அதிகமாகிக் கொண்டே போகும், ஆனால் அதை வாங்க வேன்டிய சந்தையின் அளவு குறுகி விடும்.

2 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்,

நிறைய கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் , விவாதத்திற்கு நிறைய வாய்ப்புள்ளது.ஆனால் ஒரே கட்டுரையில் இத்தனை பெரிதாக வைத்தால் விவதாமும் பெரிதாக போகுமே கொஞ்சம் சிறு சிறு பாகங்களாக வெளியிட்டால் எளிதாக உள்வாங்கி மீண்டும் விவாதிக்கலாம்.

கொஞ்சம் கஷ்டப்பட்டாவது நான் ஒரே மூச்சில் பெரிய பின்னூட்டம் போட்டு விடுவேன் அப்புரம் படிக்கிறவங்க உங்களை தான் திட்டுவாங்க :-))

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

ஒவ்வொரு பதிவுலும் எழுதும் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லதுதான். மற்றபடி நீங்கள் எவ்வளவு நீளமாகப் பின்னூட்டம் இட்டாலும், அதற்காக என்னை யாரும் திட்டினாலும் மகிழ்ச்சிதான் :-) பொதுவுடமை பற்றி என் கனவுகள் பற்றி இப்படியே சில பதிவுகள் எழுதலாம் என்று எண்ணம்.

அன்புடன்,

மா சிவகுமார்