திங்கள், ஜூன் 19, 2006

எழுத்து

"என்னப்பா, நீ எதாவது பிளாக் எழுதிகிறாயா, நிறையப் பேர் எழுதறாளாமே. தேசிகன் கூட எழுதுகிறான். படிச்சுப் பார்த்தேன் நிறைய எழுதுகிறான். இந்த பிளாக்கில் உள்ள ஒரு பிரச்சனை என்ன என்றால், இட அளவு இல்லை. ஒரு பத்திரிகைக்கு எழுதும் போது இத்தனை சொற்கள்தான் இருக்க வேண்டும் பக்க அளவு தாண்டக் கூடாது என்று வந்து விடுகிறது. எழுதி அனுப்புவதை படித்துப் பார்த்து சரி பார்க்க ஒரு ஆசிரியர் வேறு இடையில். இந்த இடக் கட்டுப்பாடும், தொகுப்பாளரும் இல்லாமல் இந்த பிளாக்குகள் வளவளவென்று போய் விடுகின்றன. வெர்பல் டயரியா போல தலைக்குள் வருவதை எல்லாம் எழுதி விடுகிறார்கள்".

எழுத்தின் அருமை மலிந்து விடுகிறதே என்ற ஆதங்கத்தில் சொல்கிறாரோ என்று முதலில் நினைத்தாலும், நன்றாக எண்ணிப்பார்த்தால் அவர் சொன்னது சரிதான் என்று படுகிறது. எழுத்து ஒரு தவம் என்று நன்றாக எழுதிய எழுதும் படைப்பாளிகள் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். அசோக மித்திரன் ஒரு ஆண்டுக்கு மூன்று நான்கு கதைகளுக்கு மேல் எழுத வரவில்லை என்கிறார். வலைப் பதிவுகளில் கூட சிலரின் எழுத்துகளுக்கு இருக்கும் கவர்ச்சி எல்லா பூக்களுக்கும் இல்லாமல் இருப்பதற்கு எழுதுபவரின் உழைப்பும் பயிற்சியும், சிந்தனை ஒழுக்கும்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல எழுத்துக் கலையும் கைப்பழக்கம்தான். "எப்படி சார் இவ்வளவு எழுத உங்களுக்கு டைம் கிடைக்கிறது" என்று அவர்களது பெரிய மனித ரசிகர்கள் சொல்வார்கள் என்பார் எழுத்தாளர் சுஜாதா.

ஏதோ வேலை வெட்டி இல்லாமல் எழுதிகிறீர்கள். பெரிய திறமை ஒன்றும் இல்லை. எனக்கும் வேறு வேலைகளை விட்டு விட்டு நேரம் ஒதுக்கு எழுத உட்கார்ந்தால் நல்ல எழுத்து வந்து விடும் என்பதுதான் இப்படிச் சொல்பவர்களின் மறைமுகச் செய்தி என்று குறைப்பட்டுக் கொள்வார் அவர்.

கல்கியின் பொன்னியின் செல்வனும், அலை ஓசையும் வேலை வெட்டி இல்லாததால் ஒருவர் எழுதியதாகவா இருக்க முடியும். டிக்கன்ஸின் காப்பர்ஃபீல்டும், கிரேட் எக்ஸ்பெக்டேஷனும் எவ்வளவு உழைப்பும், மன ஒழுக்கமும் மனித அன்பும் பொதிந்து எழுதப்பட்டிருக்க வேண்டும். டால்ஸ்டாயின் போரும் அமைதியும், அன்னா கரெனீனா இரண்டும் வேறு வேலையே இல்லாமல் எழுத்தே தொழிலாக வைத்திருக்கும் யாராலும் எழுதி விடக் கூடியதா என்ன?

ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு வகையில் ஒரு யோகி. காந்தி கைராட்டையில் கண்ட தியானத்தை தமது எழுத்தை யாகமாகச் செய்யும் ஞானிகள் அவர்கள். ஒரு நல்ல சமையலுக்கு எப்படி தாயின் அன்பு தேவைப்படுகிறதோ அதே போல ஒரு நல்ல படைப்புக்கு ஒரு எழுத்தாளனின் அன்பு ஊட்டப்பட வேண்டும். சக மனிதர்கள் மீது அன்பும், கருணையும் பொங்கும் மனத்திலிருந்துதான் அழியா வரம் பெற்ற படைப்புகள் புறப்பட்டுள்ளன.

எழுத்துப் பட்டறைகள், கதை உருவாக்கும் தொழிற்சாலைகள் என்று நவீன உலகின் மேலாண்மைக் கோட்பாடுகளுக்குள் எழுத்தையும் கொண்டு வருகிறார்கள்.

அசோக மித்திரன் அயோவா நகரில் தான் கலந்து கொண்ட பட்டறையின் போது சக எழுத்தாளர் ஒருவரைப் பற்றி எழுதிய குறிப்புகளே ஒரு காவியம். காவியம் படைக்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்தால் எங்கு முடியும் என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம். மில்ஸ் அன்டு பூன் வரிசையில் கதை எழுத ஒரு வரைவுருவும், கதைகளை அரைத்துத் தள்ள எழுத்துத் தொழிலாளர்களும் கூட இருக்கிறார்களாம். தமிழிலும் மாலைமதி, முதலில் பேர் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளையே வெளியிட்டு வந்தாலும், வாராவாரம் புதிய கதை ஒன்றைத் தேடி வரைவுருவுக்குப் போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதன் பிறகு ஓரிரு இதழ்களைக் கூட நான் படித்ததில்லை.

ராஜேஷ் குமார் நூற்றைத் தொட்டு விட்டார், இருநூறைத் தாண்டி விட்டார் என்று வெளி வந்த "நாவல்" களும் பிரபலமானவை. கிரைம் நாவல் என்று பாக்கெட் நாவல் வரிசைகளில் வந்த மாத வெளியீட்டில் அவர் கதைகள் மட்டும்தான் வெளி வரும். மாதா மாதம் அவரது துப்பறியும் நாயகனை வைத்து ஏதாவது பின்னுவர். நாயகன் பெயர் கூட மறந்து விட்டது. கொஞ்சம் சப்பென்றிருக்கும் ஆள் அந்த பாத்திரம். பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத்/சுசீலாவும், சுபாவின் நாயகர்களும் இன்னும் கொஞ்சம் வண்ண மயமாக இருப்பார்கள். ஒரு காலத்தில் இவர்களது கதைகளை தேடித் தேடிப் படித்தேன்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடி, ராஜேந்திர குமாரின் நாவல்கள். அவரது எழுத்தில் காமரசம் தழும்பும், விரசத்தின் எல்லையைக் கூடத் தொட்டு விடும். புஷ்பா தங்கதுரை என்று எழுதியவர் அதிர்ச்சி அளிப்பதற்காக அசிங்கமாக எழுதும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தார் நான் படித்தவற்றில்.

ராஜேஷ் குமாரின் ஒரு சிறப்பு அவரது கதைகள் சுத்த சைவம். எந்த சிருங்கார வருணனைகளும், பெண்களைக் கிண்டல் செய்யும் வசனங்களும் இல்லாமல் கதையையும் குற்றப் பின்னணிகளையும் நம்பியே பின்னப்பட்டவை அவர் எழுத்துகள். இன்னும் இந்த சாதி நாவல்கள் வெளி வருகின்றன என்று நினைக்கிறேன்.

பிவிஆர் என்று ஒருவர் உண்டு. கலைமகளின் ஆலமர விழுதுகள் என்ற தொடரில் அவரை முதல் முதலில் படித்தேன். பொதுவாக மேல்தட்டு உயர் குல தமிழ் பேசுவார்கள் இவரது பாத்திரங்கள். மனித இயல்புகளை நாடகத்தனமாக உரித்து வைப்பார்.

லஷ்மி என்ற எழுத்தாளர் என் அம்மாவின் அபிமான புத்தகங்களை எழுதியவர். நானும் மாய்ந்து மாய்ந்து அவரது எழுத்துகளைப் படித்துள்ளேன். சில ஆரம்ப கால படைப்புகளைத் தவிர பின்னால் வந்தவை எல்லாம் ஃபார்மூலா எழுத்தாகப் போய் விட்டது.

கல்கியைக் கரைத்து குடித்ததுடன், சாண்டில்யனின் வரலாற்று நாவல்களையும் பரவலாக மேய்ந்தேன். அவரது நாயகர்கள் ஜேம்ஸ்பாண்டு போல, கிண்டல் பேர்வழிகளாக, வீர தீரம் செறிந்தவர்களாக, பெண் விளையாட்டுக் காரர்களாக இருப்பார்கள். யாருக்கும் புரியாத திட்டங்களாலும், நடவடிக்கைகளாலும் எதிரிகளை சுழற்றி அடித்து விடுவார்கள். நாயகியுடன் குறைந்தது ஓரிரு காட்சிகளாகவது எழுதி விடுவார் சாண்டில்யன் தாத்தா. அவர் எழுதிய ஒரு சமூக நாவலிலும் கூட இதே போக்குதான். ஆண் பெண் உறவை விவரிக்க சில சொற்களைத் தவறாமல் கையாளுவார் இந்த எழுத்தாளர். பெரும்பாலும் குமுதத்தில்தான் இவர் கதைகள் வெளி வரும். அந்தக் குமுதத்தனமான எழுத்துக்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.

எழுத்தின் மூலம் பரவசப்படுத்தியது சுஜாதாதான். ஒரு கூட்டமே தமிழ் நாட்டில் அவர் மீது காதலாகத் திரிந்தது. எங்கள் காலனியிலும் சுஜாதா என்று சொன்னால் மறுபேச்சுக்கே இடம் கிடையாது. ஒரே புகழ் மாலைதான். சுபா, ராஜெஷ் குமார், பிகேபி என்று அடித்துக் கொள்ளும் எல்லோரும் சுஜாதாவுக்கு ஒரு மனதாக ஓட்டளிப்போம்.

கொஞ்சம் வளர்ந்து சுஜாதா பற்றிய விமரிசனங்களைப் படிக்கும் போது சங்கடமாக இருக்கும். உலகத்திலேயே தலை சிறந்த ஒரு தமிழ் எழுத்தாளனைப் போய் இப்படிச் சொல்கிறார்களே என்று கோபம் வரும். சின்ன வயதில் படித்த ஜானகி ராமனை திரும்பப் புரிந்து படித்த போது அதில் இருந்த ஆழம், கல்கியின் கதைகளை வளர்ந்தவனாக திரும்ப படித்த போது அதில் தெரிந்த உழைப்பு, ஜெயகாந்தனின் கதைகளில் இருந்த திமிர், புதுமைப்பித்தனின் படித்த சிறுகதைகளில் இருந்த எள்ளல் இதெல்லாம் இல்லா விட்டாலும் சுஜாதாவின் எழுத்துக்கள் இன்றும் தனது கவர்ச்சியைத் தக்க வைத்துள்ளன. பன்னிரண்டு வயது சிறுவனுக்கும் முப்பத்தைந்து வயது ஆளுக்கும் பாலமாக இருப்பதுதான் சுஜாதாவின் சிறப்பு.

அவரைப்் பார்க்க, பேச, பழக, சேர்ந்து வேலை செய்ய கிடைத்த போது வாழ்வின் ஒரு பகுதி முழுமையடைந்து விட்டது போலத் தோன்றியது. மடற்குழுக்களில் அவரை எள்ளிய ஓரிரு சிறுமதியினரைப் பார்த்து உணர்ச்சிப் பிளம்பாக விவாதித்தேன்.

எல்லோருடைய பழைய தகரப் பெட்டியினுள்ளும் ஒரு கதை இருக்கும் என்பார் சுஜாதா. தகரப் பெட்டிகள் இணைய வெளியில் திறந்து கொட்டப்பட்டுள்ளன. ஒரு எழுத்தாளன் எழுதுவதோடு கதை முடிவதில்லை. அதை வெளியிட்டு, வாசகன் படித்து அதற்கு ஒரு எதிர்வினை எழுந்தால்தான் எழுத்து முழுமை பெறுகிறது என்கிறார் அசோக மித்திரன். அப்படி பகல் வெளிச்சத்தையே பார்க்காமல் எத்தனை எழுத்துகள் மறைந்ததோ என்று அவரது ஆதங்கம். இன்றைக்கு அந்த இரண்டாவது கட்டத்துக்கான முயற்சி அளவுகள் குறைந்தே உள்ளன. அதனால்தான் ஆயிரக் கணக்குகளைத் தொட்டுள்ள தமிழ் வலைப்பூக்கள்.

"அசோக மித்திரன் போன்ற ஒரு எழுத்தாளரை இந்த நிலையில் வைத்திருப்பது தமிழ் சமூகத்துக்கு அவமானம். இத்தனை ஆண்டுகள் இவ்வளவு சிறந்த படைப்புகளைப் படைத்த இவர் இன்றும் பேருந்தில், மிதி வண்டியில் சுற்றும் நிலை இருப்பது ஏன்?" என்று பத்ரி ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசினாராம். அமெரிக்க, மேற்கத்திய வாழ்க்கை முறைகளை அளவு கோலாகக் கொண்டு விட்ட நமக்கு இந்தக் கேள்விகள் தோன்றுவது ஆச்சரியமில்லை. அசோக மித்திரனின் பதிலும் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. என் நிலை மோசம் என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள், நான் இதை மாற்ற வேண்டும் என்று விரும்புவேன் என்று நினைக்கிறீர்களா என்று அவர் பதிலளித்தாராம்.

எழுதுவதற்கு பேனாவும் காகிதமும் (அல்லது கணினியும் தமிழ் மென்பொருளும்) தான் எமது செல்வங்கள். உடலைப் பேண சாப்பாடும் உட்கார்ந்து எழுத இடமும் கிடைத்து விட்டால் வேறு என்ன தேடிப் போக வேண்டும்.

இன்றைய வலைப்பூ எழுத்தாளர்களின் அந்த முதிர்ச்சி, உழைப்பு, வளத்தை நான் பார்ப்பது டிபிஆர் ஜோசப், ரோஸா வசந்த், கைப்புள்ள, முத்து தமிழினி ஆகியோரின் பதிவுகளில். பத்ரியின் ஆய்வு செய்து எழுதப்படும் பதிவுகளிலும், கவிதாவின் சமூகப் பார்வைகளும், டோண்டு ராகவனின் அனுபவப் பாடங்களும் கவர்ந்து இழுத்தாலும் வலைப் பதிவு என்ற நிலையைத் தாண்டி விடவில்லை அவை.

3 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

என்னால் விவரிக்க முடியவில்லை. அத்தனையும் என் நினைவுகள். உங்கள் எழுத்துகள் மிக உண்மையாகப் பதிவாகி இருக்கிறது.ஒருவரையும் நீங்கள் விட்டுவிடவில்லை.கொத்தமஙகலமும் அப்போ இருந்தாரே.இதே போல் தான் எல்லோரும் எழுதப்பொகிறார்கள் உங்கள் பின்னூட்டத்தில்.// நான் சொல்ல வந்தேன் நீ சொல்லிட்டெனு//இதய பூர்வமான நன்றி.

வல்லிசிம்ஹன் சொன்னது…

என்னால் விவரிக்க முடியவில்லை. அத்தனையும் என் நினைவுகள். உங்கள் எழுத்துகள் மிக உண்மையாகப் பதிவாகி இருக்கிறது.ஒருவரையும் நீங்கள் விட்டுவிடவில்லை.கொத்தமஙகலமும் அப்போ இருந்தாரே.இதே போல் தான் எல்லோரும் எழுதப்பொகிறார்கள் உங்கள் பின்னூட்டத்தில்.// நான் சொல்ல வந்தேன் நீ சொல்லிட்டெனு//இதய பூர்வமான நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி வள்ளி. இன்னும் நிறைய பேரைப் பற்றிச் சொல்லலாம். பாலகுமாரன், இந்துமதி (தரையில் இறங்கும் விமானங்கள் படிக்கும் ஒவ்வொரு முறையும் புல்லரிக்கும்), சாவியின் வாஷிங்டனில் திருமணம் என்று கூடுதலும் குறைவுகளுமாக எத்தனை படைப்பாளிகள்!!

அன்புடன்,

மா சிவகுமார்