ஞாயிறு, மே 15, 2011

11. (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============

ஆனால் சமீபத்திய குடியரசுத் தலைவர்கள் எந்தத் தீவிர எதிர்விளைவுகளும் இல்லாமல், இந்தத் திருத்தத்தைப் புறக்கணிக்க முடிந்ததால் அது நடைமுறையில் செயலிழந்து போனது.  செப்டம்பர் 2010ல் நாடாளுமன்றம் 18வது திருத்தத்தை நிறைவேற்றி 17வது திருத்தத்தை சமன் செய்தது. சுதந்திரமான கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கான வழிகளை நீக்கி, குடியரசுத் தலைவரின் பதவிக்கால கட்டுப்பாடுகளையும் நீக்கியது.

39. முப்பது ஆண்டுகளாக நடந்த போர், சுதந்திரமான அமைப்புகளின் சிதைவு, சட்டப்படியான ஆட்சி பலவீனப்பட்டது இவற்றின் விளைவாக எல்லா குடிமக்களின் மனித உரிமைகளும் மோசமடைந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசி தாக்குதலுக்காக அரசாங்கம் தயாரித்துக் கொண்டிருந்த போது, மனித உரிமைகளுக்கு இன்னும் இழப்பு ஏற்பட்டது.

பல நடவடிக்கைகள் மூலம் சுதந்திரமான செய்தி சேகரித்தல், எதிர் கருத்துகள் மற்றும் மனிதாபிமான செயல்களுக்கான இடம் கூட வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டது (13). 2006ன் ஆரம்பத்திலிருந்து ராணுவ நடவடிக்கைகள் பற்றி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்களை மேலும் மேலும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பாதுகாப்பு செயலர் அறிவித்தார், நடவடிக்கைகளை எதிர்மறையாக குறிப்பிடுவதை சட்டப்படி குற்றமாக ஆக்கினார்.

தாக்குதல்கள், ஆள் காணாமல் போதல், கொலைகள் உள்ளிட்ட ஊடகங்களின் மீதான அழுத்தங்கள் மேலும் மேலும் ஊடக சுயத்தணிக்கைக்கு வழி வகுத்தன. அடையாளம் தெரியாத இடங்களிலிருந்து வந்த உள்ளூர் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள்  சிலரை நாட்டை விட்டே வெளியேற வைத்தன.

அனுமதிச் சீட்டு மறுப்பு மற்றும் ரத்து செய்தல்கள் போன்ற நடவடிக்கைகளின் அதிகரிப்பு  அரசு சாரா அமைப்புகளின் ஊழியர்களை பாதுகாப்பற்றும் சில நேரங்களில் அவர்களது நிலைமையை அபாயகரமாகவும் உணரச் செய்தன. (14)

C. போரின் கடைசிக் கட்டங்களை நோக்கி
40 போரின் கடைசிக் கட்டங்களாக உருவெடுக்கும் நிலைமையில் இன்னும் மூன்று கூடுதல் காரணிகள் குறிப்பிடத்தக்கவை.

41. முதலாவதாக, 2000ல் ஆரம்பித்த குறுகிய கால அமைதி உடன்பாடு, அப்போது இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் நார்வேயை நடுவராக செயல்படுவதற்கு வேண்டுகோள் விடுத்தனர். இரு தரப்பும் பிப்ரவரி 2002ல் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை(CFA) ஏற்படுத்தினார்கள்.  நேருக்கு நேர் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் தெற்கு பிராந்தியத்தின் பெண்கள் பங்கு கொண்ட பெண்களுக்கான துணை ஆணையம் உள்ளிட்ட நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.

இந்த அமைதி நடவடிக்கைகளை சர்வதேச சமூகம், 'மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான டோக்கியோ மாநாடு' (2003) மூலம் ஆதரித்தது. அரசியல் நடவடிக்கைகளை டோக்கியோ கூட்டுத் தலைமையின் (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே மற்றும் அமெரிக்கா) மூலம் கண்காணித்தது. இலங்கை கண்காணிப்பு குழு (SLMM), தன்னிச்சையான சர்வதேச நிறுவனம் CFAயின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு களத்தில் நடந்த மீறல்களை ஜனவரி 2008 வரை கண்காணித்தது. 2008ல் அரசாங்கம் அதைக் கலைத்து  முறையாக CFAவை ரத்து செய்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் 2003ல் CFAவை தன்னிச்சையாக ரத்து செய்து விட்டிருந்தது. 2006ல் புதிதாகத் ஆரம்பித்த சண்டைகளுக்கிடையே CFA பெயரளவில்தான் இருந்து வந்தது. ஆனாலும் முறையாக CFA நடைமுறையில் இருந்த போது SLMMல் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இருப்பது சாத்தியமாக இருந்தது.

42. இந்த அமைதி முயற்சியும் நீடிக்கும் சண்டையை நிறுத்துவதில் தோல்வி அடைந்ததன் மூலம் முந்தைய அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளின் தோல்விப் பட்டியலில் சேர்ந்தது. இரண்டு தரப்பிலும் இருந்த தீவிரவாதம், தொடரும் இன பாகுபாடுக்கும், சகிப்பின்மைக்கும் காரணமாக இருந்தது.(16).

தீவிர சிங்கள தேசியவாதிகள் ஆரம்பத்திலிருந்தே CFAவில் கையெழுத்திட்டதை எதிர்த்து வந்தார்கள். ஏப்ரல் 2003ல் அந்த உடன்பாட்டை ரத்து செய்த விடுதலைப் புலிகளின் முடிவு, தன்னிச்சையாக வடக்கு கிழக்கில் இடைக்கால சுயநிர்வாக ஆணையத்தை ஏற்படுத்தும் அவர்களின் முயற்சிகள் சிங்கள தேசியவாத எதிர்ப்புகளை தீவிரப்படுத்தி, தேசியவாத கட்சிகளின் கூட்டணி ஒன்றை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (UPFA) என்ற பெயரில் உருவாக்கியது. UPFA 2005 தேர்தல்களில் சிறு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்போதைய குடியரசுத் தலைவர் ராஜபக்சவின் தலைமையில் இறுதிப் போரை நடத்துவதற்கான அரசியல் ஆதரவை உருவாக்கியது.

(13) சட்ட விரோதமான, உடனடி, காரணமற்ற கொலைகள் பற்றிய சிறப்பு அறிக்கை - ஃபிலிப் அல்ஸ்டன் - இலங்கைக்கான தூதகம் (E/CN.4/2006/53/Add.5); கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் போனவர்கள் குறித்த செயல் குழுவின் அறிக்கை (E.CN.4/2000/64/Add.1); சித்திரவதைக்கு எதிரான ஆணையத்தின் முடிவுகளும் பரிந்துரைகளும்: இலங்கை (CAT/C/LKA/CO/2).

(14) http://ipsnews.net/news.asp?idnews=43509

(15) இறுதிக் கட்டங்களில், கூட்டுத் தலைமையினர் இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலைமைகளைப் பற்றிப் பல கலந்தாய்வுகளை நடத்தி தமது கவலையை தெரிவித்தும் பொதுமக்களைப் பாதுகாக்க அழைப்பு விடுத்தும் பல அறிக்கைகளை வெளியிட்டனர்.

(16) 2002 CFAல் முடிவடைந்த அமைதி முயற்சிகளுக்கு முன்பு, போருக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன : இந்திய அரசால் வழிநடத்தப்பட்டு 1985ல் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த திம்பு பேச்சு வார்த்தை; இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்பட்ட 1987ன் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் அதிகாரப் பகிர்தல் மற்றும் தமிழ் மொழிக்கு சம உரிமை போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. 1995ல் ஏற்பட்ட போர் நிறுத்தமும் நேரடிப் பேச்சு வார்த்தையும் சில மாதங்களில் முறிந்து போனது

(தொடரும்)

கருத்துகள் இல்லை: