திங்கள், மே 16, 2011

12 விடுதலைப் புலிகள் பலவீனமாதல் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============

43. இரண்டாவதாக, மார்ச் 2004ல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  கிழக்கும் படைத்தலைவர், பொதுவாக கர்னல் கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவருடன் 500 போராளிகளை அழைத்துக் கொண்டு இயக்கத்திலிருந்து பிரிந்து போனார். அவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலை பலிகள் (TMVP) பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியை உருவாக்கி, தனியாக ஒரு துணை போர்ப்படையை பராமரித்து ஆட்சி புரியும் UPFAயின் அங்கமாக சேர்ந்து கொண்டார்.

இந்தப் பிளவு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைமையில் கருணாவிற்கு இருந்த இடம், மிகவும் ரகசியமான அந்த அமைப்பைப் பற்றிய ஆழமான அறிவை அவருக்குக் கொடுத்திருந்தது. அரசாங்கம் இறுதிக் கட்டத் தாக்குதலுக்குத் தயாரித்துக் கொள்வதற்கு அந்த அறிவை சரிவர பயன்படுத்திக் கொண்டது. TMVP துணை போர்ப்படைகளையும் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட மற்ற தமிழ் தீவிரவாதக் குழுக்களையும், அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையிலும், தமிழ் மக்களிடையே உளவு அறியவும் ஈடுபடுத்தியது.

44. மூன்றாவதாக, சர்வதேச நிலைமைகளும் முக்கியமானவை. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போரின் ஒரு பகுதியாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றின் நாடு கடந்த தொடர்புகளையும் எதிர்த்து, பயங்கரவாதத்தைச் சந்திக்கும்  முன்னணி நாடுகளுடன் ஒருங்கிணைந்தது செயல்பட எடுத்த முன்முயற்சி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் உள்நாட்டிலும் உலக அரங்கிலும் மேலும் மேலும் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

2005ல் தமிழரான இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரை படுகொலை செய்தது அதன் உலக மதிப்புக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் (17). இலங்கை அரசு இந்தச் சூழலில் செயல்பட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதித் தாக்குதலுக்கு பிற நாடுகளுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டது. 

45. 2005 தேர்தலுக்குப் பிறகு அரசாங்கமும், விடுதலைப் புலிகள் இயக்கமும் CFAயின் விதிகளைப் பின்பற்றுவதாக உறுதி அளித்தன. இருப்பினும், இரண்டு தரப்பும் தொடர்ந்து ராணுவ மீறல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. ஆகஸ்டு 2006ல் முழுஅளவு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு மாநிலத்தின் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பாசன நீரை அளித்த மாவில் அணையின் கதவுகளை விடுதலைப் புலிகள் மூடிய போது, அரசு கிழக்கு மாநிலத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்க ஆயிரக்கணக்கான போர்ப்படைகளை தாக்குதலுக்கு அனுப்பியது. கருணா பிரிவின் உதவியுடன் ஜூலை 2007ல் அரசு இருபது ஆண்டுகளில் முதல் முறையாக கிழக்கு மாகாணத்தை தன் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது

46. கிழக்கு மாகாணத்தில் அரசுப் படைகளின் ராணுவ வெற்றிக்குப் பிறகு, ஜனவரி 2008ல் வடக்கு மாகாணத்தின் சிலபகுதிகள், வன்னி பகுதியின் சில பெரிய இடங்கள் மட்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. குறிப்பாக வன்னி பகுதியின் நான்கு மாவட்டங்களில் தமது நடைமுறைத் தலைநகரமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள், கூடவே வவுனியாவின் வடக்குப் பகுதியையும், மன்னாரின் வடமேற்கு பகுதியையும், யாழ்ப்பாண தீபகற்பத்தின் சிறு பகுதிகளையும் கட்டுப்படுத்தினார்கள்.

(17) 2006 வரை 32 நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தன. கனடா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தமது முடிவை 2006ல் வெளியுறவுத் துறை அமைச்சரின் படுகொலைக்குப் பிறகு அறிவித்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி திரட்டுதல், ஆயுதம் வாங்குதல் போன்ற நடவடிக்கைகள் அதற்குப் பிறகு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டன.

47. கிழக்கு மாகாணத்தில் கிடைத்த ராணுவ வெற்றியால் ஊக்குவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தயாரிப்புக்குப் பிறகு, ஜனவரி 16, 2008ல் இலங்கை அரசு முழு அளவு ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளர், டோக்கியோ கூட்டு தலைவர்கள், மற்றும் பிற உறுப்பு நாடுகள், CFAவை ரத்து செய்து ஒரு ராணுவ தீர்வை தேடும் அரசின் முடிவு பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்கள். அதே சமயம், தன்னுடைய பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசுக்கு இருக்கும் உரிமையை அவர்கள் அங்கீகரித்தார்கள்.

பிப்ரவரி 2008ன் மத்தியில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் தீவு முழுவதும் அதிகமானதால், போர்ப் பகுதிகளுக்கு வெளியில் இருந்த பொதுமக்களின் மீது போரின் தாக்கம் அச்சமளிக்கும் அளவுக்கு வளர்ந்தது. அரசுப் படைகளின் வான்வழி தாக்குதல் மற்றும் வெகுதூர தாக்குதல் நடவடிக்கைகளால், போர்ப்பகுதிகளில் வாழ்ந்த பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். செப்டம்பர் 2008ல் அரசு தனது இறுதி ராணுவ தாக்குதலாக, கிளிநொச்சிக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்தது
(இந்தப் பகுதியின் மொழிபெயர்ப்பு முடிந்தது. அடுத்த பகுதிகள் விரைவில்)


கருத்துகள் இல்லை: