சனி, மே 07, 2011

3. குழுவின் பொறுப்பு (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

=====
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) - ஆங்கில மூலம்
======
எனவே, இந்தக் குழு மனிதநேய மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்ட மீறல்களுக்கான, குறிப்பாக பலவீனமான குழுக்களான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மீறல்களுக்கான, பொறுப்பு நிர்ணயிப்பது தொடர்பான செயல்முறைகள், தகுதரங்கள், ஒப்பீட்டு அனுபவங்கள் பற்றிப் பரவலாக கவனம் செலுத்தியது. இந்த பிரச்சனை தொடர்பாக நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின்  தற்போதைய அணுகுமுறைப் பற்றிய முழுச் சித்தரிப்பை அளிக்க முயற்சிக்கிறது. 

பொறுப்பு நிர்ணயிப்புக்கு தொடர்புடைய அல்லது தொடர்பு இருக்கக்கூடிய இலங்கையின் உள்நாட்டு அமைப்புகளையும் பரிசீலித்து, அவை இலங்கையின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கடமைகளை எந்த அளவு நிறைவு செய்கின்றன என்றும் உலக அரங்கில் சிறப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைளை எந்த அளவு பிரதிபலிக்கின்றன என்றும் குழு ஆராய்ந்தது.

கடைசியாக, இந்தக் குழு இறுதிக் கட்ட போருக்கான பொறுப்பு நிர்ணயிப்பது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டது. 'கற்றுக் கொண்ட பாடங்கள், மற்றும் சமாதான ஆணையம்(LLRC)' உருவாக்கப்பட்டது இந்தக் கொள்கைகளில் அடங்கும்.

8.  பொறுப்பு நிர்ணயம் என்பதை, கடந்தகால மனித உரிமை மற்றும் மனித கௌரவ மீறல்களுக்கு தனிநபர் மற்றும் அமைப்புகளின் அரசியல்ரீதியான, சட்டரீதியான மற்றும் தார்மீக பொறுப்பை நிர்ணயிப்பதற்கான பொதுவான நடைமுறையாக இந்தக் குழு  கருதுகிறது. பொறுப்பு நிர்ணயம், உண்மை, நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் சண்டைக்குப் பிறகு நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தத் தேவையான விரிவான செயல்பாடுகளும் இதனுடன் ஒருங்கிணைந்து இருக்கிறது என்றும் இந்தக் குழு கருதுகிறது.

அறிக்கையின் பிற்பகுதி பொறுப்பு நிர்ணயத்தின் கூறுகளையும் பகுதிகளையும், பொறுப்பு நிர்ணயம் குறித்த இலங்கை அரசின் கருத்துக்களையும் விவரிக்கிறது.

9. பொறுப்பு நிர்ணயத்துக்கான தகுதரங்களும் வழிமுறைகளும் வெற்றிடத்தில் பரிசீலிக்கப்பட முடியாது. குழுவின் குறிப்பு விதிகளில்  பொதுச்செயலாளருக்கு அது அளிக்கும் அறிவுரை, விதிமீறல்களின் தன்மை மற்றும் வீச்சைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. "தன்மை மற்றும் வீச்சு" என்பவை குற்றச்சாட்டுகளின் பரவல், சட்ட தகுதிகள் இரண்டையும் குறிப்பிடுகின்றன.

எனவே  குற்றச்சாட்டுகளின் வீச்சை நிர்ணயிக்க பல்வேறுபட்ட இடங்களிலிருந்து தகவல்களை திரட்டி, அவற்றின் சட்ட அடிப்படையைப் பரிசீலித்து பொறுப்பு நிர்ணயம்பற்றிய கூட்டு அறிக்கையை செயல்படுத்துவது தொடர்பாக ஆகச் சிறந்த அறிவுரையை பொதுச்செயலாளருக்கு குழு அளிக்க இந்த விதிமுறை வேண்டுகிறது.

சர்ச்சைக்குள்ளான தகவல்களின் உண்மை நிலை குறித்து குழுவால் முடிவு எடுக்க முடியாததால், ஐக்கிய நாடுகள் சபையில் வழக்கமாக புரிந்து கொள்ளப்படும் 'உண்மை அறிதலை' இந்தக் குழு நடத்தவில்லை. அரசுகளின், அரசுசாரா அமைப்புகளின் அல்லது தனிநபர்களின் சட்டப்படியான பொறுப்பு அல்லது தவறுகள் குறித்த முடிவுகளை உருவாக்கும் முறையான விசாரணையையும் இந்தக் குழு நடத்தவில்லை. (3)

10. இலங்கையில் பொறுப்பு நிர்ணயம் செய்வதற்கு பொதுச்செயலாளர் பயன்படுத்தும் வகையில், குற்றச்சாட்டுகள் மற்றும் பொறுப்பு நிர்ணயத்துக்கான பலவகை வழிமுறைகளைப் பற்றிய குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில், பரிந்துரைகளை இந்தக் குழு அளித்திருக்கிறது.  பணி செய்த காலகட்டத்தில் குழுவுக்குக் கிடைத்தத் தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

11. பணியின் ஆரம்பத்திலிருந்தே பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரிகளும், இந்தக் குழு பொதுச்செயலாளருக்குக் கீழ் பணி புரிந்தாலும், இறுதியில் பொதுச்செயலாளருக்கு அறிவுரை அளிக்க இருந்தாலும், தன்னிச்சையாக செயல்படுவதற்கான அதிகாரம் அதற்கு இருப்பதாக தெளிவு படுத்தினார்கள். மேலும் குழு இலங்கை அரசைச் சார்ந்து செயல்படத் தேவையில்லை என்பதை ஐக்கிய நாடுகளின் அலுவலர்கள் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தினார்கள்.

(2) கூட்டு அறிக்கையின் முழு உரையை பிற்சேர்க்கை 1ல் காணலாம். 

(3) 'பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு' பிரிவில் ஐக்கியநாடுகளின் 'உண்மை அறிதல் பற்றிய அறிவிக்கை'யைப் பார்க்கவும்.  
பொதுச்சபை தீர்மானம், A/RES/46/59 (1991); ஐக்கிய நாடுகளின் சட்டவிவகாரங்கள் அலுவலகம், அரசுகளுக்கு இடையேயான சச்சரவுகளை அமைதியாக தீர்த்து வைப்பது பற்றிய கையேடு (1992), pp. 24-33.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: