வியாழன், மே 05, 2011

1. அறிமுகம் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============
அறிமுகம்

1. இலங்கையில் நடந்த போர், சச்சரவுகளுக்கு நடுவில் கொடும் துயரத்தில் முடிவடைந்தது. கொடூரங்களுக்குப் பெயர்போன தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, 27 ஆண்டு சண்டை முடிவுக்கு வந்ததில் இலங்கை மக்களும் உலகெங்கிலும் உள்ள மற்றவர்களும்  நிம்மதி அடைந்தார்கள்.

ஆனால், நாட்டின் ஆயுதப்படைகள் இந்த வெற்றியை அடையப் பயன்படுத்திய முறைகளைப் பற்றி இலங்கையிலும் பிற இடங்களிலும் உள்ள பலர் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

விடுதலைப்புலிகள், வடகிழக்குக் கடற்கரைப் பகுதியான வன்னியின் ஒரு சிறு மூலைக்கு தள்ளப்பட்டதால், லட்சக்கணக்கான பொதுமக்கள் எங்கும் தப்பித்துப் போக முடியாமல், தீவிரமான இரண்டு போர்க்குழுக்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டதை பல மாதங்கள் பெரும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களுமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அரசுத் தரப்பின் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் அந்தப் பகுதியை விட்டுத் தப்பி ஓட முயற்சித்தபோது பெண்களும் குழந்தைகளும் உட்பட பலர் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

மனிதாபிமான உதவிகளுக்கான தேவை அதிகரித்த இந்த நேரத்தில் இலங்கை அரசு அவற்றின் மீதான தடைகளை அதிகரித்துக் கொண்டே போனது. அரசியல் தீர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், குறைந்தபட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்ச் சேரும் வகையில் சண்டையில் போதுமான இடைவெளி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

2. சண்டை பகுதியிலிருந்து பாரபட்சமில்லாத செய்தி சேகரிப்பு மிகக் குறைவாக இருந்ததால், மே 19, 2009ல் இலங்கை குடியரசுத் தலைவரின் வெற்றி பிரகடனத்தோடு முடிவடைந்த இறுதி ராணுவத் தாக்குதலின் போது உண்மையில் என்ன நடந்தது என்று தெளிவாக தீர்மானிப்பது சிரமமாக இருந்தது. 

இருந்தாலும், அரசாங்கத்தின் முந்தைய கணிப்புகளை விட பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சண்டைப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 2,90,000 பொதுமக்கள், சூழப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. ஏறக்குறைய 14,000 பேர், அவர்களில் பலர் பலத்த காயமடைந்தவர்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பராமரிப்பின் கீழ் கடல் வழியாக காப்பாற்றப்பட்டார்கள்.

இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தீர்மானிக்கப்படா விட்டாலும், கிடைக்கும் எல்லா அறிகுறிகளிலிருந்தும் உயிரிழப்பு மிகவும் அதிகமாக இருந்தது என்று தெரிகிறது. இது இப்படியிருக்க, அரசாங்கம் தான் 'மனிதாபிமான பாதுகாப்பு நடவடிக்கை'யை, 'பொதுமக்கள் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது' என்ற கொள்கையுடன் நடத்தியதாகத் தொடர்ந்து சாதித்து வருகிறது. 

3. உள்நாட்டுப் போர் முடிந்த மூன்றே நாட்களுக்குப் பிறகு, பொதுச்செயலாளர் இலங்கைக்குப் போய், சண்டை நடந்த சில பகுதிகளையும் போர்ப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்த்தப்பட்ட மக்களுக்கான முகாம்களையும் நேரில் சென்று பார்த்தார். அந்த பயணத்தின் முடிவில், பொதுச்செயலாளர் இலங்கை குடியரசுத் தலைவருடன் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

ராணுவ நடவடிக்கைகளின் போது மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டதற்கான பொறுப்பை நிர்ணயிப்பதன் முக்கியத்துவத்தை பொதுச்செயலாளர் வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் அந்தப் புகார்களைப் பற்றி விசாரிப்பதாக ஒத்துக் கொண்டார். அந்த கூட்டு வாக்குறுதியின் விளைவாகவே இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

4. இந்தக் குழுவின் பொறுப்பாணை, போரின் கடைசிக் கட்டங்கள் தொடர்பான கூட்டு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது குறித்து பொதுச்செயலளாருக்கு ஆலோசனை வழங்குவதாகும். பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்ட நிகழ்வுகளின் தன்மை மற்றும் வீச்சையும் இலங்கை அரசின் எதிர்வினைகளையும் குழு இந்த அறிக்கையில் அலசுகிறது.  குறிப்பாக, பன்னாட்டு தகுதரம் மற்றும் ஒப்பீட்டு அனுபவங்களின் அடிப்படையில், 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் சமாதான குழுமம் (LLRC)' மதிப்பீடு செய்யப்பட்டது. 

இலங்கையின் சட்ட அமைப்பு மற்றும் பொறுப்பு நிர்ணயத்துக்கான உள்நாட்டு அமைப்புகளைப் பற்றியும் இந்தக் குழு ஆராய்கிறது. இந்தப் பணியின் போது, இலங்கையின் வரலாற்று மற்றும் அரசியல் பின்னணியையும், பொறுப்பு நிர்ணயத்துக்கான தற்போதைய சூழலையும் குழு கணக்கில் எடுத்துக் கொண்டது. குழுவினரின் பணிகளிலிருந்து உருவான இந்த அறிக்கையில் பொதுச்செயலளாருக்கு ஆலோசனை வழங்கும் விதமாக பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: