வெள்ளி, மே 06, 2011

2. குழு உருவாக்கம் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

================
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
================
பொறுப்பாணை, உள்ளடக்கம் மற்றும் பணித் திட்டம்

A. குழு உருவாக்கம்
5. இலங்கையில் நடந்த ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் நடந்தாகக் கூறப்படும் மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்களை மீறிய நிகழ்வுகளுக்கு பொறுப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக ஒரு நிபுணர் குழு அமைப்பதாக பொதுச்செயலாளர் ஜூன் 22, 2010 அன்று அறிவித்தார். குழுவின் குறிப்பு விதிகள் பின்வருமாறு அமைக்கப்பட்டன.

பொதுச்செயலாளரின் பயணத்தின் முடிவில் மே 23, 2009 அன்று வெளியிடப்பட்ட பொதுச்செயலாளர் மற்றும் இலங்கை குடியரசுத் தலைவரின் கூட்டறிக்கையில், இலங்கை அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுக்கும் (விடுதலைப்புலிகள்) இடையேயான ராணுவ நடவடிக்கைகளின் போது நிகழ்ந்த மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டதற்கான பொறுப்பை நிர்ணயிப்பதற்கான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை பொதுச்செயலாளர் வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் இந்தப் புகார்களைத் விசாரிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இந்த பின்னணியில் இந்தத் தருணத்தில்,
  1. பொதுச்செயலாளர் போரின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான மேற்சொன்ன வாக்குறுதி நிறைவேற்றப்படுவது குறித்து அவருக்கு அறிவுரை கூற  நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளார்.
  2. இந்தக் குழுவின் நோக்கம், பொறுப்பை நிர்ணயிப்பதாக தரப்பட்ட கூட்டு உறுதிமொழி நிறைவேற்றப்படுவதற்கு விதிமீறல்களின் தன்மை மற்றும் வீச்சின் அடிப்படையில் தொடர்புள்ள வழிமுறைகள், சர்வதேச தகுதரங்கள், ஒப்பீட்டு அனுபவங்கள் பற்றி  பொதுச்செயலருக்கு அறிவுரை கூறுதல் ஆகும்.
     
  3. இந்தக் குழு தேவையான மற்றும் பொருத்தமான அனுபவம் உடைய மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். குழு தனது பணி முறைகளை தானே உருவாக்கிக் கொள்ளும். இதற்கு ஒரு செயலகத்தின் உதவியும், OHCHRன் ஆதரவும் இருக்கும்.
  4. பணி ஆரம்பித்து 4 மாதங்களுக்குள் குழு தனது அறிக்கையை பொதுச்செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  5. இந்தக் குழுவுக்கு பொதுச்செயலாளரின் எதிர்பாராத செலவுத் திட்டத்திலிருந்து நிதி வழங்கப்படும்.
  6. மார்சுகி தாருஸ்மேன் (இந்தோனேசியா), தலைமை; ஸ்டீவன் ரட்னர் (யுனைடட் ஸ்டேட்ஸ்); யாஸ்மின் சூகா (தென் ஆப்பிரிக்கா) ஆகியோரை இந்தக் குழுவின் உறுப்பினர்களாக பொதுச்செயலாளர்  நியமித்தார். இந்தக் குழு செப்டம்பர் 16, 2010ல் தனது பணியை முறையாகத் தொடங்கியது.(1)
B. குழுவின் பொறுப்பாணை

1. குழுவின் பொதுவானபணி
7.  பொதுச்செயலாளருக்கும் இலங்கை குடியரசுத் தலைவருக்கும் இடையேயான மே 23, 2009 கூட்டு அறிக்கையின்படி, எல்லாக் குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் வீச்சைப் பொறுத்து பொறுப்பை நிர்ணயிக்க இலங்கை அரசு இது வரை எடுத்துள்ள நடவடிக்கைகள், இனிமேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பொதுச்செயலாளருக்கு அறிவுரை அளிப்பது இந்தக் குழுவின் கடமையாகும். (2)

(1). இடையில் ஏற்பட்ட மாற்றங்களினால், குழுவின் அறிக்கைக்கான காலக் கெடு பிற்பாடு மார்ச் 2011 வரை நீட்டிக்கப்பட்டது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: