வெள்ளி, மே 13, 2011

9. விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============
 32. விடுதலைப் புலிகள் நவீன தற்கொலை வெடிகுண்டுகளை உருவாக்கி, அவற்றை ராணுவ, அரசியல் மற்றும் பொது இலக்குகளின் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தினார்கள். விடுதலைப்புலி தற்கொலை படையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி (1991), இலங்கை குடியரசுத் தலைவர் ரணசிங்கே பிரேமதாச (1993) மற்றும் பல இலங்கை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களின் சாவுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.

பொருளாதார மற்றும் மத இலக்குகளின் மீது தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தி பெருமளவு பொதுமக்கள் சாவுக்கும் வழிவகுத்தார்கள்.

விடுதலைப் புலிகள் ஒதுக்கி வைக்கும் அரசியலைப் பின்பற்றினார்கள். 1990ல் வடக்கு முஸ்லீம்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றினார்கள். தனது கட்டுப்பாட்டு  பகுதிகளின் எல்லைகளில் இருந்த கிராமங்களில் வாழும் சிங்களர்களையும் முஸ்லீம்களையும் படுகொலை செய்தார்கள். தமிழ் மக்களைக் கட்டுப்படுத்த வன்முறை, மிரட்டல்கள், பயமுறுத்தல்கள் போன்ற உத்திகள் விடுதலைப் புலிகளால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.

சிறுவர்களான பையன்களையும், பெண்களையும் படைவீரர்களை அமர்த்திப் பயன்படுத்துவதில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெயர் போனது. அதன் அணுகுமுறைகளின் காரணமாக கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் அது தடை செய்யப்பட்டது.  செப்டம்பர் 11, 2011க்குப் பிறகு அதன் மீதான தடைகள் அதிகமாயின.

33. 1990களிலிருந்து மே 2009 வரை விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கு கிழக்கு இலங்கையின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அரசுப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையேயான  நிலப்பரப்பை கட்டுப்படுத்தும் போராட்டத்தின் போக்கைப் பொறுத்து இந்தப் பகுதிகளின் எல்லைகள்  மாறி வந்தன.

ஒரு நடைமுறை அரசாங்கமாக செயல்பட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. இந்த நோக்கத்திற்காக விடுதலைப்புலிகள் நன்கு திட்டமிடப்பட்ட சர்வதேச அணுகுமுறையை உருவாக்கினார்கள். அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சொந்தமாக காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், குடிபெயர்வு துறை, வங்கிகள், மற்றும் சில சமூக பணிகளை உருவாக்கினார்கள்(9)

தரை, வான் மற்றும் கடல் திறமைகளுடன், கரில்ல மற்றும் பாரம்பரிய உத்திகளைக் கடைப்பிடிக்கும், பரவலான உளவு அமைப்பால் ஆதரிக்கப்பட்ட நவீன போர்ப்படையையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

34. கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் உலகெங்கிலும் பரவியிருக்கிறார்கள். அவர்களில் பெரு எண்ணிக்கையிலானவர்கள், 1980களிலிருந்து அரசாங்கத்தின் வன்முறையான அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து போனவர்கள், மற்றவர்கள் பொருளாதார வாய்ப்புகளுக்காக போனவர்கள். இந்த நாடு கடந்த மக்கள்குழு போரின் போது முக்கியமான பங்கு வகித்தது.

சில பிரிவினர் முக்கியமான பண உதவி, பரப்புரை, சண்டையின் போது விடுதலைப் புலிகளின் தவறுகளை தொடர்ந்து மறுப்பது போன்ற எந்தக் கேள்வியும் கேட்காத நிபந்தனையற்ற ஆதரவை விடுதலைப் புலிகளுக்கு அளித்தனர்.  எல்லா ஆதரவும் தானாக கிடைத்தது என்று சொல்ல முடியாது கட்டாயப்படுத்தல் உட்பட்ட தனது உத்திகளை இலங்கையின் கரைகளுக்கு அப்பாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் பரப்பியது.

பெரு எண்ணிக்கையில் இலங்கை தமிழ் அகதிகள் வாழும் நாடுகளில் அவற்றைப் பயன்படுத்தி தமிழர்கள் சொந்த தாய்நாடு ஏற்படுத்த விரும்புவதையும் அதை அடைவதற்கான முறைகளையும் பற்றிய தனது  வரையறையை அனைவர் மீதும் சுமத்தியது. விடுதலைப் புலிகளின் வன்முறைக்கு உள்ளான பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு எந்த இடமும் இருக்கவில்லை.

B. சட்டப் படியான ஆட்சி முறை மற்றும் மனித உரிமைகள் வலுவிழந்தது.
35. இலங்கையின் 1978 அரசமைப்புச் சட்டம் அரசின் ஒருங்கிணைந்த இயல்பை வலியுறுத்தி அதிகப்படியான அதிகாரங்களை நிர்வாக குடியரசுத் தலைவரிடம் குவித்தது. அவர் நாட்டின் தலைவராகவும், அரசின் தலைவராகவும், ஆயுதப்படைகளின் தலைமை தளபதியாகவும் பணியாற்றுகிறார். இவற்றைத் தவிர, குடியரசுத் தலைவர் தனது விருப்பத்திற்கேற்ப எந்த ஒரு அமைச்சகத்தின் தலைமையையும் ஏற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு, நிதி, திட்டமிடுதல், துறைமுகங்கள் மற்றும் வான்பயணம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய 5 அமைச்சகங்களின் தலைமை வகிக்கிறார் :

(9) அதே நேரம் அரசு அமைப்புகளை இந்தப் பகுதிகளில் தொடர்ந்து இயங்க வைத்து உடல்நலம் கல்வி போன்ற சில சமூகப் பணிகளை அரசு அளித்தது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: