ஞாயிறு, மே 08, 2011

4. நடைமுறை அதிகாரங்கள் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============

2. குழுவின் நடைமுறை அதிகாரம்

12. "போரின் இறுதிக் கட்டங்கள்" பற்றிய கூட்டு அறிக்கை செயல்படுத்தப்படுவதைக் குறித்து பொதுச்செயலாளருக்கு அறிவுரை அளிக்கும்படி குழுவின் பணி விதிமுறைகள் வேண்டுகின்றன. செப்டம்பர் 2008லிருந்து மே 2009 வரையான கால கட்டத்தில் இந்தக் குழு கவனம் செலுத்தியது. இந்தக் காலகட்டம் மிக மோசமான பன்னாட்டு சட்ட விதிமீறல்கள் நடந்ததாகச் சொல்லப்படும் கடுமையான கொடுமையான போர்க் காலத்தை உள்ளடக்கியுள்ளது.

செப்டம்பர் 2008 என்பது விடுதலைப்புலிகளின் நடைமுறை தலைநகரமான கிளிநொச்சி மீது அரசாங்கத்தின் இறுதி ராணுவ தாக்குதல் ஆரம்பித்ததைக் குறிக்கிறது. வன்னியில் பணிபுரிந்து வந்த பன்னாட்டு அமைப்புகளின் ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று அரசாங்கம் அறிவித்து விட்டதால் பன்னாட்டு கண்காணிப்பும் இத்தோடு முடிவுக்கு வருகிறது.

13. சில சமயங்களில், கூடுதல் புரிதலுக்காக, இறுதிக் கட்டம் என்று மேலே வரையறுக்கப்பட்ட காலத்துக்கு முற்பட்ட பிரச்சனைகளையும் இந்தக் குழு விவாதிக்கிறது. கூடுதலாக, இறுதிக் கட்டப் போர் முடிவதற்கு முன்பு ஆரம்பித்து அல்லது அதனுடன் நெருக்கமாக தொடர்புடைய, பகை நிலைமை முடிந்த பிறகும் தொடர்ந்த, இன்றும் தொடரும் மீறல் குற்றச்சாட்டுகளையும் இந்தக் குழு கருத்தில் எடுத்துக் கொண்டது.  ஆயுதப் போராட்டத்துக்கு நெருங்கிய தொடர்பு இல்லாத உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை, குறிப்பாக இலங்கையின் பிற பகுதிகளில் நடந்தவற்றை இந்தக் குழு ஆராயவில்லை.

3. விதிமீறல் குற்றச்சாட்டுகளின் பொருளடக்கம்
14. குறிப்புரை விதிமுறைகள், மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்களை மீறிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றது. சண்டையில் கலந்து கொள்ளாத மக்களை நடத்தும் வழிமுறைகள், போர் உத்திகள், நடத்தைகள் போன்ற மனிதாபிமான சட்டங்களைப் பொறுத்த வரை, ஜெனீவா கூட்டமைப்புகளில் ஏற்படுத்தப்பட்ட பாரம்பரிய அளவீடுகளையும் மற்றும் வழக்கத்திலுள்ள சர்வதேச சட்டத்தின் அளவீடுகளையும் இந்தக் குழு முன்வைக்கிறது.

மனித உரிமை சட்டங்களைப் பொறுத்த வரை, இந்தக் குழு அரசியல் குடிஉரிமையையும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளையும், குறிப்பாக இலங்கை நிறைவேற்றியுள்ள பன்னாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. இதைச் செய்யும் போது, பெண்களின் மீதும் குழந்தைகளின் மீதும் ஆயுதப் போர்களின் தாக்கங்கள் பற்றிய பாதுகாப்பு சபை தீர்மானங்களை இந்தக் குழு கருத்தில் கொண்டது. நீடித்த அமைதி மற்றும் சமாதானத்தின் மீது இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இந்தக் குழு அங்கீகரிக்கிறது. (4).

பொறுப்பு நிர்ணயம் தொடர்பான மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பான பன்னாட்டு சட்டங்களை உள்ளடக்கி இலங்கையின் உள்நாட்டு சட்டங்கள் இருக்குமானால் இலங்கையின் சட்டங்களையும் இந்தக் குழு விவாதிக்கிறது. கடைசியாக இந்தக் குழு போரின் முக்கிய பங்காளர்களான அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் செய்ததாகக் கூறப்படும் மீறல்களைப் பற்றி பேசுகிறது.

C. பணித்திட்டம்.
15. இந்தக் குழு தனது பணிமுறைகளை தானே வகுத்துக் கொள்ளும் என்றும் ஒரு செயலகத்தின் உதவி அதற்கு இருக்கும் என்றும் குறிப்புரை விதிகள் குறிப்பிடுகின்றன. செப்டம்பர் 2010 மத்தியில் பணியைத் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக, ஐக்கிய நாடுகள் அமைப்புக்குள் பணி புரியும் ஊழியர்களிலிருந்து ஒரு செயலகம் உருவாக்கப்பட்டது.

வேறு வழிகளில் கிடைக்காத ஆலோசனைகளைப் பெற இந்தக் குழு ஒரு சில வெளிநிபுணர்களையும் கூடுதலாகப் பயன்படுத்திக் கொண்டது. ஐக்கிய நாடுகள் பொதுச்செயலகத்தின் தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஏற்கனவே இருக்கும் குறிப்புரை குழுவும் இந்தக் குழுவுக்கு உதவி செய்தது.

(4) பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் 1325 (2000), 1612 (2005), 1674 (2006), 1820 (2008), 1882 (2009) and 1888 (2009) ஆகியவற்றைப் பார்க்கவும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: