செவ்வாய், ஜூன் 20, 2006

இந்தியாவின் மதச்சார்பின்மை

இந்துத்துவா பற்றியும் காந்தி பற்றியும் நான் எழுதிய சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்களாகவும், மின் அஞ்சல் மூலமும் இந்தியாவில் போலி மதச்சார்பின்மை பின்பற்றப்படுகிறது, மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதுடன், சிறுபான்மையினருக்குச் சலுகைகள் போட்டி போட்டுக் கொண்டு வழங்கப்படுகின்றன என்று சில நண்பர்கள் (சாணக்கியன், ஷங்கர்) கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியாவின் வரலாறு, அரசியலமைப்பு, இன்றைய நிலை போன்றவற்றை அலசிய பிறகு எனக்கு ஏற்பட்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலேயே இந்தியா ஒரு இந்து நாடு அல்ல. இந்தியா என்பது பல்வேறு மதத்தினரும், பல்வேறு இனத்தினரும், பல்வேறு மொழி பேசுபவரும் சம உரிமைகளோடு வாழ ஒத்துக் கொண்டு அமைந்த ஒரு நாடு. பல்வேறு பிரிவினர் பல்வேறு காரணங்களால் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருந்தாலும், பிற பிரிவினரின் நலன்களை சிறப்பு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்போம் என்ற அடிப்படையில் அமைந்தது இந்தியக் குடியரசு.

அது சாத்தியமில்லை, பெரும்பான்மை இந்துக்களுடம் சேர்ந்து வாழும் போது முஸ்லீம்கள் தமது மதத்தையும் தனிக் கலாச்சரத்தையும், சமூகச் சட்ட திட்டங்களையும் தொடர்ந்து பின்பற்ற முடியாமல் போய் விடும், எனவே முஸ்லீம்கள் வாழும் எல்லாப் பகுதிகளும் பாகிஸ்தான் என்ற பெயரின் கீழ் தனி நாடாக ஆளப்பட வேண்டும் என்று போராடியது ஜின்னாவின் தலைமையின் கீழான முஸ்லீம் லீக். அதற்குத் தேவையே இல்லை, இந்துப் பெரும்பான்மை மற்ற மதங்களின் உரிமைகளை நம்பிக்கைகளை நசுக்கி விடாது, அதனால் இந்தியா ஒரே நாடாக இருக்க் வேண்டும் என்பது காந்தியின் தலைமையிலான காங்கிரசு.

ஜின்னாவின் கோட்பாட்டின் படி, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் எல்லாப் பகுதிகளும் (எல்லா) பாகிஸ்தானைச் சேர வேண்டும். பஞ்சாப், வங்காளம் போன்ற முஸ்லீம் பெரும்பான்மை மாநிலங்கள், ஹைதராபாத் போன்ற முஸ்லீம் பெரும்பான்மை நகரங்கள், ஏன் நகரங்களில் முஸ்லீம் பெரும்பான்மை வட்டங்கள் கூடப் பாகிஸ்தானாகி விட வேண்டும். அத்தகைய பகுதிகள் இந்தியப் பெருநாடு முழுவதும் துண்டு துண்டாகச் சிதறிக் கிடக்கலாம். ஆனால் அவை அனைத்திலும் ஷரியத் சமூகச் சட்டம் செயல்படும், முஸ்லீம் மதத்துக்குப் பொருந்தும் கல்விக் கூடங்கள் செயல்படும், முஸ்லீம்கள் புனித யாத்திரை போக அரசு மானியம் வழங்கும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை முஸ்லீம்களை நிர்வகிப்பார்கள். மொத்தத்தில் புவியியல் அடிப்படையில் பிளவுபட்டுக் கிடந்தாலும் இந்தப் பகுதிகளில் எல்லாம் முஸ்லீமகள் நிம்மதியாக வாழ முடியும்.

இது என்ன முட்டாள் தனம்? நாம் அமைக்கப் போகும் அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையினரும் தமக்கு விருப்பமான வகையில் வாழும்படிதான் அமையப் போகிறது. யாரும் பெரும்பான்மை பிரதிநிதி பலத்தைப் பயன்படுத்தி சிறுபான்மையினர் விரும்பாத நடவடிக்கைகளை எடுக்க முடியாத வகையில்தான் அமையப் போகிறது. இந்தியா ஒரே நாடாகத் தான் இருக்க வேண்டும் என்பது காந்தியின் வாக்கு.

அந்த வாக்கை எதிர்த்து வன்முறைக் கலகங்களைத் தூண்டி தனது நோக்கத்தில் ஒரு பகுதியை மட்டும் நிறைவேற்றி பாகிஸ்தானை உருவாக்கிக் கொண்டார் திரு ஜின்னா அவர்கள். இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் முஸ்லீம்கள் இந்தியத் தலைவர்களின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து, உருவான அரசியலமைப்புச் சட்டத்தைச் சாட்சியாக வைத்து இந்திய நாட்டிலேயே வாழ முடிவு செய்தார்கள். அவர்கள் விரும்பும் வரை, அவர்களாக முன் வந்து மாற்றாத வரை, அவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புச் சட்டங்களை, சலுகைகளை, உரிமைகளை ரத்துச் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது.

அப்படி ரத்துச் செய்ய முனைபவர்கள், இந்தியா என்ற நவீன நாடு அமைக்கப்பட்டதன் அடிப்படையான அரசியலமைப்புச் சட்டத்தைச் செல்லாததாக்குகிறார்கள். அப்படி அரசமைப்புச் சட்டம் செல்லாததாகி விட்டால் இந்தியாவில் சேர்ந்து வாழும் ஒவ்வொரு குழுவும் தனது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையைப் பெற்று விடும். இந்தியா உடைந்துச் சிதற வேண்டும் என்று எண்ணுபவர்கள் மட்டுமே, பெரும்பான்மை மத அரசியலில் ஈடுபடுவார்கள்.

இந்த முன்னுரையுடன், எழுப்பபட்ட விவாதங்களைப் பார்ப்போம்.

போலி மதச்சார்பின்மை

1. முஸ்லீம் நாடுகளில் ஹஜ் மானியம் அளிக்கப்படுவதில்லை. இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. முஸ்லீம் நாடுகளில் சிறுபான்மையினருக்குச் சலுகைகள் எதுவும் அளிக்கப்படுவதில்லை.

2. இந்தியாவில் குடியரசுத் தலைவரும், பிரதம் மந்திரியும் இந்துக்கள் அல்லாதவர்கள். ஒரு முஸ்லீம் நாட்டில் ஒரு முஸ்லீம் அல்லாதவர் நாட்டுத் தலைவர் ஆக முடியாது.

3. முஸ்லீம் மதத் தலைவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக கட்டளைகள் பிறப்பிப்பதில்லை.

4. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்களில் முஸ்லீம் முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம் பெரும்பான்மை ஜம்மு காஷ்மீரில் அது இதுவரை நடக்கவில்லை.

5. பாகிஸ்தானிலும், வங்காள தேசத்திலும் இந்துக்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது. இந்தியாவில் வளர்ந்து கொண்டே போகிறது.

6. இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதியை முஸ்லீம்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்ட இந்தியர்கள் தமது கோயில்களை மீட்க ஏன் இன்னும் போராட வேண்டியிருக்கிறது.

7. சோமநாதர் கோயிலை சீரமைக்க அரசு பணத்தைச் செலவளிக்காமல் பொது மக்களிடம் நிதி திரட்ட வேண்டும் என்று வலியுறுத்திய காந்தி, தில்லியில் இடிக்கப்பட்ட மசூதிகளை அரசு செலவில் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியது ஏன்?

8. காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்தது ஏன்? அதன் மூலம் அவருக்குக் கிடைத்த நன்றி என்ன?

9. இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் இந்திய மாநிலங்களில் அவர்களுக்கு ஏன் சிறுபான்மை பாதுகாப்பு இல்லை?

10. ஹஜ் பயணத்துக்கு மானியம் இருப்பது போல இந்துப் பயணங்களுக்கு ஏன் மானியம் இல்லை.

11. சிறுபான்மை மதப் பள்ளிகளில் அவர்கள் மத நூல்கள் போதிக்கப்படும்போது, இந்துப் பள்ளிகளில் ஏன் இந்து மத நூல்கள் போதிக்கப்படுவதில்லை?

12. கோத்ராவுக்குப் பிறகான கலவரங்களை பெரிது படுத்திக் காட்டும்போது, காஷ்மீரில் கொல்லப்பட்ட 4 லட்சம் இந்துக்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

13. கோயில் பணத்தை சிறுபான்மையினர் நலனுக்காகச் செலவளிப்பது ஏன்? சிறுபான்மையினரின் பணம் அவர்கள் விருப்பப்படி செலவளிக்கப்படுகிறதே?

14. பள்ளிகளின் சீருடை இருப்பது போல, சட்டத்தில் ஏன் ஒரே மாதிரியான சமூகச் சட்டங்கள் இல்லை?

15. காஷ்மீருக்கு 370வது பிரிவு ஏன்?

16. இந்துக் கோயில்களின் நிர்வாகியாக ஒரு முஸ்லீம் நியமிக்கப்படலாம். சிறுபான்மையினரின் மதத் தலங்களை நிர்வகிக்க ஒரு இந்து நியமிக்கப்பட முடியுமா?

இந்தக் கருத்துகள் அனைத்துமே முஸ்லீம்களுக்கும் நாட்டின் கொள்கைகளை தீர்மானிக்க சம உரிமை உண்டு என்ற அடிப்படையில் பார்த்தால் செல்லாததாகி விடுகின்றன. சவுதி அரேபியாவிலும், இசுரேலிலும் சிறுபான்மையினரும், வலிமை குறைந்தவரும் நசுக்கப்படுவதற்கும் நமக்கும் ஒப்பீடே இல்லை. அவர்களது பிரச்சனையை அவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள். நம்முடைய தலைவர்கள் அளித்த கொடையின் பலன் களை நாம் அனுபவிக்கிறோம்.

23 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்!

//அப்படி ரத்துச் செய்ய முனைபவர்கள், இந்தியா என்ற நவீன நாடு அமைக்கப்பட்டதன் அடிப்படையான அரசியலமைப்புச் சட்டத்தைச் செல்லாததாக்குகிறார்கள். அப்படி அரசமைப்புச் சட்டம் செல்லாததாகி விட்டால் இந்தியாவில் சேர்ந்து வாழும் ஒவ்வொரு குழுவும் தனது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையைப் பெற்று விடும்//

//இந்தக் கருத்துகள் அனைத்துமே முஸ்லீம்களுக்கும் நாட்டின் கொள்கைகளை தீர்மானிக்க சம உரிமை உண்டு என்ற அடிப்படையில் பார்த்தால் செல்லாததாகி விடுகின்றன. சவுதி அரேபியாவிலும், இசுரேலிலும் சிறுபான்மையினரும், வலிமை குறைந்தவரும் நசுக்கப்படுவதற்கும் நமக்கும் ஒப்பீடே இல்லை//

நீங்கள் இந்த சிறப்பு சலுகைகளை நீடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா இல்லை , நீக்க சொல்கிறீர்களா என்று சிறிது குழப்பமாக இருக்கிறது.

ஆனாலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் சாத்தியம் இல்லை எனச்சொல்கிறீர்கள்.எனவே சிறுபான்மையினருக்கு சலுகைகள் நீடிக்கவேண்டும் என்பதாக தான் இருக்கும்.ஆனால் அரசியலமைப்பு சட்டம் ஒன்றும் மாற்ற முடியாத ஒன்றல்ல இதுவரை 73 தடவை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எனவே திருத்தம் செய்யப்பட்ட சட்டம் தேவை இல்லை எனயாரும் சொல்லப்போவதில்லை. அரசியலமைப்பு சட்டம் இருப்பதால் சிறுபாண்மையினர் சலுகைகளை நீக்க சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என சொல்கிறீர்கள்.தானாக நீக்க முயற்சித்தால் நாடு துண்டாகும் என்பதாக சொல்கிறீர்கள். அப்படி எனில் ஒரு அரசியலமைப்பு சட்ட திருத்தம் மூலம் இந்த சிறப்பு சலுகைகள் நீக்கப்பட்டால் நாடு துண்டாகாமல் தப்பிக்குமா?

//இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் முஸ்லீம்கள் இந்தியத் தலைவர்களின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து, உருவான அரசியலமைப்புச் சட்டத்தைச் சாட்சியாக வைத்து இந்திய நாட்டிலேயே வாழ முடிவு செய்தார்கள்//

இன்னும் சொல்லபோனால் சுதந்திரத்தின் போது சிறுபாண்மையினர் நாட்டை விட்டு போகாதது அரசியலைப்பு சட்டத்தை நம்பித்தான் என்பது ஒரு நகைச்சுவையே ,ஏனெனில் அப்பொழுது அரசியலமைப்பு சட்டமே இயற்றப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். 1947க்கும் 1950 க்கும் இடையில் தான் இயற்றபட்டு ,1950 முதல் நடைமுறைக்கு வந்தது என்பது வரலாறு.இல்லாத சட்டதினை சாட்சியாக எப்படி வைத்தார்கள்

சிறுபாண்மை இன மக்கள் வெளியேறமைக்கு காரணம் சுய விருப்பம் ,மற்றும் சொந்தக்காரணம் ,மேலும் நீங்கள் கூறியது போல் தலைவர்களின் பேச்சில் வைத்த நம்பிகையாக இருக்கலாம்.

சுதந்திரத்தின் போது மன்னர்களுக்கு மானியம் நிரந்தரமாக அளிக்கப்படும் எனக்கூறப்பட்டது ,பின்னர் அது நீக்கப்படவில்லையா.மன்னர்களும் சிறுபாண்மையினர் தானே எண்ணிகை அடிப்படையில் பார்த்தால்.

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்!

நான் கூறியது பின்னூட்டம் வேண்டாம் என்றல்ல பின்னுட்ட மட்டுறுத்தல் அதற்கும் மேலும் இன்ன பிற செயலிகள் வேண்டும் என ஜல்லி அடிப்பது வேண்டாம் என சொன்னேன்.கருத்து சுதந்திரம் வேண்டும் ,வலைபதிவர் அல்லாதோர் பின்னூட்டம் இட வழியில்லாது முடக்க வேண்டம் என்றே இதனை சொல்லிவருகிறேன். நீங்களும் மிக துணிவாக பின்னூட்டமிட எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் உங்களை நம்பி வலைப்பதிவு இடுவது காணும் போது மகிழ்சியாக உள்ளது.எத்தகைய காட்டமான எதிர்வாதம் வந்தாலும் எதிர்கொள்ள கூடிய மனோபாவம் நல்ல எழுத்தாளர்களுக்கு தானாகவே வரும் என்பது தெரிகிறது.

ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்கள் நக்கி கொடுத்துக்கொள்ளும் நாய்கள் என சொன்னார் அது எதிர்ப்பை எதிர்கொள்ளும் போல ஒரு துணிவே.எனவே படைப்பாளிகள் பயம் கொள்ளல் ஆகாது!

பின்குறிப்பு: உங்கள் எழுத்து வலைப்பதிவில் பின்னூட்டமிட தொடுப்பே இல்லையே,எனவே இங்கே பின்னூட்டமிடுகிறேன்.டெம்பிளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறாக நீக்கிவிட்டீர்கள் போல் உள்ளது.

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950ல் அமலுக்கு வந்தாலும், அதன் எல்லைகள் மிக முன்னதாகவே வரையறுக்கப்பட்டன என்று ஒத்துக் கொள்வீர்கள் அல்லவா? நீங்களே சொல்வது போல தலைவர்களின் கொள்கைகளைப் பின்பற்றியதே நம் அரசமைப்பு சட்டம்.

முஸ்லீம்களே முன் வந்து விரும்பாதது வரை, அவர்கள் தொடர்பான தனி சிவில் சட்டம் போன்ற உரிமைகள் நீடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. ஒரு சமூகத்தில் சீர்திருத்தம் உள்ளிருந்து வர வேண்டும். இந்து மதத்தில் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று முஸ்லீம்கள் போராடினால் நமக்கு வீம்புதான் அதிகமாகுமே ஒழிய மன மாற்றம் வராது. முஸ்லீம் பெண்களின் நிலையை மாற்றி முஸ்லீம் சீர்திருத்தவாதிகள் முனைய வேண்டுமே ஒழிய அரசோ பிற மதத்தினரோ அவர்களை குறை சொல்லி மாற்றங்களை திணிக்க உரிமை கிடையாது.

மன்னர் மானியம் நீக்கப்பட்டதை குறை கூறுபவர்களும் இன்னும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அது சரியான திருத்தம். முஸ்லீம்களைப் பொறுத்த வரை அவர்களுக்குப் பிடிக்காத மாற்றங்களை வராமல் பார்த்துக் கொள்ளும் வழிகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். தேர்தல்களில் தம் நலன்களுக்கு எதிரான கட்சிகள் வெற்றி பெற முடியாமல் கூட்டாக வாக்களிப்பது போன்றவை அதற்குத்தான் என்று நம்புகிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

I am not an constitutional expert Srinidhi. What I write is my understanding of issues.

Who are we to deny Muslims something? We are not their masters to decide how they should lead their lives.

We are all equal citizens under Indian constitution which guarantees rights to minorities to pursue their religion (for religeous minorities) and language (in the case of linguistic minorities).

No one group has the right to impose their views on another group. That is the essence of my argument.

Anbudan,

Ma Sivakumar

மா சிவகுமார் சொன்னது…

இல்லை வவ்வால்,

எழுத்து வலைப்பதிவில் பின்னூட்டங்கள் வேண்டாம் என்று நானாக மாற்றியதுதான். அதைப் படித்து விவாதிக்க விரும்புபவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய தனி வாழ்க்கையின் போக்கை பதிவு செய்யும் தளமாக அதை பாவித்து வருகிறேன். நான்கு பேருக்குத் தெரியாதபடி எதையுமே செய்யவோ ஏன் நினைக்கவோ கூட வேண்டாம் என்ற அடிப்படையில் அதை வலைப்பதிவாக வெளியிட்டு, தமிழ் மணம்/தேன் கூட்டில் இற்றைப் படுத்தவும் இணைத்து விட்டேன்.

ஆனால் அதில் ஏதாவது ஒன்றை பொதுவில் விவாதிக்கக் கூடிய அளவுக்கு நேர்மையும் உண்மையும் என்னில் வளரும் வரையில் அதைப் பற்றிய விவாதங்களை தவிர்க்க முடியா விட்டாலும், குறைக்கலாம் என்ற எண்ணத்தில்தான் பின்னுட்டங்களை எடுத்து விட்டேன்.

நான் எழுதுவதில் எதைப் பற்றியவாது மேல் விபரம் அறிய வேண்டினால் எனக்கு ஒரு அஞ்சல் அனுப்புங்கள். கண்டிப்பாக ஒளிவு மறைவில்லாமல் தகவல்களைத் தருகிறேன்.

புரிந்து கொள்ளலுக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்,

தங்கள் அனுபத்தின் அடிப்படையில் நல்ல பதிவுகளைப் போட்டு வருகிறீர்கள்.மேலதிக விவரங்கள் தேவைப்படும் பொழுது நிச்சயமாக கேட்டுப்பெறுகிறேன் நன்றி!

அசுரன் சொன்னது…

//இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலேயே இந்தியா ஒரு இந்து நாடு அல்ல//

இதிலேயே எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. எனது கருத்தில் இந்து மதம் எனப்படும் பார்ப்பன மதம் பெரும்பான்மை கிடையாது. வேண்டுமானால் அதற்க்கு வேறு பெயர் வைத்துக் கொள்ளலாம்.

அதே போன்று பாகிஸ்தான் பிரிவினையை எடுத்துக் கொண்டால் தாங்கள் அதை வியாக்கியானம் செய்திருப்பது மேம்போக்காக உள்ளது.

காங்கிரஸில் செல்வாக்கு செலுத்திய இந்து மேல் சாதியினர், முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சனைகள், பிரிட்டிஸ்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி, மதங்களின் மக்கள் விரோத தன்மை என்று பல்வேறு அம்சங்கள் உள்ள போது - தங்களது விமர்சனம் ஏற்கனவே நிலவுகின்ற ஆளும் வர்க்க கருத்தை சொல்லுவதாகவே உள்ளது.

மற்றபடி இயல்பாக உழைக்கும் மக்களிடம் மத வேறூபாடின்றி பழகும் தன்மை உள்ளதைத்தான் இந்தியாவின் மதச் சார்பின்மை என்று தங்கள் குறிப்பிடுவதாக நான் எடுத்துக் கொள்கிறேன்(தமஸ் -- என்ற இந்திய பிரிவினை பற்றிய படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்த்து. எனக்கும் அது கிடைக்கும் இடம் சொல்லவும்).

இந்தப் பதிவு மத வெறியர்களுக்கான தங்களது பதில் என்றால் மன்னிக்கவும் - காந்திய வழியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இங்கும் அது பலன் தரவில்லை என்றே கருதுகிறேன்.

வெறுமனே என்னால் பாராட்டுக்களை உதிர்த்து செல்ல முடியும். ஆனால் தங்களுடன் உண்மையான நட்பு பாராட்ட விரும்புகிறேன். அது ஒளிவுமறைவற்ற பரஸ்பர விமர்சனம், பாராட்டு மூலமே பலப்படும் என்று நம்புகிறேன்.

இந்த கட்டுரை தனது இலக்கை அடையும் தெம்பற்றதாக உள்ளது.

தாங்கள் விரும்பினால் தனிமடலில் விவாதிக்கலாம்.

தோழமையுடன்,
தங்கள் நலம் விரும்பும்,
அசுரன்.

மா சிவகுமார் சொன்னது…

அன்பு நண்பர் அசுரரே :-)

தனிமடலிலோ, வலைப்பதிவிலோ உங்களுடைய கருத்துகளை அறிந்து கொள்ள புரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். காந்தியத்தில் உங்களுக்கு என்ன நம்பிக்கைக் குறைவு?

அன்புடன்,

மா சிவகுமார்

சாணக்கியன் சொன்னது…

சிவகுமார்,

நீங்கள் வெகு நாட்கள் கழித்து பொருமையாக பதிவு போட்டுள்ளதால் அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து போலி மதச்சார்பின்மையின் பேரில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு உம்மால் இயன்றவரை நியாயப்படுத்தி பதில் சொல்லியிருப்பீர்கள் என்று பார்த்தால் மறுபடியும் ஏமாற்றமே. அனைத்து குற்றச்சாட்டுக்களையும் பட்டியலிட்டு ஒருவரியில் இவை அனைத்துமே சரியான விவாதங்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளது நீங்கள் எந்த விவாதத்திற்கும் தயாரல்ல, உங்கள் பிட்வாதமான கருத்துக்களுடன் தான் இருப்பீர், உம்முடன் விவாதம் செய்வது காலவிரயம் மட்டுமே என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இருப்பினும் இதை உமக்கு மட்டும் சொல்லும் பதிலாக இல்லாமல் உம்மைப் போன்ற கருத்துடையவர்கள் அனைவருக்கும் சொல்லும் பதிலாக நினைத்துதான் தெம்பைப் பெறவேண்டியிருக்கிறது.

போலிமதச் சார்பின்மை காந்தியால் தொடங்கப்பட்டது என்பது கிலாபத் இயக்கதின் விளைவுகளைப் பற்றி அன்னிபெசன்ட் எழுதியுள்ள குறிப்புகளைப் படித்தபிறகுகூட உங்களுக்கு விளங்கவில்லையா? http://www.thinnai.com/?module=displaystory&story_id=20605266&format=html
அன்று தொடங்கி இன்றுவரை அது தொடர்கிறது. கீழே உள்ள மூன்று நிகழ்ச்சிகள் போலிமதச்சார்பின்மையின்றி வேறு என்ன என்று கூறுங்கள்.

1. தமிழ் நாடு உட்பட 4 மா நிலங்களில் டாவின்சி கோட் திரைப்படம் ஆட்சியாளர்களால் தடை செய்யப் பட்டுள்ளது, அதுவும் பார்க்கப்படாமலேயே. உலகெங்கிலும் கிருத்தவ தலைமையிடம் உள்ள நாடுகளிலும் நகரங்களிலும் இந்தப்படம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஏன் இந்தியவின் மற்ற மா நிலங்களில் இந்தப்படம் கிருத்தவர்களின் மன நிலையை பாதித்துவிட்டதா? பதில், 'இல்லை' யெனில் ஏன் தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாஅது? இங்குதான் ஓட்டுவங்கி போலிமதச்சார்பின்மை ஓங்கி ஒலிக்கிறது.

2. பங்களாதேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் 1 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறதே, அவர்களை வெளியேற்றவேண்டுமா? வேண்டாமா? அவர்கள் குறிப்பிட்ட ஓட்டு வங்கி மதத்தை சார்ந்தவர்கள் என்பதால்தானே மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? வேறு காரணங்கள் இருந்தால் சொல்லுங்கள். இதுபோல் 1 கோடி இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தங்கி இருந்தால் இந்திய அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? மேம்போக்காக பதிலளிக்காமல் கேள்விக்குறி இட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

3. அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து உரிமைகள் மற்றும் சிறப்புச் சலுகைகளுடன் எல்லா வாய்ப்புகளையும் கல்வி, வேலை, அரசியல் ஆகிய துறைகளில் அதிகமாகவே பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும்போது புதிதாக இப்போது மத ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு காங்கிரச் உட்பட சில கட்சிகள் குரல் கொடுக்கின்றனவே, இது போலி மதச்சார்பின்மையின்றி வேறு என்ன?

னீங்கள் இந்தியக்குடிமகன் தானே? ஆம் எனில் காச்மீரத்தில் நிலம் வாங்க உங்களுக்கு உரிமை இல்லையே? எங்கே இருக்கிறது சமத்துவம்?

சிவில் சட்டங்கள் மதப்படி இருக்கலாமென்றால் கிரிமனல் சட்டஙகளும் ஏன் மதப்படி இருக்கக்கூடாது? ஒரு இச்லாமியர் திருடினால் கையை வெட்டவேண்டும் இச்லாமிய பெண் நடத்தை தவறினால் தெருவில் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்று இந்தியாவிலும் கடைபிடிக்கலாமே? அதை நமது நாகரீக சமுதாயம் ஏற்காது எனில் அதைப்போலத் தானே பலதார மணமும் 'தலாக்' விவாகரத்துக்களும்? உமது தங்கையை ஓர் இச்லாமியர் மதம் மாற்றி திருமணம் செய்து பின்னர் வேறு சில பெண்களையும் திருமணம் செய்து உங்கள் தங்கையை தலாக் விவாகரத்து செய்தால்தான் உங்களுக்கு அதில் உள்ள தவறுகள் புரியுமா? இதை தனி நபர் தாக்குதலாக தயை கூர்ந்து நினைக்கவேண்டாம். உங்களுக்கு புரிய வைப்பதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. மன்னிக்கவும்.

இன்னும் பல உதாரணங்ளை ஆதாரத்துடன் முன்வைக்க முடியும். ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளவைகளையே புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு புரியாததுபோல் நடிப்பவர்களுக்கும் மேலும் விளக்கம் சொல்லி பயனில்லை.

மதவாதிகளுக்கு நீங்கள் பதில் சொல்லி உள்ளதாக நண்பர ஒருவர் குறிப்பிட்டுள்ளதை கண்டிக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் மதிக்கும் என்னை மதிக்கும் நண்பர்கள் எனக்கு பிற மதத்தைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். போலி மதச்சார்பின்மை கடைபிடிக்கும் அரசியல் வாதிகளைத்தான் நான் விமர்சிக்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

சாணக்கியன்,

ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள் :-)

இது மாதிரி விவாதங்களில் ஒவ்வொரு பிரச்சனையாக அலசி நான் எனது புரிதலைச் சொல்லி, எதிர் குற்றச்சாட்டுகளை எழுப்ப, நீங்கள் அவற்றுக்கு பதில் சொல்ல என்று வளர்ந்து கொண்டே போகும். அதைத் தவிர்க்க, நான் எந்த அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் தவறு என்று கருதுகிறேன் என்பதை விளக்க முயன்றேன். அதே போல உங்கள் கருத்துகளின் பின்னணியை விளக்கினால் நாம் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

மற்றபடி நான் நினைப்பதே சரி என்று விடாப்பிடியாக இருக்க முனையவில்லை. வீண் விவாதங்களை தவிர்க்கலாம் என்றுதான் ஒவ்வொரு குற்றச்சாட்டாக பதில சொல்ல முயலவில்லை. என்னுடைய பொதுவான நிலைப்பாட்டை பொருத்திப் பார்த்தால் எப்படி எனக்கு இந்தக் குற்றச்சாட்டுகள் சரி எனப்படவில்லை என்று உங்களுக்குப் புரியலாம். அதுதான் என்னுடைய நோக்கம்.

ஸ்டீபன் கோவியின் 7 பழக்கங்கள் பற்றிய புத்தகத்தில் ஒவ்வொருவரின் பார்வைகளில் இருக்கும் வேறுபாடுகளினால்தான் கருத்து வேறுபாடுகள் வருகின்றன என்று அழகாக விளக்கியிருப்பார். நான் என்னுடைய பார்வைக் கோணத்தை விளக்க முயல்கிறேன். அவ்வளவுதான்.

அன்புடன்,


மா சிவகுமார்

சாணக்கியன் சொன்னது…

சிவக்குமார்,
உங்கள் நிலைப்பாட்டை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. விவாதமேடை என்ற பிரிவின் கீழ் உங்கள் பதிவை சேர்த்துள்ளீர்கள். ஆனால் விவாதம் செய்யவிருப்பமில்லை, அது வீண் வாதங்களுக்கு இட்டுச்செல்லும் என்கிறீர்கள். இணையத்தில் நடக்கும் பிற விவாதங்களையும் சற்று பாருங்கள். முக்கியமான, சென்சிடிவான ஒரு விசயத்தை கையில் எடுத்துவிட்டு முன்வைக்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் சொல்லவிருப்பமில்லை என்பதில் சிறிதும் அர்த்தம் இல்லை.

பிரச்சினையின் ஒவ்வொருபிரிவையும் தீர விவாதித்தால் மட்டுமே, இருதரப்பு கருத்துக்களும் நிறைய பரிமாரிக்கொள்ளப் பட்டால் மட்டுமே, இருசாராருக்கும் ஓரளவு தெளிவு ஏற்பட்டு அடுத்த நிலைக்கு செல்லமுடியும். அப்படி விவாதிக்கப் படாமல் சும்மா போகிற போக்கில் காற்றில் விட்டுச்செல்கிற கருத்துக்கள் கருத்துத்திணிப்புகளாக மட்டுமே அமையும்.

//நான் எந்த அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் தவறு என்று கருதுகிறேன் என்பதை விளக்க முயன்றேன்//

உங்கள் அடிப்படை எஙளுக்கு போதுமான பதிலைத் தரவில்லை. ஒரே ஒரு உதாரணம்.
16 குற்ற்ச்சட்டுகளை முன்வைத்து விட்டி நீஙல் சொல்லியிருக்கும் பதில்,

//இந்தக் கருத்துகள் அனைத்துமே முஸ்லீம்களுக்கும் நாட்டின் கொள்கைகளை தீர்மானிக்க சம உரிமை உண்டு என்ற அடிப்படையில் பார்த்தால் செல்லாததாகி விடுகின்றன.//

முஸ்லீம்களுக்கு நாட்டின் கொள்கைகளை தீர்மானிக்க சம உரிமை உண்டு. அப்படிப்பட்ட உரிமை இந்துக்களுக்கும் உண்டா? உண்டு என்றால் கேள்வி எண் 16 க்கு அவசியமே வந்திருக்காது. (சிறுபான்மையினரின் மதத் தலங்களை நிர்வகிக்க ஒரு இந்து நியமிக்கப்பட முடியுமா?)

//கேல்வி 9. இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் இந்திய மாநிலங்களில் அவர்களுக்கு ஏன் சிறுபான்மை பாதுகாப்பு இல்லை?//
இதற்கும் உங்கள் ஒருவரி பதிலில் விடை இல்லை. இந்தக்கேள்வி உங்களுக்கு நியாயமாகப் படவில்லை. குஜராத்தி மொழிபேசுபவர்கள் தமிழ் நாட்டிலி சிறுபான்மையினர், தமிழ்பேசுபவர்கள் குஜராத்தில் சிறுபான்மையினர் என்றால் காச்மீரிலும், கேரளாவிலும், வடகிழக்கு மா நிலங்களிலும் இந்துக்கள் சிறுபான்மையினர் இல்லையா?

இவையிரண்டும் உதாரணங்கள் மட்டுமே. இவ்வாறாக உங்களது விளக்கங்கள் எந்த குற்றச்சாட்டுக்கும் போதுமான பதிலைத் தருவதாக இல்லை.

வரலாற்று நிகழ்ச்சிகளை விட்டுவிட்டு நாட்டு நடப்பில் நான் முன்வைத்துள்ள 3 கேள்விகளுக்காவது நீஙகள் சிந்தித்திருக்கவேண்டும்.

Hey Ram படத்தில் ஒரு வசனம் வரும். கமல் சொல்வார், "காந்தியைச் சுற்றி உள்ளவர்கள் அவரிடம் இருக்கும் மூன்று குரங்குகளை தவறாக புரிந்து கொண்டு, ஒரு சிலர் காந்தி சொல்வதைத் தவிர வேறெதையும் கேட்கமாட்டேன் என்று காதைப் பொத்திக் கொண்டுதுகள், வேறு சிலர் காந்திக்கு எதிராக எதயும் பேசமாட்டேன் என்று வாயைப் பொத்திக் கொண்டுதுகள், மற்றும் சிலர் காந்தியை சுற்றி நடப்பதைத்தவிர வேறு உலக நிகழ்ச்சிகள் எதையும் பார்க்கமாட்டேன் என்று கண்ணை மூடிக்கொண்டதுகள்" என்று. அதுதான் என் நினைவுக்கு வருகிறது. காந்தியவாதிகளுக்கு இந்த சிந்தனை அடைப்பு இயல்பாக எப்படித்தான் வருகிறதோ தெரியவில்லை.

சிறுபான்மையினருக்கு எந்த சூழ் நிலையில் என்ன நோக்களுக்காக சலுகைகள் வரையறுக்கப் பட்டுள்ளன என்று விளக்க முற்பட்டுள்ளீர்கள். நோக்கம் மட்டுமே சிறப்பானதாக இருந்து பயனில்லை. நடைமுறையில் என்ன நடத்துள்ளது, நடந்துவருகிறது என்று பார்க்கவேண்டும். அதனால் ஏற்பட்ட நன்மை தீமைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படாவிடில் பரிணாமவளர்ச்சி என்ற கூற்றுக்கே வேலையிருக்காது.

என்னுடைய நிலைப்பாட்டிற்கு என்ன பிண்ணனி என்று கேட்டுள்ளீர்கள். பெரிதாக ஒன்றும், நாட்டு நடப்பு மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகளையும் உற்று நோக்குதலும், அவற்றிற்கான நோய் முதல் நாடியை அறிய முற்படுதலும், அப்படி முற்பட்டவர்களின் கருத்துக்களை புரிந்துகொள்ளுதலும் தான். இன்றைய அரசியல்வாதிகள் போலி மதச்சார்பின்மையை வெளிப்ப்டையாகவே செய்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ள கம்ப சூத்திரம் தெரியவேண்டியதில்லை.

கடைசியாக ஓர் வேண்டுகோள். அந்த 16+3 கேள்விகளுக்கு நீங்கள் இங்கே யாருக்கும் பதில் சொல்லவேண்டாம். உங்களுக்கு உள்ளாக அந்தக்கேள்விகளை கேட்டு விடை காண முயலுங்கள். உங்கள் பதிவுகளுக்கான நோக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் பத்து ஆண்டுகளுக்கு பிறகாவது போலி மதச்சார்பின்மை என்பது இந்தியாவில் இருக்கிறது என்று புரிந்தால் மின் மடல் அனுப்பிவையுங்கள். இந்தப்பதிவில் இதுவே எனது கடைசி பின்னூட்டமாக இருக்கும்.

மா சிவகுமார் சொன்னது…

சாணக்கியன்,

நான் சொல்வதை உங்களுக்குப் புரியும் வகையில் சொல்ல முடியவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் விரும்புவது போலவே ஒவ்வொரு கருத்தாக பதில் சொல்ல முனைகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
சவுதி அரேபியாவிலும், இசுரேலிலும் சிறுபான்மையினரும், வலிமை குறைந்தவரும் நசுக்கப்படுவதற்கும் நமக்கும் ஒப்பீடே இல்லை.
//

வணக்கம் சிவகுமார்,

நல்ல பதிவு...

நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நீங்களே விடை தேடுதல் நலம்...சவூதி ஒரு ஜனநாயகம் அல்ல. ஆகயால் அதை நாம் இங்கே ஒப்பீடு செய்ய முடியாது...ஃப்ரான்ஸ், ஜெர்மனி, போன்ற நாடுகளை ஒப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளுங்களேன்...(அங்கே ஞாயிற்றுகிழமைகளில் செய்தித் தாள் கூடவராது!!)

இஸ்ரேலில் சிறுபான்மையினருக்கு உரிமை இல்லை என்று நீங்கள் கூறுவது தவறு...நான் என் கண்முன்னே நடப்பதைப் பார்த்துச் சொல்கிறேன்...

இஸ்ரேலில் இருக்கும் (குறிப்பாக ஜெரூசலம், ஹைஃபா, ஆக்கோ நகரங்களில்) சனிக்கிழமைகளில் (யூதர்கள் விடுமுறை) இஸ்லாமியர்கள் கடையை திறந்துவைத்திருப்பர். வெள்ளிக்கிழமைகளில் (ஜூமா) யூதர்கள் கடைகள் திறந்திருக்கும், இஸ்லாமியர் கடைகள் மூடி யிருக்கும். இதே ஜெரீகோ (பாலஸ்தீனக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நகரம்) வில் வெள்ளியன்று கடைகள் திறப்பது சட்டப்படி குற்றம்.

இது போல், ஆயிரம் எடுத்துக்காட்டு கொடுக்கலாம், இஸ்ரேல் அடிப்படையில் யூத நாடு என்றாலும், 15% இஸ்லாமியர்கள், மற்றும் கிறுத்தவர்கள், drues இன மக்கள், பஹாய் மதத்தவர், என்று எல்லோரும் எந்த வித பயமுமின்றி தங்கள் மதத்தை பின்பற்றலாம். (எந்த சிறப்பு வரியும் செலுத்தத்தேவையில்லை). அரசு வேலைகளில் சேரலாம், பணியாற்றலாம். எல்லா உரிமைகளும் உண்டு. (அதிக குழந்தை பெற்றுக் கொண்டால் அரசு நிதிஉதவி கூட உண்டு!!). ஆனால் யூத தேவாலயங்களை யூதர்கள் தான் (நம்பிக்கையுள்ளவர்கள்) நடத்துவார்கள்...

இந்தியா போல் இந்து மட்டும் தான் செகுலாராக இருக்கவேண்டும், சிறுபான்மையினர் செகுலாராக இருக்கத் தேவையில்லை என்று நிர்பந்தம் (போலி மதச்சார்பின்மை) இல்லை.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ஷங்கர்,

இசுரேல் யூத நாடு. இந்தியா இந்து நாடு இல்லை என்பது என் வாதம்.

ஒவ்வொரு மதத்துக்கும் அவர்கள் விரும்பும்படி வாழ வழி கொடுக்கும் நாடுதான் இந்திய நாடு என்பது என்னுடைய கருத்து.

முஸ்லீம்கள் எப்படி வாழ வேண்டும் என்று பிறர் சொல்லக் கூடாது, முடியாது. இந்துக்களின் வாழ்க்கையில் முஸ்லீம்கள் தலையிடக் கூடாது, இதுதான் இந்தியா.

இந்து மதம் செகுலர் மதம், முஸ்லீம் மதத்தில் சகிப்புத்தன்மை குறைவு. அவர்களது சகிப்புத்தன்மையின்மை அவர்களுக்கு அவமானம். அதை நாம் நகல் செய்யத் தேவைலில்ல.

இசுரேலில் எவ்வளவு நல்ல குடியாட்சி, அமைப்புகள் இருந்தாலும், பாலஸ்தீன மக்களுக்கு அந்த நாடு இழைக்கும் அநீதிகள் தவறில்லையா? யாசர் அராஃபத் சாகும் முன் தொலைக்காட்சியில் பார்த்த படங்கள் என்றென்றும் மனதை விட்டு அகலாது. அவருக்கு நடந்தது ஒரு ஜனநாயக நாடு செய்வது என்று சொல்வீர்களா?

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
யாசர் அராஃபத் சாகும் முன் தொலைக்காட்சியில் பார்த்த படங்கள் என்றென்றும் மனதை விட்டு அகலாது. அவருக்கு நடந்தது ஒரு ஜனநாயக நாடு செய்வது என்று சொல்வீர்களா?
//
இதைப்பற்றி பேசினால் பதிவு திசை திறும்பும் என்பதால் பிறமு விழக்கமாக பேசலாம்.

//
முஸ்லீம்கள் எப்படி வாழ வேண்டும் என்று பிறர் சொல்லக் கூடாது, முடியாது.
//

முஸ்லீம் மட்டுமல்ல இந்துவுக்கும் அது வேண்டும். (பொது சிவில் சட்டம் என்றால் அது தான்). (பொதுவான சிவில் சட்டமே இல்லாமல் இருக்கவேடும் என்று நீங்கள் விறும்புகிறீர்கள்..அது நடை முறையில் போலி செகுலர்வாதத்திற்கு வழிவகுக்கும் என்பதை நாம் இந்தியா என்கிற புன்னியபூமியில் பார்க்கிறோம்.)

சட்டம் என்பது இல்லாமல் இருக்க முடியாது. (அவரவருக்கு பிடித்ததை அவரவர் கடைபிடிக்கவேண்டும் என்றால் அவரவர் வீட்டில் தான் அதைச் செய்யமுடியும்).

பொதுவில் வந்தால் பொது சட்டம் என்று ஒன்று உள்ளது அதை மதித்து நடக்கவேண்டும்.. அங்கே வந்து நான் இஸ்லாமியன் நான் 4 பேரைக் கட்டிக்கொள்வேன் என்பது கேவலமான விஷயம். இந்துக்கள் மக்களில்லையா, அவர்களால் 4 என்ன 10 கூட கட்டிக் காப்பாத்த முடியும். அவர்களுக்கு மட்டும் என்ன தலைஎழுத்தா ஒரே மனைவியுடன் நிறுத்திக் கொள்ள? (பெண்கள் மன்னிக்க...என் கருத்தை out of contextல் எடுத்துக் கொள்ளக் கூடாது).
...

Majority and Minority என்பது என்றைக்குமே அப்படியே மாறாமல் இருக்காது. integration ஆகித்தான் தீரவேண்டும்...

மா சிவகுமார் சொன்னது…

ஷங்கர்,

அதுதான் எல்லோரும் ஒரே மாதிரிதான் வாழ வேண்டும் என்பது இந்தியாவில் செல்லுபடியாகாது.

இந்திய அரசியலமைப்பு உருவாக்கும் போது பல்வேறு பிரிவினர் தமது வாழ்க்கையை தமது கோட்பாடுகளின் படி நடத்தலாம் என்ற உறுதிமொழியுடன் இன்றைய இந்திய நாடு உருவானது. சீரான ஒரே சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அனைவரது சம்மதமும் வேண்டும். அதை இந்துப் பெரும்பான்மை மட்டும் முடிவு செய்ய முடியாது.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
அதை இந்துப் பெரும்பான்மை மட்டும் முடிவு செய்ய முடியாது.
//

இஸ்லாமியர்களை யார் முடிவு எடுக்கவேண்டாம் என்று தடுப்பது...இன்று தான் ஒரு தில்லி பல்கலைகழக பேராசிரியர் பெண்ணீயம் பற்றிய சொற்பொழிவு கேட்டேன்...அதில் கூட அவர் பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவின் தேவை. அதில் மைனாரிட்டி அரசியல் புகுத்தி வோட்டு வங்கி நடத்தப்படுகிறது என்று கூறினார்.

இந்த பொது சிவில் சட்டம் வரக்கூடாது என்று விரும்புபவர்கள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மட்டுமே...அறிவு சார் கம்யூனிஸ்டுகள் கூட பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

இஸ்லாமியர் கூறும் காரணம் பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இந்து சிவில் சட்டம் திணிக்கப் படுகிறது...

சட்டத்தைப் படித்துப் பார்த்தால் நிச்சயமாக அது இல்லை. பொது சிவில் சட்டம் என்பது எல்லோர் எற்கும் வகையில் Liberal சட்டங்கள் தான்.

தனி சிவில் சட்டம் என்கிற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தை கடைபிடிக்க அனுமதிப்பதை விட பொது சிவில் சட்டம் அமுல் படுத்துவது சிறப்பு. போலி செகுலர்வாதி என்கிற பட்டமாவது கிடைக்காமல் இருக்கும்.

வஜ்ரா சொன்னது…

ஒரு ஈ. மெயிலில் வந்த மடல்..

//
Are you a Secularist? Then please answer these questions,

1. There are nearly 52 Muslim countries. Show one Muslim country which provides Haj subsidy.

2. Show one Muslim country where Hindus are extended the special rights that Muslims are accorded in india?

3. Show one Muslim country which has a Non-Muslim as its President or Prime Minister.

4. Show one country where the 85% majority craves for the indulgence of the 15% minority.

5. Shoe one Mullah or Maulvi who has declared a 'fatwa' against terrorists.

6. Hindu-majority Maharashtra, Bihar, Kerala, Pondicherry, etc. have in the past elected Muslims as CMs; Can you ever imagine a Hindu becoming the CM of Muslim - majority J&K?

7. Today Hindus are 85%. If Hindus are intolerant, how come Masjids and Madrassas are thriving? How come Muslims are offering Namaz on the road? How come Muslims are proclaiming 5 times a day on loudspeakers that there is no God except Allah?

8. When Hindus gave to Muslims 30% of Bharat for a song, why should Hindus
now beg for their sacred places at Ayodhya, Mathura and Kashi?

9. Why temple funds are spent for the welfare of Muslims and Christians, when they are free to spend their money in any way they like?

10. When uniform is made compulsory for school children, why there is no Uniform Civil Code for citizens?

11. In what way, J&K is different from Maharashtra, Tamil Nadu or Uttar Pradesh, to have article 370?

12. Why Gandhiji supported Khilafat Movement (nothing to do with our freedom movement) and what in turn he got?

13. Why Gandhiji objected to the decision of the cabinet and insisted that Somnath Temple should be reconstructed out of public fund, not government funds. When in January 1948 he presurrised Nehru and Patel to carry on renovation of the mosques of Delhi at government expenses?

14. If Muslims & Christians are minorities in Maharashtra, UP, Bihar etc.,are Hindus not minorities in J&K, Mizoram, Nagaland, Arunachal Pradesh, Meghalaya etc? Why are Hindus denied minority rights in these states?

15. Do you admit that Hindus do have problems that need to be recognized. Or do you think that those who call themselves Hindus are themselves the problem?

16. Why post-Godhra is blown out of proportion, when no-one talks of the ethnic cleansing of 4 lakh Hindus from Kashmir?

17. In 1947, when India was partitioned, the Hindu population in Pakistan was about 24%. Today it is not even 1%. In 1947, the Hindu population in East Pakistan (now Bangladesh) was 30%. Today it is about 7%. What happened to the missing Hindus? Do Hindus have human rights?

\18. In contrast, in India, Muslim population has gone up from 10.4% in 1951 to about 14% today; whereas Hindu population has come down from 87.2% in 1951 to 85% in 1991. Do you still think that Hindus are undamentalists?

19. Do you consider that - Sanskrit is communal and Urdu is secular, Mandir is Communal and Masjid is Secular, Sadhu is Communal and Imam is Secular, BJP is communal and Muslim league is Secular, Dr. Praveen Bhai Togadia is ANTI-NATIONAL and Bhukari is Secular, Vande Matharam is communal and Allah-O-Akbar is secular, Shriman is communal and Mian is secular, Hinduism is Communal and Islam is Secular, Hindutva is communal and Jihadism is secular, and at last, Bharat is communal and Italy is Secular?

20. When Christian and Muslim schools can teach Bible and Quran, Why Hindus cannot teach Gita or Ramayan? Siddhi Vinayak Temple in Prabhadevi, Mumbai Can a Hindu - say Mulayam or Laloo - ever become a trustee of a Masjid or Madrassa?

22. Dr. Praveenbhai Togadia has been arrested many times on flimsy grounds. has the Shahi Imam of Jama Masjid, Delhi, Ahmed Bhukari been arrested for
claiming to be an ISI agent and advocating partition of Bharat?

23. When Haj pilgrims are given subsidy, why Hindu pilgrims to Amarnath, Sabarimalai & Kailash Mansarovar are taxed?
//

என் கண்ணோட்டத்தில் நீங்கள் நேர்மையானவர் என்பதால் தான் உங்களிடம் இந்த பின்னூட்டம்.

பதில் உள்ளதா?

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஷங்கர்,

இதே ஈமெயிலைத்தான் சாணக்கியன் அனுப்பியிருந்தார். அதிலிருந்த கேள்விகளின் குத்துமதிப்பான மொழிபெயர்ப்புதான் நான் மேலே கொடுத்திருப்பது. ஏதும் விட்டு விடவில்லை என்று நினைக்கிறேன்.

அதற்கு ஒவ்வொன்றாக பதில் அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். நீங்களும் இப்போது கேட்கிறீர்கள்.

என்னை செக்யூலரிஸ்டு என்றெல்லாம் பட்டம் சூட்டிக் கொள்ள விரும்பாவிட்டாலும், இந்தக் கேள்விகளுக்கு என்னுடைய பதில்களை எழுதி விட்டேன். இன்னும் ஓரிரு நாட்களில் தனிப்பதிவாகப் போட்டு விடுகிறேன்.

என்னை நேர்மையானவர் என்று நினைப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,

மா சிவகுமார்

arunagiri சொன்னது…

"ஒவ்வொரு மதத்துக்கும் அவர்கள் விரும்பும்படி வாழ வழி கொடுக்கும் நாடுதான் இந்திய நாடு என்பது என்னுடைய கருத்து".

இந்து மதத்திற்கு? இந்துக்களின் கோவில்கள் முஸ்லீம்களாலும், இந்து எதிர்ப்பாளர்களாலும், மத நம்பிக்கையற்றவர்களாலும் நிர்வகிக்கப்படுவதுதான் இந்துமதம் விரும்பும் வழியா? முஸ்லீம்கள் எதை விரும்புகிறார்கள் என்று முஸ்லீமல்லாதவர்கள் தீர்மானிக்க முடியாது; அதுபோலவே இந்து மதம் எதனை விரும்புகிறது என்று இந்து மதப்பற்றாளர் மட்டுமே தீர்மானிக்க முடியும். "இந்து மதம் செகுலர் மதம்" என்ற உங்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், இந்து எதிர்ப்பாளர்களும், இந்து மத நம்பிக்கையற்றவர்களும், "செகுலர்" அல்ல என்று ஆகிறது. அதனால்தான் போலி-செகுலரிஸவாதிகள் என இனம் காட்டப்படுகிறார்கள். அவர்களுக்கு- கோட்டையை விட்டு விடுங்கள்; அதற்கே தகுதி இல்லை- கோவிலை நிர்வகிக்க ஒரு குந்துமணித்தகுதியும் இல்லை.

"முஸ்லீம்கள் எப்படி வாழ வேண்டும் என்று பிறர் சொல்லக் கூடாது, முடியாது. இந்துக்களின் வாழ்க்கையில் முஸ்லீம்கள் தலையிடக் கூடாது,".

இந்துக்களின் கோவில் முஸ்லீம்களாலும், இந்து நம்பிக்கையற்றவர்களாலும் நிர்வகிக்கப்படலாம் என்ற நிலை இந்துக்களின் வாழ்வில் பிறர் தலையீடு இல்லையா? பதில் சொல்லுங்கள்.

"இந்து மதம் செகுலர் மதம், முஸ்லீம் மதத்தில் சகிப்புத்தன்மை குறைவு. அவர்களது சகிப்புத்தன்மையின்மை அவர்களுக்கு அவமானம். அதை நாம் நகல் செய்யத் தேவைலில்ல".

ஒரு அவமானத்தை மதசார்ர்பின்மை என்ற பெயரில் செகுலர் நாடு ஒன்று முதுகில் சுமந்து கொண்டு இருக்கலாமா என்றுதான் போலி-செகுலரிஸ எதிர்ப்பாளர்களும் கூறுகின்றனர். நீங்கள் முரண்பாடாக இந்த அவமானத்தையே உண்மையான செகுலரிஸம் என்று வகைப்படுத்துகிறீர்கள். வேடிக்கையாக இருக்கிறது.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க அருணகிரி,

கேள்வி 13. கோயில் பணத்தை சிறுபான்மையினர் நலனுக்காகச் செலவளிப்பது ஏன்? சிறுபான்மையினரின் பணம் அவர்கள் விருப்பப்படி செலவளிக்கப்படுகிறதே?
கேள்வி 16. இந்துக் கோயில்களின் நிர்வாகியாக ஒரு முஸ்லீம் நியமிக்கப்படலாம். சிறுபான்மையினரின் மதத் தலங்களை நிர்வகிக்க ஒரு இந்து நியமிக்கப்பட முடியுமா?

விடை: எந்தக் கோயிலின் பணம் சிறுபான்மையினர் நலனுக்காக செலவிடப்படுகிறது? கோயில்களும் வழிபாட்டுத் தலங்களும் நம்பிக்கை உடைய மக்களின் பிரதிநிதிகளால்தான் நிர்வாகிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் தாம்தான் அந்தப் பிரதிநிதி என்று நினைத்தால் அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து கொள்ளலாம்.

இதுவே சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.

அன்புடன்,

மா சிவகுமார்

arunagiri சொன்னது…

எந்தக் கோயிலின் பணம் சிறுபான்மையினர் நலனுக்காக செலவிடப்படுகிறது?
- தெரிந்து கேட்கிறீர்களா இல்லை தெரியாமல் கேட்கிறீர்களா மா. சிவகுமார் . எல்லாக்கோவில்களின் வருமானமும் அரசு கையில், ("செகுலர்") அரசு அவற்றை வைத்துக்கொண்டு என்ன இந்து மதம் வளரவும் வலுப்படவும் செலவழிக்கிறதா? சர்ச் காணிக்கைகளையும், நன்கொடைகளையும் செகுலர் செலவுகளுக்கு உபயோகிக்காத அரசு, தேவஸ்தான காணிக்கைகளை கால்நடை மருத்துவமனை கட்டுதல், drainage கட்டுதல் போன்ற செகுலர் செலவுகளுக்கு உபயோகிக்கத்தயங்குவதில்லை. அவை கூடப்பரவாயில்லை. பத்ராச்சலக்கோவில் வருமானம் திருப்பி விடப்பட்டு சர்ச் கட்டுவதில் முடிந்தது தெரியுமா? அல்லது திருப்பதி வருமானம் ஈத்கா மைதானம் கட்ட திருப்பி விட நடந்த முனைப்புகள் குறித்து அறிவீரா? கிறித்துவ, முஸ்லீம் வழிபாட்டுத்தல வருமானங்கள் செகுலர் அல்லது பிற மத நலனுக்காக செலவழிக்கப்படுவதில்லை.

"கோயில்களும் வழிபாட்டுத் தலங்களும் நம்பிக்கை உடைய மக்களின் பிரதிநிதிகளால்தான் நிர்வாகிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் தாம்தான் அந்தப் பிரதிநிதி என்று நினைத்தால் அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து கொள்ளலாம்".
வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் அரசுபிரதிநிதிகள்தான் நிர்வகிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் கிறித்துவ திருச்சபையும், வக்ஃப் போர்டும் அரசாலா நிர்வகிக்கப்படுகின்றன? சிறுபான்மையினருக்கும் அப்படித்தான் என்றால் இன்றுள்ள நிலை தவறு என்று தெளிவாகச் சொல்லும் நேர்மை வேண்டும். ஏன் 'சிறுபான்மை வழிபாட்டுத்தலங்களை அரசு கைக்கொள்ள வேண்டும், அதனை எதிர்ப்பவர் கோர்ட்டு படி ஏறலாம்' என எழுதுங்களேன். அதை விட்டு விட்டு இந்துக்களுக்கு மட்டும் கோர்ட்டில் கேஸ் போடுங்கள் என்று தெனாவெட்டாகச் சொல்கிறீர்கள் பாருங்கள்- இதுதானய்யா சாக்கில் வடிகட்டிய வடிகட்டின போலி-
மதச்சார்பின்மை என்பது.

ஒரு வகுப்பில் உள்ள அமைதியான மாணவரை ஒரு bully தொல்லை செய்கிறான். ஆனால், வாத்தியாரோ "அவன்தான் bully என்று தெரியுமே" என்று சொல்லி அமைதியான மாணவரை தண்டித்து bully-யை செல்லம் கொடுத்து வளர்க்கிறது. அமைதியான மாணவனுக்கு bully மேல்தான் கோபம் திரும்பும். (முஸ்லீம் இயற்கையாகவே ஒரு bully- சொன்னவர் காந்தி). நம்நாட்டில் நடப்பது இதுதான். சிறுபான்மை புல்லிக்கள் இந்து மதத்தினரை "செகுலர்" அரசின் துணையால் exploit செய்வதுதான் நம்நாட்டில் நடக்கிறது. சமூக நல்லிணக்கம் கெட இது போன்ற போலி மதச்சார்பின்மை பேசுபவரே முதற்காரணம்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் அருணகிரி,

நன்றாகப் பிடித்து விடுகிறீர்கள்.

நான் சொல்ல வந்தது, இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாகத்தான் கருதப்பட வேண்டும். அப்படி பெரும்பான்மை இந்துக்கள் நினைத்தால் அடுத்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற முடியாதல்லவா?

தமிழ் நாட்டில் நாத்திகம் பேசும் அரசியல்வாதிகள் இந்துக் கோவில் விவகாரங்களில் தலையிடுவதை நான் ஆதரிக்க மாட்டேன். இந்து கோயில் பழக்கங்களில் மாறுதல்கள் கடவுள் பக்தி உள்ள கோயிலுக்குப் போகும் இந்துக்களால் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆனால், "ஒரு சிறு பகுதியினர் கோயில்களைப் பிடித்து வைத்துக் கொண்டு எங்களுக்கு உரிமைகளை மறுக்கிறார்கள் என்று எங்களுக்கு வாக்களித்த பாமர மக்கள் கருதுவதால்தான் நாங்கல் கோயில் விவகாரங்களில் தலையிடுகிறோம்" என்று அரசினர் பதில் சொன்னால் நமது விடை என்ன?

எவ்வளவோ குறையுடதாக இருந்தாலும் நம் நாட்டில் மக்களாட்சி முறை உள்ளது. பெரும்பான்மை மக்களுக்கு ஒவ்வாத எதையும் செய்து கொண்டு எந்த ஆட்சியும் நெடு நாட்கள் நிலைத்து விட முடியாது.

சாக்கடை கட்டுவதிலும், மருத்துவமனை கட்டுவதிலும் கோயில் பணம் பயன்படுத்தப்படுவதில் உங்களுக்கு எதிர்ப்பு இருக்காது என்று நினைக்கிறேன்.

சர்ச்சுகள் கட்ட இந்துக் கோயில் பணம் பயன்படுத்த்தப்பட்டால் அதை கிருத்தவர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்