வியாழன், ஜூன் 29, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 13

காந்தியும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட மக்களும்

காந்தி பிறப்பால் உயர்ந்தது என்று கருதப்படும் சாதியைச் சேர்ந்தவர். அவர் என்னதான்
  • தன் வீட்டுக் கழிப்பறையைத் தானே செய்தாலும்,
  • உயர் சாதியினர் செய்யக் கூடாது என்று கருதப்பட்ட இழிந்தவை என்று ஒதுக்கப்பட்ட தோட்டி வேலை பிறருக்காகப் பார்த்தாலும்,
  • ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சமமாக மதித்து ஏற்றுக் கொண்டாலும்,
  • அந்தக் குடும்பத்தின் குழந்தையை தன் வளர்ப்பு மகளாக எடுத்துக் கொண்டாலும்,
  • ஒவ்வொரு திருமணத்திலும் ஒரு பக்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்திருந்தால்தான் தான் அந்த திருமணத்தை ஆசிர்வதிப்பதாகச் சொன்னாலும்,
  • தாழ்த்தப்பட்டோருக்கு அரிசனங்கள் என்று பெயர் கொடுத்தாலும்,
அவர் பிறப்பால் உயரந்தது என்று கருதப்பட்ட் சாதியைச் சார்ந்தவர்.

தாழ்த்தப்பட்ட இனங்கள் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வரும் கொடுமைகளை படித்துப் பார்த்து மட்டுமே புரிந்து கொண்டவர். அதனால்தான், அவ்வளவு புரிந்து கொண்டும், இந்து மதத்தின் வர்ணாசிரம தருமத்தை எதிர்க்காமல், 'சாதிகளினிடையே ஏற்றத்தாழ்வு மறைந்தால் மட்டும் போதும், சாதி முறையையே அழிக்க வேண்டாம்' என்று எழுதியும் சொல்லியும் வந்தார்.

சாதி முறையின் கொடுமுகத்தை நேரில் கண்ட தலித் தலைவர்களுக்கு அதில் கண்டிப்பாக உடன்பாடு இருக்க முடியாது. ஏதாவது செய்து தங்களை ஏமாற்றி, சாதி முறையை நீடிக்கச் செய்து தம்மை அடக்கி வைத்திருப்பதே காந்தியின் குறிக்கோள் என்று அவர்கள் நினைத்ததில் வியப்பு ஏதும் இல்லை.

காந்தி ஒரு போராளியாக இருந்தாலும், இருக்கும் அமைப்புகளை அப்படியேத் தூக்கி எறிந்து விட்டு புதிய உலகம் காண வேண்டும் என்ற கனவு காணும் போராளி இல்லை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை விட, உள்ளே இருந்து கொண்டே ஆங்கிலேயர்களின் மனதை மாற்றி இந்தியாவுக்கு உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றுதான் முதலில் முயன்றார். எல்லாக் கதவுகளும் அடைபட்ட பிறகுதான், வெள்ளையனே வெளியேறு என்று புரட்சி முழக்கமிட ஆரம்பித்தார்.

அதே போல, சாதி முறையை ஒரேயடியாக ஒழித்து விடுவோம் என்று முயலாமல், அந்த முறையினுள்ளேயே நடக்கும் அநீதிகளைக் களைவோம் என்று முயல்வோம். அதன் பிறகும்் வேலை ஆகவில்லை என்றால் சாதியை ஒழிப்பது பற்றி சிந்திக்கலாம் என்பது காந்தியின் அணுகுமுறை.

6 கருத்துகள்:

VSK சொன்னது…

"உருப்படியான வேலை" பதிவில் போட முடியாமல் இதில் போடுகிறேன். மன்னிக்கவும்.


உருப்படியான பதிவு!
என்னைக் குறிப்பிட்டு எழுதியதற்கு நன்றி.
மிகவும் அலுத்துத்தான் போகிறது, இந்த குழுப் பதிவுகளைக் கண்டாலே.
குமரன், ஜி.ரா. எஸ்கெ ஆன்மிகக் குழுவை விட்டு விட்டீர்களே!!
:))

அன்றாட நிகழ்வுகளை உங்களைப் போல கோர்வையாக எழுதினாலே அருமையான பதிவு வரும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.


'
கண்ணோட்டத்துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலைக்குப் பொறை. [572]

கவிதா | Kavitha சொன்னது…

எனக்கு காந்தியின் சுய சரிதை படித்தபின் அவரின் மேல் அப்படி ஒன்றும் எனக்கு நல்ல எண்ணம் வரவில்லை.. சில விஷயங்கள் என்னால் அவரிடம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நினைப்பது என்னவென்றால்.. காந்தியின் வயதில் எல்லோருமே அகிம்சைவாதிகளாக தான் இருப்பார்கள்.. பகத்சிங் வயதில் காந்தி அப்படி இருந்திருந்தால் ஒருவேளை அகிம்சை இன்னமும் வெற்றி பெற்றிருக்கும்.. என்பது என் தாழ்மையான கருத்து

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் எஸ்கே,

பாராட்டுகளுக்கு நன்றி. முக்கியமான ஒரு குழுவை சேர்த்ததற்கு நன்றி. உங்கள் பின்னூட்டங்களிலும் பதிவுகளிலும் முருகன் படத்தைப் பார்ப்பதே மனதைப் புதுப்பித்து விடுகிறது.

எல்லாவற்றுக்கும் பொருத்தமாகக் குறள் நினைவுபடுத்திக் கொள்கிறீர்களே :-) இந்தக் குறள் நான் முதல் முறை படிக்கிறேன். உலகை கவனித்துப் பார்த்தால் உலகியல் புரியும் இல்லாதவர்களுக்கு அந்தப் புரிதல் இல்லை என்றுதானே பொருள்?

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க கவிதா,

காந்தியின் சுயசரிதையின் ஆரம்பப் பகுதிகளும், பெரும்பாலான பிற்பகுதிகளும் கொஞ்சம் சலிப்பை அளிப்பவைதான். எந்த சுயசரிதையும் தவிர்க்க முடியாத சுயபுராணம்தான் நிறைந்திருக்கும். காந்தியின் பிற்கால வாழ்க்கையை புரிந்து கொண்டு அதன் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு படித்தால் தவிர அவரின் சத்திய சோதனையைப் பெரிதாக உணர முடியாது. காலின் பாவெல் போல கோஸ்டு எழுத்தாளர் வைத்து சுயசரிதை எழுதும் வாய்ப்புகள் அந்தக் காலங்களில் இல்லை என்று நினைக்கிறேன் :-)

காந்தியைப் பற்றி லூயி ஃபிஷர் எழுதிய வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பாருங்கள். முடிந்தால் கஸ்தூர்பா வாழ்க்கை வரலாற்றையும் படித்துப் பார்க்கவும். அருண் காந்தி எழுதிய ஒரு நூலை லேண்ட் மார்க்கில் பார்த்தேன். நானும் வாங்கிப் படிக்க வேண்டும். "நான் கஸ்தூர்பாவிடமிருந்துதான் அகிம்சையைக் கற்றுக் கொண்டேன்" என்று காந்தி கூறியிருக்கிறார்.

என்னுடைய அடுத்தப் பதிவு உங்களுடைய கேள்விகளுக்கு ஓரளவு விடை அளிக்குமாறு உள்ளது. அதை எழுதி ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. இன்றைக்கு உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் சொல்வது போல அமைந்துள்ளது.


அன்புடன்,

மா சிவகுமார்

VSK சொன்னது…

முதல் பகுதி சரி. அடுத்தது, உலகியல் பற்றிய சரியான கண்ணோட்டம் இல்லாதவர்களால், மெய்யாகச் சொல்லப்போனால், இந்நிலத்துக்குச் சுமையே என்று பொருள்:

நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ஐயா.

அன்புடன்,

மா சிவகுமார்