எல்லோருக்கும் தேவைகளை நிறைவேற்ற நிறையவே இருக்கிறது. யாருடைய ஆடம்பரத்தையும் நிறைவேற்ற இருப்பது போதாது என்று சொன்னாராம் காந்தி. உண்மைதான். மனித மனத்தின் பேராசைகள்தான் வறுமைக்கும், போர்களுக்கும், துன்பத்துக்கும் காரணம்.
உடலைப் பேண உணவு, நாகரீகத்தைக் காட்ட உடை, உடலையும், உடையையும் இருப்பிடத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள நீரும் ஒரு சில பொருட்களும், இவற்றைத் தவிர்த்து நமக்கு வேறு என்ன தேவை?
எதிர்காலத்தில் என்ன நேருமோ என்று சேமித்து வைக்கும் பணம், அதில் வாங்கி வைக்கும் தங்கம், அதில் வாங்கிப் போடும் நிலம், விலை உயர்ந்த பொருட்கள், படுப்பதற்கு மெத்தைகள் என்று போகப் போக இதை எல்லாம் பக்கத்து வீட்டுக் காரனிடம் இருந்து பாதுகாக்க வலுவான பூட்டுகள், காவல் நிலையங்கள், எல்லைகளைக் காக்கப் பெரும்படைச் செலவுகள் என்று செலவளிக்க செலவளிக்க போதாமை வந்து விடுகிறது.
ஒரு குழுவினருக்குத் தேவைப்படுவதை தவிர்த்து விட்டுத்தான் இந்த ஆடம்பரங்களும் ஆடம்பரங்களைப் பாதுகாக்க வேண்டியவைகளும் உருவாகின்றன.
மனிதனின் பேராசையும் சுயநலமும்தான் பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதார சிக்கனத்துக்கும் வழி என்று இயங்குவதுதான் கடந்த முன்னூறு ஆண்டுகளில் பரவலாகி விட்ட இப்போது ஆட்சி செலுத்தும் சந்தைப் பொருளாதரத்தின் தாரக மந்திரம். இதனால் வளர்ச்சிகள் கண் கூடாகத் தெரிகின்றன. ஆனால் இது உண்மையான வளர்ச்சியா அல்லது ஊது காமாலையா?
இந்த வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை என்ன? எவ்வளவு மருந்துகள், எவ்வளவு எரி பொருட்கள், எவ்வளவு குண்டுகள், எவ்வளவு கண்ணீர், எவ்வளவு துயரம், எவ்வளவு சாவுகள். இப்படியே உழன்று கொண்டிராமல் அடுத்த நிலைக்குப் போக வேண்டாமா?
பங்குச் சந்தைக் குறியீடு பத்தாயிரத்தை தாண்டி விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது ஒரு லட்சத்தை எட்டி விட்டது என்று வைத்துக் கொள்வோம். எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?
எங்கு பார்த்தாலும் அவசரம். குழப்பம் நிறைந்த முகங்கள். மருந்துகளிலேயே வண்டியை ஓட்டும் மனிதர்கள்.
பொது இடத்தில் துப்புபவர்கள், புகை பிடிப்பவர்கள், சாலை நிறுத்தத்தில் சிவப்பு விளக்கை மதிக்காதவர்கள், குப்பை போடுபவர்கள், அநியாய விலை வைத்து விற்பவர்கள், நியாய விலைக் கடையிலிருந்து பொருட்களை வெளிச் சந்தைக்குக் கடத்தும் ஊழியர்கள், கையூட்டு வாங்கும் அரசு ஊழியர்கள், தன் வேலையை செய்யாத ஆசிரியர்கள், கொள்ளை அடிக்கும் மருத்துவர்கள் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். இவை எல்லாவற்றுக்கும் இவர்கள் எல்லோருக்கும் ஒரே மருந்து மன மாற்றம்.
அடுத்த வீட்டை விட எனது வீடு உயரமாக இருக்க வேண்டும், என் குழந்தைகள் உயர்தனி வட்டத்தில் வளர வேண்டும், என் வீட்டில் எல்லாப் பொருட்களும் நிறைந்திருக்க வேண்டும், வெளியில் போகும் போது பகட்டு உடலில் மின்ன வேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் குறைந்து மறைந்த்து நான் வாழ வேண்டும், என் வாழ்க்கை அடுத்த வீட்டுக் காரனுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தால் போதும்.
மந்திரம் போட்டது போல பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒற்றைத் தலைவலி, வயிற்றுக் கோளாறுகள் மாயமாக மறைந்து விடும். சாலையோர வியாபாரி சொல்வது போல இது பல நோய்களுக்கான மருந்து. உடல் உபாதைகளை விரட்டி விடும். மன உளைச்சல்களை துரத்தி விடும். சச்சரவுகளை ஒழித்து விடும்.
மாற்றம் என்பது தனி மனிதனிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இந்த உலகமெ நுண் அளவிலும், பேரண்ட அளவிலும் ஒரே மாதிரிதான் இயங்குகிறது. ஒரு தனி மனிதனின் மனதில் நிகழும் புரட்சிதான் சமூக மாற்றங்களாக உருப்பெறுகிறது.
எல்லோரும் மாறட்டும் என்று காத்திருக்காமல், நம்மளவில் தொடங்கி விடலாம். "அவன நிறுத்தச் சொல்லு முதல" என்ற மணிரத்திரக் கோட்பாடு இல்லாமல் முதலடியை நாம் எடுத்து வைப்போம்.
தொழில் நிறுவனங்கள் தமது வருமானத்தை எப்படி ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று ஒரு முறை எழுதிய பிறகு டோண்டு சாருக்குக் கோபம் வந்து விட்டது. லாபம் சம்பாதித்தால் தவறு, இந்தியா தனது சுயநலத்தைப் பார்த்துக் கொண்டால் தவறு என்று கிண்டல் அடித்தார்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! இயற்கையான உணர்வுகள் நம்மை வழி நடத்த விட்டு விட்டால் என்ன பெருமை. அந்த உணர்வுகளை நெறிப்படுத்தி நாகரீகம் அடைந்ததுதான் மனித இனத்தின் சாதனை. பசித்தால் வேட்டைக்குப் போவோம், கிடைத்தால் அடுத்தவனிடமிருந்துத் தட்டிப் பறிப்போம் என்ற காட்டு நெறிகளை மட்டுப்படுத்தி ஒருவரை ஒருவர் மதித்து ஆற்றங்கரைகளில் வாழ ஆரம்பித்ததுதானே மனித நாகரீகம்.
முடிந்த வரை உழைப்போம், சுயநலத்தைப் பார்ப்போம், சொந்த வளங்களைப் பெருக்கிக் கொள்வோம் என்ற சந்தை நெறிகளை மட்டுப்படுத்தி ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வோம் என்று பொதுவுடமையில் வாழ ஆரம்பித்தால் நாம் தெய்வ நாகரீகத்துக்குப் போய் விடலாம்.
மார்க்சு கண்ட பொதுவுடமை சமூகமும், காந்தி கண்ட ராம ராஜ்ஜியமும், கீதை சொல்லும் கடமையைச் செய்தலும் வேறு வேறா? தலை சிறந்த சிந்தனையாளர்கள் நமக்கு விட்டுச் சென்ற கொடைகள் எதை வேண்டுமானாலும் படித்துப் பாருங்கள், பொதுவுடமைச் சமூகத்துக்கு இட்டுச் செல்லும் வழிகள்தான் காட்டப்பட்டுள்ளன. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்ற புத்தரும், அன்பே வடிவான ஏசு பிரானும், வாழ வழி முறைகளை வகுத்துச் சொல்லிச் சென்ற நபி பெருமானும் இன்று இருந்தால் நமது இந்த பேராசை, சுயநல வாழ்க்கை நெறிகளை ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
8 கருத்துகள்:
"தொழில் நிறுவனங்கள் தமது வருமானத்தை எப்படி ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று ஒரு முறை எழுதிய பிறகு டோண்டு சாருக்குக் கோபம் வந்து விட்டது. லாபம் சம்பாதித்தால் தவறு, இந்தியா தனது சுயநலத்தைப் பார்த்துக் கொண்டால் தவறு என்று கிண்டல் அடித்தார்."
தயவு செய்து சுட்டி(கள்) தரவும். எந்த சூழ்நிலையில் எது கூறப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில், எனக்கென்னவோ நான் ஒன்றுக்கும் மேற்பட்ட தருணங்களில் கூறியதை இங்கு ஒன்றாக்கி கூறுகிறீர்கள் எனத் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் மா.சிவக்குமார்,
தங்களை ஆறு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பங்குகொள்ளுங்கள்.
http://vovalpaarvai.blogspot.com/2006/06/blog-post_115098459923649714.html
உணவு இருக்கலாம், உடை இருக்கலாம், உறையுள் இருக்கலாம், கதை-கவிதை-பாட்டு-திரைப்படம்-விளையாட்டு என்று பொழுது போக்குக்கள் இருக்கலாம் ஆனால் மனிதனுக்கு முன்னேறு, ஆராய் என்ற ஆசை என்றும் இருக்கும்.
ஒவ்வொரு காலகட்டமும் தனக்கே உரிதான கேள்விகளை முன்வைத்து இன்னொன்றை பிறப்பிக்கின்றது. மேற்கில் மனித வாழ்வு முன்னேற்ற பாதையில் செல்வதாயும் உணர்கின்றார்கள். இன்று தொழில் நுட்பத்தால் மனித அறிவையும் சாவையும் மீறமுடியும் என்று கூட சொல்கின்றார்கள்.
சேவையும் தேவை, சந்தையும் தேவை அதுதான் இன்றைய தத்துவமாக இருக்கின்றது. சற்று அப்பால் பட்ட மனிதனுடன் தொடர்பை பேண சந்தை, எம் தொடர்பு வட்டத்தில் அருகில் இருக்கும் மனிதருடன் வாழ்வை பகிர சேவை. இரண்டும் தொடர்பை ஏற்படுத்தி, பொருட்கள் சேவைகளை பகிர வழிசமைக்கின்றன.
இருப்பினும் மனிதனுக்குள் ஒரு ஒழுங்கற்ற, அழுக்கான பகுதி இருப்பதாக தெரிகின்றது. அதை எப்படி நெறிப்படுத்துவது அதுவே ஒவ்வொரு மனிதனுக்கு முன் இருக்கும் கேள்வியாகும்.
டோண்டு சார்,
தவறான எண்ணங்களை உருவாக்கும் நோக்கம் எதுவும் இல்லை. உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் சொல்வது போல பின்னணியுடன் படித்தால்தான் உங்களின் எண்ணம் தெளிவாகும். சுட்டி இதோ:
http://masivakumar.blogspot.com/2006/05/blog-post_01.html
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி வவ்வால்,
ஆறு விளையாட்டு விளையாட முனைகிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
நற்கீரன்,
மனிதனுக்கு இருக்கும் அந்தத் தாகம் இயற்கைதான். அதையே முற்றிலும் சுயநலம் சாராது, பொது நலப் போக்கில் திருப்பும் வழி இருக்கலாம் அல்லவா? அழுக்கான பகுதியான வன்முறையை நெறிப்படுத்தி சமூகம் அமைத்தாலும், சமூக நெறிகளை மீறுபவர்களைக் கண்டிக்க காவல் துறையும், நீதி மன்றங்களும், சிறைச்சாலைகளும் இருக்கின்றன. இன்னொரு அழுக்கான பகுதி அளவற்ற சுயநலம் என்று எடுத்துக் கொண்டால் பெரும்பாலானோர் தம்மை நெறிப்படுத்திக் கொண்டால் போதும், பொதுவுடமை சமூகத்துக்கு வழி பிறந்து விடும். அந்த நெறிப்படுத்தலுக்குள் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பாதவர்கள் என்ன செய்யலாம் என்பதும் பரிணமிக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
வணக்கம் சிவகுமார்!
//பொது இடத்தில் துப்புபவர்கள், புகை பிடிப்பவர்கள், சாலை நிறுத்தத்தில் சிவப்பு விளக்கை மதிக்காதவர்கள், குப்பை போடுபவர்கள், அநியாய விலை வைத்து விற்பவர்கள், நியாய விலைக் கடையிலிருந்து பொருட்களை வெளிச் சந்தைக்குக் கடத்தும் ஊழியர்கள், கையூட்டு வாங்கும் அரசு ஊழியர்கள், தன் வேலையை செய்யாத ஆசிரியர்கள், கொள்ளை அடிக்கும் மருத்துவர்கள் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். இவை எல்லாவற்றுக்கும் இவர்கள் எல்லோருக்கும் ஒரே மருந்து மன மாற்றம்.//
ரொம்ப எளிதாக ஒரே மருந்து மனமாற்றம் என்று சொல்லிடிங்க ,ஆனா நடக்காத காரியாம் ஆச்சே! பேருந்தில் வயதானவர்/ஊனமுற்றோர் கூட்டத்தில் இடிப்பட்டு நிற்க சிரமப்படுவதை பார்த்தால் தனது இருக்கையை கொடுக்க எத்தனை பேர் முன்வருவார்கள்.
அந்த இருக்கையுடன் ஆன அவர்களது பந்தம் குறைந்த பட்சம் சில மணி நேரங்களே அதற்கே மனம் வராத மக்களிடம் பெரிய அளவில் மனமாற்றம் வந்தால் எல்லாம் சரியாகிடும்னு சொல்ற உங்க அப்பாவி தனத்த பார்த்த பரிதாபம் தான் வருது!
வவ்வால்,
மன மாற்றம் வருவது சிரமம் என்று சொல்லுங்கள், ஆனால் மன மாற்றம்தான் இதற்கு விடிவு என்பதில் என்ன தவறு? பேருந்தில் இடம் கொடுக்காதவர்கள் மன மாறினால் நீங்கள் சொல்லும் பிரச்சனை தீர்ந்து விடும். அந்த மாற்றத்துக்கு மந்திரக் கோல் எதுவும் பயன்படப் போவதில்லை. அது நம் உள்ளேதான் இருக்கிறது.
நான் இரண்டு - மூன்று மணி நேர பேருந்து பயணத்தில் பிற்பாடு ஏறிய தள்ளாத ஒருவருக்கு இருக்கை கொடுப்போம் என்று இதுவரை எழுந்ததில்லை. "இவ்வளவு தூரம் நின்று கொண்டா போக முடியும், அவர் ஏன் இருக்கை இல்லாத இந்த பேருந்தில் ஏற வேண்டும்? அடுத்த வண்டியில் வருவதுதானே" என்று மனதை சமாதானப் படுத்தியுள்ளேன். நீங்கள் இப்படி சுட்டிக் காட்டியதும் இனிமேல் அந்தச் சாக்கைக் கைவிட்டு அத்தகைய ஒருவருக்கு இடம் கொடுக்க முன் வரலாம். இதற்கு பெரிய புரட்சியோ, அரசு சட்டமோ தேவையில்லையே, என்னுடைய மன மாற்றம்தான் ஒரே தேவை.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக