வியாழன், ஜூன் 22, 2006

பொதுவுடமை அல்லது உடோபியா

இப்படி ஒரு உலகை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் தாராளமாகத் தங்கு தடையின்றிக் கிடைக்கின்றன. உடுத்துவதற்கு உடைக்கும் பஞ்சமில்லை.

யாருக்கு என்ன வேலை செய்ய விருப்பமோ அவர் அந்த வேலையைச் செய்யலாம். காலையில் எழுந்து தோட்ட வேலை, நாளின் முற்பகுதியில் கணினி நிரல் எழுதுதல், மத்தியானம் நண்பருடன் சதுரங்கம் விளையாட்டு, மாலையில் ஒரு இயந்திரத்தின் மாதிரி உருவாக்கும் பணி, இரவில் காந்தியின் கொள்கைகளைப் பற்றிய ஒரு அலசல் கட்டுரை எழுத்து என்று ஒருவர் தனது நாளை செலவிடுகிறார்.

எல்லா மனிதரும் எல்லோரையும் நேசிக்கிறார்கள். பிறருக்கு எப்படி உதவியாக அமையும் என்ற நோக்கத்தோடுதான் எந்த வேலையும் செய்கிறார்கள் மக்கள். குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியாக ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கதை சொல்வதில் இன்பம் காணும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளைக் கூட்டி வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுடன் விளையாட விரும்புபவர்கள் விளையாட்டிலும் இறங்குகிறார்கள்.

பயிர் செய்வதில் உண்மையான ஆர்வமும் அந்தத் தொழிலில் தன் மகிழ்ச்சியைக் காணும் மாந்தர் இயந்திரங்களின் துணையோடு முழு உலகத்துக்கும் தேவையான உணவுகளை விளைவித்து விடுகின்றனர். யாரும் செய்ய விரும்பாத, மனிதனுக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்ய இயந்திரங்கள் உள்ளன.

சாப்பாடு இல்லாமல் யாரும் பட்டினிக் கிடப்பதில்லை. எப்போது பசிக்கிறதோ அப்போது பக்கத்தில் இருக்கும் வீட்டுக்குள் போனால் வீட்டுக் காரர்கள் அன்போடு வரவேற்று உணவுப் பொருட்களைக் கொடுக்கிறார்கள். யாரும் பேராசையுடன் சொத்துக்களையும் நிலத்தையும் வளைத்துப் போட்டுக் கொள்வதில்லை. என்ன தேவையோ அதை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாளைக்கு இல்லாமல் போய் விடுமே என்ற பயமே யாருக்கும் இல்லை. எல்லாம் எப்போதும் எல்லாருக்கும் கிடைக்கிறது.

அரசாங்கம், ராணுவம், வரி விதிப்பு என்று எதுவுமே இல்லை. காவல் நிலையங்கள் கிடையாது. நீதி மன்றங்கள் தேவையில்லை.

வெளியில் போகும்போதோ தூங்கும் போதோ வீட்டைப் பூட்டிக் கொள்ள வேண்டிய தேவையே இல்லை. இல்லாமை இல்லாத நிலை இருப்பதால் யாரும் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் இருங்கள். இது என்ன பைத்தியக்காரக் கனவு என்று சிரிக்கும் முன், இதை பார்த்தவர்கள் இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். நம்முடைய கிராமங்களில் ஏறக்குறைய இந்த நிலைதானே? என்னுடைய தாத்தா ஊரில் சாப்பாடு எந்த வீட்டிலும் கிடைக்கும், வீட்டு வாசலை அடைப்பது நள்ளிரவுக்கு அப்புறம்தான். காவல் நிலையங்கள் ஊருக்கு வெளியே ஒதுங்கி இருக்கும். எல்லோரும் எல்லோருடனும் அன்புடனும், உண்மையான அக்கறையுடனும் பழகுவார்கள். நேரத்தை வீணடிக்கும் பழக்கங்களும், கருவிகளும் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டிருந்தன.

நாம் நினைத்தால் நம் வாழ் நாளில் ஒரு பொதுவுடமை சமூகத்தைக் காணலாம். அதற்கு கத்தி ஏந்திய புரட்சி தேவையில்லை. அதற்கு பங்குச் சந்தைகள் தேவையில்லை. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியும், தகவல் தொடர்பு கருவிகளும் உண்மையான முழுமையான பொதுவுடமை சமூகத்துக்கு நம்மை இட்டுச் செல்லப் பயன்படும். மனிதனுக்கு மனம் இருக்கிறதா என்பது மட்டுமே கேள்வி?

7 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்!

//கொஞ்சம் இருங்கள். இது என்ன பைத்தியக்காரக் கனவு என்று சிரிக்கும் முன், இதை பார்த்தவர்கள் இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். நம்முடைய கிராமங்களில் ஏறக்குறைய இந்த நிலைதானே? என்னுடைய தாத்தா ஊரில் சாப்பாடு எந்த வீட்டிலும் கிடைக்கும், வீட்டு வாசலை அடைப்பது நள்ளிரவுக்கு அப்புறம்தான்//

உண்மையில் நீங்கள் எழுதியவாரே பொதுவுடைமை உடன் "சமத்துவம்" இருந்தால் மிக்க சந்தோஷம் ஆனால் இல்லாத ஒன்றை பகல் கனவாக சொல்லியுள்ளது போல தெரிகிறதே.

எந்த வீட்டிலும் சாப்பாடு கிடைக்கிறதா தினசரி தருவார்களா என்று கூடக்கேட்கவில்லை ,அனைத்து சாதி ,மதத்தினருக்கும் கேட்டவுடன் வீட்டில் அழைத்து உட்கார வைத்து பறிமாறுவார்களா சாப்பாடு. அப்படி செய்யும் ஊர் எனில் உடனே அந்த புண்ணிய தலத்தை தரிசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

மு. மயூரன் சொன்னது…

சிவகுமார்,

நாங்கள் எப்படி இருக்கவேண்டும், யார் எம்மை ஆளவேண்டும், நாம் என்ன உண்ணவேண்டும், நாம் எதைப்படிக்கவேண்டும், நாம் எப்படி சிந்திக்கவேண்டும் என்பதைக்கூட அதிகாரம் தான் தீர்மானிக்கிறது.

அதிகாரத்துக்கு பொதுவுடைமை பிடிக்காது. ஏனென்றால் அதிகாரத்தின் சுரண்டலுக்கும் இருப்புக்கும் தனியுடைமை கட்டமைப்பே வசதியானது.

எவ்வளவு தான் அமைதிவழியில் நாம் 'நல்ல" சமூகத்தை உருவாக்க முனைந்தாலும், அதிகாரம் எம்மை அடக்கவே நிற்கும்.

கிராமிய பொருளாதாரத்தை குதறும் பன்னாட்டு கம்பனிகளை அமைதிவழியில் எதிர்ப்பவர்கள் மீது பொலிச் நாய்கள் ஏவிவிடப்படுவதில்லையா அப்படித்தான்.

அதிகாரம் என்பது அடக்கு முறைவடிவாம இருக்கும் போது, அதிகாரம் என்பது ஆயிதத்தோடு நிற்கும் போது நாம் அமைதிவழியில் போராட முடியாது.

நாம் எந்த ஆயுதத்தை தூக்க வேண்டுமென்பதை எதிரிதானே தீர்மானிப்பார்?

நீங்கள் சொல்லும் கிராமிய சமுதாயம் உயர்வானதுதான் கேள்வி இல்லை. ஆனால், அங்கேயும் அதிகாரக்கட்டமைப்புக்கள் உண்டு. சாதிக்கொடுமைகள், பெண் ஆண் அதிகார துஷ்பிரயோகங்கள் நிறைய உண்டு. அவற்றை வீழ்த்தவும் ஆயுதம் தேவைப்படுகிறது.

விஞ்ஞான ரீதியாக மேற்படி அழகான சமுதாயத்தை நாம் கட்டமைக்க வேண்டுமானால், ஆயுதமும் புரட்சியும் இன்றியமையாதவைதான்.

ஆயுதமும், போராட்டமும் இல்லாமல் எங்கேயாவது யாராவது விடுதலையையும் சமூக மாற்றத்தையும் எட்டியிருக்கிறார்களா என்று தேடிப்பாருங்கள். காந்தியை வெற்றி நாயனாக சித்திரிக்கும் மாயைகளிலிருந்து விலகி நேர்மையாக தேடிப்பாருங்கள். எங்கேயும் அப்படி நிகழ்ந்ததாக வரலாறில்லை. முட்டைகள் உடைந்தே குஞ்சுகள் வெளிவருகின்றன.

வலியோடும் வேதனையோடுமே குழந்தைகள் பிறக்கின்றன.

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

நம் கிராமங்களின் சாதிக் கட்டமைப்புகளும், பிற்போக்குத் தனங்களும் தொடர வேண்டும் என்று சொல்லவில்லை. மனித் நேயம், அண்டை வீட்டினர் ஒரு குடும்பமாக பழகுவது, எளிமை, பேராசையின்மை போன்றவற்றை எடுத்துக் கொண்டு மாறியுள்ள உலகுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளலாம் அல்லவா?

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

மயூரன்,

இப்போது நடக்கும் வன்முறை சார்ந்த பொருளாதார அமைப்புகள் மாற வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை.

காந்தியின் முறைகள் தவறு என்று நீங்கள் சொல்வது எதன் பேரில்? ரத்தம் சிந்தாமல் கோயில்களை தாழ்த்தப்பட்டோருக்கு திறக்க வைத்த வழியில் என்ன பிழை?

ரத்தம் சிந்தி நடந்தி சீன சமூகப் புரட்சிக்குப் பிறகு இன்று சீனாவின் நிலை என்ன? சீனாவில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்த அனுபவத்தில் கூறுகிறேன், காந்தி என்ற தலைவரின் வழி நடத்தலைப் பெற்ற இந்திய நாடு கொடுத்து வைத்தது, நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு சீனரின் வலிகளைத் தெரிந்து கொள்ள முயலுங்கள். நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன, அதற்கு கொடுத்த விலைதான் பெரிது.

நமக்கு வன்முறையற்ற அமைதி வழி இருக்கும்போது ஏன் ஆயுதப் போராட்டம்தான் தீர்வு என்று நினைக்கிறீர்கள்?

அன்புடன்,


மா சிவகுமார்

vasu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
vasu சொன்னது…

@நமக்கு வன்முறையற்ற அமைதி வழி இருக்கும்போது ஏன் ஆயுதப் போராட்டம்தான் தீர்வு என்று நினைக்கிறீர்கள்?

you are absolutely right .... keep it up.........

மா சிவகுமார் சொன்னது…

நன்றி reader.
அன்புடன், மா சிவகுமார்