ஞாயிறு, ஜூன் 18, 2006

வாழ்க்கை

என்ன ஒரு அற்புதமான உலகம். ஆனந்தமான வாழ்க்கை.

சந்திக்கும் ஒவ்வொரு மனித முகமும் ஒரு அதிசயம். பல ஆண்டுகளாக செதுக்கப்பட்ட ஒவ்வொரு தசை அசைவும், ஒவ்வொரு செயலும் நூற்றுக் கணக்கில் நம்மைச் சூழ்ந்துள்ளன.

தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து நிலையங்களில் நீந்திக் கொண்டிருக்கும் நேரங்களில் ஜன்னல்களையும் கதவுகளையும் அகலத் திறந்து விட்டு, வெளியில் பார்ப்போம். இயற்கையின் ஆக்கங்களும், ஆயிரக்கணக்கான கைகள் இணைந்த்து உருவாக்கிய ஒவ்வொரு மனிதப் படைப்புகளையும் பார்ப்போம்.

அதோ காய்கறி வண்டியைத் தள்ளிக் கொண்டு போகும் பெண்ணைப் பாருங்கள். மூஞ்சியில் மஞ்சள் தேய்த்துக் குளித்த மினுமினுப்பு, முகத்தில் கவலைக் கோடுகள். வாயிலிருந்து காய்கறிகளின் பேர்கள் முண்டியடித்துக் கொண்டு வருகின்றன. கழுத்தில் கைகளின் ஒரு கயிற்றைத்தவிர வெறுமை. எளிமையான தூய்மையான புடவை. கைகள் வண்டியைத் தள்ளிக் கொண்டே போகின்றன.

இடுப்பில் சுருக்குப்பை பணத்தை வைத்துக் கொள்ள.

இந்த ஒரு உருவத்தில் எத்தனை உழைப்பு. எவ்வளவு பேரின் முத்திரைகள்.

சின்ன வயதில் "இது கத்தரிக்கா, இது வெண்டைக்கா, இது பாவக்கா" என்று காய்கறி பெயர்களைச் சொல்லிக் கொடுத்த பக்கத்து வீட்டு அத்தை, புத்தகத்தில் படத்தைப் பார்த்துப் பேரைச் சொல்ல வைத்த அம்மா, பள்ளியில் எழுதப் படிக்கச் சொன்ன வாத்தியார். பக்கத்திலிருந்து அந்த நாட்களை வசந்தமாக்கிய உயிர்த் தோழி, பின்னலை இழுத்து வம்பு செய்த குறும்புக் கார வகுப்புத் தோழன் என்று நூற்றுக் கணக்கான சின்னங்கள்.

வளர்ந்ததும் மஞ்சள் தேய்க்கச் சொல்லிக் கொடுத்த பாட்டி, நானும் பெரிய பொண்ணாக நீள கூந்தல் வளர்ப்பேன் என்று கண்ட கனவுகள். தம்பி தங்கைகள், அண்ணனின் கரிசனம்,

"இப்படி ஒரு பையன் இருக்கான்" என்று துப்புச் சொன்ன பெருங்களத்தூர் சித்தி. கைப்பிடித்த வீட்டுக்காரன். கல்யாணத்தில் கண்ணீர் சிந்திய அப்பா. புது வீட்டில் குடித்தனம். குழந்தைகள், அவர்கள் படிக்கப் போக இவள் இன்று கொஞ்சம் காசு பார்ப்போமே என்று தெருவில் காய்கறி வியாபாரம்.

ஒரு மெலிய உருவத்துக்குள் ஒரு பரிமாணத்தில் ஒரு சிறு துளிதான் இது. இன்னும் நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான மனிதர்களின் உறவுக் கலவை இந்தப் பெண்மணி.

அவர் முகத்தில் பூசிய மஞ்சளையோ, கழுத்தில் கட்டிய தாலிக் கயிறையோ, உடலை அழகு செய்யும் புடவையையோ, பணம் கொள்ளும் சுருக்குப் பையையோ எடுத்துக் கொள்வோம். ஒவ்வொன்றுக்கும் நூற்றுக்குக் குறையாத மனிதர்களின் பங்கு இருக்கிறதே!

மஞ்சள் பயிரிட்ட விவசாயி, அதைப் பராமரித்த தொழிலாளர்கள், அதற்கான தண்ணீ, உரம், பூச்சியடிப்பு, வண்டியில் போட்டு சந்தைக்கு வந்தது, மொத்த வியாபாரி வாங்கிப் போய்க் கடையில் இறக்கியது, அதை அடுக்கி அழகுப் பார்த்த கடைச் சிப்பந்தி. ஆசையாக கடையில் போய் வாங்கி வந்த வீட்டுக்காரன். காலையில் இந்தச் சரித்திரப் பொருளை எடுத்து உரைத்து முகத்தில் தேய்த்துக் கொண்டன இந்தக் கைகள்.

சுருக்குப் பையின் கதையோ பெருசாக நீண்டு விடும்.

இனிமேல் நேரம் போக வில்லை, போரடிக்கிறது என்று அலுத்துக் கொள்ள முடியுமா? எவ்வளவு உள்ளது இந்த உலகில். என்ன அற்புதமான உலகம் இது. என்ன குதூகலமான வாழ்க்கை இது.

வாழ்க்கை வாழ்வதற்கு. கொஞ்சம் மனக் கதவுகளைத் திறந்து வைத்து வெளி உலகக் காற்றை உள்ளே விடுவோம்.

மூச்சுத் திணறுகிறது நம்முடைய மனம். அதற்குத் தான் எல்லையே இல்லையே. அதைப் பெட்டிக்குள் போட்டு அடைத்தால், குறுகிய இடத்தில் முடக்கி போட்டால் என்ன செய்யும் பாவம்.

கதவைத் திறந்து விடுவோம். வானில் சிறகடித்து பறக்கட்டும். தூர தூர தேசங்களைப் பார்த்து வரட்டும். மனித மனங்களை, மனித உடல்களை ரசிக்கட்டும். படைப்புன் அற்புதங்களை வியக்கட்டும். மனிதனின் அறிவுச் செல்வங்களை எண்ணட்டும்.

இரண்டு வேளை சோறு, உயிர் வினைகளை நடத்த நிறைய தண்ணீர் குடித்தல், நிம்மதியாகத் தூங்க எட்டடி இடம் வேறு என்ன வேண்டும். மூடியிருக்கும் கைகளை திறப்போம். இறுகியிருக்கும் விரல்களை தளர்த்துவோம்.

நாளைய பொழுது நம்முடைய பொழுது, குழந்தைகளுக்கு இந்த வளத்தை அள்ளிப் பருகும் கல்வியை அளிப்போம். கோடி கோடியாகவோ ஆயிரம் ஆயிரமாகவோ சேர்த்து வைக்க வேண்டாம். வாழ்க்கையை வாழும் மனத்தை உருவாக்குவோம். வாழ்ந்து அவர்களுக்கு வழி காட்டுவோம்.

எத்தனை எத்தனை மனிதர்களின் தோள்களின் மீது ஏறி உருவானது நம் இன்றைய வாழ்க்கை. நம் எதிர்கால மனிதர் ஏறும் வண்ணம் நமது தோள்களை உறுதியாக்குவோம், நமது ஆற்றலைப் பயன்படுத்துவோம். எவ்வளவு விரயங்கள், எவ்வளவு அழிவுகள்.

ஒவ்வொரு நிமிடமும் நமக்குக் கிடைத்த வரம், ஒவ்வொரு செல்வமும் நமக்குக் கிடைத்த கடன். வரத்தை வீணாக்காமல் கடனை விரயம் செய்யாமல், புதிதாக புதிதாக வாழ்வோம்.

இல்லை என்பது இல்லை என்ற நிலையைப் பார்ப்போம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற பெருமனது கொள்வோம்.

கருத்துகள் இல்லை: