வறுமையைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும் முன் இந்தியாவில் உண்மையிலேயே வறுமை இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடுவோம்.
பங்குச் சந்தைகளின் குறியீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டரை மடங்கு மதிப்பில் உயர்ந்துள்ளன. மென்பொருள், தொலைச் சேவைத் துறைகளில் வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டேன் என்கிறார்கள். தியாகராய நகரில் துணிக்கடைகளிலும், நகைக் கடைகளிலும் கூட்டம் நெரிகிறது. இந்தியா ஒளிர ஆரம்பித்து விட்டது. வேறு வேலை இல்லாத கம்யூனிஸ்டுகள்தான் நாட்டில் வறுமை என்று பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு உடல் வருத்தி உழைக்கத் தயாராகவுள்ள ஒவ்வொருவருக்கும் வறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சோம்பேறிகள், உழைக்க மறுப்பவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். நாம் என்ன செய்ய முடியும்?
இப்படி ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். இந்தியாவில் எத்தனை பேர் வறுமைக் கோட்டிற்கு உள்ளனர், வறுமைக் கோடு என்றால் என்ன, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்ன, சிறு குழந்தைகளின் இறப்பு விகிதம் என்ன என்றெல்லாம் புள்ளி விபரங்களைச் சேகரித்து விவாதம் செய்யலாம். அதற்கெல்லாம் தேவையில்லாமல், இந்தியாவின் வறுமை ஒவ்வொரு நாளும் நமது முகத்தில் வந்து அறைகிறது.
1. ரயில் பெட்டிகளில் ஊர்ந்து ஊர்ந்து வந்து தன் சட்டையால் தரையில் கிடக்கும் குப்பைகளைத் திரட்டி விட்டுப் பயணிகளிடமிருந்து சில்லறைக் காசுகளை வாங்கிச் செல்லும் பையன்கள்.
2. சாப்பாட்டுக் கடைகளில் மேசைத் துடைக்கத் துணியோடு வந்து நிற்கும் அழுக்குச் சட்டைச் சிறுவர்கள்
3. வேகா வெயிலில் குழந்தையை சாலை ஓரம் தொட்டிலில் போட்டு விட்டுச் சாலை போடும் வேலை செய்யும் பெண்கள்
4. வீட்டு வேலை செய்ய ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வரும் பெண்கள்
5. சாலை நிறுத்தங்களில் ஓடி ஓடி வந்து பிச்சை எடுக்கும், வண்ணத் துணிகள் விற்கும் குழந்தைகள்
6. சாக்கடையருகில், அழுகிய காய்களையும் தரக்குறைவான அரிசியையும் பயன்படுத்திச் செய்த உணவுகளை வாங்கி உண்ணும் உழைப்பாளிகள்.
என்று இந்தக் காட்சிகள் நம் கண்களிலிருந்து மறைகின்றனவோ அன்று இந்தியாவில் வறுமை ஒழிந்து விட்டது என்று பெருமூச்சு விடலாம். அதுவரை இந்தியா ஒளிர்கிறது என்ற கொண்டாட்டங்களையும், சுயப் பாராட்டல்களையும் தள்ளிப் போட்டுக் கொள்வோம்.
வறுமைக்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் மன்னிக்க முடியாத காரணங்கள், மக்களால், மக்களுக்காக இயங்கும் அரசாங்கங்களின் செய்கையால் விளைபவை.
அவற்றில் முதன்மையானது மது விற்பனை. குஜராத் மாநிலத்தைத் தவிர எல்லா மாநிலங்களிலும் அரசுகளே மதுக் கடை உரிமங்களை விற்கின்றன. மது உற்பத்தியில் கலால் வரியும், மது விற்பனையில் விற்பனை வரியும் ஈட்டிக் கொள்கின்றன. தன்னுடைய ஆட்சியில் மது விற்பனை மூலம் அரசு ஈட்டிய வரி பல மடங்காக உயர்ந்தது தமிழகச் சட்டசபையில் செல்வி ஜெயலலிதா முதல்வராக பெருமை பேசினார்.
அப்படி ஏழைத் தகப்பன்கள், அண்ணன்கள், அம்மாக்களின் கையிலிருந்து தட்டிப் பறிக்கும் பணத்தின் ஒரு பகுதி அரசுக்குப் போய்ச் சேர்ந்து அதில் ஒரு சிறு பகுதி குழந்தைகளுக்குச் சத்துணவாகவும், மாணவர்களுக்கு மிதி வண்டிகளாகவும், முதியோருக்கு வேட்டிச் சேலைகளாகவும் கொடுக்கப்படுகின்றன.
அனைத்து மாநிலங்களிலும் மது விலக்கு முற்றிலுமாக அமல் படுத்தப்பட வேண்டியது அரசுகளின் கடமை. கள்ளச்சாராயம் பெருகுமே, குடிக்கப் பழகி விட்ட மேட்டுக் குடியினர் என்ன ஆவார்கள், வெளி நாட்டினருக்கு வசதிக் குறைவு ஏற்படுமே என்று பல சாக்குகள் சொல்லலாம். விபச்சாரம் சட்ட விரோதமாக நடைபெறத்தான் செய்கிறது என்று அரசே அதை ஊக்குவித்து, வரியும் வசூலித்து மக்கள் நலப் பணிகளுக்கு அதில் வரும் வருமானத்தைப் பயன்படுத்துவதாக ஏன் செய்வதில்லை? ஏழைகளின் உழைப்பை உறிஞ்சும் மது உற்பத்தி ,விற்பனை மற்றும் குடித்தல் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
இதே போன்று அரசு ஊக்குவிப்பில் நடைபெறும் லாட்டரிச் சீட்டுகள் தமிழ் நாட்டைப் போலத் தடை செய்யப்பட வேண்டும்.
இரண்டாவதாக அத்தியாவசியப் பொருட்களின் மீது வரி விதித்தல்:
அரசுக்கு வருமானம் வேண்டும் என்று பெட்ரோலியப் பொருட்களின் மீதான இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனையில் சதவீதக் கணக்கில் வரிகள் விதிக்கப்படுகின்றன. எண்ணெய் விலை இரண்டு மடங்காக பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்த பிறகும் வரி வீதத்தைக் குறைக்காமல் அதிக விலையில் அதிக வரி வருமானம் என்று மத்திய மாநில அரசுகள் மக்களை ஏமாற்றி வருகின்றன.
வசதி படைத்தவர்களும், வறியவர்களும் ஒரே அளவு வரியே செலுத்துவதால் அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளின் சுமை ஏழைகளின் மீது மிகக் கடுமையாக விழுகிறது.
மாநில அரசுகள் பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் மீது கூட வரி விதிக்கின்றன.
அத்தியாவசியப் பொருட்கள் மீதான அனைத்து வரிகளும் முற்றிலும் நீக்கப் பட வேண்டும்.
மூன்றாவதாக, தரமான தாய்மொழிவழிக் கல்வி பத்தாம் வகுப்பு வரை அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்களுக்குக் குறையாமல் வகுப்புகள், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம், ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சத் தகுதி மற்றும் தொடர்ந்த பயிற்சி, சரியான வகுப்பறை, கற்பிக்கும் கருவிகள் இவை ஏதாவது ஒரு குழைந்தைக்குக் கிடைக்காமல் இருந்தால் எந்தக் குடிமகனும் நீதி மன்றம் மூலம் அரசை பரிகார நடவடிக்கை எடுக்கப் பணிக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
இதற்கெல்லாம் பணத்துக்கு எங்கே போவது, வரி வருமானமும் இல்லை நாடு முழுவதும் பள்ளிக் கூடங்கள் அமைக்கக் காசுக்கு எங்கே போவது?
1. மக்கள் பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் வசிக்கும் வீடுகளுக்கான செலவுகள் குறைக்கப் பட வேண்டும்.
2. இந்தியாவின் பெருமையைக் காப்பாற்றுகிறோம் என்று பொய்யாக புது தில்லியில் நடத்தப்படும் விழாக்களும் கோலாகலங்களும் நிறுத்தப்பட வேண்டும்.
3. மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் சேவை மனப்பான்மையோடு அரசுப் பணத்தை மக்களின் வரிப் பணத்தை செலவளிப்பதைக் குறைக்க வேண்டும்.
4. பொதுத் துறை நிறுவனங்களைத் தாங்கிப் பிடிக்கிறோம் என்று கோடிக் கணக்கில் விரயமாகும் காசு மிச்சப்படுத்தப்பட வேண்டும்.
நான்காவதாக பல்வேறு காரணங்களுக்காக நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முதலான கொள்கைகள் மூலம் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மதம், சாதி, வாழும் இடம் போன்ற காரணங்களால் வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்துப் பகுதியினரின் திறமைகள் சமூக வளர்ச்சிக்குப் பயன்படச் செய்ய வேண்டும்.
ஐந்தாவதாக உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற நிலச் சீர்திருத்தங்கள் மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி நாடு முழுவதும் செயல் படுத்தப்பட வேண்டும்.
ஆறாவதாக, எல்லாக் குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது அரசின் அடிப்படைக் கடமையாக அறிவிக்கப்பட வேண்டும். பாட்டில்களிலும் கேன்களிலும் அடைத்து குடிநீர் விற்கப்படும் தொழில் அடியோடு நின்று விடும் வண்ணம் எல்லா கிராமங்களிலும், பொது இடங்களிலும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக