இந்தப் பயணத்தில் நான் சரியாகச் செய்தவற்றையும், செய்தவைத் தவறு என்று பின்னர் புரிந்தவற்றையும், என்னைப் போன்ற பிறர் எப்படி செயல்பட்டார்கள் என்று நான் தெரிந்து கொண்டவற்றையும், இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு மிகச் சரியான அணுகுமுறை என்ன என்று எனக்குத் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
A. ஏன் ஒரு புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்த வரை,
- எட்டு ஆண்டுகள் இரண்டு நிறுவனங்களின் பல் வேறு பிரிவுகளில் பணியாற்றிய பிறகு எனது பலங்கள், பலவீனங்கள் பற்றிய ஒரு கணிப்பு வந்திருந்தது.
- என்னுடைய எல்லா ஆற்றல்களையும், அறிவையும் பயன்படுத்தும் வண்ணம் அடுத்த வேலைக்குப் போவது குதிரைக் கொம்பாகவேத் தோன்றியது.
- தோல் துறையில் நான் கற்றவை/தெரிந்து கொண்டவை, இந்தியா, சீனா, தாய்வான், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணம் செய்து நான் உணர்ந்து கொண்ட தோல் துறையின் தேவைகள், தமிழ், ஆங்கிலம், இந்தி, சீனம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் எனக்கு இருந்த பரிச்சயம், இணையம் என்ற எல்லாவற்றையும் புரட்டிப் போட வல்ல புதிய தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள் பற்றிய என்னுடைய புரிதல்கள் இவை அனைத்தையும் ஒருங்கே பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்றுதான் நான் தனியாக தொழில் தொடங்க முடிவு செய்தேன்.
- 'வேலை செய்யும் நிறுவனத்தில் நாம் நினைக்கும் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடியவில்லை. இந்தத் திட்டத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்று நம்பி வேலையை விட்டு விட்டு தனியாக ஆரம்பித்தவர்கள் உண்டு.
'புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும், நம்முடைய உழைப்பால் உலகில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்' என்ற கனவில் தொழில் செய்ய இறங்குகிறார்கள் இத்தகைய தொழில் முனைவோர். (இன்ஃபோசிஸ்) - போட்டியை ஊக்குவிக்க வேண்டும் என்று வேலை பார்க்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தூண்டுதலினால் தனியாக ஆரம்பித்தவர்கள் உண்டு.
நான் டாட்டாவின் வேலை பார்க்கும் போது, ஒரு சீன வாடிக்கையாளர் 'உனக்கு எவ்வளவு மூலதனம் வேண்டுமோ அதை நான் கடனாகத் தருகிறேன். இன்னும் ஓரிருவரைச் சேர்த்துக் கொண்டுப் போட்டி நிறுவனம் ஒன்றை ஆரம்பி' என்று சொன்னார்.
'நான் இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஒரு சிறு பகுதிதான். என்னுடைய வலிமைகளாக நீங்கள் பார்ப்பவை நிறுவனத்தின் சார்பில் விளைந்தவை, நான் தனியாக ஆரம்பித்தால் எனக்குப் போட்டி போடத் தேவையான எதுவும் இருக்காது' என்று மறுத்து விட்டேன். - கல்லூரியில் படிக்கும் போது புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கி, அதை சந்தைப்படுத்தும் முயற்சியில் முன் அனுபவம் இல்லாமலே தொழில் தொடங்குவதும் சாத்தியம்தான். (மைக்ரோசாப்டு)
- 'கையில் நிறையக் காசு உள்ளது, வங்கியில் வட்டி வீதம் குறைவு. தொழிலில் முதலீடு செய்வோம்' என்று ஆரம்பிப்பவர்களும் உண்டு.
- 'எத்தனை நாள் பிறருக்கு அடிமையாக உழைப்பது. தனியாகத் தொழில் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம்' என்று நினைப்பவர்களும் உண்டு.
'என்னுடைய விருப்பப்படி, என்னுடைய நேரத்தில் நான் வேலை செய்யலாம், யாரிடமும் பேச்சுக் கேட்க வேண்டியதில்லை, யாரிடமும் கை கட்டி நிற்க வேண்டியதில்லை' என்பவை இப்படிப்பட்ட தொழில் முனைவோரின் நோக்கங்கள். - 'நம் பையன் படித்து விட்டான், ஒரு தொழில் தொடங்கிக் கொடுக்கலாம்' என்று தந்தையின் ஆர்வத்திலும் தொழில்கள் தொடங்கப்படுகின்றன.
B. எப்போது தொழில் ஆரம்பிக்கலாம்?
ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்று பார்க்கும் போதே வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில் தொழில் ஆரம்பிக்கலாம் என்பதும் வந்து விட்டது.
- படிக்கும் போது சிறு சிறு தொழில் முனைவுகள் செய்து பார்த்து, குடும்பத் தொழிலில் தந்தையுடன் சிறு வயதிலிருந்தே நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, அல்லது புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மிக வெற்றிகரமான ஒரு பொருளை உருவாக்கி தொழில் தொடங்கினால் ஒழிய, படித்து முடித்தவுடன் தொழில் தொடங்குவதை தவிர்க்க வேண்டும்.
'ஒரு தொழிலில் என்னென்ன நடைமுறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும், என்னென்ன சிக்கல்கள் வரும், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் போன்றவர்களைக் கையாள்வது' இதற்கெல்லாம் இன்னொரு நிறுவனத்தில் வேலை பார்த்து ஒரு அமைப்புச் சார்ந்த சூழலில் (அவர்கள் செலவில்), தவறுகள் செய்து கற்றுக் கொள்வது நல்லது. - வேலைக்கு சேர்ந்து வசதியான அமைதியான வாழ்க்கையில் அமர்ந்தாகி விட்டது. எப்போது வேலையை விட்டு விட்டு தொழில் ஆரம்பிக்க வேண்டும்?
நிறுவனம் வேலையை விட்டு நீக்கி விட்டாலோ, சரியான ஊதியம் கொடுக்காமல் இருந்தாலோ அவற்றிற்கான தீர்வைக் காண முயற்சிக்க வேண்டுமே ஒழிய, புதிய தொழில் துவங்குவது ஒரு தீர்வாக அமையாது.
என்னைப் பொறுத்த வரை கடைசியாக வேலை பார்த்த நிறுவனத்தில் இருக்கும்போதே 'இனிமேல் வேறு வேலை தேடப் போவதில்லை' என்று முடிவு செய்து, இணையம் - தகவல் தொழில் நுட்பம் இவற்றை இணைத்து ஒரு தொழில் தொடங்க எண்ணிக் கொண்டிருந்தேன்.
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு தகவல் தொழில் நுட்ப வசதிகளை செய்து கொடுத்து புதிய தொழில் நுட்பத்தை அவர்களுக்கு அளிக்கலாம் என்ற எண்ணத்தை சிங்கப்பூரை சேர்ந்த ஒரு சீனர் எனக்குக் கொடுத்தார்.
எனக்குத் தெரிந்த துறை தோல் துறை, நம் ஊரில் தோல் சார்ந்த நிறுவனங்கள் நிறைய இருந்தன. சென்னையில் மென்பொருள் தொழிலும் வளர்ந்து கொண்டிருந்தது.
தோல் துறையில் இறக்குமதி ஏற்றுமதி ஏராளம் நடைபெறுகிறது. சிறிய நிறுவனங்கள் கூட பல நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பது வளமை. அவர்கள் தகவல் பரிமாற்றிக் கொள்வது தொலைபேசி, தொலை நகலி, தபால் துறை, தனியார் தொலைச் சேவை நிறுவனங்கள் மூலம்தான். நூறு ரூபாய் மதிப்புள்ள ஒரு தோல் பொருள் நுகர்வோரைப் போய்ச் சேரும் முன்னர் இத்தகைய தகவல் பரிமாற்றத்துக்கான செலவுகள் விலையில் கணிசமான பகுதி ஆகி விடுகின்றன.
இந்தச் செலவைக் குறைக்க கூடவே பிற சாத்தியங்களை உருவாக்க, இணையம் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஊடகச் சேவையை அளிக்கலாம் என்பதுதான் திட்டம்.
எனக்கு அறிவுரை சொல்ல நிறைய பேர் இருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருமே புதிய தொழில் தொடங்கிய அனுபவம் இல்லாதவர்கள். எங்கள் குடும்பத்திலும் கிட்டத்தட்ட எல்லோருமே பணிக்கு ஊதியம் ஈட்டும் வேலைகளிலேயே இருந்தார்கள். ஒரு தொழிலை எப்படி நடத்த வேண்டும் என்ற உணர்வோ, அனுபவமோ முற்றிலும் இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு குதித்து விட்டேன்.
C. காசு எங்கிருந்து வரும்?
ஆரம்பத்தில் வீட்டின் ஒரு அறையிலிருந்தே ஆரம்பித்து விட்டேன்.
செலவு என்று பார்த்தால் வீட்டு வாடகை, மாதாமாதம் வீட்டுச் செலவுகள், குழந்தகளின் படிப்பு என்று சொந்தச் செலவுகள். மாதச் சம்பளம் நின்று விடவே, சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் நிச்சயமற்ற நிலையப் புரிய வைத்து விடுவது அவசியம்.
நிலையான சம்பளம் வருவது நின்று சேமிப்பில் செலவு செய்யும் போது வாழ்க்கை முறைகள் / செலவு முறைகளில் ஏற்பட வேண்டிய மாறுதல்களை குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடமும் தெளிவாக விவாதித்து மறு ஏற்பாடுகள் செய்து கொள்வது நல்லது.
தொழில் செலவுகளைக் கூடிய வரையில் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நோக்கில்தான் நாங்கள் ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறந்த நிரல் மென்பொருட்களை எங்கள் ஆதாரமாகப் பயன்படுத்த முடிவு செய்தோம். நமது ஆரம்பச் செலவுகள் குறைவது மட்டும் இல்லாமல், வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் காசு மிச்சம். நம்முடைய மென் பொருளைப் பயன்படுத்த காசு கொடுத்து பிற மென்பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.
ஆரம்பத்தில் சொந்த சேமிப்பு, நண்பர்கள், உறவினர்களில் ஆதரவுதான் முதலீட்டுக்கு வழி. ஒரு திட்டம் வைத்திருக்கிறேன், முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு என்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்பது நம் ஊரில் நடப்பது போலத் தெரியவில்லை. ஆரம்ப காலங்களில் தன் கையை தனக்கு உதவும்.
D. வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு சேவை தேவையா என்று எப்படித் தெரிந்து கொள்வது?
- 'என்ன பொருள் அல்லது சேவை வழங்க வேண்டும்' என்பதை முடிவு செய்து கொண்டுதான் தொழிலில் இறங்குகிறோம். ஆனாலும், 'அந்தப் பொருள்/சேவைக்கு உண்மையிலேயே சந்தை இருக்கிறதா, அதைக் காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களா' என்று ஆராய்ச்சி கண்டிப்பாக தேவை.
- ஒரு திசையில் நேரத்தையும், பொருளையும் நிறைய செலவளிக்கும் முன்னால் குறி வைக்கும் வாடிக்கையளர்களின் பிரதிநிதி போன்ற ஒரு நிறுவனத்தில் ஆரம்ப முயற்சிகளைக் காட்டி அவர்களின் ஆர்வத்தை அளவிட வேண்டும். ஆர்வத்தின் அளவு அவர்கள் கொடுக்கத் தயாராக இருக்கும் பணம்தான்.
- இப்படியே ஒவ்வொரு படியிலும், வாடிக்கையாளரின் கருத்துகளை விலை கொடுக்கும் விருப்பத்தைப் பொறுத்து சேவையை திருத்திக் கொண்டே வர வேண்டும்.
இணையத்தின் மூலம் வழங்கும் சேவையாக விற்று வந்த நாங்கள் இரண்டு ஆண்டுகளில் இணைய இணைப்பு இல்லாத வகையிலும் சேவை அளிக்கும் படி மாறிக் கொண்டோம்.
ஏனென்றால் எங்களது வாடிக்கையாளர்களில் பலர் இணையத்தில் தொழில் விவரங்களைச் சேமிப்பதில் தயக்கம் காட்டினார்கள். கூடவே பல இடங்களில் இணையத் தொடர்பும் சரிவர இல்லை. இதனால் பல வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தன. எங்கள் வழிமுறையை மாற்றிக் கொண்ட பிறகுதான வளர்ச்சி ஆரம்பித்தது.
எந்தப் பொருளுக்குமே விலை என்பதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. வாடிக்கையளருக்கு அதனால் கிடைக்கும் பலனை ஒட்டிய மதிப்பு, நிறுவனத்துக்கு அதைத் தயாரிக்க ஆகும் செலவை ஒட்டிய மதிப்பு. விலை இந்த இரண்டுக்கும் நடுவில் அமைய வேண்டும். பேரம் பேசும் போது எதற்கு அருகில் விலை அமைகிறது என்பது இரு தரப்பின் வர்த்தகத் திறமையைப் பொறுத்து அமைகிறது.
'ஒரு புதிய நிறுவனத்துக்கும் தன்னுடைய செலவினங்களை எப்படிப் பொருளின் விலையுடன் பொருத்த வேண்டும்' என்ற வழி முறைகள் தெளிவாக இருக்காது. 'வாடிக்கையாளருக்கு என்ன பலன் கிடைக்கும்' என்று கணக்கிட்டுக் காட்டக் கூடிய விபரங்கள் கூட இருக்காது. இந்த நிலையில் விலையை ஒரு அளவில் நிர்ணயித்து விட்டு டிரையல் எர்ரர் முறையில்தான் செயல்பட வேண்டும்.
ஆரம்ப காலங்களில் லட்சக் கணக்கில் சொல்லி வந்த விலையை வாய்ப்புகள் கிடைப்பதற்காக சில பத்தாயிரங்களுக்குக் குறைத்துக் கொண்டு, இப்போது மீண்டும் லட்சத்தைத் தாண்டியுள்ளோம்.
G. எப்படிச் சந்தைப் படுத்துவது?
நமக்கு இருக்கும் தொடர்புகள்தான் தொழிலின் உயிர் நாடி.
வேலைக்கு ஆள் தேடுவதிலாகட்டும், பொருளுக்கு வாடிக்கையாளரை அணுகுவதிலாகட்டும், நமக்கு யாரைத் தெரியும் என்பதுதான் நமக்கு என்ன தெரியும் என்பதை விட ஒரு படி மேலேயே இருக்கிறது. தோல் துறையில் இருக்கும் எங்கள் கல்லூரியில் படித்த சீனியர்கள், ஜூனியர்கள் மூலமாகத்தான் ஆரம்ப காலங்களில் எங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தன.
ஒரே ஆளை விட ஒரு குழுவாக ஆரம்பிப்பது மிக நல்லது. ஒருவரில் இல்லாத திறமைகள் இன்னொருவரிடம் இருக்கும். எங்கள் நிறுவனத்தில் மனித உறவுகளில் தேர்ந்த ஒருவர் பங்குதாரராக முழு நேரப் பணி ஆரம்பித்த பிறகுதான் பல மேம்பாடுகள் ஏற்பட்டன. நான் பார்த்த வரை வெற்றிகரமாக இயங்கும் நிறுவனங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட திறமைகளைக் கொண்ட கூட்டாளிகள் சேர்ந்து இயங்குவது வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கிறது.
16 கருத்துகள்:
சொந்தத் தொழில் ஆரம்பிப்பது என்பது ஒரு சவாலான வேலைதான். நானும் அதை செய்தவன் என்ற முறையில் உங்களது இப்பதிவை நான் சுவாரசியமாகப் படித்தேன். எடுத்த காரியத்திலேயே கண்ணாக இருப்பது முக்கியம்.
உங்களது மற்றப் பதிவுகளையும் பார்த்ததில் ஒன்று கூறுவேன்.
சிக்கனமாக இருந்து அனாவசியமான செலவுகளை குறைக்கிறீர்கள் என்பதெல்லாம் சரிதான். இருப்பினும் ஓரளவுக்கு மேல் பல அவசியமான செலவுகளைத் தவிர்ப்பதும் சில சமயம் நடந்து விடுகிறது. முக்கியமாக நீங்கள் எல்லா இடங்களுக்கும் மடிக்கணினி மற்றும் முக்கியமான கோப்புகள், சி.டி.க்கள் ஆகியவற்றை தூக்கிக் கொண்டு பஸ்சில் செல்கிறீர்கள். இது எவ்வளவு ஆபத்தான விஷயம் தெரியுமா?
அதை விடுங்கள், இம்மாதிரி வியர்த்து விறுவிறுத்து வாடிக்கையாளர் இடத்துக்குப் போனால் உங்கள் மேல் அவருக்கு என்ன அபிப்பிராயம் வரும் என நினைக்கிறீர்கள்?
அதற்காக கார் எல்லாம் வாங்க முடியாது என்று நீங்கள் கூறலாம். தேவையேயில்லை. இப்போது டூரிஸ்ட் டாக்சிகள் பல வந்து விட்டன. 30 கிலோமீட்டர், 5 மணி என்ற கணக்கில் அவை வருகின்றன. அதற்கு இப்போதைய மார்க்கெட் விலை 350 ரூபாய் மட்டுமே. அதிகம் ஆகும் கிலோமீட்டர் ஒவ்வொன்றுக்கும் ஐந்து ரூபாய், ஒவ்வொரு மணிக்கும் 40 ரூபாய் அவ்வளவுதான். இதற்கான பணத்தை உங்கள் வாடிக்கையாளர் பில்லில் நேரடியாக அல்லது மறைமுகமாக சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். மேலும் இந்த வகை செலவினங்களை உங்கள் வருட வருமானத்திலிருந்து கழித்தால், வரியும் மிச்சமாகும். உதாரணத்துக்கு நீங்கள் 10,000 ரூபாய் செலவழித்தால் அந்த அளவு வருமானத்துக்கான வரி 2500 ரூபாய் (நீங்கள் டாப் பிராக்கெட்டில் இருப்பீர்கள் என்ற அனுமானம்) மிச்சம். வேறு வகையில் கூற வேண்டுமானால், 7500 ரூபாய் கொடுத்து 10,000 ரூபாய்க்கான சேவை பெறுகிறீர்கள். அந்த 7500 ரூபாயும் நீங்கள் செலவழிக்கப் போவதில்லை.
"வாடிக்கையாளரை அணுகும் முறைகள்" என்ற தலைப்பில் பத்து பதிவுகள் போட்டுள்ளேன். பத்தாவதற்கான சுட்டி இதோ: http://dondu.blogspot.com/2006/04/10.html
அதிலேயே அதற்கு முந்தைய 9 பதிவுகளுக்கான சுட்டிகள் உண்டு. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவன்தான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே குறிப்பிட்டப் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/10.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி டோண்டு சார்,
நீங்கள் குறிப்பிட்ட உங்களுடைய் பத்து பதிவுகளையும் ஏற்கனவே படித்து விட்டேன். நீங்கள் சொல்வது போல தேவையானவற்றில் சிக்கனம் பிடிப்பதால் இழப்புதான் நேரும் என்பதை நேரில் கண்டிருக்கிறேன். மடிக்கணினியை பேருந்தில் இழுத்து அடிப்பதால் அதன் வாழ்நாள் கூட குறைந்து விடுகிறது. அலுவலகத்தில் குளிர்பதனம் செய்யாததால் கணினிகள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன.
நான் இரண்டு பக்கங்களையும் பார்த்து விட்டேன் சார். சீனாவில் இருக்கும் போது தரையில் காலே பாவாது. எங்கு போக வேண்டும் என்றாலும் வாடகை ஊர்தி, விமானப் பயணம்தான். ஆனால் அங்கு தொழில் செய்யத் தெரியாமல் சொதப்பியதுதான் மிச்சம்.
எனது அனுபவத்தில் வருமானத்தில் கண்ணாக இருப்பதுதான் தொழில் வெற்றிக்கு முதல் தேவை. உங்களுடைய வாடிக்கையாளர் உறவு பற்றிய தொடரில் நீங்கள் அதை வலியுறுத்தி இருபீர்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
மிக அற்புதமான, பயனுள்ள இடுகை !
<<>>
நன்றி & பாராட்டுகள் !
<<>>
//இதற்கெல்லாம் இன்னொரு நிறுவனத்தில் வேலை பார்த்து அவர்கள் செலவில் தவறுகள் செய்து கற்றுக் கொள்வது நல்லது.//
யதார்த்தமான அறிவுரை :-) !
<<>>
உங்களது பொருளாதார கட்டுரைகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். சில சந்தேகங்களும் உள்ளன, விரைவில் கேட்கிறேன் !
நன்றி சோம்பேறிபையன்.
என்ன கூடுதல் தகவல் வேண்டுமோ கேளுங்கள். எனக்குப் புரிந்த வரை விளக்குகிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
மிக நல்ல பலருக்கும் உபயோகமான பதிவு. நன்றி. பாராட்டுகள்.
ஆவி யில் வரும் கோல் தொடர்நாவலைப் பற்றி ஒரு பதிவில் சிறிது சொல்லியிருந்தீர்கள். அது பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.
நன்றி ஓகை,
கோல் புத்தகம் பற்றியும் எழுதுகிறேன். இன்னும் ஒரு மாதம் கழித்து வெளியிட்டு விடுவேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. இன்னும் இதனை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
அற்புதம் சிவக்குமார்...
இதுபோன்ற தொழில்சார்ந்த பதிவுகள் அதிகம் வர வேண்டும். நீங்கள் நினைப்பது போல தமிழ் மூளைகள் உலகை ஆள வேண்டும்.
தொழில் என்றால் திட்டமிடல் மிக முக்கியம் என்பது பற்றி எனக்கு நேர்ந்த ஒரு ஜப்பானிய அனுபவத்தைப் பற்றி 2005 போட்ட பதிவொன்றின் லின்க் இது
http://baalu-manimaran.blogspot.com/2005_02_01_archive.html
தொழிலையும் பார்த்துக் கொண்டு வலைப்பதிவுகளிலும் முனைப்பாக இயங்குவது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தத தொடரைக் கண்டிப்பாகத் தொடர்ந்து வாசிக்கிறேன். மனித வள மேலாண்மை, நேர மேலாண்மை குறித்தும் எழுதுங்கள்
ஆஹா இது ஒரு வருசம் முன்ன எழுதினதா..முந்தைய அடுத்த பாகங்களுக்கு எல்லா பாகங்களிலும் இணைப்பு தந்தால் வசதியாக இருக்கும்
--
settings - site feed - allow blog feed - full என்று தந்தால் கூகுள் ரீடரில் இருந்து படிக்க வசதியாக இருக்கும். நன்றி
மாதச் சம்பளம் நின்று விடவே எல்லா செலவுகளுக்கும் ஒரு வழி இருக்க வேண்டும். சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் நிச்சயமற்ற நிலையப் புரிய வைத்து விடுவது அவசியம். நிலையான் சம்பளம் வருவது நின்று சேமிப்பில் செலவு செய்யும் போது வாழ்க்கை முறைகள/் செலவு முறைகளில் ஏற்பட வேண்டிய மாறுதல்களை குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடமும் தெளிவாக விவாதித்து மறு ஏற்பாடுகள் செய்து கொள்வது நல்லது.
இந்த மாதிரியான யோஜனைகளை என் நண்பன் சொல்லி இப்போதும் என்னை வியாபர பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறான்.வியாபாரத்தில்,என் இயல்பான தன்மையை இழந்துவிடுவேனோ என்ற அச்சத்தில் தள்ளிப்போட்டுகொண்டுவருகிறேன்.
பல நல்ல பாயிண்ட்ஸ் கொடுத்துள்ளீர்கள்.
வாங்க பாலு மணிமாறன்,
திட்டமிடலின் முக்கியத்தை நானும் சமீப காலமாகத்தான் உணர்ந்து வருகிறேன். அந்த ஜப்பானிய மேலாளரின் உத்தியைப் பின்பற்றலாம் போலிருக்கிறது.
வணக்கம் ரவிசங்கர்,
//மனித வள மேலாண்மை, நேர மேலாண்மை குறித்தும் எழுதுங்கள்//
செய்கிறேன். ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதியிருக்கிறேன்.
//ஆஹா இது ஒரு வருசம் முன்ன எழுதினதா..//
முதல் பாகம் மட்டும் அப்போது எழுதியது. மற்றவை இப்பத்தான் வருகின்றன :-)
//settings - site feed - allow blog feed - full என்று தந்தால் கூகுள் ரீடரில் இருந்து படிக்க வசதியாக இருக்கும்.//
செய்து விட்டேன். முன்பே ஒரு முறை மடலில் சொல்லியிருந்தீர்கள். இந்தப் பதிவு மட்டும் விட்டுப் போய் விட்டது.
அன்புடன்,
மா சிவகுமார்
//இந்த மாதிரியான யோஜனைகளை என் நண்பன் சொல்லி இப்போதும் என்னை வியாபர பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறான்.வியாபாரத்தில்,என் இயல்பான தன்மையை இழந்துவிடுவேனோ என்ற அச்சத்தில் தள்ளிப்போட்டுகொண்டுவருகிறேன்.//
சீக்கிரமா முடிவு எடுங்க :-). இயல்பான தன்மையை இழக்காமலேயே செயல்படுவது என்று உறுதி பூண்டு கொள்ளுங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
வணக்கம்
உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.
மா சிவக்குமார்
கட்டுமானத்துறையில் ஆடுகளம் வேறு.
ஒரு சின்ன உதாரணம்
"வாங்கும் செங்கல்லுக்கு" பில் கிடையாது.இப்படி பல விஷயங்களுக்கு தகுந்த காகிதங்கள் கிடையாது.
போகப்போக நான் எப்படி மாறுவேன் என்று எனக்கே தெரியாது.:-))
//உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி சுரதா.
குமார்,
//கட்டுமானத்துறையில் ஆடுகளம் வேறு.
ஒரு சின்ன உதாரணம்
"வாங்கும் செங்கல்லுக்கு" பில் கிடையாது.இப்படி பல விஷயங்களுக்கு தகுந்த காகிதங்கள் கிடையாது.
போகப்போக நான் எப்படி மாறுவேன் என்று எனக்கே தெரியாது.:-))//
உங்களைப் பார்த்து மத்தவங்க மாறுவதும் நடக்கலாம் இல்லையா! :-)
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக