வெள்ளி, ஜூன் 23, 2006

பொதுவுடமை சமூகம் சாத்தியமா?

நேருவின் சோஷலிச ஐம்பது ஆண்டுகளில் அரசும் அதன் அதிகாரிகளும் மனித உரிமைகளையும், தொழில் வளர்ச்சியையும் காலில் போட்டு மிதித்த அமைப்பைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

பொதுவுடமைச் சமூகம் அமைய, தொழிலாளர்களின் ஏகபோக அரசு முதலில் வர வேண்டும் என்று சொன்னதுதான் மார்க்சிசம் செய்த தவறோ? அரசாங்கம் எந்த உருவிலும் அளவிலும் ஒரு தேவையான தீமை. மிகப்பெரிய வடிவில் மக்களுக்கு வெகு தூரத்தில் இருக்கும் ஒரு அரசின் அதிகாரங்கள் மக்களைத் துன்புறுத்துவதிலே வந்து முடியும். அதனுடன் சர்வாதிகாரத்தையும் கலக்கி விட்டால், கிடைப்பது அருவருக்கத்தக்க அபாயகரமான ஒரு பிராணி. அந்தப் பிராணிதான் சோவியத் யூனியனிலும் பிற "கம்யூனிச" ஆட்சிகளிலும் மக்களின் துயரத்தை விளைவித்தது.

அரசாங்கமே இல்லாமல் போகும் நிலை வரும் முன் அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும்? நமக்கு நாமே என்று ஒவ்வொருவரும் தம்மை ஆண்டு கொள்வது பொதுவுடமைச் சமூகத்தில் நடக்கும். தன்னை ஆள்வது என்றால் தன்னிடம் இருக்கும் வளங்களைப் பொது நன்மைக்காக எப்படி மிகப் பொருத்தமாகச் சரியாகப் பயன்படுத்துவது என்று ஒரு அரசாங்கம் சிந்திப்பது போல ஒவ்வொருவரும் சிந்தித்து எத்தனை மக்கள் இருக்கிறார்களோ அத்தனை அரசாங்கங்கள் இருப்பது பொதுவுடமை.

அதை அடைவதற்கான வழியில், அரசாங்கத்தின் அளவு குறுக வேண்டும், அதன் இருப்பிடம் மக்களுக்கு அருகில் மாற வேண்டும். நாகர்கோவிலில் சாலை அமைக்க தில்லியில் இருக்கும் அமைச்சகம் முடிவு எடுப்பது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட பிரநிதிகளின் மூலம் இந்த அமைப்பின் குறைகளை சரிக்கட்ட முனையலாமே ஒழிய அதன் அடிப்படைப் பழுது மிகப் பெரிய வீணடிப்புகளைத்தான் உருவாக்கும். ரயில் அமைச்சர் பீகாரைச் சார்ந்திருந்தால் அந்த மாநிலத்தில் வேலைகள் நன்கு நடக்கும், சாலை அமைச்சர் தமிழ் நாட்டை சார்ந்தவராயிருந்தால் மற்ற ஊர் சாலைகளுக்கு விடிவுகாலம் கிடைப்பது கடினம்தான். அரசாங்க எந்திரங்கள் இந்தக் குறையை தம்மால் முடிந்த அளவு ஈடு கட்ட முனைந்து மிகப் பெரிய மோசடிகளுக்கும், விரயத்துக்கும், மக்களின் துன்பத்துக்கும் வழி வகுக்கின்றன.

மாநில அரசின் அதிகாரங்கள் போக மத்திய அரசுக்கும், ஒவ்வொரு நாடும் விட்டுக் கொடுக்கும் பொது அதிகாரங்கள் உலக சபைக்கும் போவது போல இன்னும் பல நிலைகள் வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயிர் கொடுத்த ராஜீவ் காந்தி அரசு இந்தத் திசையில் நாட்டைச் செலுத்தியது. ஆனால் அது கடலில் கிடைத்த பெருங்காயம் போன்றது.

ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு வேண்டும். இன்றைய சமூகத்தில் குடும்பம் என்ற அமைப்பு வீட்டளவிலும், குடியிருப்போர் சங்கம் என்ற அமைப்புகள் அடுத்த நிலையிலும் உள்ளன. அதற்குப் பிறகு ஊராட்சி அல்லது நகராட்சி வட்டங்கள்தான். சட்டசபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் எல்லோரும் தனி மனிதர்களின் நேரடித் தேர்வில் நடைபெறுகிறது.

ஐக்கிய நாட்டுச் சபைக்கு நேரடித் தேர்தலை நாம் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை? நம் நாட்டுடைய உரிமை, நலன்களை விட்டுக் கொடுக்க விரும்பாமல். ஒரு அமைப்பைத் தாண்டி மேலிருக்கும் இன்னொரு அமைப்பு கீழிருக்கும் உறுப்பினர்களை நேரடியாக அணுகித் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிறைய ஓட்டைகள் ஏற்பட்டு விடும். இந்தியாவில் மாநில சட்ட்சபைகளை விட நாடாளுமன்றமும், அமெரிகாவில் நாடாளுமன்றத்தைத் தாண்டி குடியரசுத் தலைவரும் அதிகாரம் செலுத்துவது இப்படிக் கிடைக்கும் அதிகாரத்தில்தான்.

இதற்கு மாற்றாக முதல் படியாக மாநில அரசுகளை வாக்காளர்களாகக் கொண்ட தேர்தலில் மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டால், மாநில நலன்கள் இன்னும் சிறப்பாக அமையும். அடுத்த படியில் ஊராட்சிகளும், நகராட்சிகளும் இணைந்து மாநில அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு ஒரு பிரதிநிதி, அந்தப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்து குடியிருப்போர் சங்கம், அவற்றின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்து தெருவுக்கான அரசு, தெருவின் அரசுப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்து வட்ட அரசுகள், பிறகு மாவட்ட அரசுகள், பிறகு மாநில அரசுகள், மத்திய அரசுகள், உலக அரசு என்று விரிந்து போகும் வட்டங்களாக ஆட்சி அமைய வேண்டும்.

ஒவ்வொரு நிலையிலும் கீழ் நிலையில் செய்ய முடியாத பணிகள் மட்டும் மேல் நிலைக்குக் கொடுக்கப்படும், தெருவைக் கூட்டிச் சுத்தமாக வைத்திருப்பது தெரு அரசு செய்யலாம், வீட்டுக்குள் சுத்தம் வீட்டு அரசின் கடமை, குடியிருப்பின் சுத்தம் குடியிருப்போர் அரசின் கடமை. இதைச் செய்ய ஏன் நகராட்சி வர வேண்டும்?

இதைச் செயல்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பணக்காரர்கள் வசிக்கும் தெருக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும், ஏழைச் சேரிகள் சிரமப்படும். ஆனால் இந்த மட்டத்தில் தீர்க்க முடியாத சிக்கல்கள் எதுவும் இருக்காது. அடுத்த உயர்ந்த நிலைக்கு வரி செலுத்துவதன் மூலம் ஏற்றத் தாழ்வுகளச் சரிகட்டப் பார்க்கலாம். ஆனால் நடைமுறையில் அதற்குத் தேவையில்லாமல் போய் விடலாம். பணக்காரர்கள் பணத்தால் தமது தெருவை வளப்படுத்தினால், ஏழைகள் உழைப்பால் செய்து விடலாம். இப்படி ஒரு உலகில் பணக்காரர்கள்/ ஏழைகள் என்று இல்லாமல் போய் விடலாம்.

இதுதான் உண்மையான தன்னாட்சி. 1947ல் வெள்ளைத்தோல் அதிகாரிகளைத் துரத்தி விட்டும் பழுப்புத் தோல் கொடுங்கோலர்களை ஆட்சியில் வைத்துள்ளோம்.

ஆட்சியாளார்கள் கொடுமையானவர்கள் இல்லை. ஆனால், இந்த பாராளுமன்ற ஆட்சியமைப்பில் இவ்வளவுதான் செய்ய முடியும். மக்கள் விரும்பாத போரில் நாட்டை ஈடுபடுத்திய டோனி பிளேராகட்டும், இல்லாதவரின் வயிற்றிலடித்து விட்டுப் பணக்கார வாரிசுகளுக்கு வரி நீக்கம் செய்ய முனையும் அமெரிக்கக் குடியரசுக் கட்சியாகட்டும் இப்போது உலகில் உள்ள ஆட்சி முறைகளில் சகிக்கக் கூடியதாக உள்ள பாராளுமன்ற ஆட்சி முறையில் இதைத் தவிர என்ன எதிர்பார்க்க முடியும்? நல்லது நடந்தால் அது தற்செயலாகத்தான் இருக்கிறது.

இதுதான் காந்தியின் சுயராஜ்யம். மார்க்ஸின் பொதுவுடமை. பிளாட்டோவின் குடியரசு. இந்த நிலைக்கு வந்த பிறகு தனி மனித சுதந்திரமும், உரிமைகளும் எல்லையற்று விரியும். கட்டுத் தளைகள் நீங்கி விட, மனித ஆற்றல்கள் பொங்கிப் பீரிடும். எதிர்மறை உணர்வுகள், நடவடிக்கைகள் அறவே ஒழிந்து விடும். மூடி வைத்த தண்ணீர், அடக்கி வைத்த ஆற்றல், தேங்கியிருந்த குளம் இவற்றில்தான் நச்சு விளைகிறது. மனிதனுக்கு தன்னாட்சி கிடைத்தால், மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, அன்பு வெள்ளம் பொங்க ஆரம்பித்து விடும்.

இதற்கு அடுத்த நிலைதான் உடோபியா. அங்கு இந்த அரசுகளின் தேவை உதிர்ந்து போய் விடும். ஒவ்வொரு மனிதனில் எல்லையற்ற அன்பும் ஆற்றலும் உலகுக்கும் சக உயிர்களுக்கும் எது நல்லதோ அதை மட்டுமே செய்யத் தூண்டும். காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு இல்லாத தகவல் தொடர்பு வசதிகள், தொழில் நுட்ப முன்னேற்றங்கள், வேலை செய்யும் இயந்திரங்கள் உள்ள இந்த காலத்தில் பழைய அரசு முறைகள் வழக்கொழிந்து போகாமல் நம் கழுத்தில் நுகத்தடிகளாக நம் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாக மாறி விட்டன.

இயந்திரங்கள் இல்லாத போது மாடு இழுக்கும் வண்டியைப் பயன்படுத்தினோம். இழுக்கும் சக்தி உள்ள இயந்திரங்களை மாட்டு வண்டியில் பொருத்தி ஓட்டுவது மதியுடமையாகுமா? பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அரசு முறைகள் இன்றும் நடைமுறையில் இருப்பதின் நியாயம் என்ன?

சோவியத் யூனியனில் பிறந்து இரும்புத் திரையைக் கடந்து அமெரிக்கக் குடிமகளாக வாழ்ந்த அயன் ராண்டு என்ற பெண்மணியின் த ஃபவுண்டன் ஹெட் என்ற பெருங்கதையின் கருப் பொருள், தனி மனிதனுக்கு எதிரான அரசாங்கங்களின் கொடூரத்தைப் பற்றியது. அதன் பின்னணி கட்டிட வடிவமைப்புத் துறை. அதன் பாத்திரங்கள் கட்டிடத் துறையில் நடக்கும் மாறுதல்களைச் சார்ந்து உருவாக்கப்பட்டன.

கம்யூனிசத்துக்குக் கடுமையான எதிர்ப்பாளியான அயன் ராண்டின் புத்தகங்கள் இன்றும் உலகெங்கும் படிக்கப்பட்டு வருகின்றன. மேலே சொன்ன ஊற்றுக்கண் என்ற கதையில் ஒரு கருத்தைச் சொல்வார். கதையின் நாயகன் தனது கட்டிட வடிவமைப்புகளில் முன்னோர்களின் பாணிகளை வரைய மறுத்து விடுவான். அதனால் அவனைக் கல்லூரியிலிருந்து பட்டம் கொடுக்காமல் துரத்தி விடுகிறார்கள்.

இன்றைக்கு கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, இன்றைய சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு கட்டிடத்தின் இருப்பிடம், அதன் பயன்பாட்டுக்குப் பொருந்துமாறு கட்டிட வடிவமைப்பதுதான் என் வேலை. பல நூறு ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள் அந்தக் காலத்தின் மேதைகளால் அந்தக் காலத்துக்குப் பொருந்துமாறு உருவாக்கப்பட்டதால் புகழ் பெற்றன. அந்தப் புகழை மட்டும் பார்த்து மற்றவர்கள் குறை சொல்ல முடியா வண்ணம் அந்த வடிவமைப்புகளை நகல் செய்வது ஒட்டுண்ணித்தனம். சொந்தத் திறமையில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குதான் அது வேண்டும். எனக்கு அதுமாதிரியான ஊன்று கோல்கள் தேவையில்லை. யாருடைய பெயரையும் சொல்லாமலேயே என்னுடைய படைப்புகள் அவற்றின் சொந்தச் சிறப்புகளால் புகழ் பெறும் என்பது அவனது எண்ணம்.

அந்தக் காலத்தில் தூண்களை மரத்தில் அமைத்தார்கள். மரச் சட்டங்களுக்கு இடையே வரும் வெளியை மறைக்க அதைச் சுற்றி உலோகப் பட்டிகளை அலங்காரம் போல அடித்தார்கள். அந்த காலம் போய், காங்கிரீட்டில் தூண் அமைக்கும் வசதி வந்தது, பழைய பாணியை நகல் செய்து காங்கிரீட் தூண்களில் இணைப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், அப்படி இடைவெளி இருப்பது மாதிரி கோடு போட்டு, அந்தக் கோடுகளை மறைத்து அலங்காரங்கள் செய்கிறார்கள். அதன் பிறகு இரும்புத் தூண்கள், கண்ணாடி சுவர்கள் பயன்படுத்த முடிந்தது. இங்கும் அதே பாணியை நகல் செய்து இரும்பின் மீது கோடுகள் அமைத்து அதைச் சுற்றி அலங்காரங்கள் செய்கிறார்கள்.

என்ன முட்டாள்தனம்? மரத்திற்காக ஒரு மேதையால் ஏற்படுத்தப்பட பாணியை இந்தப் பாழும் சமூகம் காங்கிரீட் வந்தும் விடவில்லை, இப்போது இரும்பிலும் அதையேப் பயன்படுத்துமாறு என்னைச் சொல்கிறார்கள் என்று மறுத்து விடுவான் ஹோவார்டு ரோர்க் என்ற அந்த மனிதன்.

ஏன் இதைச் சொன்னேன் என்றால், நாமும் காட்டில் வாழும்போது அமைந்த, நதிக்கரை நாகரீகங்களில் அமைக்கபப்பட்ட பஞ்சாயத்துகளையும், பல நூறு ஆண்டுகள் முன்பு ஏற்பட்ட பாரளுமன்றக் குடியாட்சியையும் கட்டி அழுது கொண்டிருக்கிறோம். மாற்றங்கள் என்பவை ஒட்டு மருத்துவமாகச் செய்கிறோமே ஒழிய, புதிய வசதிகளுக்குப் பொருத்தமான அரசு முறை வேண்டாமா?

இதைச் செய்ய நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டம் போட அவசியம் இல்லை. ஒவ்வொரு குழுவும் தமக்குத் தேவையான பணிகளை ஒருங்கிணைக்கவும் வழி நடத்தவும் ஆரம்பித்து விடலாம். சொல்லப் போனால் இன்னும் ஒரு படி தாண்டி, ஒவ்வொரு தனி மனிதனும் தனது அரசை தனக்காக ஏற்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: