பின்னூட்டங்களுக்கு மட்டுறுத்தலைச் செயல்படுத்தவில்லையென்றால் கண்ட கழிசடை எல்லாம் வந்து என்ன வேண்டும் என்றாலும் போட்டு விட்டுப் போகும் அதை ஒவ்வொன்றாக பார்த்து அழிக்க வேண்டி இருக்கும் என்ற நிலை வந்து விடும். அதை விட எது மறுமொழியாக வர வேண்டும் என்று முதலிலேயே தீர்மானித்து விடும் மட்டுறுத்தல் முறைதான் நல்லது.
அப்படி மட்டுறுத்தல் இருந்தால், நம்முடைய தரக்குறைவான பின்னூட்டங்கள் எப்படியும் நிராகரிக்கப்பட்டு விடும் என்று போலிகள் அந்த முயற்சியைக் கைவிட்டு விடுவார்கள். இல்லா விட்டால், வலை பதிவாளர் கவனிக்கும் வரை நம்முடைய பின்னூட்டம் விட்டு வைக்கப்படுமே என்ற நோக்கத்தில் அவர்கள் பல பின்னூட்டங்களைப் போட முனையலாம். ஒவ்வொன்றையும் அழிப்பதே நமக்கு வேலையாகப் போகும்.
மேலே சொன்ன இரண்டு காரணங்களுமே மிக வலுவானவை, நியாயமானவை. ஆனால், ஒருவன் குண்டு வைத்து விட்டான் என்பதற்காக விமானத்தில் செல்லும் எல்லோரையும் தீவிரவாதி போல நடத்துவதைப் போல பெரும்பான்மை விருந்தினர்களை, அவர்கள் சொல்ல முனைவதை வடிகட்டிதான் வெளியிடுவோம் என்பது ஆரோக்கியமற்ற போக்கு என்பது எனது கருத்து.
தம்முடைய தரம் தாழ்ந்த பின்னூட்டங்களால் பின்னூட்ட மட்டுறுத்தலை ஏற்படுத்த வைத்து, நேர்மையான பதிவாளர்களின் வாழ்க்கையை சிக்கலாக்குவதில் வெற்றி கண்டு விட்டார்கள் போலிகள். பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்த ஒவ்வொருவரும் அதிகப்படியாகச் செலவிடும் நேரத்தைக் கணக்கிட்டுப் பாருங்கள்.
நாம் எல்லோரும் போலிகளுக்குப் பயந்து அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் என்னுடைய வலைப்பூவில் பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தப்பவில்லை.
போலிகளின் தொல்லையை என்ன செய்வது? போலிகள் இப்போதும் அடங்கி விடவில்லை. மதிப்பைச் சம்பாதித்துக் கொண்ட பதிவாளர்கள் பெயரில் கணக்குகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் புகைப்படத்தைக் கூட நகல் செய்து தம்முடைய பின்னூட்டங்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. யாராவது கவனித்துச் சொன்னால் அதை நீக்கி விடுகிறோம்.
சக மனிதனை நம்புவோம். ஒரு சிறுபான்மையினருக்காக அனைவரையும் சிரமத்துக்குள்ளாக்காமல் இருப்போம். போலிகளை நல்ல முறையில் எடுத்துச் சொல்லித் திருத்துவோம்.
போலிகள் அனைவரும் தம்முடைய ஆபாச பதிவுகளை உடனடியாக அழித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இணையம், வலைப்பூ, வலைப்பூத் திரட்டிகள் போன்ற அற்புதமான தொழில் நுட்பங்களை நல்ல வேலைக்குப் பயன்படுத்துவோம். யார் என்ன சொன்னாலும், அவர்களுக்கு சரியான முறையில் பதில் சொல்லி அவர்களுக்கு மாற்றுக் கருத்தை முன் வைப்போம்.
6 கருத்துகள்:
சிவகுமார், நீங்கள் மேலே கூறிய அனைத்தையும் பாதிப்புக்கு முன்பு, நான் உட்பட அனைவரும் ஒரு காலத்தில் கூறியதுதான். பாதிப்புக்கு பின்புதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தோம்.
"அவர்கள் சொல்ல முனைவதை வடிகட்டிதான் வெளியிடுவோம் என்பது ஆரோக்கியமற்ற போக்கு என்பது எனது கருத்து."
இதில் வடிக்கட்டுதல் என்பது தவிர்க்க முடியாது. ஒரு வெறிநாய் தெருவில் அலைகிறது, ஆகவே கதவை பூட்டுங்கள் என்று கூறிய எனக்கு முன்னர் பலரும் சொன்ன பதிலைத்தான் நீங்கள் இப்போது கூறுகிறீர்கள். எல்லாம் ஏற்கனவே பார்த்தது பிறகு நடப்பதை போன்ற (déjà-vu) என்ற உணருதான் வருகிறது. என்னமோ செய்யுங்கள்.
இன்னொரு விஷயம் தெரியுமா, அதர் ஆப்ஷனை நீங்கள் தூக்கியதை குற்றம் கூறப் போகிறவர்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் சிவகுமார்,
உங்கள் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன். நீங்கள் சொன்னது போல போலிகள் மைண்ட் கேம் ஆடி தாங்கள் நினைத்தவாறு வலைபதிவர்களை திசை திருப்பி விட்டார்கள் என்பதே ஜீரணிக்க முடியாத உண்மை.
என்ன தீவிரத்தை உணர்ந்தார்களோ தெரியவில்லை, சாதாரணமா மின்னஞ்சல் பெட்டியில் எத்தனை ஆபாச மெயில்கள் வருகிறது பார்த்தவுடன் அழிப்பது இல்லையா. அப்படி இருக்க இதையும் அழிக்க என்ன சோம்பல். இதெல்லாம் கண்ணுல பட்டாலே அதிர்ச்சியாக இருக்கும்னு சொல்றது மிகையான நடிப்பு என்றே சொல்வேன் , அன்றாட வாழ்விலேயே எத்தனையோ வசவுகள் நாம் விரும்பாமலே நம் காதில் விழத்தான் செய்கிறது. சாலையில் நடந்து செல்பவரை உரசினார்ப்போல் நமது வாகனம் சென்று விட்டாலே தே.... பையா பாத்துப்போடா சாவு கிறாக்கி என திட்டுகிறார்கள். உடனே அவனிடம் ஓடிபோய் தர்க்கம் செய்வார்களோ. இல்லை அந்த வார்த்தைக் கேட்டதும் உயிர் மரித்து விடுவார்களோ. எல்லாம் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரி மான் பரம்பரையா? அப்படி எல்லாம் இந்த காலத்திலே யாரும் இல்லை!
எனவே இந்த மட்டுறுத்தல் என்பது அவரவர் விருப்பம் ஆனால் அதனையே பேசி பேசி மாய்ந்து போவது வீண் வேலை. மட்டுறுத்தல் இல்லாமலே இந்த வலைப்பதிவு உலகில் ஜீவித்திருக்க முடியும். இதை எல்லாம் பேசிகிட்டு இருக்க நேரத்திலே வென்னீர் போடுவது எப்படி என்று சமையல் குறிப்பு எழுதி பதிவு போட்டு ,ஒரு 100 பின்னூட்டம் வாங்கிட்டு போகலாம் மக்கள் :-))(அதற்கு ஒருவர் 42 டிகிரியில் கொதிக்கவைத்தால் வென்னீர் சுவை மாறாமல் நன்றாக இருக்கும் என பின்னூட்டம் போடுவர்)
உஷா அவர்களே, டோண்டு சார் அவர்களே,
மட்டுறுத்தல் செய்வதன் மூலம் எதையும் தவிர்க்க முடியாது. நாம் ஒரு கதவை அடைக்க இன்னொரு ஓட்டையை வேலையற்றவர்கள் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள். புதிது புதிதாக கிளம்பும் ஓட்டைகளை அடைத்துக் கொண்டு போவதில் நேரத்தைச் செலவிடுதை விட, முகமூடி சொல்வது போல மட்டுறுத்தலை எடுத்து விட்டு, தரக்குறைவான தேவையற்ற பின்னூட்டங்களை நீக்கி விடுவதில் கருத்தைச் செலுத்துவதில் நம் நேரத்தை செலவளிக்கலாம்.
ஒவ்வொரு பின்னூட்டமாக அனுமதி அளிக்கவும், அதை தானியக்க நிரல் உருவாக்குவதிலும் செலவளிக்கும் நேரத்தை, வெந்நீர் எப்படி போடுவது என்று ஒரு பதிவு போட்டு நம்மால் ஆன ஆக்க பூர்வமான வேலையில் கழிக்கலாம்.
நாம் என்ன செய்கிறோம் என்பது நம் அளவில் சரி எனப்பட்டால் போதும். அடுத்தவரும் அதை செய்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதோ, யாராவது நம் முடிவை குறை சொன்னால் கோபம் கொள்வதோ இல்லாமல் போய் விடும். நான் அதர் தேர்வை நீக்கியது அதன் மூலம் எந்த எதிர்மறை விரயங்களும் இல்லை என்று நம்பியதால்தான்.
அன்புடன்,
மா சிவகுமார்.
சிவகுமார் சார்,
நீங்கள் சொல்வது போல் மட்டுறுத்தலை செயல்படுத்த வைத்ததன் மூலம் போலிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போலிகள் இடும் பின்னூட்டங்களை ஒவ்வொன்றாக அழிப்பது என்பது நடைமுறையில் என்னைப் போன்ற பலருக்கு மிகவும் கஷ்டமான வேலை. என்னால் வலைப் பதிவு வேலைகளுக்காக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் தான் ஒதுக்க முடிகிறது. அதுவும் கூட சில நேரங்களில் முடிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் ஒரு போலி எனது வலைத் துணுக்கில் வேலையை காட்டி விட்டான். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு மேல் அந்த பின்னூட்டம் எனது கவனத்துக்கு வராமலே எனது வலைத்துணுக்கில் பதிவாகியிருந்தது. என் வலைத்துணுக்கிற்கு வாடிக்கையாக வரும் மிக சிலர், அந்த பின்னூட்டம் ஒரு நாளைக்கு மேல் என் வலைத்துணுக்கில் தங்கியிருந்ததை கவனித்திருந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? போலீஸ்காரர் நம்மையும் சந்தேக படுகிறார் என்பதற்காக, போலீஸே வேண்டாம், திருடன் திருடி விட்டு போகட்டும் என்று சும்மா இருக்க முடியுமா? இங்கே மட்டுறுத்தல் யாருக்குமே பிடிக்க வில்லைதான். ஆனாலும் வேறு வழியில்லை. இதை விட சிறந்த வழி இருந்தால் நீங்கள் சொல்லுங்கள். ஆனால் நீங்கள் இப்பொழுது கூறியுள்ள யோசனை இப்போதைய நிலவரத்துக்கு சரியில்லை!!!
யோசிப்பவரே,
நீங்கள் சொல்வது மிகவும் சரி. உங்களது வசதிக்கேற்ப பின்னூட்டம் மட்டுறுத்தலை செயல்படுத்த வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்வது சரி. ஆனால் எல்லோரும் மட்டுறுத்தலை செய்தே தீர வேண்டும் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டாயப்படுத்துவது சரியில்லைதானே.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக