செவ்வாய், ஏப்ரல் 18, 2006

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 1

பொருளாதாரக் கோட்பாடுகளின்படி, சில துறைகளில் ஒரே ஒரு நிறுவனம் முழுச்சந்தையையும் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும். இதை ஏகபோக சந்தை என்பார்கள். (monopoly market)

பொதுவாக நன்றாக நடக்கும் தொழிலுக்கு போட்டியாளர்கள் உருவாவதுதான் இயல்பு. ஆனாலும், அரசு கொள்கைகளாலோ, மூலப்பொருட்களின் கொள்முதலை கட்டுப்பத்துவதன் மூலமோ செயற்கை ஏகபோகங்களும், சநதையில் எண்ணிக்கை சார்ந்த செலவுக் குறைப்புகளால் வரும் இயற்கை ஏகபோகங்களும் உருவாகி விடுகின்றன.

தொலை தொடர்பு துறையில், இந்திய அரசின் நிறுவனம் மட்டும் சேவை வழங்கி வந்தது போன்றவை அரசு உருவாக்கிய ஏகபோகம். டிபியர் நிறுவனம், வைரக்கற்களின் கொள்முதலை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வைரச் சந்தையில் ஏகபோகம் செலுத்துவது இரண்டாவது வகை செயற்கை ஏகபோகம்.

தொலைக்காட்சி ஓடைகளை நுகர்வோருக்கு வழங்கும் சேவை, மின் வினியோகம், குடிநீர் வினியோகம் போன்றவை இயற்கை ஏகபோக தொழில்கள். ஒரு கேபிள் நிறுவனம் எல்லா தெருவிலும் தனது வலைப்பின்னலை அமைத்து விட்டால் புதிதாக ஒரு வீட்டுக்கு இணைப்புக் கொடுக்க செலவு மிகக் குறைவாகவே இருக்கும். இன்னொரு நிறுவனம் அதனுடன் போட்டி போட, தொடக்க முதலீடு மிக அதிகமாக தேவைப்படுவதால், போட்டி உருவாவது தவிர்க்கப்பட்டு விடும்.

ஏகபோக தொழில்கள் தனியார் கையில் இருந்தால் அவர்கள் அந்த சக்தியை தவறாக பயன்படுத்தி நுகர்வோருக்கும் சமூகத்துக்கும் ஊறு விளைவிக்கும் சாத்தியங்கள் இருப்பதால், அரசுகள் அதைத் தடுக்க முனைகின்றன.

இயற்கை ஏகபோகங்களை அரசே நடத்த முனைவது ஒரு வழி.

போட்டியால் முதலீடுகள் வீணானாலும் பரவாயில்லை என்று, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் சந்தையில் செயல்பட சட்டப்படி வழி செய்து கொடுத்து, வழி நடத்தும் குழுமம் ஒன்றின் மூலம் எல்லோரும் ஒழுங்காக நடப்பதை உறுதி செய்து கொள்வது மற்றொரு வழி.

தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் உடன் தனியார் நிறுவனங்களையும் போட்டி போட அனுமதித்து, டிராய் மூலம் நெறிப்படுத்துவது இப்போது நடப்பது.

தம்முடைய ஏகபோக சந்தை வலிமையை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துவதை விசாரித்து தடுக்க வழி செய்யும் சட்டங்கள் எல்லா சந்தைப் பொருளாதார நாடுகளிலுமே உள்ளன. அமெரிக்காவின் ஆன்டி டிரஸ்டு சட்டங்கள் புகழ் பெற்றவை.

சமீபத்தில் மைக்ரோசாப்டு நிறுவனம், இயங்கு தளச் சந்தையில் தனக்கு இருக்கும் ஏகபோக வலிமையைப் பயன்படுத்தி பிற மென்பொருட்கள் சந்தையை தனக்கு சாதகமாக சட்ட விரோதமாக திருப்பியது என்று குற்றம் சாட்டப்பட்டு ஒரு அமெரிக்க நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. ஐரோப்பாவிலும், அதே குற்றம் சாட்டப்பட்டு மைக்ரோசாப்டு பரிகாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சரி இது எல்லாத்துக்கும், சன் டிவிக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? பொறுங்கள்.

3 கருத்துகள்:

ஜெயக்குமார் சொன்னது…

B.S.N.L இன்னும் தகவல் தொடர்புத்துறையில் இன்னும் ஏகபோக உரிமையுடன் தான் நடந்துகொள்கிறது. உதாரணமாக லண்டனில் வசிக்கும் நான் ஜரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளை முழுவதும் இலவசமாக அழைக்க முடியும் ஆனால் ஆசிய கண்டத்துல் சீனா, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, போன்ற சில நாடுகளைத்தான் இலவசமாக அழைக்க முடிகிறது. இந்தியாவிலும் voip technology மூலம் மிக குறைந்த கட்டணத்தில் சர்வதேச அழைப்புகளை எளிமையாக்களாம், இப்பொது இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள்அரசுக்கு தெரியாமல் தனியாக சில இடங்களில் switch-களை நிறுவி மிக க்றைந்த கட்ட்ணத்தில் சர்வதேச அழைப்புகளை எளிமையாக்கியுள்ளன. ஆனால் அது B.S.N.L-க்கு தெரியவரும் போது அந்த நிறுவனங்கள் கடுமையாக தண்டிக்கப்படுகிண்றன. இதுபோன்ற நிகழ்வுகளைத்தடுக்க B.S.N.L-நிறுவனமே voip technology மூலம் சர்வதேச அழைப்புகளை மிகக்குறைந்த கட்டணத்தில் தரலாம். அதை ஏன் இதுவரை செய்யவில்லை என்பதை நாம் தயாநிதி மாறனிடம் தான் கேட்கவேண்டும். ஒருவேளை தானே சொந்தமாக மாறன் குடும்பத்தின் இன்னொரு தொழிலாக ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறாரோ என்னவோ

மா சிவகுமார் சொன்னது…

ஜெயகுமார்,

இந்த நிலைமை தொடர்வதற்கு மோனோபொலி சந்தை நிலவரம்தான் காரணம்.

dondu(#11168674346665545885) சொன்னது…

இங்கு ஜெயகுமார் பெயரில் பின்னூட்டமிட்டிருப்பது உண்மையான ஜெயகுமார் அல்ல. உங்கள் பதிவில் உள்ள அதர் ஆப்ஷனை உபயோகித்து உண்மையானவர் இட்டது போன்ற தோற்றத்தை தந்துள்ளான் போலி ஜெயகுமாராகிய போலி டோண்டு.

உண்மையான ஜெயகுமார் பின்னூட்டமிட்டிருந்தால் வேறு போட்டோ வந்திருக்கும்.

தவறான உபயோகத்துள்ளாகு அதர் ஆப்ஷனை நீக்குவதே நல்லது. போலி காசியின் பதிவுக்கேல்லாம் போய் வேண்டுகோள் இடுவதால் எல்லாம் காரியம் நடக்காது.

இது முழு யுத்தம். நீங்கள் எந்தப் பக்கம் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதையும் டோண்டுவின் பீற்றல்களில் ஒன்று என்று நினைத்தால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்