வியாழன், ஏப்ரல் 20, 2006

எம் ஜி ஆர் என்ற "அவமானம"

எண்பதுகளில் தனது அன்பாலும் மற்ற சில கேள்விக்குரிய முறைகளாலும் தமிழக மக்களை கட்டி ஆண்ட எம்ஜிஆர், அறிவுஜீவிகளுக்கு ஒரு அவமானமாகவே இருந்து வந்தார், வருகிறார்.

தமிழகம் சினிமாவுக்கு மயங்கி தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பின் தங்கிய மாநிலம். சினிமா நடிகர் ஆட்சி என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகளாலும் ஏளனப்படுத்தப்பட்ட எம்ஜிஆரின் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு என்ன நடந்தது?

முதலில் கல்வி. இருபது ஆண்டுகள் பின்னோக்குப் பார்வையில், எம்ஜிஆர் எடுத்த சில கொள்கை முடிவுகள், தமிழகத்தின் எதிர்காலத்தை வளர்ச்சிப்பாதையில் திடமாக நடக்க வைத்தன என்று சொல்லலாம். அந்த நேரத்தில் எள்ளி நகையாடப்பட்ட அவரது திட்டங்கள் இன்று நாட்டின் பிற மாநிலங்களிலும், ஏன் பிற நாடுகளிலும் கூட போற்றிப் பின்பற்றப்படுகின்றன.

சத்துணவுத் திட்டம். மக்களை பிச்சைக் காரர்கள் ஆக்கப் பார்க்கிறார்கள், இந்தப் பணத்தை வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்தால் குடும்பத் தலைவர்களுக்கு வேலை கிடைத்து குழந்தைகளுக்கு வீட்டிலேயே சத்துணவு கிடைக்குமே! இவ்வளவு பணத்துக்கு மாநிலம் எங்கே போகும்? பள்ளிக் கூட ஆசிரியர்கள் எல்லாம் இனிமேல் சமையல்காரர்கள் ஆகி விட வேண்டியதுதான் என்றெல்லாம் கடுமையாக விமரிசிக்கப்பட்ட சத்துணவுத்திட்டம் ஒரு தலைமுறையாக குழந்தைகள் பசி இல்லாமல் படிக்கவும், வளரும் வயதில் சத்தான உணவால் மூளை முதிர்ச்சி தடையின்றி நிகழவும் வழி செய்தது.

தொடக்கத்தில் ஆசிரியர்களேயே பொறுப்பாளர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் திட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இன்று உலகுக்கே வழி காட்டியாக திகழ்கிறது தமிழகம்.

சத்துணவில் பல்லி, சத்துணவு சாப்பிட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி என்று நாளிதழ்கள் போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகள் வெளியிட்டன, ஒவ்வொரு முறை அத்தகைய செய்தி வரும்போதும் நான் அப்போதே என்று திட்டத்தின் எதிரிகள் தம்மையே பாராட்டிக் கொண்டனர்.

அந்த எதிரிகளும் வாயடைத்து, தாம் ஆட்சிக்கு வந்ததும், சத்துணவை இன்னும் சிறப்பாக்குவேன் என்று பேச வைத்தது, எம்ஜிஆரின் நிர்வாக வெற்றி.

அடுத்ததாக கல்விக் கூடங்களிலும், வேலை வாய்ப்பிலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தியது. இன்று உயர்கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்தால் வானம் இடிந்து விழுந்து விடும் என்று அதை எதிர்ப்பபவர்கள் 20 வருடங்களாக 69% ஒதுக்கீட்டை செயல்படுத்தி வரும், தமிழகத்தைப் பார்க்கலாம். பெருவாரியான மக்களுக்கு வாய்ப்புகள் திறக்க, இன்றைக்கு இந்தியாவிலேயே மக்கள் வளத்தில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

எம்ஜிஆரின் ஆட்சி தமிழகத்தின் கல்வித் துறையில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டன என்பதற்கு இன்னும் சில கொள்கை முடிவுகள் உதவின.

இன்றைக்கு அவரது பிச்சையில் தனது அரசியல் வாழ்வையும் பதவியையும் அடைந்த ஒரு அம்மையார், அவர் பெயரை தேர்தல் வரும்போது மட்டும் வேண்டா வெறுப்பாக பயன்படுத்தும் நிலைதான் உள்ளது.

8 கருத்துகள்:

கவிதா | Kavitha சொன்னது…

அவர் சாராயக்கடை திறந்ததை ஏன் விட்டு விட்டீர்கள் நண்பா?!!

ஜெயக்குமார் சொன்னது…

அதெல்லாம் சரி, அரசு வருமானத்திற்கு அவர் என்ன செய்தார். காமரசர் போல மிகப்பெரிய மத்திய அரசுத்திட்டங்களை கொண்டுவந்தாரா? அல்லது தொலைநோக்குப்பார்வையுடன் தொழிற்சாலைகளை கொண்டுவந்தாரா?

Bala சொன்னது…

அவர் கொண்டு வந்த பொருளாதர அடிப்படையில் ஒதுக்கீடு, என் பார்வையில், அவர் செய்த மிகப்பெரிய சீர்திருத்தமாகும். துரதிர்ஷ்டவசமாக, எதிர்ப்புகளாலும், தேர்தல் தோல்வியினாலும் அவர் அதை கைவிடவேண்டியிருந்தது. அந்த சீர்திருத்தம் நிலைத்திருந்தால், இன்று நிச்சயமாக உளகளவில் பேசப்பட்டிருக்கும். ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் வாயையும் அடைத்திருக்கும்.

வெளிகண்ட நாதர் சொன்னது…

உங்க கருத்துக்கு மிகவும் உடன்படுகிறேன். இன்னைக்கு நான் இந்த அமெரிக்காவில உட்கார்ந்திருக்கேன்னா அதுக்கு எம்ஜிஆர் ஒரு காரணம். இஅதை பத்தி ஒரு பதிவு போடுகிறேன் நண்பரே! நன்றி நன்றியை நினைக்க வைத்தமைக்கு!

டண்டணக்கா சொன்னது…

The school meal plan was from Kamaraj, implemented for the full state. MGR added egg to make nutritious. I have to aggree with you about reservation. Is that true, he is the one allowed private engg. colleges. If it is, that's good one too.

Bharaniru_balraj சொன்னது…

மதிய உணவுத்திட்டம் கொண்டு வந்தது கருப்புவைரம் காமராஜர். பெயரை மட்டும் மாற்றி புகழை அடைந்தது இந்த எம் ஜி ஆர். 13 ஆண்டு காலம் ஆட்சியில் ஒரு தொழிற்சாலை கூட கொண்டு வராதது ஒரு சாதணை. ஜெயலலிதாவை அரசியலில் வாரிசாக அறிவித்து அரசியலை கெடுத்தது ம்ற்றொரு சாதனை.

மா சிவகுமார் சொன்னது…

"அவர் சாராயக்கடை திறந்ததை ஏன் விட்டு விட்டீர்கள் நண்பா?!!"

அதுவும் அவரது "சாதனைகளில்" ஒன்றுதான்.

மா சிவகுமார் சொன்னது…

சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தி எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் அரசு உதவி ஏற்படுத்தி தந்தது எம்ஜிஆர் அரசு. அவர் தொழில்சாலை அமைப்பு என்றெல்லாம் சிந்தித்திருக்கக் கூட மாட்டார் என்று நினைக்கிறேன்.