அந்த இனிப்பு விவகாரத்துக்கு வருவோம். இனிப்பு என்பது ஒரு சுட்டிதான். அடிப்படைத் தேவைகளுக்கு அல்லது தனது பணிக்குத் தேவையானவற்றைத் தவிர்த்து அதிகமாக புணர்வது எதுவுமே திருட்டுதான்.
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு பணக்கார குழந்தைக்கு அதன் பெற்றோர் பெருமளவில் விலை உயர்ந்த பொம்மைகளை வாங்கிக் குவித்தால், நாட்டின் இன்னொரு பகுதியில் பல ஏழை குழந்தைகள் பொம்மை கிடைக்காமல் இருக்க நேரிடும்.
இதை விளக்க சில அனுமானங்களை செய்து கொள்ளலாம். சில உண்மைகளையும் மனதில் கொள்ளுவோம்.
பொருளாதார உண்மை : இந்த உலகின் வளங்கள் அளவுக்கு அடங்கியவை. எந்த வளத்தையும் ஒரு வகையில் பயன்படுத்தி விட்டால் பிற பயன்பாடுகளுக்கு அது கிடைக்காமல் போய் விடுகிறது.
அனுமானம் : உலகில் பொம்மைகள் செய்வதற்கான தொழில்களும், பொம்மைகளைவாங்கி விளையாடும் குழந்தைகளும் தமக்கு முற்றிலும் மன நிறைவு கிடைக்கும் நிலையில் உள்ளனர். பத்து ரூபாய்க்கு ஒரு பொம்மை என்ற விலையில் நாட்டில் எல்ல குழந்தைகளுக்கும் ஒரு பொம்மை விளையாடக் கிடைக்கிறது, பொம்மை செய்யும் வியாபாரிகளுக்கும் நியாயமான லாபம் கிடைக்கிறது. ஏழை, பணக்காரர் என்று வேறுபாடு இல்லாமல் எல்லா குழந்தைகளும் ஒரே அளவில் பொம்மை வைத்து விளையாடி மகிழ்ச்சியாக உள்ளனர்.
இப்போது ஒரு பணக்காரத் தந்தை தன் குழந்தைக்கு அதிக எண்ணிக்கையிலோ உயர்ந்த தரத்திலோ பொம்மை கொடுக்க வேண்டும் என்று முனைகிறார். அவ்வாறு கிடைக்க ஒரு வழி, ஏற்கனவே தகுதர பொம்மை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபாரியை அணுகி அதிக பணம் கொடுத்து கூடுதல் பொம்மைகளைத் தனக்கு விற்க தூண்டுதல். வியாபாரிக்கு மகிழ்ச்சிதான், அதிக விலைக்கு கூடுதல் பொம்மைகளை விற்று விடுகிறார்.
இப்போது பத்து ரூபாய்க்கு பொம்மை வாங்க வரும் ஒரு தந்தைக்கு பொம்மை இல்லை. அதை சமாளிக்க, பொம்மைகளின் விலை சற்றே உயர்ந்து விடுகிறது. பத்து ரூபாய்க்கு வாங்கி விட முடியும் பதினொன்று ரூபாய் மிக அதிகம் என்ற குடும்பங்களின் குழந்தைகளுக்கு பொம்மை இல்லாமல் போய் விடும்.
இது இத்தோடு முடிந்து விடவில்லை. வியாபாரியின் கையில் கூடுதல் லாபம். அதை இன்னும் அதிகரிக்க என்ன வழி என்று பார்க்கிறார். பணக்காரர், கூடுதல் கூறுகள் சேர்க்கப்பட்ட பொம்மையை இன்னும் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருப்பார் என்று ஊகித்துக் கொண்டு, தகுதர பொம்மைகளின் உற்பத்தியைக் குறைத்து விட்டு, புதிய ரக உயர் விலை பொம்மைகளை செய்கிறார். தகுதர பொம்மைகளின் எண்ணிக்கைகள் குறைய, விலை இன்னும் ஏறுகிறது. இன்னும் பல குழந்தைகளின் கைகளில் பொம்மைகள் அடைவது நின்று விடுகிறது.
போட்டியாளர்களின் பொம்மைகளிலிருந்து தன்னுடையதை வேறுபடுத்தி அதிக விலை ஈட்ட, விளம்பரங்கள் வர ஆரம்பிக்கன்றன. பளபளக்கும் பொதிகளில் பொம்மைகள் கடைகளுக்கு வந்து சேருகின்றன. இப்படி ஒவ்வொரு வகையிலும், கூடும் செலவினங்கள், பத்து ரூபாய் பொம்மைகளின் எண்ணிக்கையைக் குறைத்து விலையைக் கூட்டிக் கொண்டே வருகின்றன.
இதுதான் சந்தை பொருளாதாரத்தின் இயங்கு முறை. இதை ஒவ்வொருவரின் மன ஆசைக்கு விட்டு விடுவது, முதலாளித்துவம். அரசே வினியோகம் செய்வது பொதுவுடமை தத்துவம். ஒவ்வொருவரும் சுயமாக தேவையற்றவற்றைத் துறந்து விடுவது காந்தியம்.
வினோபாவின் பூதானத் திட்டம் இந்த அடிப்படையில் பிறந்தது. காந்தியடிகளின் செல்வப்பாதுப்பாளர் தத்துவம் இதைத்தான் வலியுறுத்துகிறது. சந்தைப் பொருளாதரத்தின் குறைபாடுகளால் செல்வம் ஒரு இடத்தில் குவிந்து விடுவது இயற்கைதான். அதை தன் மனம் போல ஆளாமல் சமூகத்தின் சொத்து தமது பாதுகாப்பில் வந்து சேர்ந்துள்ளது என்ற பொறுப்போடு பயன்படுத்துவது காந்தியம் போதிக்கும் வழி முறை.
2 கருத்துகள்:
Dear Friend,
This is the first time i am going through your site. I liked your heading very much.எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
Same thinking what I have in my mind.
This post is really meaningful. Due to lack of time, i am writing this comment in english. I shall read the remaining posts also and tell my comments.
Thank you Sivakumar.
நண்பர் ஜான் அவர்களே,
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. ஒத்தக் கருத்துடைய உங்களை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
உங்கள் விளக்கமான கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
அன்புடன், மா சிவகுமார்
கருத்துரையிடுக