ஒரு தொழில் நிறுவனத்தை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது, போட்டிதான். சந்தையில் தனக்குரிய இடத்தைப் பிடிக்க தக்க வைத்துக் கொள்ள பிற போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள், புதிய பொருட்கள் என்ன வெளி வருகின்றன, போட்டியாளர் பொருட்களில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம் என்று துடிப்புடன் இருக்கும் நிறுவனம், தன் சேவைகளை மேம்படுத்திக் கொண்டே இருக்கும்.
ஒரே நிறுவனமாக சந்தையில் இருந்தால் இந்த வாய்ப்பு தொலைந்து போகிறது. புதிய கண்டுபிடிப்புகள், மேம்பாடுகளுக்கு, நிறுவனத்தின் ஊழியர்களையே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. ஊழியர்களுக்கு அத்தகைய ஊக்கத்தை அளித்து அவர்களது ஆர்வத்தைப் பேணுவதிலும் சிரமம் இருக்கும். புதிதாக மேம்பாடுகள் எதையும் அளிக்காத நிறுவனத்தைப் பார்த்து நுகர்வோரும் அதிருப்தி அடையத் தொடங்குவார்கள்.
பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சேவைகளை அளிக்க, பொருளின் தொழில் நுட்பச் சிக்கல் அதிகமாகிக் கொண்டே போகும். வெளிப்படையான சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு பிரிவு நுகர்வோருக்கு சேவை அளிக்க முடியும். இங்கு எல்லா சுமையும் ஒரே நிறுவனத்தின் கையில்.
அந்த நிறுவனமே போட்டி பிரிவுகளாக பிரித்து பல தரப்பட்ட பொருள்/சேவைகளை அளிக்கலாம். ஆனால், எந்த அளவுக்கு பிரிப்பது என்ற முடிவு எளிதானது அல்ல.
சன் குழுமத்தைப் பொறுத்த வரை ஏகபோக ஆதிக்கம் இருப்பது, தொலைக்காட்சி சேவை வினியோகம் செய்யும் கேபிள் சேவையில்தான். அதைப் பயன்படுத்தி ஒளிபரப்புத் துறையில் தம்முடைய ஓடைகளை மட்டும் வளர்க்க முனைகின்றனர். புதியதாக வருபவர்களையும், வர நினைப்பவர்களையும், முதலீடு செய்ய பெரிதும் தயங்க வைத்து விடுகிறது சுமங்கலி நிறுவனத்தின் ஆதிக்கம்.
இதனால் ஒளிபரப்பு சந்தையிலும் முழு ஆதிக்கம் இல்லாவிட்டாலும், பேராதிக்கம் செலுத்தி வரும் சன் குழுமத்தால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தேக்கத்தை அடைந்து விட்டன.
நான் பொழுதுபோக்கு ஓடைகளை அதிகம் பார்ப்பதில்லை. செய்தி ஓடையைப் பொறுத்த வரை, என்டிடிவியில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்கள் நம்ம ஊர் செய்தி ஓடைகளில் ஏன் நடப்பதில்லை? என்டிடிவியின் தி பிக் ஃபைட், வி த பீப்பிள் போன்ற மேடைகள் சன் நியூஸிலோ ஜெயா டிவியிலோ எப்போதும் பார்க்க முடியப் போவதில்லை. அரசு முன் வந்து கேபிள் விநியோகத்தை நெறிப்படுத்தினால் புதிய நடுநிலை ஓடைகள் இந்த வெளியை நிரப்ப முடியும்.
கிரிக்கெட் ஒளிபரப்பைப் பார்க்கலாம். தமிழ் நாட்டில் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்துக்கு, உரிமையைப் பெற்ற விளையாட்டு ஓடையுடன் ஒப்பந்தம் செய்து தமிழில் வர்ணனையோடு ஒளிபரப்பு செய்ய ஒரு ஓடை முன்வரலாம். இது ஒரு உதாரணம்தான். இதைப் போல பல புதிய முயற்சிகளை தொழில் முனைவர்கள் எடுக்க சுமங்கலி என்ற தடைக் கல் காரணமாக உள்ளது.
2 கருத்துகள்:
சன் குழுமத்தின் இந்த ஏகாதிபத்தியத்தினை கட்டுப்படுத்த ஒரே வழிதான் இருக்கிறது. மக்கள் DTH என்றழைக்கப்படும் வீட்டிற்கு நேரடியான செயற்கைகோள் ஒளிபரப்பினை பெறவேண்டியது தான். ஆனாலும் அதில் முக்கியமான தமிழ் அலைவரிசைகளை இணைக்கவேண்டிய பொறுப்பு மத்தியஅரசின் கையில் இருக்கின்றது. அதனை கேட்டு பெறவேண்டியது நமது மத்திய தமிழ் அமைச்சர்கள். அவர்களோ குடும்பஅரசியலின் குத்தூசிகள். நிச்சயம் இதனை நிறைவேற்ற அவர்கள் முனைப்புகாட்டப் போவதில்லை.
ஆம். ஏகபோக ஆதிக்கத்துக்கு வேட்டு வைக்கும் ஒரு முக்கிய மாறுதல் புதிய தொழில்நுட்பங்கள். சன் டிவியைப் பொறுத்தவரை, டிடிஎச் ஒரு மிரட்டலாக அமையலாம்.
கருத்துரையிடுக