பாரதி தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய போது இருந்ததை விட இப்போது என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
700 ரூபாய்க்கு ஒருவர் என்ற விலையில் சாப்பிடும் உணவகங்களும் உள்ளன. அந்த எழுநூறு ரூபாயில் முழு மாதமும் குடும்பம் நடத்துபவரும் உள்ளனர். நியாயவிலைக் கடையில் விலை குறைவாக அரிசி விற்பது, முட்டாள்தனமான பொருளதாரக் கொள்கையாக இருக்கலாம். சத்துணவுத் திட்டம் பள்ளிக் கூடங்களை சாப்பாட்டுக் கூடங்களாக மாற்றி இருக்கலாம். கோயில்களில் அன்னதானம் சோம்பேறிகளை ஊக்குவிப்பதாக இருக்கலாம்.
ஆனால், இவை எல்லாவற்றையும் ஒரு சமூக பாதுகாப்பு வலை என்று வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதனும், குடும்பமும், வேறு வழியே இல்லை என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டால், மதிப்புடன் பசியாற ஒரு இடம் இருக்க வேண்டும். நியாய விலையில் அரிசி கிடைக்காவிட்டால், நிச்சயமாக பட்டினி கிடக்கும் மனிதர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து விடும்.
ஏழைகளுக்கு கொடுக்கப்படும் மானியங்களை எதிர்க்க முனையும் முன், நாம் இருக்கும் அறையை ஒரு முறை சுற்றிப் பார்க்க வேண்டும். கடந்த மூன்று வேளைகளில் நாம் சாப்பிட்ட உணவுகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். நம் பெயரில் இருக்கும் சொத்துகளின் மதிப்புகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாளை முதல், சமையல் எரிவாயுவின் மான்யம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, மிச்சமாகும் பணம் அரிசி மீதான மானியத்துக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவித்தால், எத்தனை நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் போர்க் குரல் கொடுக்க ஆரம்பித்து விடும்? சமையல் எரிவாயுவுக்கு மாதம் 200 ரூபாய் அதிகமாக செலவழித்தால், பிட்சா ஹட் போகும் வாய்ப்பை இழந்து விடுவோமே!
அதே பணம், ஏழையின் பையில் மிச்சப்பட்டால், ஒரு வேளை இன்று உணவகத்தில் மேசை துடைக்கப் போகும் அந்த வீட்டுக் குழந்தை அடுத்த மாதம் முதல் பள்ளிக்குப் போக ஆரம்பித்து விடலாம்.
2 கருத்துகள்:
மானியம் தர வேண்டியது தான்.யார் வேண்டாம் என்றார்கள்?மக்களுக்கு பயன்படுவது போல் தரலாமே?இலவச டிவி எல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தால் என்னாவது?
சரிதான். மானியம் என்பது பசித்தவனுக்கு கஞ்சி ஊற்ற கொடுக்க வேண்டும். மத்திய வர்க்கத்துக்கு பட்டுப் புடவை வாங்கவோ, தொலைக்காட்சி பார்க்கவோ, மானியம் வாங்குவது முறையில்லை.
கருத்துரையிடுக