திங்கள், ஏப்ரல் 24, 2006

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 7

உங்கள் தொலைக் காட்சியில் தெரியும் நிகழ்ச்சிகள் தரக்குறைவாக இருந்தால், அதற்கான பெரும் பொறுப்பு சன் குழுமத்தைச் சாரும். மாற்றத்தை தோற்றுவிக்கச் செய்யும் ஆற்றலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், வணிக நோக்கமும், கட்சி சார்பும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், மக்களுக்கு நல்லது என்றுபடக் கூடிய நிகழ்ச்சிகளாக அளிக்காதது அவர்களின் தோல்வியே.

இரவு 9.30 மணி நிகழ்ச்சிதான் மிகப் பிரபலமானதாம். இந்தியில், இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் மக்களைக் கவரும் வண்ணம் தொடராக்கிக் காட்டியது போல, தமிழின் காவியங்களைக் காட்ட ஏன் சன் டிவி முன் வரவில்லை. தேவைப்பட்டால், வணிகம்தான் முக்கியம் என்பது, மற்ற நேரங்களில் தமிழனின் பெருமை என்பது என்று இரட்டைப் பேச்சுதானே அவர்களுக்கு வருகிறது.

திருக்குறள் கதைகள் என்று ஒரு மெகாத் தொடர் ஆரம்பிக்கலாம். 1330 பகுதிகள் ஓட்டலாம். பழைய பள்ளிக் குழந்தைகளுக்கான கதைகளாக இல்லாமல் இன்றைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் எப்படி பொருந்துகிறது என்று திறமையான கலைஞர்களைப் பயன்படுத்தி தொடர் எடுத்து, வாழ்வியல் நூலான திருக்குறள் காட்டும் வழிக்கு ஒரு மறுமலர்ச்சி உருவாக்கலாம்.

ஐம்பெருங்காப்பியங்கள் என்று தமிழரின் வரலாறு பாடும் காப்பியங்களை ஒளிவடிவாக்கலாம். சிலப்பதிகாரமும், மணிமேகலையும், சீவக சிந்தாமணியும், வேட்டி/ஜிப்பா போட்ட தமிழ் "அறிஞர்களால்" மட்டுமே நினைக்கப்படாமல், கடைக்கோடித் தமிழனுக்கும் அவை கூறும் கருத்துக்கள் போய்ச் சேரச் செய்யலாம்.

இதையெல்லாம் செய்ய நிறைய செலவாகும், வணிக வெற்றி கிடைக்காது என்று முயற்சி கூடச் செய்ய மாட்டார்கள் இவர்கள். ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் இவர்களுக்கு இந்தப் பொறுப்பு கண்டிப்பாக உண்டு. வணிக வெற்றி இவர்கள் நினைத்தால் தானாகக் கிடைத்து விடும். "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திருக்குறளின் 1330 குறள்களும் காட்சி வடிவில்" என்ற கனைப்புடன் விளம்பரங்கள், சரியான நேர ஒளிபரப்பு, தரமான திரைக்கதை, உயர்தர படமாக்கம் என்று இருந்தால தமிழர்கள் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொள்ளவா போகிறார்கள்.

சரி தற்கால இலக்கியத்தை, வாழ்வியல் நூல்களை எடுத்துக் கொள்வோம். பாரதியின், பாரதி தாசனின் எத்தனை ஆக்கங்கள் சன் டிவியில் "சித்தி" போல திரை வடிவம் பெற வைக்க முடியும்.

இதை எல்லாம் செய்தால் தமிழின் பெருமை உலகெங்கும் பெருகும். எப்படி?

4 கருத்துகள்:

Radha N சொன்னது…

பாரதி மற்றும் பாரதிதாசன் படைப்புக்கள் வேண்டுமானால் தொலைகாட்சியில் வரும், ஆனால் பணம் வராதே....நாங்கள் என்ன பொதுசேவை செய்யவா வந்திருக்கிறோம். பதில் இப்படித்தாங்க இருக்கும்.

மா சிவகுமார் சொன்னது…

அப்படி இல்லை. பணம் வரும் வண்ணம் அவற்றை நிகழ்ச்சியாக்கும் திறமையும் வாய்ப்பும் அவர்களிடம் உள்ளது. மனம்தான் இல்லை.

ஆதிபகவன் சொன்னது…

தமிழ் /தமிழர் புகழ் பரப்ப சன் டிவி வரவில்லை. கலாநிதிமாறன் பாக்கட் நிரப்ப வந்தது.

ஊருக்கு உபதேசம்!!

மா சிவகுமார் சொன்னது…

ஆமாம் ஆதிபகவன்,

இப்போது மக்கள் தொலைக்காட்சியில் இத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வல்லவனுக்கு வல்லவன் உண்டுதான்.

அன்புடன்,

மா சிவகுமார்