ஞாயிறு, ஏப்ரல் 23, 2006

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 6

இங்கு நாம் விவாதிப்பது எல்லாம், சன் டிவிக்கு மட்டுமில்லாமல், இயங்கு தள சந்தையில் ஏகபோகம் செலுத்தும் மைக்ரோசாப்டு, ரயில் போக்குவரத்தில் இந்தியன் ரயில்வே, பழைய தூர்தர்ஷன், பழைய தொலைதொடர்பு துறை, நமது மின் வினியோக துறை போன்ற பல ஏகபோக வலிமை பெற்ற நிறுவனங்களுக்கும் பொருந்தி வரும்.

தன்னுடைய குறுகிய கால லாபம், நலனை மட்டுமின்றி, பொறுப்புள்ள நிறுவனமாக செயல்பட்டால் என்ன நடக்க வேண்டும். முதலில் சுமங்கலி நிறுவனத்தில் செயல்பாடுகள் குழுமத்தின் பிற நிறுவனங்களிலிருந்து முற்றிலும் தனிமைப் படுத்தப்பட வேண்டும். எந்த ஓடைக்கு எந்த இடம், எந்தெந்த ஓடைகளுக்கு நல்ல இடம் என்பதெல்லாம், வெளிப்படையான, நியாயமான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

ஒரு மளிகைக் கடையில் எந்தப் பொருள்களை முன் காட்சிப்பகுதியில் வைக்கிறார்கள். பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தொலைக் காட்சி நிறுவனங்களைப் போல, மளிகைக் கடைகள் கேபிள் நிறுவனம் போல என்று வைத்துக் கொள்ளலாம்.

சென்னை நகரம் முழுவதும் ஒரே விநியோக நிறுவனம், அதே குழுமத்தின் மற்றொரு நிறுவனம் சோப்புகளையும் தயாரிக்கிறது என்பது போன்றதுதான் சுமங்கலியும், சன் டிவியும். புதிதாக ஏதாவது சோப்பு சந்தைக்கு வந்தால் தன் சோப்பு விற்பனை பாதிக்கக் கூடாது என்று அதை கடைகளில் வைக்கவே மறுக்கவோ, அல்லது கடையின் ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாதவாறு வைக்கவோ செய்தால் தானாகவே அந்த விநியோக நிறுவனத்தின் சோப்பு முதலிடத்தைப் பிடித்து விடும்.

இப்போது அந்த மாதிரி நிலை இல்லை. ஒரு கடைக்காரர் எந்த சோப்பை வாடிக்கையாளரின் கண்ணில் படுமாறு வைப்பார்?

புதிதாக வந்த தரமான சோப்பை ஒரு கடை விற்பனைக்கு வைக்க மறுத்து அடம் பிடித்தால், அவருக்குத்தான் இழப்பு.

மக்களிடையே பிரபலமான சோப்பை கடையில் எல்லோருக்கும் தெரியுமாறு வைப்பது, அதை வைத்து வாடிக்கையாளரை கடைக்குள் கவர்ந்த்து விடலாம் என்று. புதிதாக வந்த சோப்புக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் கூடுதல் சலுகைகள் கடைக்காரருக்கு கொடுத்தால், அது கூட முன்னிடத்தைப் பிடித்து விடலாம்.

தரமற்ற அல்லது மக்களிடையே பிரபலம் இல்லாத சோப்புகள் கடைகளை விட்டு ஓடி விடும். புதிதாக எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் தேவையான இடம் கிடைக்கும்.

சுமங்கலி நிறுவனம் சன் குழுமத்தின் கையில் இல்லாமல் இருந்தால் கிட்டத்தட்ட இதேமாதிரிதான் இருக்கும் தொலைக்காட்சி ஓடைகளும், புதிதாக வரக்கூடிய ஓடைகளும் பார்வையாளர்களின் கண்களுக்குப் போய் சேரும்.

இதே மாதிரியான ஒரு முறையைத்தான் கூகிள் நிறுவனம் அட்சென்சு எனப்படும் விளம்பரங்களை தேடல் முடிவுப் பக்கங்களில் காண்பிக்கும் சேவைக்குப் பயன்படுத்துகிறது. இணைய உலகில் விளம்பரச் சேவையில் புரட்சியையே நடத்தி விட்டது இந்த முறை.

2 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

சிவகுமார்,

எனக்கு இங்கே எந்த இந்திய டிவியும் பார்க்க முடியாததாலே அங்கே என்ன நடக்குதுன்ற விவரம் ஒண்ணும்
தெரியாது.
ஆனால், மளிகைக்கடை உதாரணம் சொன்னீங்க பாருங்க. அதுக்குதான் இந்த பின்னூட்டம்

eye level is buy level

ஒரு சராசரி மனுஷன் ஷெல்ப்க்கிட்டே நின்னால் அவனுடைய கண்ணுக்கு எதிரே 'சட்'ன்னு தெரியறதைத்தான்
வாங்குவாங்களாம். அதுக்காக, கடைக்காரங்க வித்துத் தீர்க்கவேண்டிய சாமான்களையோ, புதுசா வர்ற பொருட்களையோ
இந்த அடிப்படையிலேதான் அடுக்குவாங்களாம்.

மா சிவகுமார் சொன்னது…

அந்த இடத்துக்குத்தானே போட்டியும் அதிகமா இருக்கும். எல்லா நிறுவனங்களும் தம்முடைய பொருளை அங்கே வைக்கச் சொல்லிக் கேட்குமே! அதே மாதிரிதான் தொலைக்காட்சி முதன்மைப் பட்டியும் (). அதில்தான் கேபிள் நிறுவனத்துக்கு கை ஓங்கல்.

அன்புடன்,

மா சிவகுமார்