புதன், ஏப்ரல் 19, 2006

ஆள முயலும் அவலங்கள்

நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் எமது அரசு தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு ஈட்டிக்கொள்ளும் வன்மை, தரமான கல்வி, கிடைப்பதற்கு என்னென்ன தேவையோ அதை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும்.

கோயம்பேடு சந்தையில் அழுகித தூக்கி எறியப்பட்ட காய்கறிகளை அள்ளிச் செல்ல மூன்று சக்கர வாகனங்களில் வரும் உணவு விடுதியினரைப் பற்றி படித்த் நினைவு இருக்கிறதா? நியாய விலைக் கடைகளில் புழுத்துப் போய் விட்ட அரிசி வழங்கப்படுவதைப் பற்றிய செய்தியை படித்து விட்டு உச் கொட்டாதவர்கள் யாரேனும் உண்டா?

அத்தகைய உணவு விடுதியிலும், அத்தகைய அரிசியைச் சமைத்தும் சாப்பிடும் நிலையில் இன்று தமிழகத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

வெளியூர் போக வேண்டி இருந்தால் மறு சிந்தனையே இல்லாமல் 12 ருபாய் கொடுத்து ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொள்கிறோம்.

இன்று ராணிப் பேட்டை புறவழிச் சாலையில் ஒருவர் என்னிடம் இருசக்கர வண்டியில் ஏற்றிச் செல்லக் கேட்டார்.

'பேருந்துகள் நிற்காத திசை நோக்கி போகிறீர்களே, எப்படி ஆற்காடு போவீர்கள்'
' பேருந்து கட்டணத்துக்கு காசு இல்லை, இப்படியே சமாளித்து போய்க் கொள்ள வேண்டியதுதான்'

'5 கிலோ மீட்டர் பேருந்து கட்டணம் கூட பையில் இல்லாமல் இருக்கிறீர்களே என்ன தொழில் செய்கிறீர்கள் ?ய
'நமக்கெல்லாம் பீடி சுத்துவதுதான் வேலை. மாசத்துக்கு பதிமூணு நாள்தான் வேல இருக்கும். 1300 ரூபா வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்வது.'

நானும் வேறு ஏதும் புதுமையாக செய்து விடாமல், போகும் தூரம் வரை அவரை ஏற்றிச் சென்று விட்டு டாட்டா சொல்லி விட்டேன்.

இரவு 10.30க்கு போரூரில் இறங்கி உணவு விடுதியில் சாப்பிடச் சென்றால் மேசை துடைக்க குழந்தை தொழிலாளி. வெளியே வந்தால் டாஸ்மாக் ஆதிக்கத்தில் தள்ளாடும் குடி மக்கள்.

இதற்கெல்லாம் நடுவில் ஒரு தேர்தல். இதில்
  • எனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விஜயை கூட்டிக் கொண்டு போய் விட்டார்,
  • என்னுடைய கூட்டங்களை தொலைக்காட்சியில் காட்டவில்லை,
  • எனக்கு கௌரவத்துக்குரிய எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கவில்லை,
  • எமது சாதியினருக்கு அதிகாரத்தில் பங்கு தரப்படவில்லை
என்றெல்லாம் துள்ளிக் குதிக்கும் அரசியல்வியாதிகள்.

கும்பிக்கு கூழில்லை என்றாலும் தடவிக் கொள்ள சந்தனத்தை வைத்துக் கொள் என்று வாக்குறுதி அளிக்கும் தலைவர்கள் (தலைவன் என்று போட்டால் ஒரு காட்சி சார்பாம்). 11 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அனுபவமாம், எது முடியும் எது முடியாது என்று தலைவருக்குத் தெரியுமாம். 50 வருடம் பொது வாழ்க்கையில் இருந்து, மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்பது புரியவில்லையா இந்தத் தன்னிகரற்ற தலைவருக்கு.

தமிழ் மக்களை ஆளத் துடிக்கும் தலைவருக்கும் தலைவிக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் சொத்துகளையெல்லாம் தானம் செய்து விட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டில் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதுதான் எனக்குச் சாப்பாடு என்று இறங்கத் தயாரா?

ஒருவருக்கு குடும்பம், குழந்தை குட்டிகள் இல்லை, மற்றவரோ ஆயிரம் பிறைகள் கண்டு கொள்ளுப் பேரர்களையும் பார்த்தாயிற்று. யாருக்காக இந்த சொத்துகளை கட்டிக் காக்கிறீர்கள்? மக்களுக்கு சேவை புரிவதே உமது உயரிய எண்ணம் என்றால், முழு நேர சமூகப் பணியில் இறங்கி விடலாமே?

6 கருத்துகள்:

VSK சொன்னது…

உங்கள் தலைப்பு ஏற்படுத்தியதின் பாதிப்பு இது!
நன்றி பாரதி!

'கனவு' மெய்ப்பட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
இலவசங்கள் மறுக்க வேண்டும்
'இரு கழகங்கள்' தோற்க வேண்டும்!

அனைவரும் ஓட்டு போட வேண்டும்
தலைவரும் உணர வேண்டும்
தலைவியும் திருந்த வேண்டும்
இனிவரும் காலம் இனிது வேண்டும்!

தமிழன் தலை நிமிர வேண்டும்
தலைமை துதி பாடாதிருக்க வேண்டும்
தன்மானம் ஓங்க வேண்டும்
தமிழகமே மாற வேண்டும்!

நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும்
நம்மால் முடியுமெனும் துணிவு வேண்டும்
நம்மை ஏய்ப்போரை கண்டிட வேண்டும்
ஏய்ப்போர்க்கு ஏவல்செய்யா உணர்வு வேண்டும்!

'கனவு' மெய்ப்பட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
இலவசங்கள் மறுக்க வேண்டும்
'இரு கழகங்கள்' தோற்க வேண்டும்!

Santhosh சொன்னது…

ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க சிவா. எல்லாரும் அந்த வாக்குறுதிக்காக தான் ஏங்குகிறோம். இலவசமா எங்களுக்கு எதும் வேணா நாங்க பிழைப்பதற்கு வழி பண்ணுங்க அப்படின்னு தான் கேட்கிறோம். நாம் அவங்களை செல்லித்தப்பில்லை மக்களுக்கு அந்த அளவிற்கு அறியாமை.

பினாத்தல் சுரேஷ் சொன்னது…

மிகச்சிறந்த பதிவு.

உங்கள் குறைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.. நாட்டு மக்களில் ஒருவனாக -- வேறு வழியில்லை!

தொடருங்கள் உங்கள் எழுத்துப்பணியை

பெயரில்லா சொன்னது…

மக்கள் நலம் ;மக்கள் நலம் என்று சொல்லுவார்!- தம்
மக்கள் நலம் ஒன்றே!? மனதில் கொள்ளுவார் ;இவர்களிடமா??? எதிர் பார்க்கிறீர்கள்
உங்கள் ஆதங்கம் புரிகிறது.இது எல்லா வாக்காளருக்கும் புரியாதது வேதனையே!
நன்கு எழுதியுள்ளீர்கள்!
தொடரவும்
யோகன்
பாரிஸ்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

பதிவு நல்லா இருக்கு சிவக்குமார்,

எவ்வளவு பேசினாலும், கடைசியா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர்தானே மறுபடியும் வரப் போறாங்க!! இலவசம் இலவசம்னு சொல்லி நாம இலவசமா வாங்கறது தலைவலிய மட்டும் தான்...

மா சிவகுமார் சொன்னது…

உங்கள் கருத்துக்குகளுக்கு நன்றி. ஆக்கபூர்வமாக சிந்தித்து போட்டியிடும் கட்சிகள் வரும் என்று நம்புவோம்.