அந்த இடைப்பட்ட காலங்களில் டாடா பற்றி விபரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கொஞ்சமே கொஞ்சம் முயற்சிகள் செய்திருந்தேன். பார்த்திபன் என்பவர் டாடாவில் வேலை பார்த்தவர், இப்போது பல்லாவரத்தில் பணி புரிகிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். நானும் ஒரு பேசா மடந்தை, அவரும் ஒன்று கேட்டால் பாதிப் பதில் சொல்பவர். "நல்ல இடம், போய் நாலஞ்சு வருஷம் நல்லா கத்துக்கிட்டு வாங்க, பெரிய ஃபேக்டரி" என்றெல்லாம் சொல்லி அனுப்பினார்.
எங்கள் படிப்பு நிறைவு விருந்தில், டாக்டர் கன்னா, தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர், நாங்கள் டாடா போவதைக் கேட்டு "ஏன் தென் இந்தியர்கள் டாடாவில் நிலைத்து இருப்பதில்லை?" என்று கேட்க, சுந்தர் "அங்கே கௌல் என்று ஒருத்தர் இருக்கிறாராம். யாரையும் நிலைக்க விடுவதில்லையாம்" என்று போட்டு வைத்தான். அதற்கு டாக்டர் கன்னா "அதெல்லாம் நான்சென்ஸ், நீங்க நல்லா சாதிச்சா கண்டிப்பா பெரிய ஆளாக வரலாம்." என்றார்.
மூன்றாம் ஆண்டு படிக்கும்போது, ஐஎஸ்ஓ 9000 பற்றி தோல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஒரு கருத்தரங்கில் டாடா நிறுவனத்தின் ஒரு இயக்குநர் வீரேன் மேஹ்ரோத்ரா கலந்து கொண்டார். தாடி செறிந்த முகத்துடன், கண்ணாடி வழியே தெரியும் முழிக் கண்ணுடன் ஒலிவாங்கியில் பேசிய அவர், டாடா தோல் பிரிவு ஐஎஸ்ஓ பெற என்ன என்ன முயற்சிகள் எடுத்து வருகின்றது என்று குறிப்பிட்டார்.
இந்த ஒகே கௌலும், வீரேன் மெஹ்ரோத்ராவும் அடுத்த ஆறு வருடங்களுக்கு என்னுடைய வாழ்வில் முக்கியப் பங்கு ஆற்றப் போகிறார்கள் என்று அவர்களை முதல் முதலில் சந்தித்த போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
இப்போது வடக்கு நோக்கிச் செல்லும் ரயில்களில் இரண்டாம் தர எக்ஸ்பிரசான கொச்சி - இந்தூர் ரயிலில் அமர்ந்து கொண்டு இதை எல்லாம் அசை போட்டுக் கொண்டேன். சென்னையிலிருந்து இந்தூர் போகும் இந்த ரயில் வாரத்துக்கு ஒரு முறைதான் ஓடியது. வழக்கமாக பயணிப்பவர்கள், போபால் வரை தில்லி வரை போகும் தமிழ்நாடு விரைவு வண்டியிலோ, ஜிடி விரைவு வண்டியிலோ பயணித்து, போபாலிலிருந்து இரவுப் பேருந்தில் இந்தூர் போய் விடுவார்கள். எங்களைப் போன்ற அப்பாவிகள்தான் நேரடி ரயில் என்று இந்த ரயிலில் ஏறியிருந்தோம். ரயிலில் சாப்பாட்டு வசதி கிடையாது. வழியில் சாப்பிடுவதற்காக நிலையங்களில் நின்று நின்று கூட்டிச் சென்றது ரயில். வியாழன் இரவு 11.30 மணிக்கு கிளம்பிய ரயில் அந்த இரவு, வெள்ளிக் கிழமை பகல், இரவும் கழிந்து இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. சனிக் கிழமை மதியம் மூன்று மணிக்குப் பிறகு வண்டி இந்தூர் வந்து சேர்ந்து விட்டது.
அதற்குள் நான்கு வீரர்களில் சுரத்து எல்லாம் வற்றி விட்டது. வழியில் கிடைத்ததைச் சாப்பிட்டு, ரயிலிலேயே தூங்கி எழுந்து, கழுவி கதை கந்தலாகி விட்டிருந்தது. நம்மை வரவேற்க யாராவது வந்திருப்பார்கள் என்று வெளியே போய்ப் பார்த்தால் அப்படி யாரும் தென்படவில்லை. பின்னால் உங்களை கூப்பிட்டு வர கார் அனுப்பியிருந்தது என்று நிர்வாகப் பிரிவு மேலாளர் சொன்னதை நம்பவே முடியவில்லை.
நம்மை ஞாபகம் வைத்திருப்பார்களா அல்லது வேலையும் இல்லை ஒன்றும் இல்லை என்று திருப்பி ரயிலேற்று அனுப்பி விடுவார்களா என்று நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. நிலையத்துக்கு வெளியே வந்து தொலைபேச முயன்றோம். ஒன்றும் சரிவராமல், ஒரு ஆட்டோ ரிக்சா பேசி டாடா அலுவலகத்துக்கு கொண்டு போகச் சொன்னோம். உடைந்த இந்தி. நான் பிரவேசிகா வரை முடித்த இந்தி பண்டிதனாக இருந்தும் சரியான நேரத்தில் தேவையான வாக்கியங்கள் வாயில் வந்துவிடவில்லை.
ஆனால் அந்த ஊர் ஆட்டோ டிரைவர்கள், இல்லை பொதுவாக மக்களே, தங்கமானவர்கள். கிட்டத்தட்ட ஒரு பெரிய்ய கிராமம் போன்ற இந்தூரில் கபடு சூது குறைவாகவே இருப்பதாக பின் அனுபவம் கற்றுத் தந்தது. இருந்தாலும், அன்றைக்கு அவநம்பிக்கையுடனேயே டாடா தோல் நிறுவனத்தின் காட்சி அறைக்கு ஆட்டோ அழைத்து வர வந்து சேர்ந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக