(முந்தைய முயற்சிகளில் நீளமான தலைப்பால் இந்த பதிவு பிளாக்கரிலிருந்து மறைந்து விட்டது. சுட்டிக் காட்டிய மதிக்கு நன்றி. )
ராகுல் காந்தி என்ற இளைஞர் இந்திய அரசியலில் நுழைந்தார். போன தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். ராகுல் காந்தி வந்து விட்டார், அவரை கட்சித் தலைவராக்கி விடுங்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஆக்கி விடுங்கள் என்றெல்லாம் கூக்குரலிட்டனர், கட்சியின் ஜால்ராக் குழுக்கள். அவரும் அவரது அம்மாவும் நினைத்திருந்தால் மத்தியில் விரும்பிய அமைச்சரவைப் பதவியைக் கேட்டுப் பெற்றிருக்கலாம். பிரதம மந்திரி தலையாட்டும் ரப்பர் ஸ்டாம்பு மன்மோகன் சிங் தானே.
அப்படி ஒரு வாய்ப்பைப் பெற்றிருந்தும், நீண்ட கால அரசியல் வாழ்வைக் கருத்தில் கொண்டு உடனடியாக பதவிகள் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். கட்சியில் களத்தில் இறங்கி வேலை செய்வோம் என்று முடிவு செய்தது அவரது முதிர்ச்சி. அவரும் படித்தவர், வெற்றிகரமாக தொழில் செய்து வந்தவர், ஆனால் அரசியல் தலைமை என்று வந்தால் அதற்குத் தேவை மக்களுக்கிடைய பணி செய்வது என்று தெரிந்து காத்திருக்கிறார் அந்த இளைஞர். குடும்ப அரசியலை செவ்வனே நடத்தும் பாரம்பரியத்தில் கற்றுக் கொண்டதாயிருக்கும்.
நம்முடைய அவசரக் குடுக்கை, தயாநிதி மாறனும் அன்புமணி ராமதாஸும், அரசியலில் இறங்கி கால் கூட நனையவில்லை. உடனேயே மத்தியில் காபினட் அமைச்சர்களாகி விட்டார்கள். அவர்களுக்கு புத்திமதி சொல்ல அவர்கள் வீட்டு பெரியவர்களுக்கும் மதி இல்லை. பெரியவர்களின் பேராசை தானே இந்த இளைஞர்களை வழி நடத்தியது.
மருத்துவம் படித்ததால் சுகாதரத்துறை அமைச்சராம், தகவல் தொடர்பு துறை் நிறுவனத்தை நிர்வகித்ததால், அந்தத் துறையின் பொறுப்பாம். 'ஜனநாயக முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள், சர்வாதிகாரத்தை ஒழிப்போம்' என்று வாய் கிழியப் பேசும் இவர்களில் ஒருவர், தேர்தலையே சந்திக்க வைக்காமல் தன் மகனை அமைச்சராக்கவும், மற்றொருவர் பிரதமரின் அதிகாரத்தை அடி வெட்டி, மூன்றாம் மனிதரிடம் அமைச்சகப் பொறுப்புகளுக்கான் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் கூசாமல் துணிந்தனர்.
சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியுடமும் கட்டணம் செலுத்தி, பாடம் கேட்க வேண்டும் இவர்கள்.
2 கருத்துகள்:
ஆனால், ராகுலுக்கு முன்பே, ஸ்டாலின் அப்படி படிப் படியாகத் தான் வந்தார். அவரை மட்டும் ஏற்றுக் கொண்டார்களா என்ன.
ராகுலுக்கு, அது பரம்பரை சொத்து (!) சார். அவர், எப்ப வேண்டுமோ அப்பொழுது அதை எடுத்துக் கொள்ளுவார் சார். கட்டாயம் தரப்படும் என்ற உத்திரவாதம் இருப்பதால் அவர் தாராளமாய் பொறுமை காட்டுவார்.
சரியாகச் சொன்னீர்கள்.
தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவசரம் வந்து விடுகிறது. ராகுலுக்கு, கிணற்றுத் தண்ணியை ஆற்று வெள்ளமா கொண்டு போய் விடும் என்ற நிதானம். மற்றவர்களுக்கு, ஆற்றில் நீர் இருக்கும்போது வேண்டிய மட்டும் குடித்துக் கொள்வோம் என்ற பதற்றம்.
கருத்துரையிடுக