ஸ்காட்லாந்தைச் சார்ந்த ஆதம் ஸ்மித் 1776ல் சந்தைப் பொருளாதரத்தின் அடிப்படைகளை அலசும் "தேசங்களின் வளங்களின் இயல்பும், காரணங்களும்" என்ற தனது நூலை வெளியிட்டார். நவீன பொருளாதாரவியலின் தந்தை எனப்படும் ஆதம் ஸ்மித்தின் இந்த நூல் இன்றும் நாம் கடையில் வாங்கும் கத்திரிக்காய் விலையிலிருந்து, தொழிற்சாலையில் தொழிலாளர்களின் கூலி நிர்ணயம் வரை எப்படி தீர்மனிக்கப்படுகின்றன என்ற சமூகப் பொருளாதாரக் காரணிகளை விளக்குகிறது.
இரண்டாவதாக, செருமானியரான கார்ல் மார்க்சு எழுதிய தஸ் காபிடல் (1867) என்ற உலகின் வரைபடங்களையே மாற்றி அமைக்கக் காரணமாயிருந்த நூல். சந்தைப் பொருளாதரத்தில் இயங்கும் பல்வேறு காரணிகள், அவற்றின் பரிணாம வளர்ச்சி என்று புலமையுடன் அலசி, உலக சமூகங்கள் எப்படிப்பட்ட மாற்றங்களை சந்திக்கும் என்று ஆழமான தொலைநோக்குடன் எழுதப்பட்ட நூல் இது. இவரின் தத்துவ அடிப்படையில் செய்யப்பட்ட பரிசோதனைகள் மனித குலத்தை மிகவும் துன்புறுத்தி விட்டாலும், அவரது சிந்தனைகள் இன்றைக்கும் பொருளாதார வல்லுநர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.
மூன்றாவதாக ஜான் மேனார்ட் கீன்ஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த இவரின் கொள்கைகள் இன்றைய உலக நாடுகளின் அரசு பொருளாதரச் செயல்களுக்கு அடிப்படைகளாக உள்ளன. பொருளாதாரவியலின் படி அரசாங்கம் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தாலே, நீண்ட காலத்தில் எல்லா குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு விடும் என்பதை மறுத்து எழுதப்பட்ட "வேலைவாய்ப்பு, வட்டிவீதம், பணம் பற்றிய் கோட்பாடுகள்" என்ற இவரது நூல் 1936ல் வெளியிடப்பட்டது. அரசாங்கம் தனது முனைப்பான செயல்களால் எப்படி நாட்டில் வேலை வாய்ப்புகளையும், பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கலாம் என்ற இவரது அறிவுரைகளின் படி செயல்பட்துதான் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டின் New Deal (1930s) எனப்படும் அமெரிக்க பொருளாதரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்ற திட்டங்கள்.
இவர்களுடன், இரண்டாவது உலகப்போருக்குப் பின் வந்த மில்டன் ஃபிரீட்மானையும், ஜான் கென்னெத் கால்பிரைத்தையும் சேர்த்துக் கொண்டால நவீன பொருளாதாரச் சிந்தனைகளின் பெரும்பான்மையானவற்றின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக