நான் கல்லூரியில் படிக்கும்போது, இரண்டாம் ஆண்டு கோடை விடுமுறையின் போது நடைமுறைப் பயிற்சி என்று பல்லாவரத்தில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலைக்குப் போனேன். அந்த தொழிற்கூடம் அவ்வளவு பெரியது இல்லை. அதன் முதன்மை மேலாளரான பாலசந்தர் என்னையும் சுந்தரையும் நடக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக் கொள்ளச் சொன்னார்.
நான் முதலில் போன இடம், தோல்களின் மீது சூடான உலோகப் பலகையை அழுத்துவதன் மூலம் மேற்பரப்பில் பல்வேறு கோலங்களை ஏற்படுத்தும் இயந்திரத்துக்கு அருகில். அந்த இயந்திரத்தை இயக்க மூன்று பேர். ஒருவர் கறுப்பாக பெரிய மீசையுடன் பயில்வான் போல இருந்தார். அவர்தான் இயந்திரத்தின் கட்டுப்பாடுகளை அமைத்து இயக்குகிறார்.
இன்னொருவர், நடுத்தர வயதில், பிரஷ் மீசையுடன் காலையில் பையில் சாப்பாட்டு அடுக்குடன் வருகிறார். வந்த உடன், அங்கேயே வைத்துள்ள லுங்கி ஒன்றை அணிந்து கொள்கிறார். அவருடைய முழுநேர வேலை, இயந்திரத்தின் தட்டின் மீது, தோலை எடுத்து வைப்பது. ஒரு தோலை எடுத்து மேலே வைத்து, சுருக்கங்களை நீக்குகிறார். "டொய்ங் டொய்ங்" இயந்திரத்தின் கைப்பிடியை அழுத்தி தோலின் மீது கோல வடிவங்கள் பதிக்கிறார் இயக்குநர். தோலை வெளியே எடுத்து, அடுத்தத் தோலை வைக்கிறார், "டொய்ங் டொய்ங்", வெளியே எடுக்கிறார். உள்ளே வை, "டொய்ங் டொய்ங்", வெளியே எடு.
இப்படியே நாளைக்கு எட்டு மணிநேரம் அந்த இயந்திரத்தின் பின்னால் நிற்கிறார் இந்த மனிதர். நான் பார்த்த 15 நாளும் அவரது வேலை மாறவேயில்லை.
அவரது வீட்டில் காலையில் சமைத்து பையில் வைத்துக் கொடுத்த சாப்பாட்டை மதிய வேளையில் சாப்பிடுகிறார். மீண்டும் "டொய்ங்". அவரைப் பார்க்கும் போது என்னால் தாங்கவே முடியவில்லை. எப்படி ஒரு மனிதர் நடுத்தர வயதை அடைந்த பிறகு இப்படி ஒரு எளிய, சுவையற்ற வேலையில் மாட்டிக் கொண்டுள்ளார் என்று ஒரே ஆச்சரியம்.
டாடாவில் வேலை செய்யா ஆரம்பித்த பிறகு, இதன் பரிமாணம் முற்றிலும் புரிய ஆரம்பித்தது. தொழிற்சாலையில் ஒவ்வொரு தொழிலாளியும், உற்பத்திப் பொருள் உருவாகத் தேவையாக ஒரு சிறிய பணியைத்தான் செய்கிறார். அந்த சிறிய பணியை மட்டும் பார்த்தால் போரடித்து செத்து விடும் வகையில் இருக்கும் அந்த வேலை.
தரமான பொருள் ஒன்று சந்தைக்கு வந்து சேர்வது, இப்படி போரடிக்கும் வேலையை எப்படி சுவையாகப் பார்ப்பது என்று தொழிலாளிகளுக்குக் கற்றுக் கொடுத்துவிட்ட நிறுவனங்களிலிருந்துதான்.
பலவிதமான பரபரப்பான மன நிலையுடன், டாடா நிறுவனத்தின் இந்தூர் காட்சி அறையில் காத்திருந்தோம். அங்கு சமையல் காரராக இருந்தவர் எங்களிடம் தமிழில் பேச்சுக் கொடுத்தார். பக்கத்து மாளிகையில் ஒரு ஊர்தி வந்து நின்றது. அதுதான், நம்ம டைரக்டர் என்றார் அவர். "நீங்கள் இங்கே காத்திருப்பதைப் பார்த்தால் நிர்வாகப் பிரிவில் இருப்பவன்களுக்கு நல்லா கிடைக்கும்" என்று கூறினார்.
சில மணித்துளிகல் ஒரு நேபாளி வியர்க்க வியர்க்க வெள்ளைச் சீருடையில் வந்து சேர்ந்தார். "ஆப் கேலியே காடி பேஜா தா" என்று சொல்லி விட்டு, எங்களை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கூட்டி சென்றார். அவர் டாடா விருந்தினர் மாளிகையில் பணி புரியும் பகதூர். இந்த பகதூரும் பல ஆண்டுகள் என் வாழ்வைத் தொட்டுச் சென்றார்.
ஆட்டோ ஒரு பல் மாடி கட்டிடத்தின் முன் வந்தது. ஜோபட் அபார்ட்மென்ட்ஸ் என்ற அந்த அடுக்குமாடி கட்டிடம்தான் அடுத்த ஒரு வருடம் எங்களது உறைவிடமாக இருக்கப் போகிறது. மேலே, நான்காவது தளத்தில் இருந்த இரண்டு குடியிருப்புகளை நிறுவனம் வாடகைக்கு எடுத்து பொறியியல் பட்டதாரி பயிற்சியாளர்கள் () தங்கியிருக்க கொடுத்திருந்தது.
மேலே போனால், எங்களது ஒரு ஆண்டு மூத்த சீனியர்கள் மூன்று பேர் எங்களை வரவேற்றார்கள். "நீங்கள் வருவது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்" என்று சொன்னபடியே. அடப்பாவிகளா, ரயில் நிலையத்துக்கு ஒரு வண்டி அனுப்ப ஏற்பாடு செய்திருக்கக் கூடாதா என்று கேட்காமல் இடத்தில் குடி புக முயலலானோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக