புதன், மே 17, 2006

ஆதாயம் தேடும் அவையினர்

அவமானம்!! வெட்கம் கெட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவை உறுப்பினர்கள் ஆதாயம் தரும் பதவிகளை வகிக்கலாம் என்று ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க காட்டாத அவசரத்தையும், ஒற்றுமையையும் காட்டி தங்கள் சுயநலத்தை மீண்டும் காட்டி விட்டனர்.

அரசுப் பதவி வகிக்கும் யாரும் நாடாளுமன்ற/சட்ட மன்ற உறுப்பினராகக் கூடாது, உறுப்பினரான பிறகு அமைச்சர் பதவியைத் தவிர வேறு எந்த அரசுப் பதவியையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுத்த நெறி. சொல்லப்போனால் இதை இன்னும் தீவிரமாக்கி, அவை உறுப்பினராக இருக்கும் வரை வெளியில் வேறு எந்தப் பொறுப்பையுமே வகிக்கக் கூடாது என்று மாற்றி இருக்க வேண்டும்.

அவையில் மக்களாட்சிப் பணியாற்றும் போது, அரசிடம் உரையாடும்போது எந்த விதமான பயமோ (பதவி போய் விடுமோ, கிடைக்காதோ என்று), நன்றியோ (கொடுத்த பதவிக்கு) இல்லாமல் உறுப்பினர்கள் அரசைத் தட்டிக் கேட்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த விதிமுறையின் நோக்கம். பல ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலங்களிலும் இதைக் கண்டு கொள்ளாமலே வாரியத் தலைவர்களாகவும், புதிய புதிய குழுக்களின் உறுப்பினர்/தலைவர்களாகவும், அவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வருவது நடந்து கொண்டு வருகிறது.

இங்கு அரசியலமைப்பு வரையறுத்த உறுப்பினர் பதவி ஏற்றுள்ள இவர்கள் தமது எல்லைகளை தெரியாமல் இருந்தார்கள் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே தெரியாமல் இருந்தாலும், தெரியாமல் செய்தாலும் சட்டத்தை மீறினால் தண்டனை என்பது எல்லோருக்கும் பொருந்தும். தவறு நிகழ்ந்த பிறகு முன் தேதியிட்டு தவறு செய்த அனைவரையும் காப்பாற்ற முயல்கிறது இந்த மசோதா.

மூன்று கோரிக்கைகள்:
1. சட்டத்தை மீறிய அனைத்து நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும்.
2. அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கு விரோதமான இந்த மசோதாவை பொதுமக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
3. அவை உறுப்பினர்கள், அரசுப் பதவி மட்டும் இன்றி வேறு எந்த ஆதாயம் தரும் பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்று சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும்.

6 கருத்துகள்:

நன்மனம் சொன்னது…

//மூன்று கோரிக்கைகள்:
1. சட்டத்தை மீறிய அனைத்து நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும்.
2. அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கு விரோதமான இந்த மசோதாவை பொதுமக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
3. அவை உறுப்பினர்கள், அரசுப் பதவி மட்டும் இன்றி வேறு எந்த ஆதாயம் தரும் பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்று சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும். //

வழி மொழிகிறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

சரியாக சொன்னீர்கள் இன்று சோனியா காந்திக்காக அரசியல் சட்ட மாற்றமா? நாடு எங்கே செல்கிறது?

கசி சொன்னது…

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுபவர்களையும் பிடித்து ஜெயிலில் போடவேண்டும்.

பெயரில்லா சொன்னது…

avanga earn panradhu dhan avangalukku mukkiyam. Idha onnum panna mudiyadhu ayya. Ella problemum namma consititution la dhan irukku. Ambedkar ayya varum edhirgala politicians nallavangala iruppauru na nenaichi dhan constitution construct pannar. Avar ippo irundhirundharunna romba kashta pattiruppar.

Poeple's problem ellam indha politiciangalukku mukkiyam illa. Avanga salary increase panradhu, avanga padhavillaya irukkardhu idhallem pannaradhukku odane bill pass panni amend panniduvanga.

Long Live Democracy.

Bala சொன்னது…

இது மிகவும் வெட்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இந்த சமயத்தில் என் முந்திய பதிவு ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன்.

http://balablooms.blogspot.com/2006/04/blog-post.html

தேர்தல் ஆணையம் ராய் பரேலி தொகுதியில் மே 8 தேதியில் இடைத்தேர்தலை நடத்த ஆணை பிறப்பித்து உள்ளது. இது சாதரணமான ஒரு அறிவிப்பு போல தோண்றினாலும், நிகழ்ச்சி தொடர்வுகள் சற்று வித்தியாசமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.


14ம் மக்களவையின் ஏழாவது அமர்வு பிப்ரவரி முதல் மே வரை.
இந்த தொடர் கடந்த 22ம் தேதி மார்ச் மாதம், 10ம் தேதி மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருமதி. சோனியா காந்தி, தனது மக்களவை உறுப்பினர் பதவியை 23ம் தேதி ராஜினாமா செய்தார் (அதாவது, கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப் பட்ட பின்னர்.)
இப்பொழுது தேர்தல் ஆணையம் (ராஜினாமா செய்த 13 நாட்களுக்குள்) இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது. தேர்தல் தேதி மே 8. முடிவு அறிவுக்கும் நாள் மே 11.
மீண்டும் மக்களவை கூடும் தேதி மே 10.
திருமதி. சோனியா காந்தி மீண்டும் தேர்ந்து எடுக்கப் படுவது திண்ணம்.
மே 11 அல்லது மே 12ல் அவர் மீண்டும் மக்களவை உறுப்பினர் ஆவார்.
ஆக திருமதி. சோனியா காந்தி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே மக்களவை செல்ல மாட்டார்.
இது மாதிரி, இவ்வளவு குறுகிய நாட்களில் முன்னர் எப்பொழுதாவதாவது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தப் பட்டுள்ளதா? இப்பொழுது ஏன் இந்த அவசரம்?

ஏற்கனவே தேர்தல் தலைமை அதிகாரி திரு. நவீன் சாவ்லா, காங்கிரசிற்கு வேண்டப்பட்டவர் என்று ஒரு குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. இந்தச் செயல் அதை நிரூபணம் செய்யாதா?

திருமதி. சோனியா காந்தி இன்னும் ராஜிவ் காந்தி பவுண்டேஷன் தலைமை பதவியை ராஜினாமா செய்ய வில்லை குறிப்பிடத் தக்கது.......

மா சிவகுமார் சொன்னது…

சோனியா காந்திக்காக மட்டும் இல்லை இந்த சட்ட மாற்றம். அறுபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், நூற்றுக் கணக்கான சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த விதியின் கீழ் பதவியை இழக்கும் தவறைச் செய்துள்ளனராம்.

மே 8ல் ரே பரேலி தேர்தல் அறிவித்தது, காங்கிரஸ் கட்சி மற்ற மாநிலங்களில் அடைந்த தோல்விக்கு ஒத்தடம் போட உதவியதாகவும் கொள்ளலாம். தனி மனிதர்களின் சுய நலத்துக்காக அரசு இயந்திரம் செயல்பட ஆரம்பித்து விட்டதன் அவலங்கள் இவை. மக்கள் விழிப்புடன் இருந்து இவற்றைத் தடுக்க வேண்டும். இன்று ஊடகங்களும் அரசியல்வாதிகள், அரசாங்கத்துடன் ஆரோக்கியமற்ற உறவை ஏற்படுத்தி பூசி மெழுகத் தொடங்கிருகின்றன. மிகவும் கவலை தரும் நிலை.