செவ்வாய், மே 16, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 9

சமீபத்தில் நர்மதாவில் அணையின் உயரத்தை ஏற்றுவதை எதிர்த்த மேதா பாட்கரின் உண்ணாவிரதமும், அதற்கு எதிர்ப்பாட்டாக நரேந்திர மோடியின் உண்ணாவிரதமும் செய்திகளில் அடிபட்டது.

காந்தீய உண்ணாவிரதத்தின் விதிகள் என்ன?

எதிராளியை மிரட்ட/ பணிய வைக்க உண்ணாவிரதம் இருக்கக் கூடாது.
தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள, தன்னைச் சேர்ந்தவர்களை மனம் மாற்ற உண்ணாவிரதம் இருக்கலாம்.
யாரை மாற்ற உண்ணாவிரதம் இருக்கிறோமே அவர் மீது பரிசுத்தமான அன்பு இருக்க வேண்டும்.

காந்தியின் உண்ணாவிரதங்கள் எல்லாமே தன் மனதையும், உடலையும் தூய்மைப்படுத்தவோ, இந்திய மக்களை மனம் திரும்ப வைக்கவோ மேற்கொள்ளப்பட்டவை.

நாடெங்கும் ஆலயங்கள் தாழ்த்தப்பட்டோருக்குத் திறக்கப்பட்டது காந்தியின் உண்ணாவிரதம் ஒன்றிற்கு நாட்டு மக்களின் அன்புப் பதிலாகத்தான். கல்கத்தாவின் மதக்கலவரத்தை நடத்தி வந்த முரடர்கள் ஆயுதங்கள் கீழே போட்டது தங்கள் அன்புக்குரிய மகாத்மா உயிரை விட்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான். காந்தியின் கடைசி உண்ணா விரதம், தில்லியிலும், நாடெங்கிலும் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு வழி வகுத்தது.

தான் நினைத்தது நடந்து விட வேண்டும், அடுத்தவன் அழிந்து போக வேண்டும் என்று மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் சத்தியப் போராட்டங்கள் ஆகாது. எதிரியின் மீது அன்பு கொண்டு, அவனது மனம் மாற வேண்டும் என்ற குறிக்கோளோடு நடத்துவதுதான் காந்தி வழியான சத்தியப் போராட்டம்.

அப்படிப் பார்த்தால் மேதா பாட்கரும் காந்தியைப் பின்பற்றவில்லை. மோடியோ வெகு தூரத்தில் உள்ளார்.

9 கருத்துகள்:

வஜ்ரா சொன்னது…

//
எதிராளியை மிரட்ட/ பணிய வைக்க உண்ணாவிரதம் இருக்கக் கூடாது.
//

பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுக்கவேண்டும் என்று இந்திய அரசைப் பணிய வைக்க காந்தியே உண்ணாவிரதம் இருந்த கதை தெரியாதா?

//
மோடியோ வெகு தூரத்தில் உள்ளார்.
//

மேடி ஒரு அரசியல் வாதி, வோட்டுக்காக என்ன வேண்டுமானலும் செய்கிற கோஷ்டி.

Comparision செய்வதற்கு ஒரு தராதரம் வேண்டாமா? மோடியும் காந்தியும் Compare செய்யக்கூடிய பர்ஸனாலிட்டிக்களா? ஹி...ஹி...ஹி!!

மேதா பட்கரை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை ஐயா!! சரியான திருட்டு கோஷ்டி, ஒரு வார உண்ணாவிரதத்திற்குப் பிறகு புஷ்டியாக இருக்கிறார் பட்கர் என்று பலர் கேள்வி எழுப்பியதாகச் செய்தி?!!.

வஜ்ரா ஷங்கர்.

மா சிவகுமார் சொன்னது…

ஷங்கர்,

அது காந்தியின் கடைசி உண்ணாவிரதத்தின் போது நடந்தது. அந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது, பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று வேண்டி அன்று. இந்து முஸ்லீம் நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்று. இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் இந்த கோரிக்கையை வெளியிட்டார் என்று படித்தேன். இந்திய அரசாங்கத்தை காந்தி மிரட்ட வேண்டிய தேவை இருக்க வில்லை. அவர் சித்தத்தை அப்படியே நிறைவேற்ற தயாராக இருந்த நேருவின் கீழான அரசு அது. இந்திய அரசு அவரது எதிரியும் இல்லை.

அவர் தன்னைச் சார்ந்த அரசை மனம் மாற்றத்தான் அந்த கோரிக்கையை வைத்தார். மிரட்ட வேண்டியிருந்தால் பாகிஸ்தான் அரசைத்தான் மிரட்டியிருக்க வேண்டும்.

நான் மோடியையும், பாட்கரையும் இழுத்தது அவர்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றதால்தான். உண்ணாவிரதம் இருந்தாலே காந்தீய வழி என்று பத்திரிகைகள் எழுதி விடும் நிலையில் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயன்றேன்.

அன்புடன்,

வஜ்ரா சொன்னது…

//
மிரட்ட வேண்டியிருந்தால் பாகிஸ்தான் அரசைத்தான் மிரட்டியிருக்க வேண்டும்.
//

மிரட்டியிருக்கவேண்டியது தானே!! காயீதே ஆஸம் கேட்டு மனம் மாறிருப்பாரா? "எமோஷனல் பிளாக் மெயில்" எல்லாம் இந்துக்களிடம் தான். பாவம் அவர்கள் தான் கடைசியில் காந்தியைத் தேச தந்தையாக ஏற்றனர், பாராட்டினர், மகாத்மாவாக்கினர். சிந்து நதியில் காந்தியின் அஸ்தியைக் கூட கரைக்க அனுமதிக்கவில்லை பாகிஸ்தான். (காந்தியின் அஸ்தி உலக நாடுகளில் உள்ள அனைத்து முக்கிய நதிகளிலும் கரைக்கப் பட்டது). முஸ்லீம்கள் மனம் மாற அவர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வி. அதை இன்னும் உணர மருக்கிறது நம்து சோனியா காங்கிரஸ்.

காந்தி உயிருடன் இருக்கும் போது அவரைத் திட்டி தீர்த்த கம்யூனிஸ்டுகள் இன்று காந்திபேரைச்சொல்லி ஏமாற்றிக் கொண்டு திரிகின்றனர். அவர்கள் திட்டுவதர்க்கு ஒரு கோட்சே கிடைத்துவிட்டான். அவனை வில்லனாக்கிவிட்டார்கள்.

நான் கோட்சேக்குக் கொடி பிடிக்கும் இந்து அடிப்படைவாதி என்று நினைக்கவேண்டாம். தன்னிகரில்லாத் தலைவன் காந்தி என்பதில் எனக்கு 100% உடன்பாடு உண்டு. அவரது கொள்கைகள் சில எதிர்மறை விளைவுகள் உருவாக்கியதை சுலபமாக மறைத்துவிடலாகாது.

வஜ்ரா ஷங்கர்.

பிரதீப் சொன்னது…

மகாத்மா காந்தியின் உண்ணாவிரதம் சக்தி வாய்ந்த போராட்டமாக இந்தியாவுக்குப் பலமுறை உதவியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால் சில மாற்றுக் கருத்துகளும் உண்டு என்று கேள்வியுற்றேன். தெரிந்த நண்பர்கள் சொல்லலாம்.

மா சிவகுமார் சொன்னது…

ஷங்கர், பிரதீப்

வலியவன் எளியவனுக்கு இரங்க வேண்டும். பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். மாற்றான் கீழ்த் தரமாக நடந்து கொண்டால் நானும் அப்படி நடப்பேன் என்று இறங்கி விட்டால், இன்றைய தமிழக திராவிடக் கட்சிகள் போலத்தான் ஆகி விடும். இந்தியா - பாகிஸ்தான் இடையே அவ்வளவு வன்முறை நடந்த பிறகு எத்தனை ஆண்டுகள் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரையொருவர் கொன்று கொண்டு இருந்திருப்பார்கள்?

அதைத்தானே பிரிட்டிஷ் ஏகாபதித்திய தலைவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்? பாகிஸ்தானின் சிறுமையால் துணைக்கண்டம் எவ்வளவோ இழந்து விட்டது. இந்தியாவும் அதே வழியில் இறங்கி இருந்தால் நாம் இன்றும் ஆப்பிரிக்க நாடுகளைப் போல ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மக்களைப் பட்டினியில் கொன்றுக் கொண்டு இருந்திருப்போம். மகாத்மா காட்டிய வழி அதைத் தடுத்து நம்மை ஆக்கப் பாதையில் செலுத்தியது என்று நான் நினைக்கிறேன்.

வஜ்ரா சொன்னது…

முதலில் ஒன்று தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

முஸ்லீம்கள், சிறுபான்மையினர் அல்லர். 15% இந்திய மக்கள் தொகை, பல அரபு நாடுகள், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் விட அதிகம்.

அவர்கள் Second majority.

இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள முஸ்லீகள் வெளினாட்டவர் அல்லர். அவர்கள் இந்தியர்கள். இந்தியாவைப் பற்றிய பெருமை அவர்களுக்கும் இருக்கவேண்டும், விவேகானந்தர் ஒரு உன்னத ஆத்மா, என்றால் எத்தனை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வார்கள்?. அரபிய, முகலாயப் பெருமை பேசிக் கொண்டு திரியக்கூடாது. தீவிரவாதக் கூட்டத்தை ஹீரோ வாக்குவது Nauseating.

இது தான் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களின் பிரச்சனை. இதை மரைக்க சிறுபான்மையினர் போர்வை. அதை ஆதரிக்க எப்போதுமே Self-hating இடது சாரிக் கூட்டம்.

ஆங்கில ஏகாத்திபத்தியத்தைப் பற்றி நான் சொல்லவிரும்பவில்லை.

"The Christians created massive poverty in what was a most prosperous country; the Muslims created a terrorised civilization out of what was the most creative culture that ever existed"

நைப்பால் சொன்னது.

வஜ்ரா ஷங்கர்.

வஜ்ரா சொன்னது…

இந்த துடுப்பு

குஷ்வந்த் சிங் அவரது பாணியில் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

வஜரா ஷங்கர்

மா சிவகுமார் சொன்னது…

ஷங்கர்,

விவேகானந்தர் உன்னதமானவர் என்று ஏற்றுக் கொண்டால்தான் ஒருவர் இந்தியராக முடியுமா?
தீபாவளி கொண்டாடினால்தான் ஒருவர் இந்தியரா?
காந்தியை மதித்தால்தான் ஒருவர் இந்தியரா?

நான் நினைப்பதை நீங்களும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் போட எனக்கு உரிமை கிடையாது. அதே மாதிரிதான் முஸ்லீம்களின் நம்பிக்கைகளும். இந்த நாட்டில் வாழ்ந்து, வரி செலுத்தி, அரசியலமைப்பை மதித்து நடக்கும் ஒவ்வொரு குடிமகனும் இந்தியனே. சாதி, மதம், மொழி, இனம் என்று பேதம் பார்க்கக் கூடாது என்பது எனது கருத்து.

மா சிவகுமார் சொன்னது…

குஷ்வந்த் சிங்கின் கட்டுரைக்கான சுட்டிக்கு நன்றி ஷங்கர்.