திங்கள், மே 01, 2006

முத்திரை பதித்த அமெரிக்கர்

இந்தியர்களால் நேசிக்கப்பட்ட மிகச் சில அமெரிக்கர்களில் ஜான் கென்னத் கால்ப்ரைத் ஒருவர் என்கிறது இந்துவில் வெளியாகியுள்ள இரங்கல் செய்தி.

சனிக்கிழமையன்று உயிர் நீத்த கால்பிரைத், அமெரிக்காவின் பிரபலமான பொருளாதார அறிஞர்களில் ஒருவர். 1960களில், கென்னடி ஆட்சியின் போது, இந்தியாவில் அமெரிக்கத் தூதராகப் பணி புரிந்த கால்பிரைத், 1956ல் இந்தியாவுக்கு வந்திருந்த போது, ஒரு சமூகத்தின் வளம் அதிகரிக்க ஆரம்பிக்கும் போது, வணிக நிறுவனங்கள் தேவையற்ற ஆடம்பரப் பொருட்களுக்கான தேவையை விளம்பரங்கள் மூலம் உருவாக்கி சமூகத்தின் வாய்ப்புக் குறைந்த பகுதியினரை புறக்கணிக்கின்றன என்று எண்ணத் தொடங்கினாராம்.

1958ல் வெளியான அவரது வளம் நிறைந்த சமூகம் (The Affluent Society) என்ற நூல் பொருளாதரத் துறையில் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் உணரப்படுகிறது.

தனியார் தொழில்களும், தனி மனிதர்களும் பணக்காரர்களாகி, தமக்கு வேண்டியவற்றை மட்டும் உற்பத்தி செய்து கொண்டிருக்க, பொதுத் தேவைகளான, கல்வி, மருத்துவ வசதி போன்ற சமூகக் கட்டமைப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று இந்தப் புத்தகம் குற்றம் சாட்டியது. Conventional Wisdom என்ற ஆங்கிலச் சொற்றடரை உருவாக்கி இந்த நூலில் முதல் முதலில் பயன்படுத்தினார் கால்பிரைத்.

சமூக மற்றும் பொதுக் கட்டமைப்புகளைப் பெருக்க அரசுகள் முனைந்து செயல்பட வேண்டும். சந்தைப் பொருளாதரத்தில் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகள் எல்லா தேவைகளையும் பார்த்துக் கொள்ளும் என்று இருக்கக் கூடாது என்ற முற்போக்கு பொருளாதாரக் கொள்கைகளை வலியுறுத்தினார் கால்பிரைத்.

அவர் மட்டும் கனடாவில் பிறந்திருக்காமல் இயற்கையான அமெரிக்கக் குடிமகனாக இருந்திருந்தால், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவதற்கான தகுதிகளும், தாக்கமும் கொண்டிருந்தார் என்று சிலர் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை: