போனபெர்ட், காந்தி பற்றி எழுப்பிய வினாக்களுக்கான பதில்கள் இதில் அடங்கியுள்ளன என்று எண்ணுகிறேன்.
QUOTE
1. காந்தி ரெயிலிலிருந்து தள்ளி விட்ட பின்புதான் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் என்பதன் மர்மம் என்ன? இந்த சம்பவம் பற்றிய காந்தியின் சுயசரிதையில் உள்ள அவரது எழுத்துக்களை படித்தால் சில விசயங்கள் புரிபடும்.
அதற்கு முன்பு வசதியான தனது இந்திய இங்கிலாந்து வழ்க்கையில் மக்கள் கஸ்டப்படுவது தெரியாமலேயே இருந்ததின் மர்மம் என்ன?
2. பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் அவர் நிலபிரபுத்துவ(இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமான வார்த்தையில்லை என்று கருதுகிறேன். சிலருக்கு இந்த வார்த்தை பிடிப்பதில்லை) ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது ஏன்?
3. வன்முறையைக்கூட அரசு நடத்தினால் சரிதான் என்று பல நேரங்களில் முரன்பட்டதேன்?
4. சுபாஸ் சந்திர போஸ் தலைமை பதவிக்கு வர விடமால் மிரட்டல் நாடகம் நடத்தியது ஏன்?
5. அம்பேத்காரால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டது ஏன்?
6. நான் ஆய்வு செய்த வகையில் அவர் பிரிட்டிஸாருக்கு தேவைப் பட்ட ஒரு முகமூடி என்பதாகத்தான் தெரிகிறது. when the mask was no more required, that is freedom struggle gone out of the mask, british gave freedom to us. and in this the role of USA should be mentioned.
UNQUOTE
ஒரு மனிதனின் பிறப்பும், வளர்ப்பும் அவனது எண்ணங்களையும் நடத்தையையும் பெரிதும் வழி நடத்துகின்றன.
காந்தி பிறப்பால் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர், பிறந்த சாதியும் உயரந்தது என்று கருதப்பட்ட ் சாதி, தந்தையின் அலுவலின் மூலம் பலவிதமான உயர் நிலை தொடர்புகளும் குடும்பத்துக்கு இருந்தன. சிறுவயதில் வருணாசிரமத்தைக் கடைப்பிடிப்பதில் அவரது பெற்றோரும், சகோதரர்களும் மிகக் கட்டுப்பெட்டியாகவே இருந்து வந்துள்ளனர். விளையாட்டு வயதில் அதைக் கேலி செய்யும் போக்கைத் தவிர, எதிர்ப்புக்கான எந்த அறிகுறியும் காந்தியிடம் காணப்படவில்லை.
உள்ளூரில் சோடை போய்விடுவோம் என்ற பயத்தில் இலண்டனுக்குக் கப்பலேறிய இளைஞனின் முதல் நோக்கம் பாரிஸ்டர் பட்டம் பெற்று பெரிய வக்கீலாகி சம்பாதித்து விட வேண்டும் என்பதுதான். இங்கிலாந்தில் செய்த சோதனைகள் எல்லாம், செலவைக் கட்டுப்படுத்துவதையும், படிப்பை முடிப்பதையும் நோக்கமாகக் கொண்டவையே. இந்தியா வந்து வக்கீல் தொழிலிலும் எந்த விதமான எதிர்காலமும் காணப்படாத நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு மூட்டைக் கட்டிக் கொள்கிறார்.
தென்னாப்பிரிக்காவிலும் ரயிலில் இருந்து வெளியே எறியப்பட்ட போது, தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், இதைச் சகித்துக் கொண்டு வந்த வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாமா அல்லது இதை மாற்ற ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கிறார்.
இவை எல்லாமே காந்தியின் சுய சரிதத்தில் அவரே கூறியவை. இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித் தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.
உண்மையின் தேடுபவராக வாழ்ந்த அவரது பங்களிப்பு இங்குதான் ஆரம்பிக்கிறது. உலகில் என்ன கோளாறு என்பதைப் புரிந்து கொள்ள தனது வாழ்க்கையை சோதனைக் களமாக்கி, தன்னுள்ளே நடக்கும் போராட்டங்களில் வெற்றி பெற்றால்தான் வெளிப் போராட்டங்களை நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய தகைமைதான் அவரை மகாத்மாவாக்குகிறது.
சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு சாதி சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பார்த்து வந்த அம்பேத்காருக்கு கசப்பாக இருந்தது இயற்கையே. காந்தியே சொன்னது மாதிரி, 'ஒரு விவாதத்தில் தன் கருத்தை நிலை நாட்டுமளவுக்கு பலம் இல்லாத தரப்புக்கு அதிக சாதகம் காட்ட வேண்டும்' என்ற முறையில் காந்தி பல இடங்களில் தனது நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்தாலும், அம்பேத்காரின் திட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றே நம்புகிறேன்.
2. எனக்குப் புரிந்த வரை காந்தி போராட்டங்களின் நலிந்தவர்களின் பக்கமே சார்ந்திருந்தார். நில உரிமையாளருக்கு எதிராக ஏழை விவசாயிகளுக்கும், தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக தொழிலாளருக்கும், சாதி இந்துக்களுக்கு எதிராக அரிசனங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர் பல முறை வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார் என்றுதான் என்னுடைய புரிதல்.
3. வன்முறையை எதிர்த்தாலும் ஒரு ஆட்சியின் கீழ் அது தரும் பலன்களை அனுபவித்துக் கொண்டு வாழும் ஒருவருக்கு அந்த ஆட்சிக்கு ஆபத்து வரும்ப் போது அதைக் காக்க ஆயுதம் எடுக்கும் கடமை உண்டு என்ற நம்பிக்கையில் அவர் ஆங்கிலேயர்களின் தரப்பில் சண்டை ஆதரவு திரட்டினார். ஆனால் இரண்டாம் உலகப் போர் வந்த போது, நாஜிக்களுக்கு எதிராகக் கூட ஆயுதம் எடுக்காமல் அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முதிர்ச்சிக்கு (சிலர் சிரிக்கலாம்) போயிருந்தார்.
'காந்தி இல்லாவிட்டாலும், வேளை வந்ததும் இங்கிலாந்து மூட்டை கட்டியிருக்கும், அவரை ஒரு முகமூடியாகத்தான் அரசு பயன்படுத்தியது, அரசின் கைப்பாவைதான் காந்தி' என்ற வாதம் கொஞ்சம் அதிகப்படியாகவேப் படுகிறது.
ஒரு வாதத்துக்கு நேரம் வந்ததும் இந்தியாவை ஆள் முடியாமல் ஊருக்கு ஓடி விட்டார்கள் ஆங்கிலேயர்கள் என்று வைத்துக் கொண்டாலும், காந்தியின் அரசியலால், இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இல்லாமல் சுதந்திர இந்தியா சிதறிப் போயிருக்கலாம்.
4. 'என்ன செய்தாவது, ஹிட்லரையும், சப்பானிய ஏகாதிபத்தியத்தையும் துணைக் கொண்டாவது நமது குறிக்கோளை அடைந்து விட வேண்டும்' என்பது நேதாஜியின் கொள்கை. 'நம் இலக்கை அடைந்த பிறகு நமது வழிகளை மக்களாட்சியாக தனிமனித உரிமையாக மாற்றிக் கொள்ளலாம்' என்பது அவரது எண்ணம். 'நாய் விற்றக் காசு குரைக்காது' என்ற நடைமுறைத் தத்துவம் அவரது.
'எப்படி நம் குறிக்கோளை அடைகிறோமோ அதைப் பொறுத்துதான் பலன்கள் இருக்கும்' என்பது காந்தியின் நம்பிக்கை. 'கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான், வன்முறை மூலம் சுதந்திரம் அடைந்தால் நாம் அமைதியான நாட்டை உருவாக்க முடியாது' என்பது அவரது கொள்கை. 'அன்பால் எதிரியையும் வென்று விட வேண்டும், ஆங்கிலேயரை வெல்ல உதவிக்காக நாசிக்களையும், சப்பானியர்களையும் உதவிக்கு அழைப்பதை விட அடிமைகளாக இருப்பதே மேல்' என்பது காந்தியின் எண்ணம்.
இதனால்தான் நேதாஜி காங்கிரசை வழி நடத்த இரண்டாம் முறை முயன்ற முறை காந்தி தனது எதிர்ப்பினால் அவருக்கு வாய்ப்பை மறுத்தார். நேதாஜி ஒரு ஆண்டு காங்கிரசு தலைவராக இருந்தார் என்பதும், அப்போதும் காந்தி எதிர்த்திருந்தால் தலையாட்டிப் பொம்மையான கட்சி காந்தி சொல்வதையே கேட்டிருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.
22 கருத்துகள்:
வணக்கம் சிவக்குமார்,
ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது ஒரு நிகழ்வு தான் தூண்டுகோலாக இருக்கும் , அசோகருக்கு கலிங்கப்போர்,சித்தார்த்தருக்கு 31 ஆம் வயதில் தான் மூப்பு ,மரணம் எல்லாம் தெரிய வந்து அரண்மனை விட்டு வெளியேறினார். அமெரிக்க கருப்பின மக்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக தான் அடிமை நிலைக்கு எதிராக போராட துவங்கினார்கள்.
ரோசா பார்க்கர் என்ற அமெரிக்க கருப்பின பெண் இது போல நிறவெறியின் காரணமாக பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பின்னரே பெரிய அளவில் போராட்டம் நடத்தி கருப்பர்களுக்கும் பேருந்தில் சம உரிமை வாங்கினார்.
போராட்டக்காலத்தில் ஒராண்டு காலத்திற்கும் மேல் அனைத்து கருப்பினமக்களும் பேருந்து ,ரெயில் போன்றவற்றை பயன்ப்படுத்தாமல் புறக்கணித்தனர். எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்தே போவர்கள். ஏன் ரோசாப் பார்க்கருக்கு அது முன்னரே தோன்றவில்லை எனக் கேள்வி கேட்க முடியுமா?
காந்தியின் செயல் பாடுகள் முழுவதும் சரி என்று சொல்ல முடியாது,அவரும் தவறுகள் இழைத்தவர் தான் ,ஆனால் அவரை மகாத்மா எனப் பார்த்தால் இந்த தவறுகள் பெரிதாக தெரியும்.
இதில் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் அந்த மகாத்மா பட்டத்தை தந்தது நேதாஜி தான் , இந்திய தேசிய ராணுவம் அமைத்து மக்களுக்கு ஒரு வீர உரையாற்றினார் சிங்கப்பூரில் இருந்து வானொலி மூலமாக அப்பொழுது தான் காந்தியை மகாத்மா என விளித்தார்.இது காந்தியுடன் வேறுபாடுகள் ஏற்பட்ட பின்னரே.
காங்கிரஸ் கட்சிக்கே நில சுவாந்தார்கள் கட்சி என்று தான் பெயர், அது காந்தி காங்கிரசில் சேரும் முன்னர் இருந்தே இருக்கும் நிலை.எனவே காந்திக்கும் அந்த பண்பு வந்து இருக்கலாம்.
காந்தி இந்தியா வந்த பிறகு கலந்து கொண்ட முதல் போராட்டமே அகமதாபாத்தில் உள்ள நூற்பாலை தொழிலார்களின் ஊதிய உயர்வு போரட்டமே , உண்ணாவிரதம் இருந்து சம்பளம் உயர்த்தி வாங்கினார்.பின்னர் அவுரி தொழிளாலர்,விவசாயிகளுக்காக போராடினார் அதன் பின்னரே அவர் புகழ் அடைந்தார்.
பின்னர் காங்கிரசில் முழுதும் கலந்த பின்னர் இது போன்ற தொழிளாலர் பிரச்சினைகளை கண்டுக்கொள்வது இல்லை காரணம் காங்கிரசின் போஷகர்கள் எல்லாம் பிர்லா போன்ற தொழிலதிபர்கள் ,நிலப்பிரபுக்கள் என்பதால் இருக்க கூடும்.
பிர்லா நிறைய கட்சிக்காக செலவு செய்துள்ளார், காந்திக்கு பிர்லாவுடன் நல்ல நட்பு உண்டு.அவர் சுடப்பட்டது கூட பிர்லா ஹவுசில் தான் காலம் அவரை மாற்றிவிட்டது எனலாம்.
விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி வவ்வால்.
நீங்கள் கூறுவதில் பெரும்பாலானவற்றுடன்் நான் ஒத்துப் போகிறேன்.
நிலப் பிரபுத்துவ காங்கிரசில் கலந்து காந்தியும் அப்படி ஆகி விட்டார் என்று நான் நினைக்கவில்லை. அப்படி இருந்தால் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் அவரது தலைமையில் நடந்திருக்கவே செய்யாதல்லவா?
மகாத்மா என்ற பட்டம் தாகூரால் 1920க்கு முன்னாலேயே கொடுக்கப்பட்டு விட்டது என்று அறிகிறேன். காந்தியின் சத்தியசோதனையிலேயே (1920 வரையிலான நிகழ்வுகள்) தனது மகாத்மா பட்டம் பற்றி காந்தி குறிப்பிடுகிறார். நேதாஜியின் உரை 1940களில்தானே.
அன்புடன்,
சிவகுமார்
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு. [630]
தன் முயற்சியினால் ஏற்படும் துன்பத்தையும் இன்பமாகக் கொண்டால், பகைவரும் விரும்பி மதிக்கத்தக்க சிறப்பை அடைவான்.
எஸ்கே ஐயா,
குறளில் இல்லாதது எதுவுமே இல்லை என்று பள்ளியில் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். அதைக் கரைத்துக் குடித்து உடனடியாக தொடுத்து விடும் உங்கள் அறிவு மகிழ்ச்சியான வியப்பை அளிக்கிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
வெள்ளை மனத்துடன் எழுதும் தங்கள் எழுத்துகள் ஏற்படுத்தும் பரவசத்தின் வெளிப்பாடே இவை.
மற்றபடி கரைத்தெல்லாம் ஒன்றும் குடிக்கவில்லை!
எது எங்கு இருக்கிறது என ஒருவாறு பரிச்சயப் படுத்தி வைத்திருக்கிறேன்.
அவ்வளவே!
உங்களுக்கே நன்றி!
தொடர்ந்து படிக்க ஆவலாயுள்ளேன்.
இங்கு குடுத்துள்ள சில தகவல்களில் பிழை இருக்க வாய்ப்புள்ளது. அதாவது காந்தியின் ஒரு குறிப்பிட்ட பண்புக்கு சம்பந்தமில்லா எடுத்துக்காட்டு கொடுத்திருக்க
வாய்ப்புள்ளது(மறந்து போய்). காந்திபற்றி ஆய்வு செய்து நீண்ட நாள் ஆகிவிட்டதால் சில சம்பவங்கள் மறந்துவிட்டன. ஏதேனும் தவறுகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் update செய்வேன்.
//தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், //
//இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித்
தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.//
மிகச் சரியாகவே அடையாளம் கண்டுள்ளேர்கள். காந்தியை இயக்கிய இந்த விசயத்தைப் பற்றிய புரிதலை நான் வர்க்க பகுப்பாய்வு செய்யும்
கம்யூனிசம்(இயக்கவியல், வரலாற்று பொருள்முதல்வாதம்) கைகூடிய போதுதான் அடையாளம் காண முடிந்தது.
இதற்க்குப் பிறகுதான் அனேகமாக நானும், நீங்களும் வேறுபட தொடங்குகிறோம். எப்படி என்பதை பின்னால் சொல்லுகிறேன்.
அதற்க்கு முன்னால், தங்களது சமரசமற்ற, தங்களுக்கு புரிந்ததை வெளிப்படையாக சொல்லும் பண்பு என்னை வெகுவாக கவர்கிறது. வாழ்த்துக்கள்.
//உண்மையின் தேடுபவராக வாழ்ந்த அவரது பங்களிப்பு இங்குதான் ஆரம்பிக்கிறது.
உலகில் என்ன கோளாறு என்பதைப் புரிந்து கொள்ள தனது வாழ்க்கையை
சோதனைக் களமாக்கி, தன்னுள்ளே நடக்கும் போராட்டங்களில் வெற்றி
பெற்றால்தான் வெளிப் போராட்டங்களை நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய
தகைமைதான் அவரை மகாத்மாவாக்குகிறது.//
இதை நான் மறுக்கவே இல்லை. இன்னும் இந்த விசயத்தை மனதில் கொண்டுதான் எனது மாப்ளா கலகம் கட்டுரையில் கூட காந்தி பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் இவை ஒரு தனிமனிதனுக்கு நல்ல முன்னுதாரணம். இவை ஒரு நல்ல மனித சமுதாயத்தில் தன்னலம் கருதாமல் சமூகத்தின் நலம் கருதி வாழ்வதற்க்கு நல்ல முன்ணுதாரனம். இவற்றை கட்டாயம் எந்த ஒரு சமூகப் போராளியும், தலைவரும்
தனது பண்பாடாக சுவிகரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவை எந்த காலத்திலும் அடிமைப்பட்ட மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விடாது.
காந்தியின் நேர்மையை அவரது அறிவியல் பூர்வமான சித்தாந்தமில்லா சுய தேடலை
இப்படித்தான் அன்றைய ஏகாதிபத்தியம் தனக்கு முகமூடியாக பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் எனது மாப்ளா கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தேன்: ""பிறகு பாவம் காந்தி நிரந்தர முகமூடி ஆகிவிட்டார்""
இங்கு "பாவம்" என்ற சொல்லை - அவர் ஏகாதிபத்திய சதிகளுக்கு நீங்கள்
அவரிடம் இருப்பதாக(//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது
உயர்ந்த சாதிப் போக்கு//) சொன்ன பல்வேறு நிலபிரபுத்துவ தத்துவ தாக்கங்கள்
காரணமாக பலியானார் - என்பதை உண்ர்ந்து பயன்படுத்தினேன்.
//எனக்குப் புரிந்த வரை காந்தி போராட்டங்களின் நலிந்தவர்களின் பக்கமே
சார்ந்திருந்தார். நில உரிமையாளருக்கு எதிராக ஏழை விவசாயிகளுக்கும்,
தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக தொழிலாளருக்கும், சாதி இந்துக்களுக்கு
எதிராக அரிசனங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கும் ஆதரவாக
அவர் பல முறை வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார் என்றுதான் என்னுடைய
புரிதல்.//
அவர் எப்பொழுதுமே சூழ்நிலைக் கைதிதான்(may be some
exceptional examples be exist). இதை நேரு பல இடங்களில் பதிவு செய்துள்ளார். நேரு கூறுவதை தொகுப்பாக கூறினால் "அவர் எப்பொழுதும் குழப்பமான
மனநிலையில் முடிவுகள் தெளிவாக எடுப்பதில் குளறுபடிகளுடனேயே இருந்தார்" என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
இது மிக எடுப்பாக வெளிவந்தது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அவரிடம்
ஏற்பட்ட தடுமாற்றங்களின் போது. காந்திக்கும் அன்றைய கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தும் இவ்விசயத்தில் சில புரிதல்களுக்கு உதவும்.
அவர் பெரும்பாலான நேரங்களில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடந்துள்ளார் சில நேரங்களில் மக்களின் கடும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளார் (வைக்கம் போராட்டம், தெலுங்கான போராட்டம்- மேலும் பல எடுத்துக்காட்டுகள்
ஞாபகம் இல்லை). ஆனால் மிக பெரும்பாலான நேரங்களில் ஆளூம் வர்க்கத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க சொல்லி மக்களை கேட்கிறார்.
நிலபிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்த நிலங்களை திருப்பி கொடுக்க சொல்லி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். சௌரிசௌரா போராட்டத்தில் துப்பாக்கி சூடு
நடத்த மறுத்த காவலர்களை கண்டித்து, தனது அரசு வரும் பொழூதும் இதே போல்
நீங்கள் அடிபணியாமல் போக வாய்ப்புள்ளது என்று கண்டிக்கிறார். அவர்களுக்கு(57 வீரர்கள்) தண்டனை கொடுத்ததை சரி என்றவர். இவற்றின் மூலம் ஒரு அரசு என்ற அளவில் தானும் கூட வன்முறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்த்துகிறார்.
அவர் என்றைக்குமே existing system-த்தை மாற்றக் கோரியதில்லை. அதாவது நிலபிரபுத்துவ setup-ல் மாற்றம் வருவதை விரும்பவில்லை. அவர் போராட்டத்தில் இறங்க காரணமானதாக நீங்கள் மேற்சொன்ன அதே இயங்கியல் இங்கும் அவரை
உந்தித் தள்ளுகிறது(//தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், //
//இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித்
தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.//)
அவரது பெருமை குலைந்த பொழுது அவர் பட்ட கஸ்டம் போல்தானே மற்ற அந்தஸ்த்தில் கூடியவர்களும்(நிலபிரபுக்கள், பிரிட்டிஸார்) அவர்களிடமிருந்து அந்தஸ்த்து பிடுங்கப்படும் போது பாதிக்கப்படுவார்கள் என்று அவர்
எண்ணியதாலேயே உழைக்கும் மக்களின் அப்படிப்பட்ட போரட்டங்களை அவரால்
ஆதரிக்க முடியவில்லை. அப்படி ஆதரித்தாலும் அது தன்னியல்பான பெரும் மக்கள் பங்களிப்பின் நிர்பந்தத்தால் எடுத்த முடிவுகளாகத்தான் உள்ளன.
அவர் எல்லாவற்றையும் தனது சொந்த அனுபவத்தின் முடிவிலிருந்து நோக்கினார் அதனால்தான் அவரது முடிவுகளை அவரது பிற்போக்கத்தனங்கள்(நீங்களே
குறிப்பிட்ட) ஆளுமை செலுத்தின.
நான் மேலே சொல்லியிருந்தேனே காந்தியை ஆய்வு செய்வதில் உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்று, அது இந்த விசயம்தான்:
அதாவது காந்தியை போராட்டதுக்கு இழுத்த விசயத்தை அடையாளம் கண்ட தங்களால் அதுதான் அவரது ஒவ்வொரு முடிவையும் தீர்மானிக்கும் காரணியாக இருந்ததை கவனிக்காமல் விடுகிறேர்கள்.
3) வன்முறையை ஆதரித்தாக சொல்லுவது அந்த சௌரிசௌரா பிரச்சனையிலும்,
பகத்சிங் பிரச்சனையிலும் அரசு பயங்கரவாதத்தை ஆதரித்ததை. குறிப்பாக
சௌரிசௌரா பிரச்சனையில் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்ற வீரர்களை
கண்டிக்கிறார்.
//காந்தி இல்லாவிட்டாலும், வேளை வந்ததும் இங்கிலாந்து மூட்டை கட்டியிருக்கும்,
அவரை ஒரு முகமூடியாகத்தான் அரசு பயன்படுத்தியது, அரசின் கைப்பாவைதான்
காந்தி என்ற வாதம் கொஞ்சம் அதிகப்படியாகவேப் படுகிறது//
இது உண்மை. அன்றைய வரலாற்றுச் சூழலை ஆய்வு செய்யுங்கள். சந்தைக்கான
பகுதிகள் முற்றிலுமாக ஒரு சில ஏகாதிபத்தியங்களின் கையில் மாட்டிக்கொண்டு.
சந்தைக்கு புதிதாக நாடுகள் இன்றி ஏகாதிபத்தியங்கள் நேரடியான ஒரு
மோதலுக்கான சூழல். இவற்றை அன்றைய லெனினுடைய பல்வேறு புத்தகங்களில்
காணலாம். அமேரிக்கா தனக்கு சந்தையில் பங்கு வேண்டி அரசியல் செய்தது, ரஸ்யா
என்ற தத்துவம் நிதர்சனமான நிலை, ஜப்பானின் வளர்ச்சி, ஜெர்மனியின்
தொழிற்புரட்சி, இந்தியாவில் ஒரு கம்யூனிச எழுச்சிக்கான சூழல் இப்படி
இந்தியாவுக்கு கிடைத்த போலி சுதந்திரத்தில் உலக, உள்ளூர் நடப்புகள்
பெரும்பங்கு ஆற்றுகின்றன.
இதில் காந்தியின் பங்கு நிச்சயமாக நெகடிவ்தான்.
காந்தியின் நடவடிக்கைகள் அனைத்தையுமே தொகுத்துப் பார்த்தால் மக்கள்
போராட்டம் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் இவர் மக்களின் குரலாக முன்வந்து
பிசுபிசுத்துப் போகும் போராட்ட வழிமுறைகளை சொல்லுவார். பிறகு பின்வாங்குவார்
. இதன் மூலம் தற்காலிகமாக மக்கள் மீண்டும் போராடும் மனநிலைக்கு வர
இன்னும் ஒரு 5 அல்லது 10 வருட அவகாசம் கொடுப்பார். இதற்க்காக பல்வேறு
போராட்டங்களில் பிரிட்டிஸ் அரசால் நன்றியுடன் நினைவுகூறப்பட்டுள்ளார்.
காந்தி உண்மையில் சுதந்திரம் என்ற விசயத்தை தள்ளிப் போட்டார். இது காந்தி
என்ற தனிமனிதரை மட்டும் பார்க்காமல் அவரது காலகட்டத்தின் முக்கிய
நிகழ்வுகளை பகுத்தாய்வு செய்தால் புரியும்.
காங்கிரஸ் என்ற கட்சியை ஆங்கிலேயனே உருவாக்கியது ஏன்?
"வெடி மருந்துகள் நிரப்பட்ட பீரங்கி திரி கொழுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக"
அன்றைய பிரிட்டிஸ் அரசு இந்தியாவின் நிலையை சொல்லுகிறதே அப்பொழுது காந்தி
சிறுவன்தான்.
எதிர்ப்பை நிறுவனப்படுத்தி அழிக்கும் பழைய தந்திரம் தான் அது(இன்றைக்கு WSF
அதுபோன்ற ஒரு அமைப்புதான்). பிரிட்டிஸ் அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
இந்தியா தனக்கான அமைப்பை தானே கட்டிக்கொள்ளும் சூழல் அன்று
நிலவியதால். பிரிட்டிஸ் அரசே அப்படி ஒரு அமைப்பை உருவாக்கியது. அதுதான்
காங்கிரஸ்.
காங்கிரஸ் பத்தாத பொழுது பாராளுமன்ற செட்டப், தேர்தல் என்று சலுகைகளை
கொடுத்து கொடுத்து போராட்டத்தை தள்ளிப் போட்ட பிரிட்டிஸ் அரசுக்கு காந்தியும்
அப்படித்தான் பயன்பட்டார் என்பது பல்வேறு போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து சூழல்,
அவற்றை காந்தி சுவிகரித்து நிர்முலமாக்கியதை பார்க்கும் பொழுது தெளிவாக
தெரிகிறது.
முதலுக்கே மோசமாக பம்பாய் தொழிலாளர் கலகம், தெலுங்கானா விவசாயிகல்
கிளர்ச்சி, இரண்டாம் உலக்ப்போரால் பலவீனமான பிரிட்டிஸ் அரசு, அமேரிக்க
பொருளாதார உதவி வேண்டி நிற்க்கும் பிரிட்டிஸ் அரசின் நிலை, சந்தையில் பங்கு
கேட்கும் அமேரிக்கா.....
இச்சூழலில் ஏற்கனவே அவர்களது ஏஜன்டுகளாக, முகமூடிகளாக இருந்த காங்கிரஸ்
பிற்போக்கு கோஸ்டிகளிடம் நாட்டை ஒப்புடைத்துவிட்டு. தங்களது தொடர்
சுரண்டலுக்கு உறுதி செய்துகொண்டு கிளம்பிவிட்டனர்.
(இது பற்றிய எனது ஆங்கில பதிவை பார்க்கவும் அதில் ஒரு தமிழ் கட்டுரை உள்ளது:
http://kaipulla.blogspot.com/2006/06/indian-freedom-and-imperialism.html
//சுதந்திர இந்தியா சிதறிப் போயிருக்கலாம்.//
இது உங்களது கற்பனைதான். ஏனெனில் இந்து, முஸ்லீம் பகையின் ஒரு மூலவேர்
காந்தியிடம் உள்ளது. இதை விலவாரியாக விளக்க அவகாசமில்லை. சுருக்கமாக
பிரித்தாளூம் சூழ்ச்சிக்கு முன்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் முஸ்லீம், இந்து
விவசாயிகள் இணைந்து பல்வேறு கிளர்ச்சிகள் நடத்தியுள்ளனர். தலைவர்கள்
சமூகங்களை உருவாக்குவதில்லை, எந்த ஒரு சமூகமும் தனக்கான தலைவரை
தானே உருவாக்கிக் கொள்ளும்.
4) //நேதாஜியைப் பொறுத்தவரை என்ன செய்தாவது, ஹிட்லரையும், சப்பானிய
ஏகாதிபத்தியத்தையும் துணைக் கொண்டாவது நமது க்உறிக்கோளை அடைந்து விட
வேண்டும் என்பது நேதாஜியின் கொள்கை. நம் இலக்கை அடைந்த பிறகு நமது
வழிகளை மக்களாட்சியாக தனிமனித உரிமையாக மாற்றிக் கொள்ளலாம் என்பது
அவரது எண்ணம். நாய் விற்றக் காசு குரைக்காது என்ற நடைமுறைத் தத்துவம்
அவரது.//
நேதாஜி பிரச்சனையை நான் இன்னொரு முறை திருப்பி பார்க்க வேண்டும். அதில்
நாம் காணும் முடிவு இப்போதய விவாதத்தில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தாது
என்பதால் அதை மூட்டை கட்டிவைக்கிறென்.
ஆனால் காமராசர் விசயத்தில் ராஜாஜிக்கு ஆதரவாக காந்தி செய்ததை எந்த
லிஸ்டில் சேர்க்க. அதில் அவரது மேல்சாதி தாக்கம் வேலை செய்யவில்லை என்று கூறுகிறேர்களா?
மேலும் நீங்கள் சொல்லுவது போல் தீண்டாமை போராட்டத்தை காந்தி
தொடங்கவில்லை. வைக்கம் போராட்டத்திற்க்கு தீர்மானம் இயற்றக்கூட
தாயாராயில்லை அன்றைய காங்கிரஸ்.
அவரது தீண்டாமை எதிர்ப்பும்கூட புற நிலையில் நிலவிய நிர்பந்தத்தால் அவர்
தள்ளப்பட்டதுதான்.
அதனால்தான் எந்த தலித் கட்சியும் காந்தியை தலைவராக சொல்ல
விரும்புவதில்லை.
காந்தி ஒரு தனிமனிதராக நேர்மை, தியாகம், சகிப்புத்தன்மை, இன்ன பிற விசயங்களுக்கு முன்னுதரனமான தலைவர் ஆனால் அவர் சமூக மாற்றத்துக்கான தலைவர் அல்ல. அவரது முடிவுகளை வைத்து இந்தியாவின், உலகின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது.
அசுரன்
//அவரது தீண்டாமை எதிர்ப்பும்கூட புற நிலையில் நிலவிய நிர்பந்தத்தால் அவர்
தள்ளப்பட்டதுதான்.
அதனால்தான் எந்த தலித் கட்சியும் காந்தியை தலைவராக சொல்ல
விரும்புவதில்லை.
காந்தி ஒரு தனிமனிதராக நேர்மை, தியாகம், சகிப்புத்தன்மை, இன்ன பிற விசயங்களுக்கு முன்னுதரனமான தலைவர் ஆனால் அவர் சமூக மாற்றத்துக்கான தலைவர் அல்ல. அவரது முடிவுகளை வைத்து இந்தியாவின், உலகின் எந்த பிரச்சனை//
இன்று தலித், ஹரிஜன், பறையன், பள்ளன், தாழ்த்தப்பட்டவன், பிற்பட்ட ஜாதி என்றெல்லாம் ஒரு இன மக்கள், நம் இன மக்கள், நான் மதிக்கும் மக்கள், இப்படி வந்து பதிவிட முடிவதே அந்த மகானால்தான்!
கத்தியின்றி, ரத்தமின்றி, உலகிற்கே எடுத்துக்காட்டாய், மற்றெல்லா இடத்திலும் புரட்சியின் மூலமே கிடைத்த ஒன்றை, அஹிம்சையின் மூலமே நடத்திக் காட்டிய ஒரு மஹானை, வாய் கூசாமல்,இப்படி ஒரு சொல் சொல்ல முடியும் என்றால், அவன் நிச்சயம் அசுரனாகத்தான் இருக்க முடியும்!
இதை, கிண்டலாகவோ,நகைச்சுவையாகவோ, சொல்லவில்லை.
அசுரன் எந்த உணர்வு நிலையில் சொல்லியிருக்கிறாரோ, அதே நிலையிலிருந்து சொல்கிறேன்.
//காந்தி பிறப்பால் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர், பிறந்த சாதியும் உயரந்தது என்று கருதப்பட்ட ் சாதி, தந்தையின் அலுவலின் மூலம் பலவிதமான உயர் நிலை தொடர்புகளும் குடும்பத்துக்கு இருந்தன//
சிவகுமார்ஜி, இது தான் நான் அவரின் மேல் கொண்ட சளிப்புக்கு காரணம். அவர் தென் ஆப்பிரிக்கா போனது கூட அண்ணனின் சிபாரிசின் மூலம், திறமை, அல்லது நல்ல படிப்பின் மூலமாக அவர் செல்லவில்லை. அப்படி பார்க்கும் போது யாரோ ஒருவருக்கு கிடைக்க கூடிய வாய்ப்பை அவர் தட்டி பறித்திருக்கிறார் அல்லவா.. இது எனக்கு சரியாக படவில்லை.
வணக்கம் கவிதா,
நாம் அறிந்தோ அறியாமலோ எவ்வளவோ தவறுகள் செய்கிறோம். குற்றம் பார்க்கப் போனால் குறையே இல்லாதவர் உலகில் யார்தான் உள்ளார்? குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொள்வோமே. காந்தியின் குறைகளை பல மடங்கு ஈடு செய்யும் அளவுக்கு அவரது பெருமைகள் உள்ளன என்றுதான் அவரை பலர் மகாத்மாவாகப் போற்றினர். இன்றைக்கு காந்தியின் கொள்கைகளை அக்டோபர் 2ல் மட்டுமே நினைவு கூறுமளவுக்கு தள்ளி விட்டாலும், அவர் அமைத்த அடித்தளமே இந்திய நாட்டைச் செலுத்து வருகிறது என்று நான் கருதுகிறேன்.
உங்கள் கருத்துக்களைத் எழுதியதற்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
உங்கள் பாராட்டுதல்களுக்கும் புரிதல்களுக்கும் நன்றி எஸ்கே ஐயா.
அன்புடன்,
மா சிவகுமார்
போனபெர்ட்,
எறிகணைகளாகப் பொரிகிறீர்கள் :-)
தத்துவக் கட்டங்களுக்குள் அடைந்து கொள்ளாமல் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காண்பது என்று உறுதி கொண்டு கொஞ்சம் நிதானமாகப் படியுங்கள், பிளீஸ்.
1. தனிமனிதன் உருப்பட்டால்தான் சமுதாயம் சீரடையும் என்று வாழ்ந்து காட்டியவர் காந்தி. அதனால்தான் அவரை மகான் என்று போற்றுகிறோம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதை அவர் இழுத்துப் பிடித்திருக்கலாம். வெள்ளைப் பிரபுக்கள் போய் பழுப்புப் பிரபுக்கள் ஆள்வதால் இந்திய மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது. என்றைக்கு இந்திய சமுதாயம் தீண்டாமையை ஒழிக்கிறதோ, என்றைக்கு இந்திய நாடு மத வேற்றுமைகளை சண்டையாக்க மறக்கிறதோ, என்றைக்கு இந்திய மக்கள் தமது வாழ்க்கையை தாமே நடத்திக் கொள்ளும் சக்தியைப் பெறுகிறார்களோ அன்றைக்கு பிரிட்டிஷார் ஆள் வேண்டிய அடிப்படையே மறைந்து விடும். ஒருவன் அடிமைப்பட மறுத்து விட்டால் ஆண்டான் என்ன செய்து விட முடியும்.
அங்கிள் டாம்ஸ் கேபின் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா? டால்ஸ்டாயின் போரும் அமைதியில் அன்னிய நெப்போலியனுக்குப் பணிய மறுத்து மாஸ்கோவே காலியான வரலாற்றைப் படித்து பாருங்கள். நமது ஒப்புதல் இல்லாமல் நம்மை யாரும் ஆண்டு விட முடியாது. நாம் மாறி விட்டால் ஆள்பவர் போயே தீர வேண்டும் என்றுதான் காந்தி சமுகச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தினார்.
2. வைக்கம் சத்தியாக்கிரகம் முதலானவற்றில் நீங்கள் எழுதுவதில் பல நடந்ததுக்கு முரணாக உள்ளது என்று நினைக்கிறேன்.
வைக்கம் போராட்டத்தில் காந்தி பெரும்பங்கு ஆற்றி ஒவ்வொரு படியிலும் தனது பணிகளைச் செய்து வந்திருந்தார் என்று சமீபத்தில் படித்தி ஒரு காந்தியின் எழுத்துக்களின் தொகுப்பில் அறிந்தேன்.
3. கார்ல் மார்க்சின் தஸ் கேபிடல் புத்தகத்தை முழுமையாகப் படித்த எத்தனை கம்யூனிஸ்டுகள் உள்ளனர் என்று நினைக்கிறீர்கள்? பொருளாதார, சந்தைப் பொருளாதார, காரணிகளைப் புரிந்து கொள்ளாமல் கம்யூனிசம் பேச முடியாது, போனபெர்ட்.
நான் கம்யூனிசம் பற்றி எழுதிய ஒரு சில பதிவுகளை படித்துப் பார்த்து என்னுடைய பொருளாதாரப் புரிதலில் என்ன தவறு என்று விளக்குங்களேன்.
4. நாம் எல்லோருமே நமது பிறப்பின், வளர்ப்பின், சூழ்நிலைகளின் ஆக்கங்கள்தாம். அதைத் தாண்டி எப்படி மற்றவரைப் புரிந்து கொள்வதில் வெற்றி பெறுகிறோம் என்பதில்தான் நமது மேன்மை இருக்கிறது.
காந்தி அந்த விஷயத்தில் சாதாரண மனிதர்களை விட ் பல படிகள் உயர்ந்திருந்தார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவரது விரல் அசைந்தால் நாட்டின் கோடிக் கணக்கான் மக்களின் ஆன்மா துடிக்கும் நிலை இருந்திருக்கிறது.
இன்னும் நிறைய எழுதுங்கள். எழுதியதை கொஞ்சம் வடிகட்டி வெளியிடுங்கள். கொஞ்சம் காரசாரத்தை, அசுரத்தனமான கருத்துக்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
கட்டபொம்மன்,
1. தாகூரின் திரும்பப் பெறலைப் பற்றி ஏதாவது சுட்டி இருக்கிறதா?
2. வைக்கம் போராட்டத்தில் பிற மதத்தினர் ஈடுபடக் கூடாது என்று சொன்னது சரிதான். ஒரு சமூகத்தின் தவறுகள் உள்ளிருந்தே திருத்தப்பட வேண்டுமே தவிர வெளியார் சுட்டிக் காட்டினால் எதிர்மறை விளைவுகள்தான் பிறக்கும்.
3. கோமாதாவைப் பிரியாணி போடுவது என்றால் என்ன? அது பசு வதை என்றால் அதை காந்தி எதிர்த்தார். ஒன்று மத அடிப்படையில், இரண்டு இந்தியக் குடியானவர்களின் வாழ்க்கைத் துணைவன் என்ற அடிப்படையில் பசுக்களைக் கொல்வதை காந்தி எதிர்த்தார். இரண்டாவது வகையில் பசுக்களைக் கொல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
4. ஜார்ஜ் ஜோசப் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தது பற்றி எனக்கு தெரியாது.
5. காந்தியின் எளிமையும் சரிதான். அம்பேத்காரின் நல்ல உடை உடுப்பும் சரிதான். கொஞ்சம் காந்தியின் எழுத்துக்களை, வரலாற்றை படித்துப் பாருங்களேன்.
6. வன்முறை மூலம் அடையும் எதுவும் நல்ல வழியைத் தராது என்றுதான் காந்தி வன்முறையைத் தவிர்த்த அகிம்சையைப் போதித்தார். அது இயேசு முதல் புத்தரிலிருந்து பல மகான்கள் சொன்ன வழிதான். அதுதான் மனித குலத்துக்கு விடிவை அழிக்கும் என்று நம்புகிறேன்.
7. உங்கள் பெயரைச் சொடுக்கிப் போனால் இன்றைக்குத்தான் பிளாக்கர் கணக்கு தொடங்கியுள்ளீர்கள் என்று தெரிந்தது. காந்தி பற்றி விளக்கங்கள் அளிப்பதற்காகவே கணக்கு தொடங்கியுள்ள உங்களுக்கு நன்றிகள். பெயரையும் ஊரையும் போட்டு வையுங்களேன். உங்கள் பின்னணிகள் தெரிந்தால் விவாதிப்பது எளிதாக இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவக்குமார்,
//தத்துவக் கட்டங்களுக்குள் அடைந்து கொள்ளாமல் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காண்பது என்று உறுதி கொண்டு கொஞ்சம் நிதானமாகப் படியுங்கள், பிளீஸ். //
இது தேவையற்ற விமர்சனம் என்று கருதுகிறேன்.
தத்துவக் கட்டம் என்றால் என்ன? அதனுள் ஏன் அடையக்கூடாது? எப்பொருள் யார் வாயில் கேட்டு நான் மெய்பொருள் காண்கிறேன் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது/வரையறுப்பது? அல்லது அந்த யார் யாரோ சொன்னதை விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டால் மெய்ப்பொருள் காண்பதாகிவிடுமா? இப்படி பல கிளைக் கேள்விகளுக்கு இட்டு செல்லுவதாக் இருக்கிறது.
மாறாக எனது வாதத்தின் அடிப்படை எப்படி தவறு என்று சொல்லுவதுதான் சரியாக இருக்கும்.
அதற்கு முன்பு,
காந்திப் பற்றி மேலும் ஆதாரங்கள் கொடுக்கும் எனது வேலையை மிச்சப் படுத்திய கட்டபொம்மனுக்கு நன்றி.
எதையுமே பரிசிலிக்காமல், சீரணிக்காமல், அசுரன் என்ற ஒரே காரணத்தினால் அவதூறு செய்த SK என்ற போலி அஹிம்சாவாதி, போலி மனிதாபிமானிக்கு, பதில் எதுவும் சொல்ல தோன்றவில்லை. அவர், நான் இங்கு நியயாமாக மக்கள் நலனுக்காக எடுத்து வைக்கும் விசயங்களை உள்வாங்கமலெயே திட்டுகிறார். ஆனால் தேசதுரோக கும்பல் ஒன்று வக்(ஜ்)கிரமாக ஆடாத ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது அங்கு சென்று அவர்களது மோவாய்க்கட்டையை பிடித்துக் கொண்டு கொஞ்சுகிறார். அவர் காந்தி ரசிகராயிருக்கும் இயங்கியலை அம்பலப்படுத்துவது இப்பொழுது எனக்கு முக்கியமில்லாத விசயம். இந்துத்துவ தோல் போர்த்திய ஏதோவொன்று(அந்த ஏதோவொன்று - படிப்பவர்களின் சாய்ஸ்க்கு விடுகிறேன்) என்றளவில் இப்பொழுதைக்கான அவர் மீதான விமர்சனத்தை வைத்து அவரிட்மிருந்து விலகுகிறேன்.
அது இருக்கட்டும்..
முதலில் கம்யுனிசம்(அதாவது மார்க்ஸியம்) பற்றி தங்களது கருத்துக்களை பரிசீலித்து விட்டு அதன் ஊடாக காந்தியத்தில் நீங்கள் செய்கின்ற தவறை சொல்கிறேன்.
பொருளாதார, சந்தை பொருளாதார காரணிகளைப் புரிந்து கொள்ளாமல் கம்யூனிசம் பேசலாம். ஏனென்றால் நீங்கள் சொன்னவை மார்க்ஸ் வியாக்கியானம் செய்த ஒரு அம்சம். அவ்வளவுதான்.
கம்யுனிசம் என்றால் என்ன என்பதை பற்றிய தங்களது புரிதலை நான் சந்தேகப்பட வேண்டியுள்ளது.
கம்யூனிசம் என்பது ஒரு தத்துவம். அதன் மைய இழை இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம். இதன்படி சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்து முதலாளித்துவ சமூகத்துக்கு அடுத்து வருவது சோசலிச சமுதாயம்தான் என்பது சமூக விஞ்ஞானம்.
தங்களுக்கு இயக்கவியல், வரலாற்று பொருள்முதல்வாதம் தெரியுமா? தெரியாது என்றால் கம்யூனிசம் தெரியாது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
கம்யூனிசம் பற்றி படிக்க விருப்பப்பட்டால், தங்களுக்கு நல்ல புரிதலை/அறிமுகத்தை ஏற்படுத்த பின்வரும் புத்தகங்களை படிக்கலாம்:
1) பொதுவுடமைதான் என்ன? - ராகுல் சங்கிருத்தியாயன்
2) அரசும், புரட்சியும் - லெனின்
3) இயக்கவியல் பொருள்முதல்வாதம் - ஸ்டாலின்(கீழைக்காற்று வெளியீட்டகம்)
4) இணையத்தில் dialectic materialism மற்றும் historical materialism என்று டைப் அடித்து தேடி கிடைக்கும் மார்க்ஸிய பக்கங்களை எல்லாம் சாரமாக உள்வாங்குங்கள்.
5) மார்க்ஸிய மெய்ஞானம் - ஜார்ஜ் போலிட்சர்.
6) வாய்ப்பு இருந்தால் "மனித சமூகச் சாரம் - ஜார்ஜ் தாம்சன்"(அரைகுறையாக் படியுங்குள் தற்போதைக்கு).
இவை ஒரு அடிப்படை புரிதலை ஏற்படுத்தும். அதை விடுத்து நேரடியாக கம்யூனிச இலக்கியங்களை படிப்பது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும்.
காந்தி இப்படி எல்லாம் விசயங்களை ஆய்வு செய்து கண்டுபிடித்த தத்துவம் என்று எதுவுமே கிடையாது. அவர் நல்ல ஆத்மா என்பதற்க்காக அவர் நல்ல தலைவர், பிரச்சனைகளுக்கு தீர்வு அவர்தான் என்றெல்லாம் சொல்லுவது toomuch.
ஒவ்வொரு சமூக கட்டங்களையும் இயக்கும் பிரதான முரன்பாடு என்ன? காந்தி எந்த வர்க்கம்? அவரது பின்புலமாக உள்ள சமூக கட்டங்கள் என்ன? அவர் மீது ஆளுமை செலுத்திய தத்துவங்கள் என்ன? அன்றைய காலகட்டத்தின் புரட்சிகர நிலைமைகள் என்ன என்று பல்வேறு விசயங்களை கண்க்கில் எடுத்து ஆய்வு செய்தால் மிஞ்சுவது காந்தி சமூக விடுதலைக்கான ஒரு தலைவர் அல்ல. அவரிடம் தீர்வு என்று சொல்லுவதற்கான விசயங்கள் ஒன்றும் கிடையாது, அவர் சமூகத்தை பின்னுக்கிழுக்க முயற்சி செய்தவஎ என்பதுதான் முடிவாக வருகிறது. மேலும் நீங்களே சொல்லுவது போல் அவரை நிலபிரபுத்துவ பிற்போக்குத்தனம் ஆளுமை செலுத்துகிறது.
காந்தியின் வழியில், ஆளும் வர்க்கம் பிரச்சாரம் செய்வதற்க்கு ரொம்ப சுகமாக இருக்கும். ஏனென்றால், தினப்படிக்கு சோறுக்கு கேரண்டியான ஆட்களுக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. நித்தமும் இந்த சமூகத்தின் வன்முறைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் எமது மக்களை இந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மை மக்களின் மனநிலையை காந்தி எந்த காலத்திலும் உள்வாங்கியதில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அவரது முடிவுகள் எல்லாம் தமது சொந்த அனுபவத்திலிருந்து வந்தவைதான். அதனாலதான் ரொம்ப சுலபமாக வன்புணர்ச்சிக்கு ஆளாகும் பெண்களை அவரால் அவமானப்படுத்த முடிந்தது.
காந்தியின் அஹிம்சாவை நீங்கள் போதனை செய்து கொண்டே இருக்கலாம். ஆனால் இந்த உலகம் தனது இயக்கப் போக்கில் முட்டை உடைந்து கோழிக் குஞ்சு வருமா? அல்லது கூமுட்டையாகுமா? என்ற நிலையை நோக்கித்தான் போய் கொண்டிருக்கிறது.
முட்டையோ, கூமுட்டையோ அது பழைய ஓடுகளை உடைத்துத்தான்/சிதைத்துத்தான் நடக்கும். காந்தி என்ற தனிமனிதரின் விருப்பங்களுக்கு இயற்கை மரியாதை கொடுப்பதில்லை. நாம் அந்த இயற்கையின் இயங்கியலை புரிந்து கொண்டு வினை தொடுப்பதுதான் பகுத்தறிவுக்குகந்ததாக இருக்கும். அப்படி இல்லையேனில் நேர்மையாக வாழ்ந்து இறந்த திருப்தியைத் தாண்டி வேறொன்றும் மிஞ்சாது.
தனிப்பட்ட மனிதரின் நேர்மையைப் பற்றிய அவரது பெருமிதத்தால் இந்த சமூகத்துக்கு ஏதாவது பயன் உண்டா?(அய்யாக்களே, ஒழிந்திருக்கும் திரிபுவாதிகளே, இங்கு நான் "நேர்மை" என்ற விசயத்தை மறுத்து பேசவில்லை. ஆகையால் இந்த வரிகளை இந்த context -வுடன் சேர்த்து புரிந்து கொள்ளவும்).
காந்தியைப் பற்றி மறுபரிசீலனை செய்யவும்.
என்னை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நம்புகிறேன்
இந்த விசயத்தில் இதற்க்கு மேல் விவாதிக்க விருப்பமில்லை.
நன்றி,
அசுரன்
போனபெர்ட்,
நீங்கள் கடைசி வரியில் சொன்னது போல இதற்கு மேல் இதை விவாதிப்பது பலன் தரப் போவதில்லை. நீங்கள் கொடுத்த சுட்டிகளை நேரம் கிடைக்கும் போது படித்து தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
என்னுடைய நோக்கம் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். அதற்கு காந்தி காட்டிய வழிதான் சிறந்த வழி என்று எனக்குத் தோன்றுகிறது. அவரின் தனிப்பட்ட தவறுகள், அவர் செய்த ஒவ்வொரு செயலையும் கீறிப்பார்த்து அவரை காத்து நிற்கும் பணி எனக்கில்லை. என்னுடைய நோக்கத்துக்கு அவர் கடைப்பிடித்த வழிகள், அவரது நம்பிக்கைகள் எவ்வளவு பயன்படுமோ அவ்வளவுக்கு கற்றுக் கொண்டு போவேன். கம்யூனிசத்திலும் எவ்வளவு பயனுள்ளதாகக் கிடைக்குமோ அவ்வளவுதான் எனக்குரிய பற்று.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற உங்கள் நோக்கமும் என்னுடைய நோக்கத்தில் அடங்கியுள்ளதாக நினைக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு வாழும் நிமிடங்களையும் இந்த உலகின் துன்பங்கள், சுயநலம் நீக்கி அமைதியும் மகிழ்ச்சியும் பெருக எனக்குத் தெரிந்த வழியில் செலவழிப்பேன். எதையும் விவாதம் மூலம் நிலை நாட்டவோ, எந்த வரலாற்றுத் தலைவரையும் தூக்கிப் பிடிக்கவோ என்னுடைய நேரமோ முயற்சியோ செலவிடப்படாது.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவக்குமார்,
வாய்ப்பு கிடைக்கும் போது பின்னோரு நாள் ஆக்கப்பூர்வமான பொருதுவோம். :-)))
நன்றி,
அசுரன்
கட்டபொம்மன்,
தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகப் பல தலைமுறைகளாகப் பழகி விட்ட இந்துக்களை மாற்றத்தான் அந்த உண்ணாவிரதம். அவரது அந்த உண்ணாவிரத காலத்தில் நாட்டில் நடந்த உணர்ச்சிக் குவியல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்கள் தீண்டாமையை ஒழித்துக் கட்டி தமது வாயில்களை எல்லோருக்கும் திறந்தன. "ஆசார" மான பல இந்துத் தலைவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள மதித்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்கள்.
கோயிலில் நுழைவதும், ஒப்பந்தங்களும் என்ன மாற்றி விடும் என்று நீங்கள் கேட்கலாம்? ஆனால் நாம் எல்லோரும் பின்னிப் பிணைந்த சமூக அமைப்பில் வாழ்கிறோம். வாள் எடுத்து ரத்தம் சிந்தி உரிமைகளைப் பெற்று விடுவதால் சமூகம் பிளவு பட்டு பொருளாதார முன்னேற்றத்தில் பல படி பின் தங்கிப் போயிருப்போம் நாம். அதைத் தவிர்த்து ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டை விட அதிக மதிப்பைத் தந்து விடும் சமூகக் கணக்கைச் செய்து கொடுத்தது காந்தியின் தலைமை.
காந்தியின் உண்ணாவிரதம் பற்றி நான் எழுதிய என்னுடைய புரிதல்களையும் கொஞ்சம் படித்து விடுங்களேன் பிளீஸ்.
நான் ஏற்கனவே சொன்னது போல விவசாயின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த பசுவையும், காளையையும் வதைக்கக் கூடாது என்பது ஒரு தார்மீகக் கடமை. அதை சமயக் கோட்பாடாக காந்தி வலியுறுத்தியதில் எனக்கும் உடன்பாடு இல்லை. நம் குழந்தைகளுக்கும் நமக்கும் பாலூட்டிய தாயை கொன்று விடக் கூடாது என்ற உணர்வு வளர்க்கப் பட வேண்டும் என்பது சரியாகவே படுகிறது.
இதற்கு தொடர்புடைய, ஆனால் உணவுப் பழக்கம் என்ற வகையில் ஒரு கேள்வி. நீங்கள் உண்மையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுகிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், நான் சீனாவில் வசித்தபோது, மாட்டிறைச்சி சாப்பிட்டால் அது செரிக்க பல மணி நேரங்கள் ஆவது போன்ற உணர்வு. நம்முடைய தட்ப வெப்பத்துக்கும், உணவு பழக்கத்துக்கும் அசைவ உணவு, குறிப்பாக சிவப்பு ரத்த மாமிசம் தேவைதான் என்று நினைக்கிறீர்களா?
பிகு: நான் சீனாவில் ஊர்வன, பறப்பன, நடப்பன , நீந்துவன பல வகைகள் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்.
காந்தியைப் போலில்லாமல் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். காய்கறி உணவுதான் நம் ஆரோக்கியத்துக்கு மிகச் சிறந்தது. புரதம் வேண்டும் என்றால் கடலில் கிடக்கும் மீன் வகைகளுக்குப் போகலாம். வெப்ப ரத்தப் பிராணிகளின் இறைச்சியை உண்பது நமது வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும் ஒவ்வாது என்பதே என்னுடைய அனுபவப் பாடம்.
//நமது ஆயுதத்தை (கத்தியோ, உண்ணாவிரதமோ) நாம் தீர்மானிப்பதில்லை. தீர்மானிப்பது நமது எதிரி.//
எமது கருத்தும் இதேதான்.
அசுரன்
கட்டபொம்மன்,
நம்முடைய விவாதம் இப்படியே சுற்றிச் சுற்றி வரப் போகிறது. காந்தி தன்னிகரில்லாத் தலைவர் என்று நானும், அவர் எதற்கும் உதவாத மேல் வர்க்க அடிவருடி என்று நீங்களும் மாறி மாறி பேசிக் கொள்வோம். திறந்த மனதுடன் விவாதித்தால் உங்கள் நம்பிக்கைகளை நானும் என்னுடைய நம்பிக்கைகளை நீங்களும் புரிந்து கொள்ள முடியும்.
நானும் சென்னையில்தான் இருக்கிறேன். வேண்டும் என்றால் நாம் சந்திக்கலாம். என்னுடைய செல் தொலைபேசி எண் 9884070556. உங்கள் கல்லூரி நேரத்துக்குப் பிறகு ஒரு நாள் நாம் சந்திக்கலாம். என்னுடைய அலுவலகம் வளசரவாக்கம், வீடு ராமாபுரம். நகரத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் வந்து போக சிக்கலில்லை. ஒரு முறை தொலைபேசுங்கள். உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
நண்பர் போனபெர்ட்டும் இதில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார்,
தங்களது வெளிப்படையான அனுகுமுறை மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்கிறது.
நான் உங்களை சந்திக்க ஆவலாகவே உள்ளேன். ஆனால் தற்போதைய சூழல் இடமளிக்கவில்லை.
நம்முடைய விவாதங்களை தனிமடல்களிலோ அல்லது வலைப்பூவிலோ தொடர்வதுதான் தற்போது சாத்தியம்.
பின்பொரு நாள் தங்களை சந்திப்பேன்.
கட்டபொம்மனின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை மடல்களின் விவாதிப்பதாக் முடிவு செய்தால். பின்வரும் வேண்டுகோளை இருவருக்கும் வைக்க விரும்புகிறேன்.
நீங்கள் இருவரும் விருப்பப்பட்டால் உங்களுக்குள் நடக்கும் விவாத மடல்களை எனக்கும் CC: போட்டு அனுப்பவும். வாய்ப்பு கிடைக்கும் போது விவதத்தில் பங்கு பெற வசதியாக இருக்கும், எனக்கும் நிறைய புதிய தகவல்கள் புரிதல்கள் ஏற்படுகிறது. இது எனது வேண்டுகோள்தான். இருவரும் பேசி முடிவெடுக்கவும்.
நன்றி,
அசுரன்.
போனபெர்ட்,
வலைப்பதிவிலேயே விவாதிக்கலாம். தனிமடலில் விவாதிக்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. இது மாதிரி தொலைவில் இருந்து கொண்டு பேசுவது சிரமமாக உள்ளது. நேரில் சந்திக்க முடியவில்லை என்றால் குறைந்தது யாகூ அல்லது ஜிமெயில் சாட்டில் பேசலாம்.
என்னுடைய யாகூ ஐடி : ma_sivakumar
ஜிமெயில் ஐடி: masivakumar
அன்புடன்,
மா சிவகுமார்
கட்டபொம்மன்,
நேரில் சந்திக்க முடியாததில் வருத்தம்தான். விரைவில் வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்.
யாகூ மெயிலில் விவாதிப்பதை விட, சாட்டில் பேசலாம். உங்களை என்னுடை நண்பராக யாகூ மெசஞ்சரில் சேர்க்க செய்தி அனுப்பி உள்ளேன். நீங்கள் அதைப் பார்த்ததும், எனக்கு ஒரு செய்தி அனுப்புங்கள். நாம் நமது உரையாடல் நேரத்தை முடிவு செய்யலாம்.
அன்புடன்,
மா சிவகுமார்
I understand Kattabomman,
My concern was that we can not communicate properly through blogs or email. As there is a time delay/lag and only words to understand respective view points.
If you can not chat, I suggest meeting is the best way Kattabomman. Please let me know when it is convenient to you.
If you do not want to reveal information about yourself or not want to meet me, I would understand.
But would still question how can you bring about changes in society you crave for without making physical efforts :-)
anbudan,
Ma Sivakumar
கருத்துரையிடுக