1997ல் சாங்காயில் கணினி வாங்கியதும் இணையத்தில் தமிழ் என்று தேடியதும் முரசு அஞ்சல் பற்றித் தெரிந்தது. அதை நிறுவி இணைமதி எழுத்துருவில் தட்டச்சு செய்து கொள்ளவும் மின்னஞ்சல் அனுப்பவும் பெறவு செய்து கொள்ள முடிந்தது. அப்படியே தமிழ் டாட் நெட் என்ற மடற் குழுவில் போய்ச் சேர்ந்து விட்டேன்.
பாலா பிள்ளை என்ற மலேசியத் தமிழர் ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து கொண்டிருந்தார். அவரின் முனைப்பில் அவரது செலவில் தமிழ் டாட் நெட் என்ற பெயரைப் பதிவு செய்து அதில் தமிழர் பக்கங்கள், ஒரு மடற்குழு, தமிழ் மென்கருவிகள், மதுரைத் திட்டம் என்று பலவற்றுக்கும் இடம் கொடுத்திருந்தார். இணையத்தில் சமூகங்களை உருவாக்குவது என்று அந்த காலத்திலேயே கனவு கண்ட தீர்க்க தரிசி அவர்.
ஒரு சமூகம் உருவானால் அதை நடத்திச் செல்ல அதில் பங்கேற்பவர்களே முன் வர வேண்டும். அதற்காக யாரும் பள்ளி ஆசிரியர் மாதிரி நடத்திச் செல்ல முடியாது என்பது அவரது போக்கு. தமிழ் டாட் நெட் மடற்குழுவில் மட்டுறுத்தல் கிடையாது. யார் வேண்டுமானாலும், இணைந்து கொள்ளலாம், என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.
மலேசியாவிலிருந்து லோகநாதன் என்பவர் சளைக்காமல் தினமும் நீளமான மடல்கள் அனுப்புவார். ஜெயபாரதி என்ற பெரியவர் சத்தான பல கட்டுரைகளை அனுப்புவார். சிங்கப்பூரிலிருந்து பழனியப்பன், அவரது நண்பர்கள் என்று ஒரு குழு. அமெரிக்கா, கனடாவிலிருந்து சிலர். துபாய், ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து பலர் சுவையான மடல்களை விவாதத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
சென்னையிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே பங்களிப்பு. இந்த மடற்குழுவின் உச்சக் கட்டத்தில் ஐக்கிய அரபு நண்பர்கள் கானல் என்ற பத்திரிகையை ஆரம்பித்து வலையில் வெளியிட்டனர். ஒரு சங்கத்தை ஏற்படுத்தி மாதம் தோறும் சந்திப்பது என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். நண்பர் ஆசிப் மீரானின் முதிர்ச்சியான எழுத்துக்களைப் பார்த்து ஒரு நடுத்தர வயதுக் காரர் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். கடைசியில் நேரில் ஒரு முறை பார்க்கும் போது சின்ன வயதினாராக இருந்தார்.
கத்தாரில் இருந்து சுலைமான் என்று ஒருவர் எழுதுவார். அவரது மடல்களை ஒரு வார்த்தை விடாமல் படித்து விடுவேன். பல முறை படிக்கும்படி மிக சுவையாக எழுதுவார். அவரை பெருசு என்று அவரைத் தெரிந்த மற்ற நண்பர்கள் கலாய்ப்பார்கள். இப்படி ஆரோக்கியமான ஒரு சமூகம் உருவாகியிருந்தது.
முகமூடிகள் என்றும் உண்டு
அங்கும் முகமூடிகள் உண்டு. வேறு பெயரில் எழுதுபவர்களும், மாற்றுப் பெயரிலேயே எழுதுபவர்களும் சேர்ந்து அணிகள் அமைத்துக் கொண்டிருந்தார்கள். பல சங்கடமான விவாதங்களை ஆரோக்கியமாக விவாதிக்க முகமூடி குழு ஒன்று முயன்றது.
வெறுப்பை உமிழும் தமிழரசன் என்பவரின் மடல்கள் சர்ச்சைக்காளாயின. அவருக்கு எதிர்மறையாக சில நண்பர்கள் போட்டி வெறுப்புப் பேச்சை ஆரம்பித்தார்கள். சுரேஷ் குமார் என்பவர் எழுத ஆரம்பித்ததும்தான் பிரச்சனை வெடித்தது. பலர் இந்தச் சூழலில் நாங்கள் இருக்க விரும்பவில்லை என்று ஒதுங்க ஆரம்பித்தார்கள்.
லோகநாதனின் மெய்கண்டார், ஜெயபாரதியின் அகத்தியர் போன்ற தனி யாகூ குழுக்களைத் தொடர்ந்து பழனியப்பன் தமிழ் உலகம் என்ற குழுவை ஆரம்பித்து ஓரளவு மட்டுறுத்தலோடு தமிழ் டாட் நெட் குழுவின் குறைகளைக் களைந்து குழு நடத்த ஆரம்பித்தார். தமிழ் டாட் நெட் களையிழந்து இன்று என்ன நடக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது.
சமூகத்தின் தோல்வி
பாலா எதுவும் செய்வதில்லை என்பது மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஒவ்வொரு மடலுக்கும் நான் உட்கார்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்க முடியாது. சமூகமே குழுக்கள் அமைத்து பரிந்துரை செய்ய வேண்டும், விதி முறைகளை வகுக்க வேண்டும், கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும், என்னுடைய நேரத்தை இதிலேயே செலவிட முடியாது என்று அவரது வாதம்.
அங்கும் 'பாலா எதற்காக இதைச் செய்கிறார். இதற்கு ஆகும் செலவை ஏன் வெளிப்படையாக ஏன் காட்டுவதில்லை' என்று விவாதங்கள் தொடர்ந்தன. இப்படி தனி மனிதரின் செலவில் நடக்கும் இடத்தைப் பயன்படுத்துவதற்கு என்றாவது நாம் விலை கொடுக்க வேண்டியிருக்க வேண்டும் என்ற நெருடல் பலருக்கு இருந்து வந்தது. யாகூ குழுமங்களில் அது மறைந்து விட்டது. நாம் எல்லோரும் இங்கு சமம்தான், என்ற சமூக மனப்பான்மை வந்து விட்டிருந்தது.
ஒரு கட்டத்தில் இந்தக் குழுமங்களில் நேரம் குறைக்க வேண்டும் என்று எல்லாவற்றின் மடல்களையும் படிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டேன். பிற நாடுகளை சேர்ந்த, உலக அளவிலான ஆங்கில மொழியில் இயங்கும் தொழில் நுட்பக் குழுக்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
இணையச் சமூகங்கள்
தமிழாயிருந்தாலும் சரி, பிற குழுக்களிலும் சரி "டீச்சர் இவன் என்ன அடிச்சிட்டான்" என்று அழும் உறுப்பினர்கள் இருக்கவே செய்கின்றனர். என்ன, தமிழ் குழுக்களில் இது கொஞ்சம் அதிகம். இலவசமாக என் காசைப் போட்டுச் சேவை தருகிறேன், அதில் குறை கண்டு பிடிப்பது அழுவாச்சித் தனம் என்ற பாலா பிள்ளை இன்றைக்கு காசி ஆறுமுகம் இவர்களின் போக்கு சமூகத்துக்கு பங்கம் விளைத்து விடுகிறது.
கூகிளின் தேடல் சேவை முதலிலிருந்தே இலவசம்தான். ஆனால் பயன்படுத்துவர்களின் வசதியை நலனை ஒவ்வொரு அடியிலும் மிகக் கவனமாக பார்த்து வளர்த்ததால் இன்று பல கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது. தான் பெற்று வளர்த்த இந்த தமிழ் மணத்தை காசி விட்டுப் போவது தனக்குக் கிடைத்த வரலாற்றுப் பொறுப்பை விட்டு விடுவது போல்தான் ஆகிறது.
அவரின் ஈடுபாடு இல்லாவிட்டால் தமிழ் மணம் வேறு ஒருவரின் கையில் முற்றிலும் போய் விட்டால், தமிழ் மணத்தின் மணம் கண்டிப்பாகக் குறைந்து விடும். காசி மட்டும்தான் இதை நடத்த முடியும், அவருக்கு மட்டும்தான் இதைப் பெரிய நிறுவனமாக மாற்றும் உள்ளறிவு இருக்கும். அதற்கு வெளிப்படையாக சமூக உருவாக்கலில் ஈடுபடலாம், அல்லது கொஞ்சம் மறைத்து வைத்து வணிக நிறுவனமாக உருவாக்கலாம். இரண்டும் செய்ய முடியாது.
உலக அளவிலான தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பங்கேற்கும் சில மடற்குழுக்களிலும் நான் பங்கேற்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு வகை. ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறந்த மூல நிரல் பணிகளும் கூட்டுப் பணிகள்தாம். இவற்றின் வெற்றி தோல்விகளுக்குப் பல காரணிகள் எனக்குப் புரிகின்றன.
- சமூகத்தின் பணிகளை ஒருங்குபடுத்த பயன்படுத்த எளிமையான, வசதிகள் நிறைந்த மென்பொருட்கள். அவற்றைத் தொடர்ச்சியாக மேம்படுத்துதல், குறைகளைக் களைதல், பயன்படுத்துபவர்களுக்கு உதவி செய்தல் என்ற வேலைகளைச் செய்யும் தொழில் நுட்ப வல்லுனர்கள். (காசி, மதி போன்றவர்கள்)
- விவாதங்களில் பரிமாற்றங்களில் வரும் சச்சரவுகளைத் தீர்க்க உறுதியாக பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கும் வழி முறைகள். சில இடங்களில் இது சமூகத்தை உருவாக்கியவரிடமே இருக்கும். சில இடங்களில் சமூகத்தில் புகழ் பெற்ற ஒருவரின் முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அல்லது ஒரு சிலர் ஒன்று சேர்ந்து சச்சரவு தீர்க்கும் முறைகளை வகுத்து நடத்தலாம்.
- சமூகத்தின் வெற்றிக்குத் தேவையான பரிமாற்றங்களில் தீவிரமாக ஈடுபடும் பத்து பதினைந்து உறுப்பினர்கள். தொழில் நுட்ப வல்லுனர்கள் சமூகத்தின் முதுகெலும்பு என்றால் இவர்கள்தான் சமூகத்தின் முகங்கள். இந்த பரிமாற்றங்களைப் பார்த்தே புதியவர்கள், அதிகம் பங்கு கொள்ளாத உறுப்பினர்கள் இங்கு கவரப்படுவார்கள். (துளசி கோபால், போஸ்டன் பாலா போன்றவர்கள்)
தேன் கூட்டில் தமிழ் மணம் மாதிரி விவாதங்கள் அதிகம் இல்லை. 1ஐ ஒரு நிறுவனமே முதலீடாக ஏற்றுக் கொண்டு 3ஐ மட்டும் சமூகத்தின் கையில் விட்டு வைத்துள்ளது.
கூகிளின் தேடுதல் சேவை, பிளாக்கர் சேவை, பல நூற்றுக் கணக்கான மடற்குழுக்கள், பல நூற்றுக் கணக்கான மென் பொருள் உருவாக்கப் பணிகள் நிறுவனம் சார்ந்து இயங்கி வருகின்றன.
இன்னொரு வகையில், ஒரு உறுதியான தலைமையின் கீழ் ஒருவரை ஒருவர் மதிக்கும் பலர் ஒன்று சேர்ந்து தமது திறமைகளை ஒருங்கிணைத்து உலகையே புரட்டிப் போடும் வேலைகளைக் கூடச் செய்து வருகிறார்கள்.
- லினஸ் டோர்வால்ட்ஸ் ஆரம்பித்து நடத்தி வரும் லினக்சு இயங்கு தள உருவாக்கம்,
- விக்கிபீடியா எனப்படும் எல்லோரும் சேர்ந்து உருவாக்கும் கலைக் களஞ்சியம்,
- புராஜெக்ட் குடன்பெர்க் போன்ற மின் நூலாக்கப் பணிகள்,
- அதே மாதிரி தமிழ் மின் நூல்கள் உருவாக்கும் மதுரைத் திட்டம்
என்று தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு செயல்படும் வெற்றிக் கதைகளும் நிறைய உண்டு.
தமிழ் வலைப்பதிவர்கள் எந்த பாதையில் போகப் போகிறோம்?
4 கருத்துகள்:
சிவகுமார்,
இந்த இடுகையை இப்போதுதான் கவனமாக வாசிக்கிறேன். நன்றி.
இதில் தமிழ்மணத்தைப் பற்றிய உங்கள் இன்றைய கருத்து என்ன என்று இற்றைப்படுத்த இயலுமா? இங்கே எழுத எனக்கு சில வரிகள் இருக்கின்றன. அதை உங்கள் இற்றைப்படுத்தலுக்குப்பின் செய்வதே சரியாக இருக்கும்.
வணக்கம் காசி,
இன்றைய தமிழ்மணம் பல தொழில்நுட்ப வழிகளில் முன்னேறியுள்ளது. போன தடவை சென்னை சந்திப்பில் சொர்ணம் சங்கரபாண்டி சொன்னது போல ஒவ்வொருவரும் தமது சொந்த நேரத்தையும் பணத்தையும் போட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதங்கம் என்னவென்றால், ஒரு சமூக அமைப்பை நடத்தும் பொறுப்பு சமூகத்துக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக முன்னேறலாமே என்பதுதான்.
தொழில் செய்யும் உங்களுக்கு நன்கு தெரியும், தெளிவான உறுதியான வெளிப்படையான தலைமை இருந்து வழி நடத்தினால்தான் எந்த ஒரு அமைப்பும் மாற்றங்களை வெற்றிகரமாகச் சந்தித்து, தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வளர முடியும்.
அந்த ஒருங்கிணைப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.
அன்புடன்,
மா சிவகுமார்
பதில் வணக்கம் சிவா:-)
//இலவசமாக என் காசைப் போட்டுச் சேவை தருகிறேன், அதில் குறை கண்டு பிடிப்பது அழுவாச்சித் தனம் என்ற பாலா பிள்ளை இன்றைக்கு காசி ஆறுமுகம் இவர்களின் போக்கு சமூகத்துக்கு பங்கம் விளைத்து விடுகிறது.
கூகிளின் தேடல் சேவை முதலிலிருந்தே இலவசம்தான். ஆனால் பயன்படுத்துவர்களின் வசதியை நலனை ஒவ்வொரு அடியிலும் மிகக் கவனமாக பார்த்து வளர்த்ததால் இன்று பல கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது.//
அதெப்படி நீங்களும்கூட இப்படி சுலபத்தில் 'கூகுள் மட்டும் ஏன் அப்படி தமிழ்மணம்/காசி மட்டும் ஏன் இப்படி?' என்ற சுழலுக்குள் இத்தனை எளிதாய் விழுந்துவிடுகிறீர்கள்? ஹும்:( இரண்டுக்கும் எதாவது கொஞ்சமாவது ஒப்புமை இருக்கிறதா?
//இன்னொரு வகையில், ஒரு உறுதியான தலைமையின் கீழ் ஒருவரை ஒருவர் மதிக்கும் பலர் ஒன்று சேர்ந்து தமது திறமைகளை ஒருங்கிணைத்து உலகையே புரட்டிப் போடும் வேலைகளைக் கூடச் செய்து வருகிறார்கள்.//
எத்தனையோ நல் இதயங்கள் உழைத்தும், மீடியாக்கள் ஆதரவு இருந்தும், பீஷ்மர் தலைமையேற்றும் 'ழ' கணினி ஏன் செத்தது? கொஞ்சம் என் போன்ற விசயம் தெரியாதவர்களுக்கு சொல்லிக் காட்டுங்கள் தெரிந்துகொள்கிறோம்:-)
தொழில்நுட்ப சங்கதிகளை அடிப்படையாகக் கொண்ட சில குழுக்களின் வெற்றியைப் பார்த்து ஆரியம்/திராவிடம், பார்ப்பனர்/அல்லாதோர், இந்திய தேசியம்/தமிழ் தேசியம், இடது/வலது என்று கொள்கைகளால் பிளாந்துகிடக்கும் தமிழ்ச்சூழலுக்கு அந்த உலகளாவிய நுட்பக்குழுக்கள் எப்படி எடுத்துக்காட்டாகமுடியும்? எல்லாவற்றையுமே மேலோட்டமாக அணுகுகிறீர்கள், பொதுமைப்படுத்துகிறீர்கள், வருத்தமாக இருக்கிறது!
வணக்கம் காசி,
//பதில் வணக்கம் சிவா:-)//
கூடவே பதிலுக்கு குத்து குத்து என்று குத்தி விட்டீர்கள் :-)
சீரியசாக காசி, ழ கணினி முயற்சி தோல்வி அடைந்தது தலைமை சரியாக இல்லாமல், சமூகத்தை சரிவர வழிநடத்திச் செல்லாமல் போனதுதான்.
ஏன், கூகிளும், டெபியனும், உபுண்டுவும் மட்டும்தான் சிறிதாக ஆரம்பித்து உலகைக் கலக்க வேண்டுமா?
நாம் ஆரம்பிக்கும் முயற்சிகளும் (தமிழ் டாட் நெட்டும் சரி, தமிழ்மணமும் சரி, நீங்கள் அவற்றோடு
உயர்த்தி விட்டு விட்ட ழ கணினி முயற்சியும் சரி) சரிவர வழி நடத்தப்பட்டு உலகை வெல்லும் திட்டங்களாக உருப்பெறலாமே என்ற ஆதங்கம் எனக்கு.
இது பற்றி தொலைபேசியில் உங்களிடம் பேசுகிறேன். காசி ஆறுமுகம் என்பவர் தமிழ்மணம் என்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒருங்கிணைய வழிவகுத்தார் என்பது வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும். அதற்கு அடுத்த நிலையைத் தொட என்ன செய்யலாம் என்பதைக் குறித்த உரத்த சிந்தனைதான் இந்த பதிவு.
இது உங்களையோ பாலாவையோ தனிப்பட்டு குறை சொல்லும் நோக்கில் எழுதப்படவில்லை. என்னையும் உள்ளடக்கிய தமிழ் சமூகத்தின் குறைகளை எப்படி களையலாம் என்ற அணுகலில் எழுதியதுதான்.
இது உங்களை வருத்தப்படுத்தியிருப்பதற்கு மன்னியுங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக