வெள்ளி, செப்டம்பர் 01, 2006

தொழில் குறிப்புகள்

புதிய தொழில் நடத்துவதில் தனி நபர் நிறுவனமா கூட்டு நிறுவனமா அல்லது, தனியார் பங்கு நிறுவனமா என்ற கேள்வி எழுகிறது. நாங்கள் முதல் வாய்ப்பிலேயே தனியார் பங்கு நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டோம். இதில் பல நன்மைகள் சில சிக்கல்கள்.
  • தனி நபர் நிறுவனமாக இருக்கும் போது நல்ல திறமையான நிர்வாகிகளை, ஊழியர்களை ஈர்ப்பது எளிதல்ல.
    ஒரு ஆளை நம்பித்தான் நிறுவனம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் மனதளவில் சமாதானம் கொடுத்து விடுவதில்லை.

    சிலர் தனி நபர் பங்கு நிறுவனமாகப் பதிந்து கொண்ட பிறகும், நிறுவனத்தில் இயக்குநர்களாக தனது சொந்தக் காரர்களை பெயரளவுக்குப் போட்டு, தனி நபர் நிறுவனமாகவே நடத்தி வருவார்கள்.
  • இயக்குனர்கள் குழுவில் தகுதி வாய்ந்த வெளி ஆட்களைச் சேர்ப்பதன் மூலம் அவ்வபோது நிறுவனத்தில் செயலாக்கத்தைப் பற்றி ஒரு சுதந்திரமான நேர்மையான மதிப்பீடு செய்து கொள்ளலாம். மொத்தம் பன்னிரண்டு இயக்குனர்கள் வரை நியமித்துக் கொள்ளலாம்.

  • நிறுவனத்தில் 50 வரை பங்கு தாரர்களை சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் நம் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன் வரும் போது பங்கு நிறுவனமாக இருந்தால் சட்ட விதகளின்படியும், நடைமுறைகளுக்கும் வசதியாக இருக்கும்.
  1. நான் அனுபவத்தில் கற்றுக் கொண்ட ஒரு பெரிய பாடம், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்(கள்) செய்ய முடியாத, செய்ய விரும்பாத எந்த வேலையும் கண்டிப்பாக நடக்கப் போவதில்லை.
    சம்பளம் கொடுத்து ஆள் வைப்பது என்பது ஓரளவுக்குத்தான் உதவும்.
    ஒன்று தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு அதைச் செய்யும் விருப்பம் இருக்க வேண்டும், அல்லது அத்தகைய விருப்பம் உள்ள ஒருவரை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வர வேண்டும்.

  2. பணம் ஈட்ட வேண்டும் என்ற கட்டாயம்தான் ஒரு நிறுவனத்தின் அடிநாதம். அந்தக் கட்டாயம், அந்த அவசரம் தலைமையிடம் இல்லாவிட்டால் நிலைமை சுணக்கம்தான். வெளியிலிருந்து வந்த பணத்தின் தாங்குதலோ, சுயமாக பணம் ஈட்ட வேண்டும் என்ற உந்துதல் இல்லாத மனப் போக்கோ, வாடிக்கையாளரிடமிருந்து பணம் ஈட்டுவதைப் பின் தள்ளி விடலாம். இதற்கு பல காரணங்களைச் சொல்லிக் கொள்ளலாம்.

    நாங்கள் நீண்ட கால வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறோம். ஒரு சில ஆண்டுகள் லாபம் வராவிட்டால் சகித்துக் கொள்வோம் என்பது முன் அனுபவம் இல்லாது தொழில் நடத்து முயலும் என்னைப் போன்றவர்களின் ஒரு நம்பிக்கை. இது முற்றிலும் தவறு.

    முதல் மாதத்திலிருந்தே நிறுவனத்தின் செலவுக்குத் தேவையான பணத்தை ஈட்ட முடிய வேண்டும். உங்கள் நீண்ட கால கனவு உலகை வெல்வதாக இருக்கலாம். பத்து ஆண்டுகளில் உலகை வெல்வதற்கு இன்று ஒரு வாடிக்கையாளரையாவது வெல்லும் படி ஒரு தீர்வு அளிக்கும் திறமை, முறைமை இருக்க வேண்டும். இல்லை என்றால் பத்து ஆண்டுகள் கழித்தும் இதையேதான் பேசிக் கொண்டிருப்பீர்கள்.

    வாடிக்கையாளருக்குச் சேவை செய்வதுதான் எங்கள் குறிக்கோள். அவரை மகிழ்வித்து விட்டால் அவர் பணம் தராமலா போய் விடுவார் என்பது இன்னொரு வாதம். அவ்வளவு பெரிய மகிழ்ச்சியில் கோடி ரூபாய் கொடுக்கப் போகும் அவரிடம் ஒரு சிறிய அளவில் சேவை மகிழ்ச்சி கொடுத்து ஆயிரம் ரூபாய் வாங்கும் வழியைப் பாருங்கள். ஒருவர் எழுதும் காசோலைதான் அவரது மகிழ்ச்சியின் அளவு கோல். ஒரு நிறுவனத்தின் வருமானம் தான் அது சமூகத்துக்குத் தேவையா என்பதன் வழிகாட்டி.

2 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

முதல் மாசமே நிருவனத்துக்கு வேண்டிய பணத்தை புரட்டுவது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம் என்று நினைக்கிறேன்.வேலையை பொருத்தது.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் குமார்,

என்னுடைய அனுபவத்தில் எதிர்காலத்துக்காக உழைக்கிறோம் என்று முதலீட்டைக் கரைத்துக் கொண்டிருந்தது செய்த பெரிய தவறு. இன்றைக்கு மீண்டும் தொழில் ஆரம்பிக்க முனைந்தால் முதல் மாதங்களிலேயே செலவை ஈடு கட்டும் வரவு இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றுதான் படுகிறது.

சொன்னது போல ஒரு ஆண்டு கழித்து ஒரு கோடி சம்பாதிக்கப் போகும் திறமை ஒரு மாதம் கழித்து ஆயிரம் ரூபாய் கூட ஈட்ட முடிய வேண்டும் :-)

அன்புடன்,

மா சிவகுமா