செவ்வாய், செப்டம்பர் 26, 2006

ஓகைக்கு நன்றி

ஒரு அழகிய பள்ளத்தாக்கு. அமைதியான மக்கள். வெளியிலிருந்து யாரும் அதிகம் வருவதில்லை.
கடவுள் ஒரு இனிய சதி செய்து குவாய்ல என்ற பூச்செடியை அங்கு பரப்பி வைத்திருந்தான்.
அந்தப் பூவை ஒருவர் மற்றவர் மீது எறிந்தால் சிரிப்பு வரும், மகிழ்ச்சி பொங்கும், மனம் மலரும். அதே பூவை பலர் மீது எறியத் தூண்டும்.
இப்படியாக பூ எறி பட்டு எல்லோரும் எப்போதும் சிரிப்புடனும் அன்புடனும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இந்தப் பூ மக்களின் உடைகளில் ஒட்டிக் கொண்டு போய் விழுந்த இடமெல்லாம் புதிதாக முளைக்கும்.
அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் குறைவே இல்லை.

ஒரு நாள் வெகு தூரத்திலிருந்து கண் காணாத இடத்திலிருந்து ஒருவன் இங்கு வந்தான்.
வந்தவனுக்கு இந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் ஆச்சரியமாகவும் கடுப்பாகவும் இருந்தது.

அவர்கள் ஊரில் சௌஹென் என்ற முட்செடிதான் எறிந்து கொள்வது.
அது ஒருவர் மீது பட்டால் மனதுக்கு துன்பமும் எறிந்தவர் மீது கோபமும் பொங்கும்.
பதிலுக்கு அடுத்துக் கண்ணில் படும் நான்கு பேர் மீதாவது அதே சௌஹென் எறியத் தோன்றும்.

இந்த சௌஹென்னும் ஒட்டிக் கொண்டு வளர்ந்து விடும் தன்மை படைத்தது.
இது இருக்கும் இடத்தில் ஒரே வெறுப்பும் அழிவும்தான்.
இது முளைக்கும் இடத்தில் குவாய்ல வளர வழியே இல்லை.

அன்னியன் உடையில் ஒட்டிக் கொண்டு வந்த, அவன் எறிந்த சௌஹென் பள்ளத்தாக்கில் வேலை செய்ய ஆரம்பித்தது.
பழைய கொண்டாட்டங்கள் மறைந்து அடிதடியும் நாசபுத்தியும் ஆட்சி ஏறின.
குவாய்ல எல்லாம் பூண்டறுந்து போயின.
முகங்களில் புன்னகையும் மனங்களில் குதூகலமும் ஒழிந்தன.

ஒரு நாள் கடவுளுக்கு தனது செல்லப் பள்ளத்தாக்கின் நினைவு வந்து போய்ப் பார்த்தால் அலங்கோலம் வரவேற்கிறது.
அவர் மண்வெட்டி எடுத்து சௌஹென் புதர்களை வெட்டி இரவோடு இரவாக எல்லா முட்களையும் தீக்கிரையாக்கினார்.
அதிகாலையில் நகரம் விழிக்கும் முன்னால் குவாய்ல மலர்களை தெருவெங்கும் பரப்பி வைத்தார்.

அன்று முதல் அந்த பள்ளத்தாக்கில் சிரிப்பும் மகிழ்ச்சியும் திரும்பின.
கடவுளின் மனதுக்கு அருகிலான இடமாக சிறப்பு தொடர்ந்தது.

  1. சின்ன வயதில் கேட்ட கதையை நினைவு படுத்தி எழுதியது.
  2. குவாய்ல என்பது சீன மொழியில் மகிழ்ச்சியைக் குறிக்கிறது.
  3. சௌஹென் என்பது வெறுப்புக்கான சொல்.
  4. "புன்னகை மலர்களைத் தூவுங்கள். வெறுப்பு முட்களை எரித்து விடுங்கள்" என்று நினைவுபடுத்திய ஓகைக்கு நன்றி.

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

//"புன்னகை மலர்களைத் தூவுங்கள். வெறுப்பு முட்களை எரித்து விடுங்கள்//

இதோ செஞ்சாச்சு.

எல்லாரும் சந்தோஷமா இருங்கப்பா.

ஓகை சொன்னது…

சிவக்குமார்,

என்ன இப்படி தலைப்பு கொடுத்து என்னை நெளியும்படி செய்துவிட்டீர்கள்?

அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்பது இதுதானோ!

தலைப்பைத் தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு மிக அருமையான பதிவு. நன்றி.

முள்ளும் மலரும் முளைத்தன இயல்பாய்
கிள்ளியிவை எடுக்க கிடைத்தன கரங்களும்
அள்ளி மகிழ்திட அகற்றிக் களைந்திட
தெள்ளிய மதியும் தெளிந்திடக் கிடைத்தது
உள்ளம் சொலக்கேட்டு உயர்வோம் நாமே!!

மா சிவகுமார் சொன்னது…

//எல்லாரும் சந்தோஷமா இருங்கப்பா.//

ஆமென்

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்பது இதுதானோ!//

"இனிய உளவாக இன்னாத கூறல்" என்பதுதான் இன்னும் பொருத்தம்.

நான் சொன்ன விதம் சரியில்லை என்பது உங்கள் பின்னூட்டத்தில் பிடிபட்டது. சொன்ன கருத்தில் மாற்றம் இல்லா விட்டாலும், எதிர்மறையான உணர்வைத் தூண்டியதை சுட்டிக் காட்டிய உங்களுக்கு உண்மையிலேயே நன்றி உணர்ந்தேன்.

அன்புடன்,

மா சிவகுமார்