வியாழன், செப்டம்பர் 07, 2006

உற்பத்திச் சங்கிலிகள் (economics 18)

சரி, இப்போது நிலம், கருவிகள், உழைப்பாளிகள் எல்லாவற்றையும் ஒரு சேர அதிகரிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மூன்று வகையான சாத்தியங்கள் உள்ளன.

1. எல்லா மூலப் பொருட்களையும் இரண்டு மடங்காக்கினால் உற்பத்தியும் இரண்டு மடங்காகிறது.
2. மூலப் பொருட்களை இரண்டு மடங்காக்கினால் உற்பத்தி இரண்டரை மடங்காகிறது.
3. மூலப் பொருட்களை இரண்டு மடங்காக்கினால் உற்பத்தி ஒன்றரை மடங்காகிறது.

  • ஒருவர் ஒரு குடத்தைப் பயன்படுத்தி ஒரு மணி நேரம் வேலை பார்த்தால் முப்பது குடம் தண்ணீர் இறைத்து கொண்டு வர முடியும். இன்னொருவர் அதே போல வேலை பார்த்தால் அவரும் முப்பது குடம் இறைத்து விடலாம். மொத்தம் அறுபது குடங்கள். இது மாறா உற்பத்தி அதிகரிப்பு.

  • இப்போது மூன்றாவது ஒருவர் வருகிறார், அவர் ஒரு திட்டம் வகுத்து தண்ணீர் இறைத்து சுமப்பதற்கு சிறப்பான முறையைச் சொல்லித் தர மூன்று பேர் சேர்ந்து மூன்று குடங்களைப் பயன்படுத்தி மூன்று மணி நேரத்தில் நூறு குடங்கள் இறைத்து விடுகின்றனர். இது அதிகரிக்கும் உற்பத்தி அதிகரிப்பு.

  • இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று விவகாரமான ஒருவரை கொண்டு வருகிறோம். அவர் வந்து குழப்பியதில் இதுவரை செய்து கொண்டிருந்த வேலை சீர் குலைந்து நான்கு பேர் நான்கு குடங்கள் பயன்படுத்தி நூற்றுப் பத்து குடங்கள்தான் இறைக்க முடிகிறது. இது குறையும் உற்பத்தி அதிகரிப்பு.

இரண்டாவதான அதிகரிக்கும் உற்பத்தி அதிகரிப்பு தொழிற்புரட்சிக்குப் பிந்தைய உற்பத்தி துறைகளில் பெரும்பங்கு வகிக்கிறது. எடுத்துக் காட்டாக யுண்டாய் கார் தயாரிக்கும் போது குறிப்பிட்ட அளவு பட்டறை, கருவிகள், தொழிலாளிகள், இடுபொருட்கள் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு நூறு கார் உற்பத்தி செய்யலாம் என்று இருந்தால், எல்லா உள்ளீடுகளையும் இரண்டு மடங்காக்கினால் இருநூறு கார் இல்லாமல் ஐநூறு கார் வரை செய்து விடலாம்.

இதன் முக்கிய ஒரு விளைவு, உற்பத்தியின் அளவு அதிகமாக அதிகமாக கடைசி அலகு உற்பத்திக்கான செலவு குறைந்து கொண்டே போகும். மைக்ரோசாப்டு விண்டோசு இயங்கு தளம் உருவாக்க கோடிக் கணக்கான டாலர்கள் ஆராய்ச்சி, உருவாக்கம், தரக்கட்டுப்பாடு என்று செலவிடப்படுகின்றன. ஆனால் பொருள் தயாரான பிறகு இன்னும் ஒரு குறுந்தகடு பதிந்து விற்பனை ஆகும் செலவு ஒரு சில டாலர்கள்தாம்.

உயர் தொழில் நுட்பமும் விலை உயர்ந்த கட்டமைப்புகளும் தேவைப்படும் துறைகளில் இந்த அளவு தரும் சேமிப்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

ஒரு கார் தொழிற்சாலை கட்டுவதற்கு கோடிக்கணக்கான பணம் செலவிட்டு கருவிகளை அமைப்பது, ஊழியர்களை சேர்ப்பது இவை பல மாத காலம் பிடிக்கும். இந்த பணம் செலவளித்து தொழிற்சாலை அமைந்து விட்டால் ஒவ்வொரு கார் உற்பத்திக்கும் செலவாவது அதற்குத் தேவையான மூலப் பொருட்கள், ஊழியர்களின் நேரம் இவைகள்தாம்.

முதல் வகை செலவு உடனடியாக மாற்றி விட முடியாது. தொழிற்சாலை கட்ட எட்டு மாதங்கள் ஆகுமானால் செலவாகும் தொகையை கூட்டவோ குறைக்கவோ பல மாதங்கள் பிடிக்கும்.. இரண்டாவது வகை செலவை நாளுக்கு நாள் மாற்றிக் கொள்ளலாம். விற்பனை நிலவரத்தைப் பொறுத்து கார்களின் உற்பத்தி எண்ணிக்கையைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

இதனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

  • தொழிற்சாலை கட்டிடத்தின் மீதான ஒரு நாள் செலவு, போட்ட முதலீட்டுக்கான வட்டித் தொகை, சம்பளம் முதலியவை ஒரு மாதத்துக்கு - ரூபாய் 150 லட்சம் (இதை உடனடியாகக் கூட்டவோ குறைக்கவோ முடியாது.)
  • ஒரு கார் செய்ய மூலப் பொருட்கள், மின்சாரம் போன்ற மாறும் செலவுகள் : ரூபாய் 1 லட்சம்.

  1. காரே செய்யா விட்டாலும் முதலில் சொன்ன நிலையான செலவு செய்யத்தான் வேண்டும்.

  2. நாளுக்கு பத்து கார்கள் மட்டும் உற்பத்தி செய்தால் அவற்றின் மீதான மாறும் செலவுகள் - ரூபாய் 10 லட்சம்.
    நிலையான செலவுகள் - ரூபாய் 150 லட்சம்.
    ஒரு காரின் மீதான செலவு 160லட்சம்/10 = 16 லட்சம்.

  3. உற்பத்தி நூறு கார்களாக அதிகரித்தால் இது 250லட்சம்/100 = 2.5 லட்சம் என்று மாறி விடும்.

  4. இதுவே தினசரி ஆயிரம் கார்கள் அதே தொழிற்சாலையில் செய்ய ஆரம்பித்தால் ஒரு கார் மீதான செலவு = 1150 லட்சம்/1000 = ரூபாய் 1.15 லட்சம் என்று ஆகி விடும்.
நிலையான செலவு அதிகமான எண்ணிக்கையிலான உற்பத்தி அளவில் பங்கிட்டு விடப்படுவதால் ஒரு கார் மீதான செலவு குறைந்து கொண்டே போகிறது.

வீட்டில் சமைக்கும் போது நான்கு பேருக்குச் சமைப்பதை விட ஆறு பேருக்குச் சமைப்பதற்கு முயற்சியும் நேரமும் மாறப் போவதில்லை. அரிசியும், காய்கறிகளும் மட்டும்தான் அதிகம் தேவைப்படும்.

2 கருத்துகள்:

பத்மா அர்விந்த் சொன்னது…

சிவகுமார்
உற்பத்தியை அதிகரிக்க மூலப்பொருட்களை அதிகரிப்பதால், மூலப்பொருட்களின் தேவை அதிகமாகி அந்த சந்தை மதிப்பு அதிகரிக்கும். எனவே ஒரு பொருளின் உற்பத்தியை அதிகரிக்கும் முன் உறப்த்தி முடிந்த பின் அந்த பொருளின் தேவை குறையாமல் இருப்பதும் முக்கியம். இல்லை என்றால் தேக்க நிலை ஏற்பட்டு, பொருளின் holding cost அதிகரிக்கும். இங்கே ஆடை நிலைகளில் பருவங்களுக்கு ஏற்றாற்போல மாற்றுவதும் அப்போது விற்காமல் போவதை வைத்திருப்பதைவிட குறைந்த விலைக்கு விற்றுவிடுவதே சிறந்ததாக நினைக்கிறார்கள். ஏனென்றால் அடுத்த சீசன் வரும் முன் பாஷன் மாறலாம். ஏற்கெனவே தயாரிக்கப்பட்டதால் ஆன செலவு ஆனதுதான் (sunk cost).கிடைத்தது ஆதாயம் என்ற நிலை ஏற்பட்டுவிடும். கார் சந்தையிலும் நவம்பருக்குள் புது வருட தயாரிப்பு வந்துவிடும். அதிகமாய் உறப்த்தி செய்வது ஆகும் செல்வை குறைத்தாலும், கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இதனாலேயே தொழிநுட்பம் கொண்ட பொருட்கள் ஆரம்ப நிலையில் அதிக விலைக்கும்(to early adopters and maximize the profit) பிறகு சரியான விலைக்கும் அதன்பின் குறைந்த விலைக்கும் விற்கின்றன.

மா சிவகுமார் சொன்னது…

சரியான கருத்துகள். விவசாய விளைபொருட்களிலும் இதே நிலைமைதான். இன்றைக்கு சந்தை நிலவரத்தை மட்டும் முடிவு செய்யாமல் விவசாயி தன் விளை பொருள் சந்தைக்கு வந்து சேரும் நாளில் என்ன நிலவரம் இருக்கும் என்று கணிக்க வேண்டியிருக்கிறது.

இந்த இடைவெளியில் எடுக்கும் தனது மூலதனத்தை முடக்கும் துணிச்சலுக்கு (risk) தொழில் முனைவோருக்கு ஆதாயம் கிடைக்கும். சில நேரங்களில் கணக்கு தவறாகி இழப்பிலும் முடியும்.

சந்தைப் பொருளாதாரத்தின் ஊக்குவித்தல், தண்டித்தல் (reward/punishment) முறை இதை தீர்மானிக்க உதவும் மிகக் குறைந்த செலவிலான முறை.

அன்புடன்,

மா சிவகுமார்