போட்டிச் சந்தை எப்படி இருக்கும்?
- எண்ணற்ற விற்பனையாளர்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் தனது செலவுகளைக் குறைத்துக் கொண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்பத்தி செய்வார்கள்.
- ஒரு விற்பனையாளரின் உற்பத்தி கூடுவதாலோ குறைவதாலோ அவரைப் பொறுத்த வரை சந்தையின் தேவை மாறி விடப் போவதில்லை.
- இப்படி எல்லோருமே அதிகம் உற்பத்தி செய்தால் விலை சரிந்து விடும் என்பது இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலையோ அதைப் புரிந்து கொள்ளும் திறனோ யாருக்கும் இருக்காது.
- அதனால் தன்னிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு வருவதுதான் விற்பனையாளருக்கு இருக்கும் ஒரே ஆதாயம் அதிகரிக்கும் வழி.
- ஒவ்வொரு அலகு அதிக விற்பனையும் சந்தை விலையை ஈட்ட முடிவதால், அதை உற்பத்தி செய்ய ஆகும் செலவு விலையை விடக் குறைவாக இருக்கும் வரை உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே போகலாம்.
- சந்தை விலையும் கடைசி அலகின் உற்பத்திச் செலவும் சமமாக இருக்கும் நிலையில்தான் ஒவ்வொரு விற்பனையாளரின் உற்பத்தியும் அமையும்.
இப்படி எல்லோரும் தன்னிச்சையாகச் செயல்படும் போது ஒரு சில உற்பத்தியாளர்களின் ஒரு அலகு உற்பத்தி செய்ய் ஆகும் செலவை
விட சந்தை விலை சரிந்து விட்டால், அவர்கள் தமது உற்பத்தியை நிறுத்தி இழப்பை தவிர்ப்பார்கள். விற்கும் விலை அளவைப் பொறுத்து மாறும் செலவுகளை மட்டுமாவது சரிக்கட்டுவது வரை உற்பத்தியும் விற்பனையும் தொடரலாம். அந்தப் புள்ளிக்குப் பிறகு தொழிலை விட்டு விடுவதுதான் இழப்பைத் தவிர்க்கும் ஒரே வழி.
- உற்பத்தி அளவைப் பொறுத்து மாறாத செலவுகள் முழுமையாக ஈடு கட்டப்படா விட்டாலும் ஒரு விற்பனையாளர் தொடர்ந்து தொழில் செய்யலாம். மாறாச் செலவுகளில் ஒரு பகுதியாவது தேறினால் இழப்பில் கூட விற்பனை நடக்கும். இது உடனடிக் காலத்தில்.
- இப்படியே பல நாட்கள் போனால் மாறாச் செலவுகளையும் குறைக்க முயற்சிகள் செய்து விற்பனையை நிறுத்தி விடுவார்.
குறுகிய காலத்தில் விலை மாறினாலும் சந்தைக்கு வரும் பொருட்களின் அளவு சரியான வீதத்தில் மாறி விடுவதில்லை. மாறாச் செலவுகளையும் மாற்ற முடியும் நீண்ட காலப் போக்கில்தான் விலை மாற்றத்தின் முழுத் தாக்கமும் நடைமுறைக்கு வரும்.
7 கருத்துகள்:
யார் கேட்கப் போறாங்களோ என்று நினைத்தேன். நீங்கள் கேட்டு விட்டீர்கள்.
வரைபடம் வரைந்து அதைப் பதிவில் இணைப்பது போன்ற கூடுதல் வேலைகள் ஒரு புறம் இருக்க, இப்பவே பலரும் படிக்க எளிதாக இல்லாமல் இருக்க வரைபடம் எல்லாம் போட ஆரம்பித்தால் இன்னும் விலகல் அதிமாகி விடும் என்று ஒரு சமாதானம். :-)
அன்புடன்,
மா சிவகுமார்
நல்ல பதிவு சிவகுமார். ஆனால் போட்டிசந்தையில் உள்ள பலவீனங்களை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
1. விலை போட்டி: ATT and MCC இரண்டும் இத்தகையை போட்டியில் இறங்கி தங்கள் அடிப்படை இலாபத்தை (long distance)இழந்ததும் இல்லாமல் நிறைய பொதுமக்கள் எந்த ஒரு பிராண்டிற்கும் நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாமல் swingers ஆகி பேரம் பேசியது. இது எல்லா துறைகளிலும் நடக்கிறது.
2. price fixingமுந்தைய கருத்து மக்களுக்கு இலாபம் என்றால் இந்த கருத்து நிறுவனங்களுக்கு. பேசி வைத்து ஒரு விலையை நிர்ணயம் செய்து, எங்கள் விலையைவிட குறைந்த விலையை காட்டினால் உடனே பணத்தை திரும்ப தருகிறேன் என்று சொல்லி, வாடிக்கையாளாரை பேரம் பேசவிடாமலும் மற்ற இடங்களை பார்க்காமலும் வாங்க வைப்பது. இங்கே seller surplus அனைத்தையும் பெறுகிறார்கள்.
3. சீக்கிரமே சந்தக்குள் நுழந்து first mover advantage பெற நிறைய மருந்து நிறுவங்கள், தொழ்ல் நுட்பங்கள் பக்க விளைவுகளை சரியாக ஆராய்ச்சி செய்யாமல் பணபலம் மூலம் அனுமதி பெற்று வருவது மக்களைத்தான் பாதிக்கும்.
இவை எல்லாவற்றையும் விட விறபனை விளம்பரங்கள் இவை செய்யும் நேரடி தாக்குதல்கள், சில மறைக்கப்பட்ட செய்தியோடு வரும் விளம்பரங்கள், உண்மையை சொல்லாமல் விடுவது பொய்யாகாது என்று வரும் செய்திகள் மக்கள் விரும்பாமலே அவர்கள் வீட்டுக்குள் வந்து மூளை சலவை செய்வதிலும் நடக்கும் போட்டி இவை யாவும் போட்டி சந்தையின் விளைவுகளே
நீங்கள் சொல்வது எல்லாமே, போட்டி முழுமையாக இல்லாமல் சில நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி தாமே விலையையும் விற்கும் அளவையும் அமைத்துக் கொள்ளும் வல்லுமை பெற்றிருக்கும் ஆலிகோபோலி சந்தையில் நடப்பவை. முழுமையான போட்டி நிலவும் போது எந்த ஒரு விற்பனையாளரும் அந்த வலிமை இருக்கும் அளவு ஆதிக்கம் செலுத்த முடியாது.
அன்புடன்,
மா சிவகுமார்
//வரைபடம் வரைந்து அதைப் பதிவில் இணைப்பது போன்ற கூடுதல் வேலைகள் ஒரு புறம் இருக்க, இப்பவே பலரும் படிக்க எளிதாக இல்லாமல் இருக்க வரைபடம் எல்லாம் போட ஆரம்பித்தால் இன்னும் விலகல் அதிமாகி விடும் என்று ஒரு சமாதானம். :-)
//
தப்பு தப்பு.. பொருளியல் பாடத்துக்கு வரைபடங்கள் மிக மிக அவசியம். உங்களுக்கு வரைவதில் சிரமம் இருந்தால், என்னிடம் வரைபடத்தைக் கொடுங்களேன்.. வரைந்து கொடுக்கத் தயார் தான்..
பத்து வரிகளில் நீங்கள் சொல்ல வரும் விஷயங்கள் ஒரே ஒரு வரைபடம் சுலபமாகச் சொல்லிவிடும்..
வரைபடம் எளிதாக விளக்கி விடும் என்பதில் உடன்படுகிறேன். உங்கள் உதவியையும் வாங்கிக் கொள்கிறேன். நன்றி.
ஒரே ஒரு நெருடல். புத்தகங்களிலோ, வலை மனைகளிலோ சமன்பாடுகளோ வரைபடங்களோ தென்பட்டால் ஓடியே போய் விடுவர்கள் நிறைய பேர் என்று எங்கோ படித்தேன். புகைப்படங்கள் கவர்ந்திழுக்கும், ஆனால் வரைபடங்கள்....
அன்புடன்,
மா சிவகுமார்
இல்லை இல்லை சிவகுமார், பொதுவாக, எந்த வகையான presentation-இலும், வரைபடங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நான்கு குறுக்குக் கட்டங்கள், அதில் உள்ள எண்கள், புள்ளிவிவரம் எல்லாம் படித்தும் தெளிவாகாததை, ஒரே ஒரு வரைபடம் (லைன் க்ராப்) சொல்லிவிடும்.
இந்த பொருளாதாரத் தொடர் ஏதோ பாட திட்டத் தொடர் மாதிரி தான் இருக்கிறது. (ஒரு விதத்தில் என் இப்போதைய பரிட்சைகளுக்கு உதவும் என்பதற்காகவே இதை இப்போது படிக்கத் தொடங்கினேன் எனலாம். )
பாடங்கள் என்று வந்துவிட்டால், வரைபடங்கள் மிக முக்கியம். அதிலும் நீங்கள் சொல்லும் பல தத்துவங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படித்திருக்கக் கூடிய என் போன்றவர்களுக்கு இந்த வரை படங்கள் அதிக வசதியாக இருக்கும்.
பொன்ஸ்,
//இல்லை இல்லை சிவகுமார், பொதுவாக, எந்த வகையான presentation-இலும், வரைபடங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.//
அதில் கருத்து வேறுபாடே இல்லை.
என்னுடைய நோக்கம் ஒரு பாடப் புத்தகம் போல இல்லாமல் கதை படிப்பது போல எழுத வேண்டும் என்பதுதான். அதனால்தான் பாடப்புத்தக தோற்றத்தைத் தவிர்க்க நினைத்தேன்.
அதில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது :-)
(//இந்த பொருளாதாரத் தொடர் ஏதோ பாட திட்டத் தொடர் மாதிரி தான் இருக்கிறது.//)
எப்படியோ உங்களுக்கு உதவுகிறதே!
//என் போன்றவர்களுக்கு இந்த வரை படங்கள் அதிக வசதியாக இருக்கும்.//
நேரம் கிடைக்கும் போது அவற்றையும் சேர்த்தே விடுவோம். குறைந்த பட்சம் சுட்டிகளையாவது கொடுக்க முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக