ஆறு ஏழு வயதிருக்கும் போது எனக்கு நாம் செத்தால் யார் யார் எப்படி நடந்து கொள்வார்கள் என்று பார்க்கும் ஆசை வந்தது. மதிய வேளைகளில் செத்து விட்டது போலக் கிடக்க முயற்சி செய்வேன். செத்துப் போனால் மூச்சு வராது, கண்கள் மூடியிருக்கும் என்று புரிந்தது. கண்கள் மூடியிருக்கக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அண்ணனிடம் பேச்சு கொடுத்ததில் சிலர் கண்கள் திறந்த படியும் இறந்து போகிறார்கள் என்று தெரிந்தது. பல முறை நான் செத்து விட்டது போலக் கிடப்பதாக நினைத்து படுத்துக் கிடப்பேன். யாராவது வந்து பார்க்கும் வரை பொறுமை இல்லாமல் எழுந்து விடுவேன், அப்படியே வந்து விட்டவர்களும் யாருமே நான் செத்து விட்டேன் என்று அழுது புலம்ப ஆரம்பித்து விடவில்லை. பகல் நேரத்தில் ஏன் கிடத்தி வைத்திருக்கிறது என்று திட்டுகள்தான் மிச்சம்.
எனக்கென்னவோ சாவைப் பற்றி அவ்வளவு வருத்தங்களோ அதன் தாக்கத்தைப் பற்றிய புரிதல்களோ இருந்ததேயில்லை. மிகச் சமீப காலங்கள் வரை யாரோ ஒருவர் போய் விட்டால் அப்படியா என்று கேட்டுக் கொள்ளும் போக்கே இருந்தது. அந்த இழப்புகளின் சோகம் எனக்கு புரியவேயில்லை. சின்ன வயதில் ரயில் விபத்தில், வங்க தேச புயலில் இத்தனை பேர் செத்தார்கள் என்று வரும் போது நாளுக்கு நாள் அந்த எண்ணிக்கைகள் ஏறும் போது அதில்தான் ஆர்வம் இருக்குமே ஒழிய இழப்புகளின் கொடிமை மனதில் பட்டதே இல்லை.
மூன்று நான்காம் வகுப்பு படிக்கும் போது பக்கத்து வீட்டுப் பாட்டி இறந்து விடவே (வயதாகித்தான்), இறந்த உடலைப் பார்த்ததே இல்லை என்று அம்மாவிடம் அனுமதி கேட்டு விட்டு போய்ப் பார்த்து விட்டு வந்தோம். வாழ்ந்த போது இருந்ததை விட பெரிய வேறுபாடுகள் தெரியவில்லை.
அப்புறம் என் தாத்தா முதலிலும் அப்புறம் சில ஆண்டுகள் நோயில் கிடந்து ஆத்தா (பாட்டி)யும் போய்ச் சேர்ந்த போதும் எந்த வருத்தங்களும் ஏற்பட்டு விடவில்லை. வயதாகி விட்டது போய்ச் சேர்ந்து விட்டார்கள் என்ற ஒரு போக்குதான்.
முதல் முறை சாவு ஒன்று என்னைத் தாக்கியது என் சித்தப்பா மனைவி இறந்த போது. சாங்காயில் நான் இருந்த போது சேதி வந்தது. முதலில் வழக்கம் போலத் துடைத்துப் போட்டு விட்டேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு அதன் தீவிரம் மனதில் இறங்கியது. இனிமேல் சித்தப்பா வீட்டுக்குப் போனால் சித்தி இருக்க மாட்டாள். அவளை இன்மேல் பார்க்கவே முடியாது என்று உண்மை மெல்ல மெல்ல உறைத்தது. அப்போதுதான் ஒரு இறப்பின் சோகங்கள் புரிய ஆரம்பித்தன எனலாம் (அதற்குள் இருபதுகளின் பிற்பகுதியில் இருந்தேன்.).
அதன் பிறகு குழந்தைகள் பிறந்த பிறகு, ஒவ்வொரு வாழ்வின் அருமையையும் உணர்ந்த பிறகு, சுனாமியின் போது தப்பி ஓடி வந்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் புலம்பலுக்கிடையேயான முகத்தைப் பார்த்த போது வாழ்வின் பெருமையும் மரணத்தின் உண்மையான தாக்கங்களும் புரிந்தன.
கதைகளிலும் திரைப்படங்களிலும் மரணங்கள் என்னை ஆழமாகப் பாதித்தன.
பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் மாறாத இளமைத் தோற்றம் வேண்டுமென்றால் இள வயதிலேயே இறந்து விட வேண்டும் என்று சொன்னாலும் அவன் கொல்லப்பட்டபோது சூழ்ந்த இருள் என் மனதிலும் சூழ்ந்தது.
மெல்லத் திறந்தது கதவு என்ற திரைப்படத்தில் அமலா புதை குழியில் மாட்டிக் கொண்டு மூழ்குவதை ஒவ்வொரு அங்குலமாகக் காட்டியிருப்பார்கள். அந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்த பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு தூக்கமும் சரியாக வரவில்லை, சாப்பாடும் இறங்கவில்லை.
8 கருத்துகள்:
சிவகுமார்,
நன்றாக எழுதியுள்ளீர்கள்..
உணமையில் உங்கள் பதிவுகள் எல்லாமே நன்றாக உள்ளது..
என்னால் பல நேரங்களில் பின்னூடமிட முடிவதில்லை.. மன்னிக்கவும்..
தொடரட்டும் உங்கள் பணி..
நானும் ரொம்ப நாள் வரை இப்படித்தான் இருந்திருக்கிறேன் சிவகுமார். எப்படி இவர்கள் அழுகிறார்கள் எனத் தோன்றும். அதிலும், நமக்கு நெருக்கமானவர்கள் இறந்து, அப்போது நமக்கு அழுகை வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்றெல்லாம் யோசிப்பேன்!
ஆமாம்... தேன் கூடு போட்டிக்கு இதை அனுப்பிவிட்டீர்களா? ஆனாலும் நீங்க ரொம்ப லேட்டுங்க. ரெண்டுமாசம் கழிச்சா எழுதறது?! ;)
போட்டிக்கா? எதை என்று அனுப்புவது?
நேற்று இவரோட "முதல் நூறு பதிவுகள் என்று தலைப்பை பார்க்க நேரிட்டது, அதைப்பாருங்க!!
இன்னும் அந்த பிரமிப்பு தீரவில்லை.
படித்து முடிக்க இன்னும் பல நாட்கள் ஆகும்.
//அவளை இன்மேல் பார்க்கவே முடியாது என்று உண்மை மெல்ல மெல்ல உறைத்தது. அப்போதுதான் ஒரு இறப்பின் சோகங்கள் புரிய ஆரம்பித்தன எனலாம் (அதற்குள் இருபதுகளின் பிற்பகுதியில் இருந்தேன்.)//
உண்மை தான். நானும் இதை உணர்ந்திருக்கிறேன். சிறு வயதில் அப்பாவைப் பெத்தப் பாட்டி இறக்கும் போது ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கவில்லை. அந்தப் பிரிவின் உண்மையான தாக்கத்தை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. இனிமேல் அவங்களைப் பாக்க முடியாது அவங்களோட அன்பு நமக்கு கிடைக்காது என்பது ஏனோ அப்போது எனக்கு உரைக்கவே இல்லை. வயது ஆக ஆக உறவுகளின் மீது ஒரு பற்றும், அவை தரும் பாதுக்காப்பு குறித்து ஒரு மகிழ்ச்சியும் மனதில் உண்டாகத் துவங்கியது. அதே சமயம் ஒருவரின் இறப்பின் வாயிலாக அறியும் பிரிவினால் மனம் மீளாத் துயர் கொள்கிறது. அதே போல் திரைப்படங்களில் உணர்ச்சி மிகுந்த காட்சிகளைப் பார்த்து தந்தையார் கண்கலங்குவதைப் பார்த்து பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். இப்போது ஒரு மகாநதியையோ, ஒரு அழகியையோ இல்லை ஒரு அன்பே சிவத்தையோ கண்டு என் கண்கள் கலங்கும் போது தான் அது ஏன் என்று உணருகிறேன். இது தான் அனுபவம் தரும் முதிர்ச்சியோ என்னவோ?
வாங்க சிவபாலன்,
நன்றி.
நான் கூடத்தான் உங்கள் பதிவுகள் பலவற்றைப் படித்து இதுவரை பின்னூட்டம் இட்டதேயில்லை. :-)
அன்புடன்,
மா சிவகுமார்
அருள்,
நம்ம இரண்டு பேரின் மன ஓட்டங்கள் பலவற்றில் ஒரே போல இருந்துள்ளன. இன்றைக்கு திருட்டு பற்றி நீங்கள் எழுதியுள்ளதையும் சேர்த்துச் சொல்லுகிறேன். :-)
//ஆனாலும் நீங்க ரொம்ப லேட்டுங்க. ரெண்டுமாசம் கழிச்சா எழுதறது?!//
இதை நான் எழுதியது இரண்டு மாதம் முன்னால்தான். பதிக்கும் அளவுக்கு நிறைவு இல்லை என்று போட்டு வைத்து போன வாரம் பார்க்கும் போது சரி என்று போட்டது :-). முதலில் எழுதிய போது ஆரம்ப வரிகள் கீழே:
"மரணம் பற்றிய தேன்கூடு போட்டிக்கு ஆக்கங்கள் குவிந்துள்ளன. அது சிறுகதை/கவிதைப் போட்டியாக இருப்பதால் அதில் சேர்ந்து கொள்ள முடியா விட்டாலும், மரணம் பற்றிய என்னுடைய அனுபவங்களை எழுதிகிறேன். எப்படியும், நான் பதியத் தயாராகும் முன் போட்டிக்கான கடைசி நாள் முடிந்து போய் விடும்."
அன்புடன்,
மா சிவகுமா
//இது தான் அனுபவம் தரும் முதிர்ச்சியோ என்னவோ?//
கைப்புள்ள,
கண்டிப்பாக அனுபவம் தரும் முதிர்ச்சிதான் இது. இன்னொரு பக்கத்தில் இதுதான் முதிர்ச்சி அளிக்கும் அனுபவம், இல்லையா? :-) (இதுதான் விசு குழப்பம்)
அன்புடன்,
மா சிவகுமார்
குமார்,
அந்த நூறில் பாதிக்கு மேல் எனக்கே திருப்தி தராதவை. அப்புறம் திட்டாதீங்க :-)
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக