வெள்ளி, செப்டம்பர் 01, 2006

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு

ஜூலை 6 இந்து நாளிதழில் எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள் இரண்டாவது பசுமைப் புரட்சியின் தேவை பற்றி எழுதியிருக்கிறார்.

மதுரா சுவாமிநாதன் இன்றைய (செப்டெம்பர் 1) இந்து நாளிதழில் அரசின் அலட்சியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் பற்றி எழுதியிருக்கிறார்.

இந்த ஆண்டும் வெளி நாட்டிலிருந்து கோதுமை இறக்கு மதி செய்ய வேண்டியிருக்கும் நிலைமை கவலை தரக்கூடியது. பாதிக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் நம் நாட்டில் நமக்குத் தேவையான உணவு தானியங்களை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியாமை அரசின் தவறான கொள்கைகளால்தான் என்று கூறலாம். உழவர்களுக்கு சரியான விலை கொடுத்து கோதுமை வாங்கிக் கொள்ளாமல் (குவின்டாலுக்கு 750 ரூபாய்), இதே அரசு வெளி நாடுகளிலிருந்து குவின்டாலுக்கு 1000 ரூபாய் கொடுத்து இறக்குமதி செய்ய முன் வந்துள்ளது.

அதே ஆயிரம் ரூபாய் விவாசாயிகளுக்கு விலையாகக் கொடுக்கப்பட்டால், பயிரிடும் பொருளாதாரக் கணக்கு மாறி உற்பத்தி அதிகரிக்கும் நிலை ஏற்படாதா?

சுவாமி நாதனின் கட்டுரையில், வியாபாரிகளையும், பொதுச்சந்தையையும் நம்பியிராமல் கிராமங்கள் தோறும் தானியக் கிடங்குகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதை உள்ளூர் மக்களே நிர்வகிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். குறைந்த பட்சம் சில கிராமங்களின் ஒன்றிய நிலையில் உணவு தானியக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமாக தமது விளைபொருட்களை விவசாயிகள் சேமித்து அரசுத் திட்டங்களுக்கும் பொது விநியோகத்துக்கும் பயன்படுத்தலாம்.

விளைச்சல் முடிந்ததும், குறிப்பிட்ட விலையை விவசாயிக்கு அரசு அளித்து, தானியங்களை உள்ளூர் கிடங்குகளில் சேமிக்க வேண்டும். மறைமுகமாக இத்தகையக் கிடங்குகளுக்கு வங்கிக் கடன் அளிப்பதும் மூலமும் செய்யலாம். அந்த வட்டாரத்தில் தேவைப்படும், உணவுக்கு வேலை, நியாய விலை விற்பனை போன்ற தேவைகளுக்கு இங்கிருந்தே தானியங்கள் அனுப்பப்பட வேண்டும்.

தனியார் வியாபாரிகள், தரகர்கள் விவசாயிகளின் தேவைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு சரியான விலை கொடுக்காமல் பொருட்களை வாங்கிச் சென்று விடுவதைத் தடுக்க இத்தகைய கிடங்குகள் மூலம் குறைந்த பட்ச விலை வைத்தே விற்பனை செய்ய வேண்டும். எண்ணெய் விற்கும் நாடுகள் கூட்டு சேர்ந்து எண்ணெய் விலை உலகச் சந்தையில் குறைந்து விடக் கூடாது என்று செயல்படுவதைப் போல, நாடெங்கும் இருக்கும் இந்த விவசாயக் கூட்டுறவு கிடங்குகள், குறிப்பிட்ட விலைக்குக் கீழ் தானியங்களை விற்பதில்லை என்று முடிவு செய்ய வேண்டும். அத்தகைய முடிவு அரசுக் கொள்கை மூலம் அமைக்கப் பட வேண்டும்.

அடக்க விலையில் யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் நகரிலிருந்து குடும்பங்கள் கூட தமது மாதத் தேவைகளை வாங்கிச் செல்லலாம். அரசின் நெல் கொள்முதல் விலை கிலோவுக்கு பத்து ரூபாய் கூட இல்லாமல் இருக்கும் போது வெளிச் சந்தையில் அரிசி இருபது ரூபாய்க்கு மேல் விற்பது ஏன்? நெல்லை குத்தி உமி நீக்க தரம் பிரித்து விற்க பத்து ரூபாய் செலவாகி விடுமா என்ன?

இந்தக் கிடங்குகளில் அரிசியாக மாற்றி விற்பனை செய்ய வேண்டும். இந்தியாவை உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்த பசுமைப் புரட்சியின் தந்தை சுவாமிநாதன் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு உணவு தானிய இறக்குமதி செய்ய வேண்டியிருப்பது கண்டு கண்டிப்பாக மனம் கசந்து போயிருப்பார். இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் எதற்கு வீணாக அரிசி இறக்குமதி செய்து கடையில் வாங்கி சமைக்க வேண்டும், அமெரிக்காவிலிருந்து சமைத்து வரும் உணவுப் பொருட்களை நேரடியாக வாங்கி உண்டு விடுவோமே என்று உயர் மத்திய தர மக்கள் நினைக்கும் நிலைமை வந்து விடலாம்.

அவர்களுக்கு அப்படி வாங்க வாய்ப்பு இருக்கும் அதே நேரத்தில், இன்னும் பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் ஏழை மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருப்பார்க. ப சிதம்பரம் ஐயா, என்ன நடந்து கொண்டிருக்கிறது?

8 கருத்துகள்:

சந்திப்பு சொன்னது…

சிவக்குமார் இந்திய ஆட்சியாளர்கள் நம்முடைய நாட்டை விற்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்களேயொழிய மக்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை. எனவே இன்னொரு பெரும் பஞ்சம் இந்தியாவை ஆட்டிப்படைக்கப் போகிறது. இதற்கு சாட்சாத் நம்முடைய இந்திய ஆட்சியாளர்களே காரணமவர். விவசாயத்தையும், விவசாயிகளையும், மக்களின் உணவுத் தேவையையும் பாதுகாக்க முடியாதவர்கள் நாட்டை எப்படி பாதுகாப்பார்கள்? இத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரைவில் அடையாளம் கண்டு கொள்வர். ஆட்சியாளர்கள் நாட்டை அடகு வைக்கும் பாதையில் செலுத்துகின்றனர்! இந்நிலையில் மக்கள் நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கிட வேண்டாமா? நல்ல கட்டுரை சிவக்குமார். வாழ்த்துக்கள்!

மா சிவகுமார் சொன்னது…

சரியாகச் சொல்கிறீர்கள் சந்திப்பு.

நாம் இப்படியே எழுதுவதிலும் விவாதிப்பதிலும் நின்று விடாமல் இன்னும் முனைப்பு எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை ஈடுபட்டும் இந்திய விவசாயம் நாட்டின் உணவுத் தேவைகளை ஈடுகட்ட முடியவில்லை என்றால் எங்கோ ஏதோ இடிக்கிறது. ஒரு பக்கம் விவசாயிகள் தற்கொலை, மறுபக்கம் உணவுப் பொருள் பற்றாக்குறை. என்னதான் நடக்கிறது இங்கே!

இதற்கிடையில் அணுகுண்டு வெடிக்கிறார்களாம். அமெரிக்காவுடன் அணு உலை ஒப்பந்தம் போடுகிறார்களாம். வெட்கம் கெட்ட தலைவர்கள். போட்டது போட்ட படி விட்டு விட்டு நாட்டின் தலை போகும் பிரச்சனையைக் கவனிக்க எல்லா அரசுகளையும் பணிக்க வேண்டும்.

மா சிவகுமார்

வடுவூர் குமார் சொன்னது…

என்ன பன்னுவது?? அவுங்க கையில் பவரை கொடுத்துட்டோம்.
திரு இளங்கோ (கூத்த்ப்பாக்கம்) போல பலர் இருந்தால் இந்த பிரச்சனை ஒரளவு சமாளிக்கலாம்.
யாரிந்த இளங்கோ?
ஒரு முறை பத்ரி அவரை பற்றி எழுதியிருந்தார்.
இங்கே

மா சிவகுமார் சொன்னது…

சுட்டிக்கு நன்றி குமார்.

பத்ரியின் பதிவில் அசுரன் குறிப்புடுவது போல இது ஒரு மிக நல்ல ஆரம்பம் மட்டும்தான். வெளியில் இருக்கும் எல்லா அமைப்புகளும் தனி மனித உரிமைக்கு எதிராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இளங்கோ போன்றோரின் முயற்சிகள் பட்டுப் போய் விடாமல் காக்க வேண்டும். நாமெல்லாம் பேசிக் கொண்டிருப்பதை அவர் செய்து கொண்டிருக்கிறார்.

அன்புடன்,

மா சிவகுமார்

ஸ்ரீ சொன்னது…

சிறப்பான பதிவு சிவா,விவசாயிகள் குறித்த இப்பதிவுக்கு மிக்க மிக்க நன்றி சிவா,இன்றைய நடப்பையும் தீர்வையும் உங்கள் பதிவு அலசி ஆராய்ந்துள்ளது.விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிக்கொணரவும்,விவசாய சமுதாயம் ஒன்றுபட்டு நிற்கவும் ஒரு சிறந்த அமைப்பு உருவாகாமல் இருப்பது துரதிஷ்டமானது.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஸ்ரீ,

காந்தியை எல்லோரும் சேர்ந்து கிண்டலடித்து அவரது கொள்கைகளை மூலையில் தள்ளி விட்டார்கள். கிராமப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விடும் கொள்கைகள் இந்தியச் சமூகத்துக்கு சாவு மணி அடித்து விடும் என்று எச்சரித்தார் அவர். சாதி அமைப்பை விட்டு விடாமல் தொடர வேண்டும் என்று சொன்னதுதான் அவர் செய்த தவறு என்று நினைக்கிறேன்.

மற்றபடி, சுய நிறைவுடன் கிராமங்கள் செயல்படும் வண்ணம் அடிப்படைத் தேவைகளை உள்ளூரிலேயே சிறு தொழிலாக செய்து கொள்வதுதான் இத்தனைக் கோடி மக்களின் வாழ்க்கைக்கு ஒரே விடிவு. மேற்கத்திய பொருளாதாரக் கொள்கைகள் நீண்ட கால நோக்கில் பலன் கொடுத்து விடும் என்று பொறுமை போதிக்கிறார்கள், ப சிதம்பரம்கள், நீண்ட கால நோக்கில் நாம் அனைவரும் உயிரோடு மிஞ்ச மாட்டோம் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இந்தத் தீர்வுகள், சுவாமிநாதன் அவர்களின் கட்டுரையில் சொல்லப்பட்டவைதான். எனக்கு விவசாயம் குறித்த நடைமுறை அறிவோ, பிறரிடம் பேசித் தெரிந்து கொண்ட விபரங்களோ போதாது.

மா சிவகுமார்

மதுமிதா சொன்னது…

///
உழவர்களுக்கு சரியான விலை கொடுத்து கோதுமை வாங்கிக் கொள்ளாமல் (குவின்டாலுக்கு 750 ரூபாய்), இதே அரசு வெளி நாடுகளிலிருந்து குவின்டாலுக்கு 1000 ரூபாய் கொடுத்து இறக்குமதி செய்ய முன் வந்துள்ளது
///

இந்த நிலை மாறினால் தான் விவசாயிகளுக்கு பொருளாதார சுமையிலிருந்து முழு விடுதலை கிடைக்கும்.

மிக உயர்ந்த சிந்தனை உங்களது
கருத்துகள் நன்று


நன்றி சிவா உயிர்ப்புள்ள பதிவுக்கு

மா சிவகுமார் சொன்னது…

வாங்க மதுமிதா,

எல்லோரும் சேர்ந்து ஆலோசித்துத் திட்டமிட்டால்தான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு என்று தோன்றுகிறது. அதை நடைமுறைப்படுத்துவதிலும் முனைப்பு தேவை.

நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்