ஒரு துறையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கும் போது என்ன நடக்கும்? ஒரு தொழிற்சாலையின் குறைந்த அளவு உற்பத்தி உயர்ந்த அளவில் இருக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும்போது ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும். எடுத்துக்காட்டாக, பயணிகள் விமானம் விற்பதில் உலகளவில் இரண்டே நிறுவனங்கள்தான் 90 சதவீதத்துக்கும் அதிகமான சந்தையை ஆக்கிரமித்துள்ளன. (Boeing and Airbus)
- தொலைக் காட்சி விற்பனையில் உயர் ஆதாயம் உள்ளது என்று திடீரென்று நான் ஒரு புதிய தொழிற்சாலை ஆரம்பித்து களத்தில் குதிக்க முடியாது. அதற்குத் தேவைப்படும் ஆரம்ப முதலீடு, ஒரு தொழிற்சாலை செயல்படும் போது ஆதாயம் கிடைக்கும் உற்பத்தி அளவை முழுவதும் விற்றுத் தீர்க்கும் திட்டங்கள் இல்லாமல் உள்ளே நுழைய முடியாமல் போய் விட சில நிறுவனங்களே போட்டி போடுகின்றன.
- சென்னை வேலூர் தடத்தில் நல்ல கூட்டம். என் கையில் பணம் இருந்து பேருந்து வாங்க முடிந்தாலும் உடனடியாக சேவை ஆரம்பித்து விட முடியாதபடி அரசுக் கொள்கைகள் தடுத்து விடலாம். இதுவும் போட்டியாளர்களின் எண்ணிக்கைக் குறைவதற்கு ஒரு காரணம்.
ஒவ்வொரு போட்டியாளரும் தனது சந்தை வலிமையின் அடிப்படையில், தனது பொருள்/சேவையில் வாடிக்கையாளருக்கு இருக்கும் கவர்ச்சியைப் பயன்படுத்தி, முழுமையான போட்டி நிலவும் சந்தையில் நிலவக் கூடிய விலையை விட அதிகமாக அமைத்து குறைவான அளவை விற்க முடியும்.
- போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களது பொருளின் வேறுபாடுகள் குறையக் குறைய இந்த ஆதாயமும் குறைந்து போகும்.
- எல்லா நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து கூட்டாக விலையை தீர்மானிக்க ஆரம்பித்தால் நிலைமை மோனோபோலி போல ஆகி விடும்.
உலக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு இப்படிப்பட்ட வெளிப்படையான கூட்டுச்-சந்தைக்-கட்டுப்பாட்டில் ஈடுபடுகிறது. 1973-1975ல் இந்த நாடுகள் ஒன்று சேர்ந்து எண்ணெய் உற்பத்தியை பெருமளவில் குறைத்து சந்தைக்கு வரும் எண்ணெய் அளவைக் கட்டுப்படுத்தி விட்டன. எண்ணெய் விலை ஒரே ஆண்டில் நான்கு மடங்கு அதிகமாகி உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டது.
அன்றிலிருந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கூட்டணி தொடர்கிறது. எல்லா உறுப்பினர்களும் கட்டுப்பாடாக உற்பத்தி அளவுகளைக் கட்டுப் படுத்த வேண்டும். ஒருவர் ஏமாற்ற முயன்றால் இந்த ஒப்பந்தம் முறிந்து போய் விடும். எல்லாவற்றையும் சமாளித்து இன்றைக்கும் உலக எண்ணெய்ச் சந்தையைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக OPEC இருந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக