யுண்டாய் கார்களின் விற்பனை அதிகரித்து விட்டால், உடனடி காலத்தில் மூலப்பொருட்கள் வாங்குவதை அதிகரித்து, தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை பார்க்க வைத்து உற்பத்தியை ஆயிரத்து ஐநூறாகக் கூட மாற்றிக் கொள்ளலாம். இப்படி உற்பத்தி அதிகமாகி உருவாகிய கார்கள் எல்லா கார்களுக்குமான செலவை கீழே இழுத்து விடுவதால் நிறுவனத்துக்கு ஆதாயம் அதிகம். அதனால்தான் எப்போதும், விற்பனையை அதிகமாக்கிக் கொள்வதில் போட்டி.
ஒரு நாளைக்கு ஐயாயிரம் கார் என்று தேவை அதிகமாகி விட்டால், அதே தொழிற்சாலையில் அவற்றை உற்பத்தி செய்து விட முடியாது. அதற்கு புதிய பட்டறை, இயந்திரங்கள் என்று வாங்கி நிறுவ மாதங்கள் பிடிக்கலாம்.
மாறுபடும் செலவுகளை மாற்றி உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளும் கால அளவை உடனடிக் காலம் என்றும் நிலையான செலவுகளையும் மாற்றி விட முடிகிற கால அளவை நீண்ட காலம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
தொழில் புரட்சி தொழில் நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட போது ஒரு தனி மனிதன் இவ்வளவு பணம் முதலீடு செய்து உள்ளூர் ஆட்களை வேலைக்கு வைத்து உற்பத்தியை சமாளிக்க முடியாது என்று உணரப்பட்டது. அதற்காக கூட்டுச் சேர்ந்து நடத்தும் நிறுவனங்கள் என்ற கோட்பாடு உருவானது.
ஒவ்வொருவரும் தனித்தனியாக வேலை பார்ப்பதை விட ஒரு சிலர் ஒன்று சேர்ந்து நிறுவனம் ஆரம்பித்து அதற்கான பணத்தை முதலீடு செய்து, தொழிலாளர்களைத் திரட்டி, உற்பத்தியை மேலாண்மை செய்து கொண்டால் கிடைக்கும் உற்பத்தி அளவு சமூகத்தில் எல்லோருக்கும் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், சமூகத்தின் பிரதிநிதிகளான அரசாங்கங்கள் அது மாதிரி நிறுவனங்கள் உருவாக சட்ட அடிப்படை உருவாக்கின.
ஒருவர் தனியாகச் செய்யும் தொழிலில் ஆரம்பித்து, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் கூட்டுத்தொழில், பலர் தனிப்பட்ட முறையில் சேர்ந்து உருவாகும் தனியார் பங்குத் தொழில், பொது மக்களுக்கும் பங்கு விற்று உருவாகும் பொதுப்பங்குத் தொழில் என்று ஒவ்வொரு வகை நிறுவனமும் சமூகம் தனது ஒட்டுமொத்த நலனுக்காக ஒரு சிலரை சேர்ந்து தொழில் ஆரம்பிக்க வழி செய்யக் கொடுத்ததே ஆகும்.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவாவதற்கு இங்கிலாந்து பாராளுமன்றம் சிறப்புச் சட்டம் போட்டு அனுமதி கொடுத்தது. அதாவது முந்நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வணிக நிறுவனம் ஆரம்பிக்க நாட்டு அரசனோ, நாடாளுமன்றமோ சிறப்பு அனுமதி கொடுக்க வேண்டும், இந்தக் கூட்டு முயற்சியால் நாட்டுக்கு நன்மை விளையுமா என்று சீர் தூக்கி மக்கள் பிரதிநிதிகள் அதற்கு அனுமதி கொடுத்தார்கள். கூட்டு முயற்சி சமூகத்தை சீர் குலைக்க ஆரம்பித்தால் நிறுவனத்தைக் கலைத்து அரசே அதன் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதும் நடந்தது. இதே கிழக்கிந்திய கம்பெனியை 1858க்குப் பிறகு கலைத்து விட்டு இங்கிலாந்து அரசு நேரடி ஆட்சியை ஏற்றுக் கொண்டது.
இன்றைக்கு யார் வேண்டுமானாலும் எளிதாக ஒரு நிறுவனம் தொடங்கிக் கொள்ளும் வசதியை சட்டங்கள் கொடுத்தாலும் அதன் அடிப்படை நோக்கம் மாறவில்லை. நிறுவனத்தின் செயல்கள் ஒட்டு மொத்தமாக நன்மை அளிக்கும் என்ற உத்தரவாதத்தில் அனுமதி கொடுக்கப்படுகிறது. அந்த உத்தரவாதம் மறைந்து விட்டால் நிறுவனத்தைக் கலைத்து விடவும் அதே சட்டம் இடமளிக்கிறது.
ஒரு வணிக நிறுவனத்தின் இருப்பு, தனி மனிதனின் இருப்பைப் போல கடவுள் கொடுத்த உரிமை கிடையாது. அதன் நலன்கள் தனிமனித/ஒட்டு மொத்த சமூகத்தின் நலனுக்கு மேற்பட்ட்வை அல்ல. முதலீடு செய்தவர்கள், கடன் கொடுத்தவர்கள், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள், சுற்றுப்புறச் சூழல் இவை அனைத்துக்கும் கிடைக்கும் மொத்த ஆதாயத்தைப் பொறுத்துதான் நிறுவனத்தின் உரிமை உள்ளது. ஒரு தரப்புக்கு மட்டும் ஆதாயம் குவிய மற்றத் தரப்புகள் பலத்த இழப்புக்கு ஆளாகும்போது அதை தடுத்து நிறுத்தவோ, ஒழுங்கு படுத்தவோ சமூகத்துக்கு இருக்கும் உரிமை அரசுகள் மூலம் நிலை நாட்டப்படுகிறது.
நவீன மேற்கத்திய அரசியல் பொருளாதாரத்தில் இந்த வணிக நிறுவனங்களின் பங்கு ஆதிக்கம் நோக்கத்துக்கு மாற்றாக வளர்ந்து விட்டிருக்கிறது. அதனால்தான் ஒரு மைக்ரோசாப்டும், ஒரு சுமங்கலி கேபிள் விஷனும், ஒரு என்ரானும், ஆர்தர் ஆண்டர்சனும் பொது நன்மையைக் கொள்ளை அடித்து தமது பங்குதாரர்களை மட்டும் வளப்படுத்தும் வசதி வளர்ந்து விட்டிருக்கிறது.
2 கருத்துகள்:
சிவகுமார்
மோனாபலி என்னும் ஆதிக்க நிலைக்கு இன்னொரு காரணம் "ease of entry" யும் ஒரு காரணம். சில தொழில்களில் முக்கியமாக ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்ட மருந்து நிறூவனக்களில் முதலீடு மிக அதிகம். அதை எல்லாராலும் செய்ய முடியாது. மேலும் 40 மருந்துகள் தயாரித்தால் அதில் ஒன்றைத்தான் விற்பனைக்கு அனுப்பமுடியும். மைக்ரோசாப்ட் செய்த விறபனை திட்டம் மிக முக்கியமானது ஒவ்வொரு பொருளையும் எளிய முறையில் 9user friednly)தயாரித்து மக்களை பழக்கப்படுத்தி பிறகு ஒவ்வொன்றாக அதனுடன் இணத்த விதம்.இப்போது அலுவகங்களில் வேறு திழிநுட்பத்திற்கு மாற்ற பணியாளார்கலுக்கு பயிற்சி தர ஆகும் செல்வு, மேலும் பணியாளர்கலிடம் உள்ள தெரிந்த ஒன்றைவிட்டு இன்னொன்றை கற்றூ கொள்ள இருக்கும் தயக்கம், இன்னொரு தொழில்நுட்பத்தை நுழைத்து இந்த செலவினங்களை தாங்க மிக முக்கியமான காரணம் (there is no imminet advantage in replacing this incurring all costs)எதுவும் இல்லை.
நன்றி பத்மா,
கண்டிப்பாக, ஒரு துறையில் புதிய நிறுவனங்கள் நுழைவதற்கு ஆகும் அதிகச் செலவு, அளவில் கிடைக்கும் ஆதாயம், வலைப்பின்னல் விளைவு (network effect), அரசு கொள்கைகள் இவை மோனோபோலி அமைவதற்கான காரணிகளில் முக்கியமானவை. இதைப் பற்றியும் பொருளாதாரப் படிப்பு விரிவாக ஆராய்கிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக