செவ்வாய், மார்ச் 01, 2011

நாகை / ராமேஸ்வர பயண விபரங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு

'நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஆதரித்து எழுதவோ பேசவோ கூடாது. வாழ்க்கையைத் துறந்து துப்பாக்கி தூக்கி வவுனியா காடுகளுக்குப் போகத் தயாராக இல்லாத வரை விடுதலைப் புலிகளை ஆதரித்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. பத்து வார்த்தைகள் பேசினால், நூறு வார்த்தைகள் எழுதினால், குறைந்தது அந்த வழியில் வாரத்துக்கு ஒரு நாளாவது செயலில் காட்ட முடிய வேண்டும். அப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியாதவற்றை கதைத்துக் கொண்டிருப்பது intellectual masturbationதான்.'

என்று தோன்றியது. (http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html)

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதை எதிர்த்து இணையத்தில் எழுந்த கண்டனக் குரல்கள் தொடர்ந்து இணையத்துக்கு வெளியிலும் செயல்பட்டு வருவது வரவேற்கத்தக்க நிகழ்வு.

மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு பல தளங்களில் செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

1. பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்,  தேமுதிக கட்சியின் முன்னணித் தலைவர் (மாஃபா) பாண்டியராஜன் ஆகியோருடன் தொலைபேசியில்  மீனவர் பிரச்சனை குறித்து இணையத் தமிழர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கியிருக்கிறார் பத்ரி.

2. கும்மி, கவிராஜன் மற்றும் ரோசா வசந்த் சென்னை நொச்சிக் குப்பம் மீனவர் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.

3. கும்மி, கவிராஜன், ரோசா வசந்த் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானைச் சந்தித்துப் பேசினார்கள்.

4. கே ஆர் பி செந்தில் குமார், பத்ரி, கும்மி, அப்பாண்டே, ரமேஷ் எல்லோரும் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரையும் சந்தித்தார்கள்.

5. கும்மி, விந்தை மனிதன் மற்றும் KRP செந்தில் சிபிஐ தலைவர் C மகேந்திரனைச் சந்தித்தார்கள்.

6. கவிராஜனும், கும்மியும் மீனவர் பிரச்சனை தொடர்பான ஆவணங்களை சேகரித்து ஸ்கேன் செய்து அனுப்ப, பல நண்பர்கள் அவற்றை தட்டச்சு செய்து ஆவணமாக்கியிருக்கிறார்கள்.

இவற்றின் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதிகளுக்கு நேரில் சென்று மீனவர் கிராமங்களுக்குப் போய் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

மார்ச் 4, 5 (வெள்ளி, சனி) தேதிகளில் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளிலும்,  மார்ச் 6, 7 (ஞாயிறு, திங்கள்) தேதிகளில் ராமேஸ்வரம் பகுதியிலும் பயணம் செய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து ரோசா வசந்த், உண்மைத் தமிழன், மா சிவகுமார் (நான்) ஆகிய மூன்று பேரும் நான்கு நாட்களும் செல்கிறோம். வியாழக் கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்படுவதாக உத்தேசம்.

சாந்தப்பன்  திருவாரூரிலிருந்தும் அபி அப்பா மாயவரத்திலிருந்தும் நாகப்பட்டினம் வருகிறார்கள். நாகை சிவாவும் அறுசுவை பாபுவும் நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைப்பைச் செய்கிறார்கள்.

ராமேஸ்வரம் பகுதியில் பாலபாரதி தனது நண்பர்கள் மூலம் ஒருங்கிணைப்புக்கு உதவுகிறார். மீனவர்களுடனான உரையாடல்களையும் காட்சிகளையும் ஆவணமாக்க வீடியோ கேமரா வாடகைக்கு எடுப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.  (மாற்றம் 2/3/2011 - நண்பர்களின் ஹேண்டி கேம் மூலம் எடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது)

16 கருத்துகள்:

உமர் | Umar சொன்னது…

என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. உங்கள் பயணம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

---
//சாந்தப்பன் திருவையாறிலிருந்தும்//

திருவாரூர் என்று பார்த்ததாக நினைவு.

உமர் | Umar சொன்னது…

//இயக்குனர் சீமானை//

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் என்றிருந்தால் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

பெயரில்லா சொன்னது…

தமிழ் மீனவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. தற்போத நான் மங்களூரில் பணியாற்றி வருகின்றேன். புகைப்படக் கலையில் சிறிது ஈடுபாடு உண்டு. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாதலால் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். விவரமான திட்டம் பற்றி கூறினால் உதவியாக இருக்கும்.

உமர் | Umar சொன்னது…

//விவரமான திட்டம் பற்றி கூறினால் உதவியாக இருக்கும்//

இந்தப் பதிவினை பாருங்கள்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி கும்மி,

இரண்டையும் திருத்தி விட்டேன்.

நீங்கள் நேரில் வர முடியா விட்டாலும், தொலைபேசி மூலமாகவும் உங்கள் ஊரில் இருக்கும் நண்பர்கள் மூலமாகவும் செய்யும் ஒருங்கிணைப்புகள் உதவியாக இருக்கும்.

பிரேம்,

வெள்ளி, சனி நாகப்பட்டினம் பகுதியிலும், ஞாயிறு, திங்கள் ராமேஸ்வரம் பகுதியிலும் பயணிக்கிறோம். சனிக் கிழமை காலையில் நீங்கள் நாகப்பட்டினம் வந்து விட்டு தொலைபேசியில் அழையுங்கள் (என் தொலைபேசி எண் : 9884070556). நேரில் பார்த்து பேசுவது பிரச்சனையை நாம் புரிந்து கொள்ளவும், பொருத்தமான புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவது மற்றவர்கள் புரிந்து கொள்ளவும் உதவும்.

அன்புடன்,
மா சிவகுமார்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பயணம்,பணி சிறக்க வாழ்த்துகள் மா.சி!
உங்களுக்கும் தோழர்களுக்கும்!

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

வாழ்த்துகள்.. முயற்சிகளுக்கும் உழைப்புக்கும்..

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ஜோதிபாரதி, பயணமும் எண்ணங்களும் (யார் இது? :-)

அன்புடன்,
மா சிவகுமார்

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

பிளாகர் மா சிவகுமார் கூறியது...

நன்றி ஜோதிபாரதி, பயணமும் எண்ணங்களும் (யார் இது? :-)//

பஸ் ல் உங்க இடுகை படிக்கும் Jmms :)

மா சிவகுமார் சொன்னது…

நன்றி jmms :-)

ஒரு பஸ் இடுகையில் பயணங்களும் எண்ணங்களும் என்று, நீங்கள் copy/paste செய்ததில் இருந்த நினைவு. அதுதான் உறுதி செய்து கொள்ளக் கேட்டேன்.

நீச்சல்காரன் சொன்னது…

மார்ச் 13 முதல் 21 வரை தமிழ்நாட்டில் இருப்பேன். அந்த நாட்களில் யாரேனும் மீனவர்களை சந்திக்க பயணித்தால் நானும் இணைந்து கொள்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் நீச்சல்காரன்,

மார்ச் 13 முதல் 21 வரை நீங்கள் எந்த ஊரில் இருப்பீர்கள்? இது வரை அந்த நாட்களில் மீனவர்களைச் சந்திக்க யாரும் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவில்லை. உங்கள் பயணத் திட்டத்தைப் பொறுத்து நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.

அன்புடன்,
மா சிவகுமார்

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

//நடைமுறையில் செயல்படுத்த முடியாதவற்றை கதைத்துக் கொண்டிருப்பது intellectual masturbationதான்//

+ 1

இவ்வளவு பேர் தங்கள் சொந்தப் பணியை விட்டு, உண்மை அறியும் நோக்கில் நேரடியாக ஈடுபடுவது .. என்ன சொல்வதென்று தெரியவில்லை.

முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

பாலாஜி சொன்னது…

நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

****

தொடர்ந்து எழுதுவதற்காக மன்னிக்கவும். ஆனால் இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறும் என்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் உங்களை ஒரு இலங்கை கடற்படை வீரராக நினைத்துக்கொள்ளுங்கள். அத்தகைய ஒரு விரருக்கு 27 வயதுக்கு மேலிருக்க வாய்ப்பில்லை. அதாவது 1983 ஜூலைக்குப் பின் பிறந்தவராகவே இருக்கவேண்டும். உங்களிடம் தானியங்கி துப்பாக்கி இருக்கிறது. உங்களின் ஆயிரமாயிரம் சகோதரர்களை கொன்ற புலிகளையும், அவர்களுக்கு உதவிய தமிழகத்தவரையும், குறிப்பாக தமிழக மீனவர்களையும் ஒரு விரல் அசைவில் பழி தீர்க்கமுடியும். முப்பது ஆண்டுகளாய் கண்ணீரையும், இரத்தமும் சிந்திய சிங்களத் தாய்மார்களின் தியாகமும், பௌத்த மதத் துறவறம் பூண்டும் சகோதரர்களுக்காக துப்பாக்கி ஏந்தி உயிர்நீத்த நன்பர்களையும் எண்ணிப்பாருங்கள். ஒரு தமிழக மீனவனையாவது கொல்லாவிட்டால் உங்களுக்கு தூக்கமோ, நிம்மதியோ கிடைக்குமா?

ஈழத்தமிழனைக் கொல்லலாம் தான். ஆனால் என்னவாகிலும் அவன் நம் நாட்டவன். போரில் தோற்றுவீட்டான். அவனைக் கொன்றால் இலங்கை அரசுக்கும் உலக நாடுகள் மத்தியில் சங்கடம். இந்திய மீனவன் புலிகளுக்கு உதவியவன். பெட்ரோல், டீசல் காசுக்காக என் நாட்டுமக்களைக் கொல்ல உதவியவன். சர்வதேச எல்லைத் தாண்டி இலங்கை கடலில் வேறு வந்து மீன் பிடிக்கிறான். அவனைக் கொன்றால்தான் என்ன?

****

நிற்க. நல்ல முயற்சி. தொடர்ந்து செய்யுங்கள். கூடவே விடுமுறைக்காகவேணும் ஒருமுறை இலங்கை சென்று வாருங்கள். திரும்பி வந்து நல்ல சிங்கள இதயங்களைப் பற்றி எழுதுங்கள். தமிழரும், சிங்களவரும் ஒற்றுமையாக அமைதியுடனும், செழிப்பாகவும் இலங்கையில் வாழ சில நூறு இலங்கைப் பணமாவது செலவு செய்யுங்கள். ஆத்திரம் தீர்ந்து சிங்களவர் இந்திய மீனவர்களையும் சீக்கிரமே அரவனைப்பார்கள் என்று நம்புவோம்.

-பாலாஜி.

பி.கு 1: இலங்கைப் போரில் நான் தொடர்ந்து சிங்களவரை ஆதரித்தேன். ஈழத்தமிழர் போராட்டதில் என்றுமே நியாயம் இருந்ததில்லை என்பது எனது கருத்து. (நீங்கள் என்னுடன் உடன்பட எந்த அவசியமுமில்லை.)

பி.கு 2: கடந்த வருட ஆரம்பத்தில் நான் இலங்கையில் சுற்றுலா சென்று வந்தேன்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி இரவிசங்கர்,

@பாலாஜி,
//இந்திய மீனவன் புலிகளுக்கு உதவியவன். பெட்ரோல், டீசல் காசுக்காக என் நாட்டுமக்களைக் கொல்ல உதவியவன். சர்வதேச எல்லைத் தாண்டி இலங்கை கடலில் வேறு வந்து மீன் பிடிக்கிறான். அவனைக் கொன்றால்தான் என்ன?//

நீங்கள் குறிப்பிடுவது போன்ற எண்ணம் இலங்கைக் கடற்படையினர் சிலரிடம் இருந்தால்,

1. அதைத் தடுக்க வேண்டியது இந்திய அரசின்/கடற்படையின் பொறுப்பு.
2. அவர்கள் செய்யும் கொலைகளுக்கு எதிர்வினையாக உலக அரங்கில் கண்டனக் குரல் எழுப்புவது நம் அனைவரின் கடமை

//திரும்பி வந்து நல்ல சிங்கள இதயங்களைப் பற்றி எழுதுங்கள். தமிழரும், சிங்களவரும் ஒற்றுமையாக அமைதியுடனும், செழிப்பாகவும் இலங்கையில் வாழ சில நூறு இலங்கைப் பணமாவது செலவு செய்யுங்கள். ஆத்திரம் தீர்ந்து சிங்களவர் இந்திய மீனவர்களையும் சீக்கிரமே அரவனைப்பார்கள் என்று நம்புவோம்.//

1. தமிழரும் சிங்களவரும் ஒற்றுமையாக அமைதியுடனும் இலங்கையில் வாழ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

அது எந்த வடிவில், எப்படிப்பட்ட அரசமைப்பின் கீழ் நடக்க வேண்டும் என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

2. ஆத்திரத்தின் காரணமாக ஈழத் தமிழர்களையோ இந்திய மீனவர்களையோ துன்புறுத்த யாருக்கும் உரிமையில்லை.

3. நாம் இலங்கையில் சுற்றுலா போவதற்கும் அந்த நாட்டு மக்களின் பிரச்சனை தீர்வதற்கும் தொடர்பில்லை என்று நான் நினைக்கிறேன்.

//இலங்கைப் போரில் நான் தொடர்ந்து சிங்களவரை ஆதரித்தேன். ஈழத்தமிழர் போராட்டதில் என்றுமே நியாயம் இருந்ததில்லை என்பது எனது கருத்து.//

நான் உங்களுடன் உடன்படவில்லைதான். 1950கள் முதலான ஈழத்தமிழர் போராட்டம் பற்றி இன்னும் விபரங்களைத் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

பாலாஜி, உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன். ஆனால் யுத்தம் முடிந்தபின் விபசாரமும்,கேளிக்கை விடுதிகளும் ஈழம் நோக்கி வந்தன.தற்போது ஒட்டுமொத்த இலங்கையும் மேற்க்குலக வாசிகளின் காமப்பசிதீற்கும் பிரதேசமாக தோன்றுகிறது.முன்பு அவை தமிழர் பிரதேசத்தை தொடாமல் பிரபாகரனால் பாதுகாக்கப்பட்டது. பிரபாகரன் தற்போது சிங்களவர்களுக்கே ஹீரோவாகதேரிகிறார் (அவரின் தனி மனித ஒழுக்கத்தில்).. ஸ்ரீ