ஞாயிறு, டிசம்பர் 14, 2008

சுயம்

ஒரு மனிதனை பெட்டிக்குள் அடைத்து, கட்டம் போட்டு வாழ்க்கையை முடக்கிப் போடுவதில் மிகவும் வெற்றிகரமாக தொடர்ந்து வருவது நம்முடைய சாதிக் கட்டமைப்பு. மாந்தரின் இயல்புகளை சூத்திரர், வணிகர், அரசர், அந்தணர் என்று தலைமுறை தலைமுறையாக வளர்ப்பு முறையின் மூலமாக, உணவுப் பழக்கங்கள் மூலமாக, புறச் சூழலின் தூண்டுதலின் மூலமாக, செய்யும் தொழில் மூலமாக தொடரச் செய்து கட்டத்துக்கு வெளியில் மனதை வளர விடாமல் தடுத்து வைத்திருப்பது சாதிக் கட்டமைப்பு.

சீனாவில் இளம்பெண்களின் பாதம் சிறியதாக இருப்பதை அழகாக, தகுதியாக கருதினார்களாம். சிறுமிகளின் பாதங்களை துணியால் இறுகக் கட்டி நடக்க விடாமல் செய்து, பாதத்தின் இயல்பு வளர்ச்சியை தடுத்து, வாழ்நாள் முழுமைக்கும் ஊனமுறச் செய்து அந்த அழகைச் சாதித்துக் காட்டினார்களாம். நாமும் வியாபாரி, அந்தணர், படை வீரர், சூத்திரர் என்று முத்திரை குத்திய கூண்டுக்குள் முடங்கிக் கொண்டு நம்மை நாமே கட்டிப் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சாதியை எதிர்த்து எழுப்பப்பட்ட போர் முழக்கங்களை எல்லாம் தாண்டி இன்றைக்கும் தளைத்து நிற்கிறது சாதீயம். ஒவ்வொரு சமூக உறுப்பினரின் மனதிலும் தனது சாதியை ஆழமாக ஊன்றி, அவரை வளர விடாமல் தடுத்து நிறுத்துவதில் இந்துத்துவா சக்திகள் வெற்றி கண்டு வருகின்றன.

'நம்ம சாதி அமைப்புகளை எல்லாம் இவனுங்க ஊடுருவி விட்டானுங்க. சாதி இல்லை, சமத்துவம் என்று பேசி முற்போக்கு வாதிகளான நாமெல்லாம் விட்டுச் சென்ற வெற்றிடங்களை இந்துத்துவா வாதிகள் பிடித்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்சுட்டானுங்க. அதனால நான் எல்லாரிடமும் சாதி அடையாளத்தை காட்டும் படி சொல்ல ஆரம்பிச்சுட்டேன். நாமும் இவனுங்களோடு போட்டி போட்டு சாதி சங்கங்களை கைப்பற்ற வேண்டும்'

திராவிட இயக்கத்தினால் விடுதலை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு நண்பர் இப்படிச் சொன்னார். இதுதான் இந்துத்துவா இயக்கத்தின் வெற்றி. இந்துத்துவா என்பது ஆரிய சாதிக் கட்டமைப்பை திரும்பிக் கொண்டு வரும் தீவிர முயற்சிதான்.

என்றைக்கு எதிராளி வகுத்த விதிமுறைக்குட்பட்டு அவனை எதிர்க்க முயற்சிக்கிறோமோ அன்றைக்கே நமது நிலைமை தோல்வியடைந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

திராவிடக் கட்சிகளில் தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்யும் போது சாதியை ஒரு தகுதியாக பார்ப்பது இந்துத்துவத்தின் வெற்றி. அதிமுக தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சாதி, வட மாவட்டங்களில் இன்னொரு சாதி, எல்லா மாவட்டங்களிலும் ஒரு சாதியை ஆதரவாகக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பது, எம்ஜிஆருக்குப் பிந்தைய தலைமையின் இயல்பான இந்துத்துவ வியூகம். அதே சுழலில் மாட்டிக் கொண்டு திமுகவும் சாதி சார்ந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்ட பிறகு யார் ஆட்சி அமைத்தாலும் சமூகமும், அரசும் இந்துத்துவ முறையில்தான் இயங்குகின்றன.

திராவிட இயக்கத்தின் தோல்விக்கு இப்படித்தான் முன்னுரை எழுதப்பட்டது. அரசியல் கட்சியாக இல்லாமல் சமூக சீர்திருத்த இயக்கமாகவே தொடர வேண்டும் என்று ஐயா பெரியார் சொன்னதன் காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். வாக்குப் பெட்டி நோக்கில் கொள்கைகள் நீர்த்துப் போய் தமது நோக்கங்களுக்கு எதிரிகள் வகுத்த ஆட்ட விதிகளின் படி ஆட ஆரம்பித்து அவர்களைப் போலவே ஆகி விடுவோம் என்று அவர் பயந்ததை நடத்திக் காட்டிய பெருமை கலைஞர் கருணாநிதிக்கு உண்டு.

நேற்றைக்கு தினத்தந்தியில் 1990ல் விபி சிங்கைப் பாராட்டி நடத்திய விழாவில் கலைஞர் படித்த கவிதையை மீண்டும் தூசி தட்டி விபிசிங் நினைவுப் படத் திறப்பு விழாவில் படித்ததைப் போட்டிருந்தார்கள். தூசி தட்டப்பட்டது கவிதை எழுதப்பட்டிருந்த தாள்களிலிருந்து மட்டும்தான். அந்தக் கவிதை வரிகளின் மீது தூசி படிந்து, அதன் மேல் தார் அடித்து, உருத்தெரியாமல் அடிக்கப்பட்டிருக்கிறது இன்றைக்கு.

முதலுக்கே மோசம் வந்த பின்னர்
முயலாக ஆமையாகக் கிடத்தல் நன்றோ?

ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான்
ஆனது ஆகட்டுமே - இந்த ஆட்சிதான் போகட்டுமே

என்று ஆட்சியைத் தூக்கி எறியத் துணிந்தவர், காசுக்காக தன்னையே விற்கத் துணிந்த விபச்சாரத் தரகர் ஒருவர் சமூகத்துக்காக பெரிய மனிதர் வேடம் போடுவது போல, ஆட்சிக்காக எல்லாவற்றையும் பலியிட்டு விட்டு, இட ஒதுக்கீடு, உருவச் சிலை நிறுவுதல் என்று வெற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னையும் சமூகத்தையும் கண்கட்டிக் கொண்டிருக்கிறார்.

பாரதீய சனதாவுடன் கூட்டு வைத்து கூட ஆட்சியை பாதுகாக்க வேண்டியிருந்தது. கம்யூனிச்டு கட்சிகளைப் பகைத்துக் கொண்டாவது காங்கிரசுடன் கூட்டுத் தொடருவதற்கு ஒரே காரணம் ஆட்சிப் பற்றைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்!

இப்படி எல்லாம் செய்து நாம் ஆட்சியைத் தக்க வைக்கா விட்டால், ஆட்சியைப் பிடிக்கா விட்டால், எதிரிகள் ஆட்சியில் அமர்ந்து விட நம்மால் செய்ய முடியும் மாற்றங்கள் எல்லாம் நடக்காமலே நின்று போகும் என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள் கலைஞர் பாணி அரசியலுக்கு ஆதரவாளர்கள்.

முதலுக்கே மோசம் வந்த பின்னர் முயலாக ஆமையாக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறோம் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்!

வாழை மரம் தன்னை வெட்டிக் கட்டியதை அறியாமல்
வருவோரை வரவேற்கும் மணவீட்டில்

என்று அதே கவிதையில் எழுதியிருக்கிறார். வெட்டிக் கட்டிய வாழை மரமாகத்தான் இன்றைக்கு ஆட்சிக் கட்டிலை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

எலிகள் நடனமாடுமிங்கே அதற்குப்
புலிகள் தாளம் போட்டிடுமோ

என்று கேள்வி கேட்டவர், பாரதீய சனதா கட்சியும், காங்கிரசு கட்சியும் ஆடும் நடனத்துக்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்தார் கடந்த 10 ஆண்டுகளில்.

சிங்கங்களையும் புலிகளையும் இதுதான் சுயம் என்று காயடித்து வீட்டு முற்றத்தில் கட்டுற வைத்து மூளைச் சலவை செய்து தளைத்த இந்துத்துவாவின் மறு தலை தூக்கல்தான் இன்றைய சாதி முறை சமூகத்தின் மறுமலர்ச்சி.

சாதியின் பெயரால் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முயலும் ஒவ்வொருவரும் அதை எந்தப் பெயரில் செய்தாலும் வருணாசிரமவாதிகள் வகுத்த கட்டமைப்புக்குள் தம்மை உட்படுத்திக் கொள்பவர்கள்தான்.

திங்கள், நவம்பர் 17, 2008

NHM உள்ளீட்டுச் செயலி

http://kaniporul.blogspot.com/2010/08/nhm.html

பட்டினியும் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணும்

(அக்டோபர் 26, 2007)
நண்பர் ஒருவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தேன். இன்றைக்கு சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் ஏறி விட்டதாமே என்று காரணமில்லாமல் சந்தோஷப்பட்டுக் கொண்டார். ஒரு வேளை கொஞ்ச பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கலாம்.

இந்திய பங்குச் சந்தை உலக சாதனைகளை முறியடித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கு சின்ன இருமல் வந்தால் கூட அவசர அவசரமாக நிவாரணத்தில் இறங்கும் நிதி அமைச்சர் இருக்கும் போது இன்னும் பல இடங்களிலும் இந்தியாவின் சாதனை வெளியே தெரிய வருகிறதாம்.

இன்றைக்கு இந்து நாளிதழில் வெளியாகி இருக்கும் பி சாய்நாத்தின் கட்டுரையில் பட்டினிக் கொடுமையை ஒழிப்பதற்கான தரவரிசையில் நமது திருநாடு எத்தியோப்பியாவுக்கு ஒரு இடம் பின்னால் இருக்கிறதாம். 118 நாடுகளை மதிப்பிட்டதில் இந்தியாவின் தரவரிசை 94. எத்தியோப்பியா 93ல்.

'இந்தியாதான் உலகைக் கலக்குகிறது. இனி எல்லாம் சுகமே' என்று எழுதி முடித்து விட்ட இளைய மேல் நோக்கி பறக்கும் சமூகம் இருக்கும் இந்தியாவில்தான் இந்த நிலைமையும்.

இப்படி ஒரு தரவரிசை வந்து விட்டதே என்று எந்த தொலைக்காட்சி அரங்கத்திலும் விவாதங்கள் தூள் பறக்கவில்லையாம். நிதி அமைச்சர் மற்ற வேலைகளை விட்டு விட்டு அவசர நடவடிக்கைகளை அறிவிக்கவில்லை. பத்திரிகைகளின் உள்பக்கங்களில் வேறு செய்திகள் கிடைக்காமல் இருந்தால், ஒரு சிறு இடத்தில் இதற்கு இடம் கொடுத்திருப்பார்கள். முதல் பக்கத்தில் 19000க்குப் பறக்கும் சென்சஸுக்குத்தான் இடம்.

ஞாயிறு, நவம்பர் 16, 2008

ஆதம் சுமித்தின் வரலாற்றுப் பிழை

கடந்த முன்னூறு ஆண்டுகளாக கோலோச்சி வரும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார சமூக அமைப்புக்கு அடித்தளம் அமைத்தவர் ஆதம் சுமித். தனி மனிதர்கள் தத்தமது சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் போது சமூகத்துக்குத் தேவையான பணிகள் நடந்து விடுகின்றன. அப்படி நடப்பதுதான் குறைந்த செலவில், சரியான வழியில் நடப்பதற்கான ஒரே முறை என்று கோட்பாட்டு முறையில் நிறுவிக் காட்டியவர் ஆதம் சுமித்து.

ஆதம் சுமித்து வாழ்ந்தது 18ம் நூற்றாண்டில். அவர் எழுதிய நூல் - வெல்த் ஆஃப் நேசன்சு.

அந்த முறையில் இருக்கும் ஓட்டையை முழுமையாக அலசி ஆராய்ந்து மாற்று பொருளாதாரச் சமூக அமைப்பை உருவாக்க அறைகூவல் விடுத்தவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்சு. இவரது தஃச் கேபிடல் என்ற நூலும், கம்யூனிச பிரகடனமும் 20ம் நூற்றாண்டின் உலக அரசியலின் இழுபறிகளுக்கு அடிப்படையாக அமைந்தன.

ஆதம் சுமித்தின் சுயநலமே சமூக நலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கடந்த 300 ஆண்டுகளின் தொழில்நுட்ப , பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைப் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த முன்னேற்றங்கள் கலப்படமற்ற நன்மைகள் மட்டுமா என்று கேட்டால், இல்லை.

தொழில் நுட்ப வளர்ச்சிகள் மனிதரை மனிதர் கொல்வதற்கும் அழிவு வேலைகளுக்கும் பயன்படுவது பெரிதும் அதிகரித்தது. பொருளாதார வளர்ச்சி பெரும்பாலான மக்களை துன்பத்திலும் வறுமையிலும் ஆழ்த்துவதிலேயே முடிந்தது. ஆதிக்கம் செலுத்த முடிந்த நாடு அல்லது சமூகங்கள் நலிந்த பிரிவினரை சுரண்டி தம்மை வளப்படுத்திக் கொள்வது நடந்து கொண்டிருக்கிறது.

ஆதம் சுமித்தின் கோட்பாடு மனிதனின் இயற்கை இயல்பை தூண்டி விடுவதை அடிப்படையாக கொண்டிருக்கிறது. விலங்குகளாக காட்டில் வாழும் போது இயற்கை போக்குகள் இப்படி இருந்திருக்கும்:

1. உணவுக்காக அல்லது போட்டியின் காரணமாக சக மனிதனையும் பிற விலங்குகளையும் கொல்வது இயற்கையாக இருந்திருக்கும்.
2. உடலின் தூண்டுதலின் பேரில் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சாப்பிடுவது, கழிவது, உறவு கொள்வது இயல்பாக இருந்திருக்கும்
3. தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து ஓடித் தப்பிப்பது இயல்பாக இருந்திருக்கும். கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் திரும்பத் தாக்குவதும் நடக்கும்.

ஒரு சிலர் இந்த இயல்புப் போக்குகளைக் கைவிட்டு, சக மனிதருடன் ஒத்து வாழும் முறையை வகுத்து கூடி வாழ ஆரம்பித்திருப்பார்கள். அப்படி இயற்கை போக்கை மட்டுறுத்தி குழுவாக வாழ ஆரம்பித்த சமூகங்கள், இயற்கையாக விலங்கு நெறியில் வாழ்ந்த மனிதர்களை விட சிறப்பாக தளைத்து பெருகியிருப்பார்கள். இப்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில், நலம் பயக்கும் முறைகளை சேர்த்துக் கொண்டே போன சமூகங்கள்தான் இன்றைக்கும் தாக்குப் பிடித்து இருக்கின்றன.

தன்னுடைய நலத்தை மட்டும் பார்த்துக் கொள்வது என்று மனிதருக்குப் போதிக்கும் கோட்பாடு, மனிதரின் மனதுள் புதைந்து கிடக்கும் விலங்கு இயல்பை தூண்டி விடுவதாக அமைந்து விட்டது. அப்படித் தூண்டி விட்டாலும், முழுவதும் பல்லாயிரமாண்டு பரிணாம வளர்ச்சியை உதறி விட்டு விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பி விடவில்லை.

அலுவலகத்தில், பணியிடத்தில் சுயநலத்தின் அடிப்படையில் பணியாற்றி விட்டு வீட்டுக்கு வரும் ஒருவர் தனது குழந்தையிடம் விலங்காகப் பழகாமல், நன்னடத்தை கோட்பாட்டின்படிதான் பழகுவார். நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு நல்லது செய்யும் அதே நேரத்தில் தொழிற்சாலை இருக்கும் ஊரின் நீர்நிலைகளை நச்சுப்படுத்தத் தயக்கம் வருவதில்லை.

அந்த இரட்டை வாழ்க்கைதான் சந்தைப் பொருளாதார சமூகத்தின் சரிவுக்கான வித்து. ஆதம் சுமித்தைத் தாண்டி மார்க்சையும், மனித நெறிகளையும் சேர்த்து புதியதோர் வாழ்க்கை நெறி காண்பது 21ம் நூற்றாண்டில் நடக்கலாம்.

ஞாயிறு, மே 18, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பட்டறை

ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் பயணம் (மே 11, 2008). காலையில் ஐந்தரை மணிக்கு கார் வருமாறு சொல்லியிருந்தோம். அலுவலகத்தில் வண்டியில் ஏறி விட்டு வினையூக்கி வீட்டில் அவரையும் அழைத்துக் கொண்டு கத்திப்பாராவுக்கு பேருந்தில் வந்து காத்திருப்பதாகச் சொன்ன பாலபாரதியும் சேர்ந்து கொள்ள ஆறு மணிக்குள் நெடுஞ்சாலையைப் பிடித்து விடுவதாகத் திட்டம். ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிப்பதாகச் சொல்லியிருந்தார்கள்.

5 மணிக்கு வினையூக்கியின் தொலைபேசி அழைப்பு. தயாராகி காத்திருப்பதாக தகவல். பாலபாரதியிடமிருந்து குறுஞ்செய்தி, பேருந்து நிறுத்தத்துக்கு வந்து விட்டார். அலுவலகத்துக்கு சரியாக ஐந்தரை மணிக்கு வந்து விட்டேன். கணிச் சுவடி மற்றும் விசைப்பலகை ஒட்டிகளை ஒரு பையில் போட்டு எடுத்து வைத்திருந்தேன். பாலாவின் மடிக்கணினியில் சூசே லினக்சு நிறுவத் தேவையான தட்டுகளடங்கிய பொதியையும் மடிக்கணினி பையில் எடுத்துக் கொண்டிருந்தேன்.

வண்டி வரும் அடையாளமே தெரியவில்லை. யாருக்குத் தொலைபேசி கேட்க வேண்டும் என்று எண்ணும் வாங்கி வைத்திருக்கவில்லை. ஓட்டுனர் ஐந்து மணிக்கே வந்து இடம் தெரியாமல் அலைந்து கொண்டிருந்திருக்கிறார். அவரிடமும் என் தொலைபேசி எண் இருக்கவில்லை. போன ஒரு தடவை போல, தேநீர் தயாரித்து குடித்து, பாலபாரதி கேட்ட அறிவுமதியின் தொலைபேசி எண்ணை மின்னஞ்சலிலிருந்து எடுத்து கொடுத்து விட்டு சரி, பேருந்திலேயே கிளம்பி விடலாம் என்று வெளியில் வந்தால் தெரு முனையில் வழி கேட்டுக் கொண்டு ஒரு வண்டி நின்றது. அதற்குள் பேச ஆரம்பித்திருந்த வினையூக்கிக்கான தொலைபேசி அழைப்பில் நிலவரத்தைச் சொல்லி 10 நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொன்னேன்.

வினையூக்கியின் வீட்டில் அவர் முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டார். வடபழனியை தவிர்த்து கே கே நகர் வழியாக நூறடி சாலைக்கு வந்து அசோகா தூண் சுற்றி கிண்டி வந்தோம். கிண்டியில் கத்திப்பாரா மேம்பாலம் ஏறி இறங்கி பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக பாலபாரதி தொலைபேசியிருந்தார். தவிர்க்க முடியாத தம்முடன் தாண்டி நின்றிருந்தார்.

ஏறியவுடன் ஓட்டுனரிடம் 'உங்க பேரென்ன?' என்று ஒரு அதட்டலாகக் கேட்டு விட்டு உட்கார்ந்தார். 'பாட்சா'. பாட்சா பாயாக மாறி விட்ட ஓட்டுனர் மிகவும் உற்சாகமாக கடைசி வரை வண்டி ஓட்டினார். ஒரு மனிதரின் பெயர் கேட்பதன் மூலம் நட்பு சூழலை உருவாக்கி விட்டாரே என்று வியந்து கொண்டேன். வாய் விட்டுச் சொல்லவில்லை.

அப்போது ஆரம்பித்த பேச்சு போகும் போதும் வரும் போது ஒரு சில மணித்துளிகள் தவிர்த்து ஓயவே இல்லை. வினையூக்கி சிறிது நேரத்துக்கெல்லாம் மௌனமாகி விட்டார். கேட்டால், 'காது கொடுத்துக் கொண்டிருக்கிறேன்' என்று அரை மயக்கத்தில் பதிலளித்தார். ஒன்று, எங்கள் விவாதங்கள் அவ்வளவு செறிவாக இருந்திருக்க வேண்டும். அல்லது சகிக்க முடியாத அறுவையாக இருந்திருக்க வேண்டும்.

வழக்கம் போல எனக்கு நல்ல பசி வந்து விட்டது. பாலாவுக்கும் சரி வினையூக்கிக்கும் சரி, வழக்கமாக தூங்கி எழுந்திருக்காத நேரம். பாலபாரதி ஆய் சரியாக போகாத விபரங்களை சொல்லி வந்தார். போகும் போது இயற்கை உந்துதல்களை பேச மறுக்கும், தயங்கும் போக்குக்குச் சவுக்கடியாக பாலபாரதி சொன்ன கருத்துக்களோடு நகர்ந்தது.

'தலைக்கு சாயம் அடித்துக் கொள்ளுங்க' என்று சொன்னதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'ஏதாவது ஒருத்தன் சொன்னா அப்படியா செய்றேன் என்று கேட்டுக்க வேண்டியதுதானே, உடனேயே முடியாது என்று ஏன் சொல்லணும்'. 'அதுக்காக பொய் சொல்ல முடியுமா, மனதுக்கு பட்டதைத்தான் சொல்வேன்.'

வழியில் சாலையோரமாக ஒரு சின்ன ஊரில் நிறுத்தினார்கள். தேநீர் கடையில் பிஸ்கட்டுகள், முறுக்குகள்தான் இருந்தன. நான் தேநீர் குடிப்பதே இல்லை என்று முடிவு கட்டி எனக்குச் சொல்லாமலே விட்டு விட்டார் பாலா. அடுத்த கடையில் சுடச் சுட வடைகள் போட்டு விற்றுக் கொண்டிருக்க அதில் நான்கு வாங்கி ஆளுக்கொன்று கபளீகரம் செய்தோம். சந்தடி சாக்கில் எனக்கும் இனிப்பு குறைவாக, கடுப்பம் குறைவாக ஒரு தேநீர் சொல்லிக் கொண்டேன்.

திண்டிவனம் வரை சாலை உயர் தரமாக இருக்க, தாண்டிய பிறகு வேலை நடந்து கொண்டிருப்பதால் ஒரு அகலப் பாதையில் இரு திசையிலும் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு ஊரில் ஏதோ ஊர்வலம் என்று ஒரு பக்கச் சாலை அடைபட்டிருந்தது. வாகன ஓட்டி பாட்சா எதிர்த் திசையில் ஏறி பிற வண்டிகளைத் தாண்டி நின்று கொண்டார். தவறு என்று தெரிந்தும் நமக்கு நேரம் மிச்சப்படுகிறது என்று தெரிந்ததும் தடுக்காமலேயே இருந்து விட்டோம்.

விழுப்புரம் வருவதற்கு சற்று முந்தைய இடத்தில் ஒரு சின்ன ஊரில் திருமண விழாவுக்காக சாலையோரத்தில் மண மக்களின் புகைப்படங்களை அழகு படுத்தி பெரிய தட்டிகளை வைத்திருந்தார்கள். மிக்க ரசனையோடு பெண்ணை அழகிய, மகிழ்ச்சி காட்டும் முகத்துடனான கோணங்களில் வைத்திருந்த தட்டிகள் மிக்க நிறைவைக் கொடுத்தன. ஏதோ கணினி வரைகலை நிறுவனத்தைச் சார்ந்தவரின் திருமணம் என்று நினைத்துக் கொண்டோம்.

ஒன்பது மணி தாண்டி சிறிது நேரத்தில் விழுப்புரத்துக்குள் நுழைந்து விட்டோம். என் பசி அதற்குள் அடங்கி மந்தமாகி விட்டிருந்தது. புதுச்சேரி சாலையில் கல்லூரி இருக்கிறது. புதுச்சேரி போகும் சாலையின் திசைகாட்டிக்கு அருகிலேயே சாப்பிடும் விடுதிக்கான விளம்பரம்.

அதைப் பிடித்துக் கொண்டு நேராக விடுதிக்கு முன் வண்டி நிறுத்தச் சொன்னோம். நல்ல கூட்டம். முதலில் கிச்சடி, தொடர்ந்து தோசை. கடைசியில் பாதி காபி. சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு வழி கேட்டு வந்து சேரும் போது நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தது. முனைவர் இளங்கோவன் தமிழ் 99 குறித்து உரையை ஆரம்பித்திருந்தார். அப்போதுதான் தொடங்கியதாக இரா சுகுமாரன் சொன்னார்.

வகுப்பறை போல எல்லோரையும் உட்கார வைத்து கணினிகளை சாட்சியாக வைத்து தமிழ்99ன் அருமை பெருமைகளை நுணுக்கங்களை விவரித்துக் கொண்டிருந்தார். 'இது பட்டறைங்க, ஆராய்ச்சி அறை இல்லீங்க' என்று மனதுக்குள் கூவிக் கொண்டே வந்த களைப்பாறினோம். வாய்ப்பு கிடைத்ததும் நடை முறை பயிற்சியை ஆரம்பிக்க முயற்சி செய்தோம்.

'எல்லோரும் கணினிகளின் அருகில் போய் விடுங்க. சொல்வதை எல்லாம் உங்கள் கைப்பட செய்து பார்த்தால்தான் மனதில் நிற்கும். நாங்க முன்னால் நின்று கொண்டு பேச நீங்கள் ஞாயிற்றுக் கிழமை அரைத்தூக்கத்தில் கேட்டுக் கொண்டிருப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் இல்லை. நீங்கள் பயிற்சி செய்ய ஏற்கனவே விபரம் தெரிந்தவர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பதுதான் நல்ல முறை' என்று நாற்காலிகளை திசை திருப்ப வைத்து கணினிகளுக்கு முன்பு எல்லோரையும் நகரச் சொல்லி விட்டேன்.

சில நிமிட கலங்கலுக்குப் பின்பு எல்லோரும் கணினிகளின் முன்பு உட்கார்ந்து கொண்டார்கள். கணினி முன்பு இடம் கிடைக்காமல் உட்கார்ந்திருந்த ரமேஷ் என்ற பையனை திரையில் விளக்கம் காட்டுவதற்காக காட்சித் திரை பொருத்தப்பட்ட கணினியை இயக்கிக் கொண்டிருந்த அருண பாரதிக்கு அருகில் போகச் சொல்லி ரமேஷூக்கு கணக்கு ஏற்படுத்தி செய்முறை விளக்கம் காட்டச் சொன்னேன்.

முதல் முயற்சியில் நான்கைந்து பேர் மின்னஞ்சல் முகவரி தொடங்க முடிந்தது. அடுத்தடுத்தவர்கள் கடவுச் சொல், கணக்குக்கான பெயர் எல்லாம் சரியாக கொடுத்து சமர்ப்பிக்கும் போது ஏதேதோ பிழை காட்டி உருவாக்க மறுத்தது. கூகுளில்தான் எல்லோரையும் நுழைத்து விட்டுக் கொண்டிருந்தோம்.அப்படியே பிளாக்கருக்குப் போய் விடலாமே!

ஒரு கட்டத்தில் பிளாக்கர் கணக்கு ஆரம்பித்து ஒரு வலைப்பதிவு உருவாக்குவதையும் சொல்லி முடிக்க ஏழெட்டு பேர் அதற்குள் உருவாக்கி விட்டிருந்தார்கள். அது வரை முடியாதவர்களை வேர்ட்பிரெஸ் கணக்கு உருவாக்கி வலைப்பதிவு போடச் சொன்னோம். கணினிகளில் தமிழில் எழுதும் வசதி, எழுத்துரு வசதி இல்லாமல் இருந்தது. அதனால் எல்லா வேலையும் ஆங்கிலத்தில்தான் நடந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட 100 பேர் அரங்கத்தில் இருந்தார்கள். தமிழ்நம்பி பிஎஸ்என்எல்லில் அவருக்கு இருக்கும் தொடர்புகளையும், அமைச்சர் பொன்முடியின் உதவியாளர் மூலம் மற்ற ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கிறார்கள். வசதியான கணினி பயிற்சி அறை. 37 கணினிகள் இருப்பதாகச் சொன்னார்கள்.

கோ சுகுமாரன் உடனுக்குடன் புகைப்படங்களையும் நிகழ்ச்சி விபரங்களையும் புதுவை பதிவர்கள் வலைப்பதிவில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

வலைப்பதிவுகளில் படங்களை, ஒலி ஒளிக் கோப்புகளை இணைப்பது குறித்து வினையூக்கி பேசினார்

'எல்லாமே ஆங்கிலத்தில் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ் எழுத்துருக்கள் எழுது கருவிகள் குறித்த அமர்வை முடித்து விட்டால்தான், எல்லோரும் தமிழில் தட்டச்ச முடியும்' என்று சொல்லி முனைவர் இளங்கோவன் அடுத்த அமர்வை ஆரம்பித்தார்.

அந்த அமர்வின் நடுவில் அமைச்சர் வந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ சலிப்பில் ஒதுக்கமான நாற்காலி ஒன்றில் போய் உட்கார்ந்தேன். சில நிமிடங்களில் பரிவாரம் வந்தது. கல்லூரி முதல்வர், விழுப்புரம் நகராட்சி தலைவர், அமைச்சர் பொன்முடி மூவருக்கும் நாற்காலி. அமைச்சரின் உதவியாளர் பேச்சாளர்களை ஒருங்கிணைத்தார்.

பேசுவதற்காக ஒலிவாங்கி மேடை, நாற்காலிகள், மேசைகள், பொன்னாடை போர்த்துதல், வரவேற்புரை, வாழ்த்துரை, சிறப்புரை, நன்றியுரை என்று ஒவ்வொன்றாக முறையாக செய்தார்கள். பேசிய எல்லோருமே ஓரிரு நிமிடங்களுக்குள் தமது பேச்சை சிற்றுரையாக முடித்துக் கொண்டது சிறப்பு. அமைச்சர் மட்டும் நீளமான உரை. பொருட்பிழை எதுவும் இல்லாமல், எழுதி கொண்டி வந்திருந்த குறிப்புகளிலிருந்து பொருத்தமாக பேசினார்.

பேச்செல்லாம் முடிந்து எல்லோரும் எழுந்து போய் விடுவார்கள் என்ற கட்டத்தில், 'அமைச்சருக்கும் ஒரு வலைப்பதிவு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்' என்று முனைவர் இளங்கோவின் காதில் சொல்ல, அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டு ஒலிவாங்கியில் கழகத் தமிழில் கொஞ்சம் புகழ் மாலைகள் சூட்டி விட்டு இரண்டு நிமிடங்களில் அமைச்சர் பொன்முடிக்காக் ஒரு வலைப்பதிவு உருவாக்கிக் கொடுக்க விரும்புகிறோம் என்று அறிவித்தார்.

அருண பாரதி சுறுசுறுப்பாக கணக்கு உருவாக்க ஆரம்பித்தார். நானும் கூட்டத்தை முன்பக்கத்தில் கடந்து திரை பொருத்திய கணினிக்கு அருகில் அருண பாரதி செய்வதை ஒலிபெருக்கியில் சொல்லும் பொறுப்பை எடுத்தேன். நான்கைந்து நிமிடங்களில் பொன்முடி2008 என்று அடையாளத்தில் ஜிமெயில் கணக்கு, கலைஞர் என்ற பெயருடன் ஒரு வலைப்பதிவும் உருவாக்கி, முதல் இடுகையைப் போட்டுக் காண்பித்து விட்டார்கள். உரத்த கைத் தட்டல்களுடன் அதை நிறைவு செய்தது கூட்டம்.

அத்துடன் அமைச்சர் குழாம் புறப்பட்டு போய் விட முனைவர் இளங்கோவன் தமிழ் எழுத்துருக்கள், தட்டச்சுவது குறித்த அமர்வைத் தொடர்ந்தார். ஒரு மணி தாண்டி விட்டது. பசி எடுக்க ஆரம்பித்தது. அவர் தனது பேச்சை முடித்து இடைவெளி விட்ட நேரத்தில், தமிழ் 99 விசைப்பலகை ஒட்டிகள் குறித்த அறிவிப்பை செய்து 2 ரூபாய்கள் நன்கொடை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

சர சரவென்று 100 ரூபாய்களுக்கு மேல் வாங்கிக் கொண்டார்கள் அன்பர்கள். கறுப்பு, வெள்ளை என்று இரண்டு ரகங்கள். சில ஒட்டிகளில் எழுத்துக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. பாரி முதன் முதலில் என்னிடம் கொடுத்த ஒட்டிகளைப் போல தரம் இல்லை என்று தோன்றியது. இவை தமிழ்நம்பிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டிகள்.

மதிய உணவுக்கு அழைத்தார்கள். மூன்று வகை கலந்த சோறு, அப்பளம். முன் நடைபாதையில் வட்டமாக உட்கார்ந்து, அதற்குள் வந்து சேர்ந்தி விட்டிருந்த விக்கி, அவர் நண்பர், பாலபாரதி, வினையூக்கி, பாட்சா என்று நன்கு சாப்பிட்டு முடித்தோம். தமிழ்நம்பியிடம் வினையூக்கிக்கு ஒரு நேர்முகம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டோம். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் என்ற வகையில் அவரது அனுபவங்களை ஆவணப்படுத்த வேண்டுமே!

ஆர்வம் குறையாமல் எல்லோரும் சாப்பாட்டுக்குப் பிறகு கூடி விட்டார்கள். எல்லோருக்கும் சுவையாக ஏதாவது பேசிக் கொண்டிருக்கச் சொன்னார்கள். தமிழ்மணம், தமிழ்ப்பதிவுகளின் எண்ணிக்களை, தேன் கூடு, தமிழ் வெளி, தமிழ் பிளாக்ஸ் என்று பல தளங்களைக் காட்டி அவற்றின் சிறப்புகளை விளக்கிக் கொண்டிருந்தேன். கூகிள் ரீடரில் இணைப்பது குறித்த அமர்வை ஒரு நண்பர் தொடங்க, அது சிறிது நேரம் தொடர்ந்தது. பாலபாரதி, விக்கி, நான் என்று இடையிடையே பங்களிப்பு செய்து கொண்டிருந்தோம்.

பாலாவின் கணினியில் சூசே லினக்சு நிறுவும் வேலையை ஆரம்பித்தோம். நல்ல வேளையாக வந்த சிக்கல்கள் எல்லாம் சுலபமாக அவிழ்ந்து ஒரு மணி நேரத்துக்குள் அவரது கணினியின் ஒரு பிரிவில் லினக்சு வேலை செய்ய ஆரம்பித்து விட்டிருந்தது.

கடைசியாக இயங்குதளங்களில் தமிழ் என்று ஒரு அமர்வில் நான் பேச வேண்டும். அதற்கு முன்பே இரா சுகுமாரன் தமிழ் மென்பொருள் கருவிகள் குறித்து பேசி விட்டிருந்தார். விண்டோசு, லினக்சு என்று நான் தயக்கமாகத்தான் பேச ஆரம்பித்தேன். எதிர்பார்த்திராத ஒரு அமைதி, ஆர்வத்தை உணர முடிந்தது. சில நிமிடங்களிலேயே நான்கைந்து பேர் லினக்சு குறித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்.

பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அவர்கள். அவர்கள் பள்ளிகளில் லினக்சு நிறுவப்பட்ட கணினிகளை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிய ஆர்வமாக இருந்தார்கள்.

ஞாயிறு, மார்ச் 16, 2008

மீண்டும் சந்திப்போம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து, வலைப்பதிவுகளில் ஓரளவு நிறைவாகவே செய்ய முடிந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இடுகைகள் எழுதி பல விலைமதிக்க முடியாத நட்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. வாழ்க்கையும் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

இப்படி ஒரு தருணம் வரும் போது கொஞ்சம் நிதானித்து, செய்கைகளை ஆராய்ந்து இதற்கு அடுத்த நிலை என்று அலசிப் பார்க்க வேண்டும். வலைப்பதிவுகளுக்கு அடுத்த நிலைக்கு நான் எப்படி நகர முடியும்? ஒரு நேரத்தில் சரியாகப் பட்ட-பலனுள்ளதாக இருந்த பழக்கங்கள் எல்லா நேரத்திலும் தேவை என்று சொல்லி விட முடியாது.

நான் தமிழ் மணம் சமூகத்தில் பங்கேற்பதற்கு ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொள்கிறேன்.

இதே பழக்கங்கள், தேடல்கள், கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவை இன்னொரு தளத்தில் இன்னொரு வடிவத்தில் வெளிப்படலாம். இதன் மூலம் ஏற்படும் நேரத்தில் வேறு ஒரு தளத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வாய்ப்பு கிடைக்கலாம்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்ற விதிப்படி பழையவர்கள் திட்டமிட்டு புதியவர்களுக்கு வழி விட்டு நிற்பது உதவலாம். என்னுடைய இருப்பு சிலருக்கு மனத்தடையாக இருக்கலாம். அப்படி ஒருவர் இருந்தாலும் எனது விலகல் அவருக்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

பொருள் சார்ந்த ஆக்க பூர்வமான பதிவுகள் அதிகமாக வேண்டும் என்று ஆர்வமுடைய நண்பர்கள், தாம் எழுத திட்டமிட்டிருப்பதை தள்ளிப் போடாமல், உடனேயே ஆரம்பித்து விடுமாறு என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நான் எழுதியதால் தனிப்பட்ட முறையில் சிறிதளவாவது பலனடைந்ததாக உணரும் ஒவ்வொருவரும் தம் பங்குக்கு ஒரு சில இடுகைகளாவது எழுதி வெளியிடலாம்.

அடுத்த ஒரு ஆண்டுக்கு நான் வலைப்பதிவுகள் சமூகம் பக்கம் எட்டிப் பார்க்கவே போவதில்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகு ஈர்ப்பு பலமாக இருந்தால் திரும்பி பார்க்கலாம். அது வரை எல்லோருக்கும் வணக்கம். மீண்டும் சந்திப்போம்.

இன்னொரு தளத்தில், இன்னொரு உருவில் நாம் எல்லோரும் சந்தித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். அப்படியொரு தளத்தில் மீண்டும் சந்திப்போம்.

புதன், மார்ச் 12, 2008

நல்லவர் வாழும் புதிய சமுதாயம்

கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி கவனம் ஒரு நாள் திரும்பும் அதில்
நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒரு நாள் அரும்பும்

- பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகள்

செவ்வாய், மார்ச் 11, 2008

கூடி வாழணும் பாப்பா

சின்ன வயதில் அம்புலிமாமாவில் படித்த ஒரு கதை:

ஒரு கிராமத்தில் மக்கள் எல்லோரும் ஒற்றமையாகவே இருப்பதில்லை. ஏதாவது முகாந்திரத்தில் ஒருவருக்கொருவர் சச்சரவு செய்து கொண்டு சரியாகப் பேசிப் பழகாமல் இருப்பார்கள்.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் வெளியூரில் படித்து முடித்துத் திரும்பியதும், அந்தக் கிராமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். அந்த நேரத்தில் கிராமத்துக்கு வருகை தரும் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியை கௌரவிக்க ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஊரின் எல்லா குடும்பத்தினரையும் விருந்துக்கு வரவேற்கிறான்.

விருந்து ஆரம்பிக்கிறது. பந்தியில் இலை போட்டு எதிரெதிராக வரிசைகள். எல்லோரும் உட்கார்ந்து விட்டார்கள். சண்டைக்காரர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாதவர்கள் எல்லாம் எதிரெதிராக உட்கார்ந்து விட்டார்கள்.

"தலைநகரிலிருந்து வந்திருக்கும் உயரதிகாரிக்கு நம்ம ஊர் மக்களின் புத்திசாலித்தனத்தைக் காட்ட நான் ஒரு பந்தயம் வைத்திருக்கிறேன். அதில் வெற்றி பெற்றுக் காட்டி நம்ம ஊர் மானத்தைக் காப்பாற்றும்படிக் கேட்டுக் கொள்கிறேன்". "நன்கு வயிறார சாப்பிடுங்கள். ஆனால், யாருடைய கையும் மூட்டு மடங்காமல் சாப்பிட வேண்டும்".

ஒரே குழப்பம், சாப்பாட்டு அறை முழுவதும் கசமுசா என்று விவாதங்கள்.

கொஞ்ச நேரம் போனது. இன்னும் கொஞ்ச நேரம்.

"மானப்பிரச்சனை, கொஞ்சம் நல்லா யோசியுங்க"

எதிரெதிராக இருந்த இரண்டு பேருக்கு ஒரு வழி தோன்றியது. கை மூட்டு மடங்காமல் சாப்பிட எதிரில் உள்ளவருக்கு ஊட்டி விட ஆரம்பித்தால் போதுமே!

----இதற்கு பதவுரை, பொழிப்புரை, தெளிவுரை எல்லாம் உண்டு----

சனி, மார்ச் 08, 2008

பொய் சொல்லக் கூடாது பாப்பா!!!

உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் பொய் சொல்ல வேண்டியதில்லை. வானம் விழும் போது காயமில்லாமல் தப்பிப்பதற்கான கவசம் வாய்மைதான்.

உண்மை சொல்வதால் மிக மோசமான விளைவாக என்ன நடந்து விடும் என்று தயார்ப்படுத்திக் கொண்டால் போதும். உண்மையே சொல்வதால் கிடைக்கும் மனத்தெளிவும் திண்மையும் நம்மை நோக்கி வரும் பாறைகளையும் உடைத்துப் போடும் வலிமையைத் தந்து விடும்.

பொய் சொல்வதற்கு அதிகமான மன ஆற்றலை செலவழிக்க வேண்டியிருக்கும். உண்மை சொல்லும் மனம் எளிதாக, மென்மையாக மேலே மேலே உயர்வதற்கான எண்ணங்களை சிந்திக்க இடம் பெற்றிருக்கும்.

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனில் பொய்யும் உண்மையாகும் என்கிறார்களே! யாருக்கு நன்மை பயக்கும்? எப்படி புரை தீர்ந்திருக்க வேண்டும்? ஒரு பாவமும் அறியாதது என்று உறுதியாக நம்பும் இன்னொரு உயிர் தண்டிக்கப்படுவதைத் தவிர்க்க மட்டும் பொய் உண்மையாகும்.

சொந்த நலத்துக்காக, செய்த தவறை மறைக்க விரும்பி சொல்லும் பொய்கள் எல்லாம் நம்மை அரித்து அரித்து கொன்று விடும் கரையான்களைப் போல மனதை கூடாக்கி விடும்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா.

என்ன நடந்து விடும் என்று பார்த்து விடலாம்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா.

அந்த வாய்மைதான் நமக்குத் துணை பாப்பா.

வியாழன், மார்ச் 06, 2008

அதிகம் தேவையில்லை ஜென்டில்மேன்....

மாற்றங்கள் என்பது புரட்டிப் போடும்படியான விளைவுகளை உருவாக்க பெரிய திருப்பங்கள் தேவையில்லை. ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நாளிலும் ஓரிரு டிகிரிகள் சரி செய்து கொண்டிருந்தால் போதும்.

சரி செய்தலே இல்லாமல் நேர்கோட்டில் போய்க் கொண்டிருந்தால் போய்ச் சேரும் இலக்கும், இது போன்று நுண் மாற்றங்கள் செய்து கொண்டே இருந்தால் அடையும் இலக்கும் பெரிதளவு மாறுபட்டிருக்கும்.

குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமானால், இந்த சரிபார்த்தல் மிக முக்கியமானது. வாழ்க்கையும் நம்மைச் சூழ்ந்த உலகமும் கடலில் போகும் கப்பல் போன்றவை. கப்பல் ஆடிக் கொண்டே இருக்கும். போன நிமிடத்தில் இருந்த நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நான் ஒரு இலக்கைக் குறிவைத்துப் பயணம் செய்ய வேண்டுமானால், கப்பலின் நிலையை அவதானித்து அதன் திசையில் நுண்ணிய மாறுதல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆரம்பிக்கும் போதே இதுதான் என் முடிவுப் புள்ளி என்று நேர்கோட்டில் இயக்கத்தை அமைத்து விட்டு தூங்கி விட்டால், நேர்கோட்டில் நகரும் கப்பல் நாம் நினைத்த இடத்துக்குப் போகாமல் வேறு எங்கோ போய்ச் சேர்ந்திருக்கும். இடையில் நடுவில் இருந்த பாறை அல்லது குறுக்காக வந்த இன்னொரு கப்பலில் மோதி உடையாமல் தப்பிப் பிழைத்து விட்டால்.

மாற்றம் என்றாலே எல்லோருக்குமே ஒரு பயம் வருகிறது. இன்றைக்கு நாம் செய்வது நமக்குப் பழக்கமானது. இதை விட்டு விட்டு புதியதுக்கு மாறினால் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும். அது எல்லாம் கூடுதல் சுமை ஆகி விடும்.

மாற்றம் என்றால் 45 டிகிரியோ, 180 டிகிரியோ திரும்ப வேண்டாம். ஓரிரு டிகிரிகள் திரும்புவது பெருமளவு மாற்றத்தைத் தந்து விடும். ஓரிரு டிகிரிகள் திரும்பினால் நாம் செய்யும் வேலைகளில் பெரிதளவு கற்றுக் கொள்ள எதுவும் இருக்காது. சின்ன சீர்படுத்தல் மட்டுமே இருக்கும்.

ஆனால் விளைவுகளில் பெரிய மாறுதல் இருக்கும்.

செவ்வாய், மார்ச் 04, 2008

பரிதாபம்!!!

"எங்கள் இளைஞர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட அரசியல் தத்துவத்திற்காக உயிரை விடுகிறார்கள். தமிழ் நாட்டு இளைஞன் என்னவென்றால் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்கிறான்.. விஜயகாந்துக்கு என்கிறார். என்ன அயோக்கியத்தனம் இது."

"எங்களுக்காகத் தமிழ்நாட்டில் அனுதாபப்படாதீர்கள். அதை எங்கள் இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். இப்படி ஒரு இளைஞர் சமுதாயத்தை வளர்த்து வைத்திருப்பதற்காக நாங்கள்தான் தமிழ்நாட்டைப் பார்த்து அனுதாபப்பட வேண்டியிருக்கிறது."

ஈழத்து தமிழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் புதிய பார்வை இதழ் பேட்டியில்.

திங்கள், மார்ச் 03, 2008

!!!!!!

துன்பங்களையும் கடின உழைப்பையும் தாங்கிக் கொண்டு, ருக்மணி தனது வழியில் வந்து விடாமல் ஜானகியால் பார்த்துக் கொள்ள முடிந்தது.

அவள் ஒரு விடுதியுடன் இணைந்த பள்ளியில் படித்து முடித்து இன்றைக்குப் பட்டதாரியாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறாள்.

ருக்மணிக்கு அவளது அம்மா ஒரு பாலியல் தொழிலாளி என்பது தெரியுமா?

"ஆமா, அவள் பத்தாம் வகுப்பு முடிச்சதும் நானே சொல்லிட்டேன். வேறு யாராவது கேட்டுத் தெரிந்து கொள்வதை விட நானே சொல்லி விடுவது நல்லதில்லையா. பல நாட்கள் அழுது கொண்டே இருந்தாள், என் கூட பேசவில்லை. கடைசியில் என்னை, என் நிலைமையை ஏற்றுக் கொண்டு விட்டாள்"

தாயும் மகளும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. "என்னுடைய பணியால் ருக்மணிக்கு கல்யாணம் பண்ணி வைப்பது கஷ்டமாக இருக்கப் போகிறது"

பேசிக் கொண்டிருக்கும் போது முதல் முறையாக ஜானகியின் முகத்தில் கடுமை கரைந்து குழந்தை பயம் தெரிகிறது. உடனேயே மீண்டும் அந்தக் கடுமை முகத்தைப் போர்த்திக் கொள்கிறது.


----இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு மலரில் வெளி வந்த கட்டுரையிலிருந்து.

வெள்ளி, பிப்ரவரி 29, 2008

வாழும் நெறி

தனியொரு மனிதன் திருந்தி விட்டால்
சிறைச்சாலைகள் தேவையில்லை

இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்தால்
எடுப்பவர் யாருமில்லை

=== ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்

வியாழன், பிப்ரவரி 28, 2008

சுஜாதா

தமிழ் அறிந்த ஒரு தலைமுறையையே புரட்டிப் போட்ட, அறிவியல் தமிழை பட்டி தொட்டிகளுக்கும் பரப்பிய
கலைஞன் சுஜாதாவுக்கு அஞ்சலிகள்.

புதன், பிப்ரவரி 27, 2008

ஒரு நாள் ஒரு கனவு

1. உணவுப் பொருட்களின் தரம்.
நம்ம ஊரிலும் தண்ணீர்க் குழாயைத் திறந்தால் குடிக்கும் தரத்திலான தூய்மையான தண்ணீர் கிடைக்க வேண்டும். இங்கிலாந்து போயிருந்த போது குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் குளியலறையில் குழாயைத் திறந்து பிடித்துக் கொள்ளுமாறு சொன்னார்கள். அது போன்று தூய்மையான தண்ணீர் எல்லோரின் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்

2. பள்ளிக் கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் தவறாமல் கிடைக்க வேண்டும். ஒரே மாதிரியான தரமான கல்வி சமூக அமைப்புகள், அரசு நிறுவனங்களால் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் பத்து ஆண்டுகளுக்குக் குறையாத கல்வி கற்க வாய்ப்பு இருக்க வேண்டும்.

3. விவசாயிகளுக்கு விலை
வயலில் வேலை பார்க்கும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளின் வளர்ச்சிக்கேற்ப விவசாய விளைபொருட்களின் விலையும் ஏற வேண்டும். மிக நலிந்த பிரிவினருக்கும் மட்டும் சலுகை விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மாதம் 50000 ரூபாய் சம்பாதிப்பவருக்கு அரிசி விலை கிலோ 200 ரூபாய்கள் இருந்தால் என்ன குறைந்து விடும்?

4. குப்பை
நகரங்களிலும் கிராமங்களிலும் குப்பைகளை சரிவரத் திரட்டி கையாளும் முறைகள் இருக்க வேண்டும். குப்பைகளை போட உயரமான தடுப்புகளுடன் கூடிய குப்பைத் தொட்டிகளும், அவற்றிலிருந்து எடுத்துச் செல்லப்படும் குப்பைகளை மக்க வைக்க பெரிய மதில் சூழ்ந்த மைதானங்களும் இருக்க வேண்டும். மக்காத குப்பைகளை தனியாகப் பிரித்து எடுத்து கழுவி மறு சுழற்சிக்குப் பயன்படுத்தும் முறைகள் இருக்க வேண்டும்.

5. சுகாதாரம்
பொது இடங்களில் துப்புவது, குப்பை போடுவது போன்றவே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

6. பெண்கள் ஆண்களுக்கு இணையாக எல்லா துறைகளிலும் பணி புரியும் வாய்ப்பும் முறைகளும் இருக்க வேண்டும். பேருந்து ஓட்டுதலிருந்து, கட்சிப் பதவிகள், அரசுப் பணிகளிலும், அமைச்சகத்திலும் பெண் ஒருவர் பதவியிலிருப்பது புருவத்தை உயர்த்துவதாக இல்லாமல் இயல்பாகிப் போய் விட வேண்டும்.

7. போக்குவரத்து
பொதுப் போக்குவரத்து வசதிகள் நகரங்களில் நிறைய இருக்க வேண்டும். நியாயமான கட்டணத்தில் வசதியான பயணத்துக்கு வண்டிகள் இயக்கப் பட வேண்டும். காற்று மண்டலத்தை அசுத்தப்படுத்தும் வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது.

8. அரசியல்
அரசியலுக்கு வருவதைப் பெருமையாகக் கருதி எல்லாத் தரப்பினரும் அரசியலில் பணி புரிய வர வேண்டும்.

9. பாதுகாப்பு,
எந்த வீட்டுக்கும் பூட்டு போட வேண்டிய தேவையே இல்லை என்னும் நிலை இருக்க வேண்டும். அவரவர்க்குத் தேவையான பொருட்களை மட்டும் வீட்டுக்குள் வைத்திருந்தால் யார் வந்து திருடிச் செல்வார்கள்?

10. அறிவியல்
கல்விச் சாலைகளிலும் வணிக நிறுவனங்களிலும் புதிய கண்டுபிடிப்புகள் அறிவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். பல மொழிகளைக் கொண்டு இயங்கும் நாட்டில் எந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கும் மொழிபெயர்க்கும் வசதிகளும் தகவல் தொழில் நுட்ப வசதிகளும் பெருக வேண்டும்.

11. மதம்
மதம் மனிதர்களின் வீட்டுக்குள் இருக்க வேண்டும். பக்கத்து வீட்டுக் காரரை மாற்று மதத்தினர் அல்லது தன் மதத்தினர் என்று யாரும் அடையாளம் காண விளையக்கூடாது. கூட்டம் சேர்த்து பொது இடங்களில் இடைஞ்சல் விளைவிக்கக் கூடாது.

12. சாதி
சாதி அமைப்பினால் ஒடுக்கப்பட்ட பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் தமது சாதி குறித்த அடையாளங்களை பதிவுகளை ஒதுக்கி விட வேண்டும் அடுத்த தலைமுறை தமது சாதி என்ன என்று தெரியாமலேயே வளர்க்கப்பட வேண்டும்.

ஞாயிறு, பிப்ரவரி 24, 2008

சீனா மனிதர்கள் மூலம் - கல்லூரி மாணவி

சீன மொழி தெரியாமல் சீனாவில் எதுவும் செய்ய முடியாது. நான் போய்ச் சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு சீனர் ஏற்கனவே இருந்தார். ஆனால், நாங்கள் இரண்டு பேரும் தனித்தனியாக செயல்பட்டு வணிகத்தைப் பெருக்க வேண்டும் என்று நிறுவனத்தின் திட்டம். அவருடனே நான் சுற்றிக் கொண்டிருந்தால் அந்தத் திட்டம் என்ன ஆவது!

சரி, சீன மொழி பேசத் தெரியா விட்டால், யாராவது ஒரு மொழிபெயர்ப்பாளரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாமே! அந்த வழியில் இறங்கினேன். ஒரு நாள் தரையடி ரயிலில் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருக்கும் போது அன்னிய முகத்தைப் பார்த்த ஒரு சீன இளைஞர் என்னை அணுகி ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலத்தில் பேச முடியும் சீனர்கள் மிகச் சிலரே இருந்தார்கள். அது பணக்காரர்கள் ஆவதற்கான கடவுச் சீட்டு போன்ற திறமை.

ராய் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தனது பெயர் அட்டையைக் கொடுத்து ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளும்படி சொன்னார். அவரிடம் உதவி கேட்கலாம் என்று தொலைபேசினேன். அடுத்த வார இறுதியில் வீட்டுக்கே வந்து விட்டார். தான் இப்போது நல்ல வேலையில் இருப்பதாகவும் அதனால் வேறு ஒருவரை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் சொன்னார்.

கல்லூரி மாணவர் யாராவது பகுதி நேரத்தில் எனக்கு மொழிபெயர்ப்பு வேலை செய்தால் போதும் என்று முடிவு செய்தோம். அவரது மாநிலத்தில் இருந்த போது அவர் ஆங்கில ஆசிரியராக ஒரு பள்ளியில் பணியாற்றினாராம். அப்போது அவரிடம் மாணவர்களாக இருந்தவர்கள் பலர் சாங்காயில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மார்கரெட் என்ற பெண் மிகத்திறமையானவள். அவளைப் பார்க்க அழைத்துப் போகிறேன் என்று சொன்னார்.

ஒரு நாள் சாங்காய் ஜியாவ்தோங் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்கு அழைத்துப் போனார். சந்திக்க வேண்டிய பெண் அறையில் இல்லை. அவரது அறைத் தோழியர் நான்கைந்து பேர் வரவேற்று உட்கார வைத்தார்கள். இந்தப் பெண் சிறிது நேரம் கழித்து வந்தார். பல்கலையில் முதுநிலை மேலாண்மை பட்டம் பயின்று கொண்டிருந்தார். இது கடைசி பருவம் ஆதலால், நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும். பகுதி நேர மொழிபெயர்ப்பாளர் பணி செய்ய முடியும் என்று ஒத்துக் கொண்டார். வாரத்துக்கு 400 யுவான் என்று மாதம் 1600 யுவான்கள் சம்பளம்.

ஆங்கிலப் பெயரை பயன்படுத்தப் போவதில்லை என்று மார்கரெட்டை கை விட்டு விட்டேன். என்னுடைய உதவியாளர் போல ஆகி விட்டார் நிங். நான் வாங்கிய கணினிக்கு இணைய இணைப்பு சீன தகவல் தொடர்பு துறையிடம் விண்ணப்பித்து வாங்கிக் கொடுத்ததில் ஆரம்பித்து, நிறுவனத்தைப் பற்றிய குறிப்பை சீன மொழியில் மொழி பெயர்த்து, விற்பனைக்கு எந்த ஊருக்குப் போகலாம் என்று துப்புத் துலக்கி சரியான சந்தையையும் பிடித்து விட்டார்.

'நான் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர், தெரியுமா' என்று ஒரு நாள் கேட்டார். 'அப்படியா' என்று பரபரப்பில்லாமல் கேட்டுக் கொண்டேன். 'அது என்ன இவ்வளவு சாதாரணமாக கேட்டுக் கொள்கிறீர்கள், எல்லோரும் கட்சியில் சேர்ந்து விட முடியாது தெரியுமா, எங்க வகுப்பிலேயே விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையினர்தான் கட்சி உறுப்பினர்கள். பல ஆண்டுகள் முயற்சித்து, பல பணிகளை முடித்து, கட்சி நம்பிக்கையைப் பெற்றால்தான் உள்ளேயே விடுவாங்க. நானும் அதை சாதிச்சவ'

அப்பவும் எனக்கு அது பெரிய சாதனையாக படவில்லை.

நிங்கின் வகுப்புத் தோழன் ஷூகாங் என்பவர். அவரையும் எங்கள் நிறுவனத்தில் சேர வைத்து விட வேண்டும் என்று எனக்கு எண்ணம். அவரை விருந்துக்கு அழைக்குமாறு நிங்கை தொந்தரவு செய்து ஒரு நாள் மூன்று பேரும் சாங்காயின் விலை உயர்ந்த இந்திய உணவகத்திற்குப் போனோம். எனது கனவுகள் எல்லாம், ஆங்காங்கில் டாடா நிறுவன அலுவலகத்தைப் போல நான் சாங்காயில் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பதுதான்.

வெள்ளி, பிப்ரவரி 22, 2008

சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு - கொஞ்சம் பழசு

ஓசை செல்லா தொலைபேசி சென்னையில் இருப்பதாகவும் மாலையில் மெரீனா கடற்கரையில் சந்திக்கலாம் என்றும் காலையில் சொல்லியிருந்தார். அது குறித்து லக்கிலுக்கின் அஞ்சலும் வந்திருந்தது.

அலுவலகத்திலிருந்து 6.20க்கு, வினையூக்கியின் வீட்டில் ஆறரைக்கு, ஆற்காடு சாலையில் நகர்ந்து நகர்ந்து ஜெமினி வட்டம். அதன் பிறகு அகலமான சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்னை சிட்டி சென்டர் என்று ஆரம்பித்திருக்கும் தலைவலியால் அந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல்தான். அதற்கு யார் என்ன அடிப்படையில் அனுமதி கொடுத்தார்கள், அத்தனை கார்களை எப்படி நெருக்கடி கொடுக்க விடுகிறார்கள் என்று இன்னும் புரியவில்லை.

'காந்தி சிலையின் பின்னால் ஒரு குளம் மாதிரி இருக்கும், தண்ணீ இருக்காது' என்று லக்கிலுக்கின் தொலைபேசி வழிகாட்டலைப் பின்பற்றி போய்ச் சேர்ந்து விட்டோம்.

என்னுடைய கைபேசியில் யாரையாவது அழைத்தால் 'அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் பில் கட்டணம் செலுத்தும் நாள் கடந்து விட்டது. தடை இல்லாத சேவையைப் பெற உடனடியாக பணம் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள்' என்று ஒரு இயந்திரக் குரல், தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்க்காமலேயே நிறுத்தி விட்டேன். (அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் பேசி விட்டு அதன் பிறகு இணைக்கிறார்கள் என்பது அடுத்த நாள் காலையில் தெரிந்தது. 'பில் கட்டியாச்சா' என்று கூப்பிட்டுக் கேட்ட இளைஞரிடம் குமுறியதில் அந்த குரலை உடனே நீக்கித் தந்து விட்டார். அது அடுத்த நாள் காலையில்). தொலைபேசியில் யாரையும் அழைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.

செல்லாவும் சிவஞானம்ஜியும் உட்கார்ந்திருக்க, லக்கியும் அதியமானும் பாலபாரதியையும் ஆழியூரானையும் அழைத்து வரப் போயிருக்கிறார்களாம். ஆழியூரானின் வண்டி பாதியில் நின்று விட்டிருக்கிறது. நான்கு பேரும் வந்து சேரும் இடைவெளியில் அவித்த கடலைப் பொட்டலங்கள் வாங்கிக் கொண்டோம். செல்லா பஜ்ஜி வாங்கி வந்திருந்தார்.

அதியமான் 'என்ன மொட்டை எல்லாம் போட்டிருக்கீங்க, உங்களுக்குத்தான் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதே' என்று ஆரம்பித்து, 'மோடி ஜெயித்து விட்டாரே' என்று தொடர்ந்து தனக்குப் பிடித்த விவாதங்களைக் கிளறி விட்டுக் கொண்டிருந்தார். 'அதியமான் இருக்கும் இடத்தில் சூட்டுக்குக் குறைவே கிடையாது'

இடையில் ஆழியூரானின் தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்த விவாதத்தில் மட்டும் அதியமானுக்கு சரக்கு இருக்கவில்லை. மற்ற எல்லாவற்றிலும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார். முறுக்கு, போளி என்று அடுத்த சுற்று ஆரம்பமானது. ஒன்பது மணி ரயிலைப் பிடிக்க சந்திப்பின் காரணகர்த்தா செல்லா கிளம்பி விட மற்றவர்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம். செல்லா தொலைபேசி 'உருப்படியாக புராஜக்ட் தமிழ் ரெடி பற்றிக் கொஞ்சம் பேசுங்க' என்று நினைவூட்டினார்.

ஒன்பது மணிக்கு பாலபாரதி கூட்டத்தை முடித்து வைத்தார், சுறுசுறுப்பாக வண்டியை எடுத்தால், 'பின்பக்கம் காத்து குறைவா இருக்கு' என்று எச்சரித்தார்கள். சில அடிகள் போகும் போதே உள்டியூபில் ஓட்டை என்று தெரிந்து விட்டது. அங்கேயே நிறுத்தச் சொல்லி விட்டு லக்கி தனது வண்டியில் பஞ்சர் பார்ப்பவரை அழைத்து வருவதாகக் கிளம்பினார். ஆழியூரான் தனது வண்டிக்கு வழி செய்யக் கூடவே போனார்.

லக்கியின் உதவியைப் பிடித்துக் கொண்டு நான் பாலபாரதி, வினையூக்கி, அதியமான் சேர்ந்த அரட்டையில் கலந்து கொண்டேன். சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கும் படி லக்கி கலக்கிக் கொண்டிருந்தார். டியூப் வேலைக்காகாது என்று புதுசு போட்டு விட்டார்கள், 160 ரூபாயாம், அவ்வளவுக்குக் கையில் காசு இருக்கவில்லை. அதியமானிடம் நிதி திரட்டிப் பணம் கொடுத்து விட்டுக் கிளம்பினோம்.

அதியமானும், வினையூக்கியும், ஆழியூரானும், நானும் எங்காவது சாப்பிட்டு விட்டுத் தொடர முடிவு செய்தோம். கடற்கரைச் சாலையைத் தாண்டி வெளியே வரும் போதே வண்டி இன்னும் ஆடுவது போலப் பட்டது. பார்த்தால் முன் சக்கரத்திலும் ஓட்டை விழுந்திருக்கிறது. யாராவது வேண்டுமென்றே கிழித்திருப்பார்களோ என்று சந்தேகப் புத்திக்கு, 'ஒரு ஆணி முன்னால் குத்தி, அப்புறம் பின் சக்கரத்தையும் பதம் பார்த்திருக்கும்' என்று ஆழியூரான் சொன்னார்.

பத்தரை மணிக்கு மேல் பஞ்சர் கடையைத் தேடி, நண்பர்களின் உதவியோடு, அண்ணா சாலை பள்ளிவாசலின் அருகில் போய்ச் சேர்ந்தோம். இந்த டியூபும் வேலைக்காகது. அடுத்த 160 ரூபாய்கள். முன்பக்க டயரும் வழுக்கையாகி விட்டது என்று எச்சரித்தார்.

எதிரில் இருந்த புகாரி ஓட்டலின் முன்பு வண்டியை நிறுத்தியிருந்ததால் அங்குதான் சாப்பிடப் போகிறோமோ என்று நினைத்தால், அதன் அருகிலேயே அருந்த வசந்தபவன் வரவேற்றது. இட்லி, இன்னும் ஒரு பிளேட் இட்லி, இன்னும் ஒரு இட்லி என்று சாப்பிட்டு விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு முன்பனிக் குளிரில் நடுங்கிக் கொண்டே வீடு வந்து சேரும் போது நள்ளிரவு பன்னிரண்டு தாண்டி விட்டிருந்தது.

புதன், பிப்ரவரி 06, 2008

பொதுவுடமை உருவாகும் பாதை

'இந்தியாவில் இயங்கும் கம்யூனிச இயக்கங்கள் செய்யும் பெரிய தவறு வர்க்கங்களுக்கிடையேயான முரண்பாட்டை விட மிதமிஞ்சி நிற்கும் சாதிகளுக்கிடையேயான முரண்பாட்டை கையில் எடுக்காமல் வர்க்கப் போராட்டத்தையே பேசுவதுதான்' என்று நண்பர் செல்லாவுடன் பேசும் போது ஒரு முறை சொன்னார்.

சீனப் புரட்சியாளர் சேர்மன் மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதே கருத்தைத்தான் சொல்கிறார்.

'உலகமே முரண்பாடுகளில் குவியல்தான். ஒரு சமூகத்தில் ஒரே நேரத்தில் பல முரண்பாடுகள் இருக்கலாம். அவற்றில் ஏதாவது ஒன்று மற்ற எல்லாவற்றையும் விட ஓங்கி நிற்கும். அதைத் தீர்த்த பிறகுதான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்' என்கிறார்.

ஜப்பானிய ஆதிக்கவாதிகளுக்கும், சீன மக்களுக்குமான முரண்பாடுகள் முனைப்பானதும், அது வரை தாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த குவமின்தாங் என்ற தேசியக் கட்சியுடன் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டு, குவமின்தாங்-கம்யூனிச இயக்கத்துக்கிடையேயான முரண்பாடுகளை தற்காலிகமாக மறந்து ஜப்பானியர்களை சேர்ந்து எதிர்க்கும் பணியில் இறங்கச் சொல்கிறார்.

'வெளிப்புறக் காரணிகளே போராட்டத்தைத் தீர்மானிக்கின்றன' என்று தோழர்கள் வாதாடுவதற்கு நேர்மாறாக, 'அப்படி வெளிப்புறக் காரணிகளை காரணமாகக் காட்டுவது மெடாபிசிக்ஸ் எனப்படும் கருத்து முதல் வாதம், ஒரு சமூகத்தின் மாற்றங்கள், போராட்டங்கள் உள்ளே ஏற்படும் மாறுதல்களினாலேயே வர வேண்டும்' என்று விளக்குகிறார் மாவோ.

எனக்குப் புரிந்த வரை கார்ல் மார்க்ஸ் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே இருக்கும் பொருளாதார இழுபறியைக் குறித்து ஆராய்ந்திருக்கிறார். 'தனித்தனியாக உறவாடும் போது முதலாளியின் கைதான் எப்போதும் ஓங்கியிருக்கும். தொழிலாளர்கள் ஒன்று பட்டு முதலாளிகளை எதிர் கொள்வதால் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆதாயம் அதிகமாவது நிச்சயம் நடக்கும்'

கார்ல் மார்க்சு சொன்ன பரிணாம வளர்ச்சியைப் பின்பற்றாமல், விவாசாயப் பொருளாதார நிலையிலிருந்து முதலாளித்துவ நிலையைத் தாண்டிக் குதித்து நேரடியாக பொதுவுடமை சமூகத்தை அடைந்து விடும் சூழல் சீனாவில் இருப்பதாக கருதுகிறார் மாவோ. அடுத்து எழுபது ஆண்டுகளில் நடந்து நிகழ்ச்சிகளைக் கொண்டு பார்க்கையில் அது தவறு என்று புரிகிறது. செயற்கையாக ஆயுதம் கொண்டு 'தாம் பொதுவுடமை சமூகம் என்று கருதும் அமைப்பை' ஏற்படுத்த சீனக் கம்யூனிஸ்டு கட்சி முயன்றாலும், 1980களிலிருந்து அந்தத் தளையிலிருந்து விடுபட்டு இயற்கையான பொருளாதார பரிணாம மாற்றத்தில்தான் சீன சமூகமும் சேர்ந்து கொண்டுள்ளது.

அது முற்றி பொதுவுடமை மலரும். அதற்கு முன்பு அமெரிக்காவில் பொதுவுடமை சமூகம் முதலில் உருவாகும்.

மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 1
மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 2
(மார்க்சு கம்யூனிசம் பேசவில்லை, முதலாளித்துவத்தைத்தான் ஆராய்ந்தார்!)
மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 3
(சந்தைப் பொருளாதார முறையின் வீணாக்கல்கள். இப்போதைய நிலையைத் தாண்ட வேண்டும், முடியும்)
மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 4
(சந்தைப் பொருளாதாரம்் பல இடங்களில் சொதப்புகிறது)

ஞாயிறு, பிப்ரவரி 03, 2008

விழித்தெழும் புதிய தமிழகம்!

"அடிப்படையில், ஒரு விவசாயக் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாங்கள், பல்வேறு காரணங்களுக்காக அருகில் இருக்கும் நகரம் (தேனி) இடம் பெயர்ந்தோம். எங்கள் தாத்தாவிற்குச் சொந்தமான ஒரு சிறு வயலில், விவசாயம் பார்த்த பொழுது, பெரும்பாலும் வரும் வருமானம் வாய்க்கும், வயித்துகுமே போதுமானதாக இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன்."

http://vellamai.blogspot.com/

"நான் கடந்த 2ம் தேதி ஜனவரி மாதம் பதிவேற்றம் செய்த http://youtube.com/watch?v=SccxJ-Q07lI - எண்ணம் மற்றும் திட்டத்தை பார்க்க வேண்டுகிறேன். இன்னும் ஒரு மாத காலத்திற்கு, தகவல் சேகரிப்பில் ஈடுபட உள்ளேன்."
-- செல்லம்மாள்

" தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!"

- மகாகவி சுப்பிரமணிய பாரதி

திங்கள், ஜனவரி 28, 2008

கொடும்பாவங்கள்

காந்தி அடிகளின் சமாதியில் இப்படி எழுதப்பட்டுள்ளதாம்

ஏழு கொடும்பாவங்கள்
  1. உழைக்காமல் ஈட்டிய செல்வம்
  2. கட்டுப்பாடு இல்லாத நுகர்வு
  3. மனிதம் இல்லாத அறிவியல்
  4. பண்பாடு இல்லாத அறிவு
  5. கொள்கை இல்லாத அரசியல்
  6. நேர்மை இல்லாத வியாபாரம்
  7. தியாகம் இல்லாத வழிபாடு
??????????

பகல் கொள்ளையர் - ரிலையன்சு

நான் ஏன் ரிலையன்சு பொருட்கள்/ சேவைகளை வாங்குவதில்லை?

சந்தைப் பொருளாதாரத்தின் சாபக்கேடு, வணிக நிறுவனங்களும் அரசு நிர்வாகங்களும் கள்ள உறவு வைத்து கொண்டு வாடிக்கையாளர்களையும் பொது மக்களையும் ஏமாற்றுவதுதான்.
  1. 'சிடிஎம்ஏ தொழில் நுட்பத்தில் செல்பேசி சேவை வழங்குபவர்கள், குறிப்பிட்ட வட்டாரத்துக்கு வெளியே இணைப்பு கொடுக்கும் ஊர்மாற்று சேவை (roaming) அளிக்க அனுமதி கிடையாது' என்ற விதிக்குட்பட்டு உரிமம் வாங்கிய ரிலையன்சு நிறுவனம், அந்த விதிகளை மீறி நாடெங்கும் ஊர்மாற்று சேவை வழங்கியது.
    சில வாரங்களுக்குப் பிறகு அது முறையீட்டு அமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதும், தண்டத் தொகையாக சில நூறு கோடி ரூபாய்கள் கட்டி விட்டு அத்தகையை சேவையையே அனுமதிக்க வைத்து விட்டது ரிலையன்சு.
    இது போல விதியை உடைத்து, மற்ற போட்டியாளர்களை விட சிறப்பு திறன் பெற்றுக் கொள்வது ரிலையன்சுக்குப் பழகிப் போன ஒன்று.

  2. கிராமப் புறங்களில் தொலைதொடர்பு சேவை வழங்கும் பொறுப்புடைய பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மானியமாக தனியார் நிறுவனங்கள் ADC எனப்படும் இணைப்புக் குறைபாட்டுக் கட்டணம் கொடுக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஒரு அழைப்பு இந்தியாவுக்கு வந்தால் கணிசமான தொகை குறைபாட்டுக் கட்டணமாக பிஎஸ்என்எல்லுக்குப் போகும்.
    அதை உடைத்து, கள்ளத்தனமாக பிஎஸ்என்எல் வலையமைப்பையே பயன்படுத்தி, உள்ளூரிலிருந்தே இணைப்பு வருவதாக பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கோடி கோடியாகச் சம்பாதித்தது ரிலையன்சு நிறுவனம்.
    உண்மை அம்பலமானதும் தண்டம் கட்டி விட்டுத் தொடர்ந்து அந்த சட்ட விரோதச் செயலை செய்து வருகிறது.

  3. நெகிழித் தொழிலில் வேறு போட்டியாளர்களை ஒழித்து முற்றுரிமை (monopoly) பெற்று விடும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்போது முற்றுரிமையுடன் கொள்ளை ஆதாயம் சம்பாதிப்பதாக அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நண்பர் தெரிவிக்கிறார்.

  4. சந்தைப் பொருளாதாரத்தில் பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற பொறுப்பில் இருப்பவர்கள், தம்மிடம் வந்து சேரும் செல்வம் சமூகம் முழுவதற்குமானது. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பதவியில் நாம் இருப்பதால் நம்மிடம் வருகிறது என்று உணர்ந்து பொறுப்புடன் அதை மீண்டும் தொழில் வளர்ச்சிக்கோ, சமூக நலனுக்கோ பயன்படுத்த வேண்டும்.

    முகேஷ் அம்பானி 200 மில்லியன் டாலர்களுக்கு விமானம் வாங்கி தனது மனைவிக்கு பரிசளிப்பதும், 400 கோடி ரூபாய்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொள்வதுமாக பணத்தை ஊதாரித்தனமாக வீணாக்குகிறார்.
இப்படி தவறான வழிகளில் நிறுவனத்தை வளர்த்துத் தொழிலைப் பெருக்குவது, அப்படி அடாவடியாகப் பிடித்து சந்தை ஆதிக்கத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை பொறுப்பில்லாமல் செலவழிப்பது என்ற இரட்டைக் குற்றவாளியான ரிலையன்சு குழுமம் அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டு இழுத்து மூடப்பட்டிருக்க வேண்டும். அது நடக்காமல் போவதால், என்னளவில் அந்தக் குழுமத்தைப் புறக்கணித்து வருகிறேன்.
  • ரிலையன்சு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடுவதில்லை.
  • ரிலையன்சு ஃபிரஷ் கடைகளில் பொருள் வாங்குவதில்லை.
  • ரிலையன்சு தொலைபேசிச் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை.
  • ரிலையன்சு இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை.
நெகிழித் துறையில் நாம் வாங்கும் பொருட்களில் பல ரிலையன்சுக்கு ஆதாயம் சேர்க்கின்றன என்பதை உணர்கிறேன். அவற்றின் முழு விபரமும் மாற்றும் கிடைத்தவுடன் அவற்றையும் புறக்கணிக்க ஆரம்பிப்பேன்.

ஞாயிறு, ஜனவரி 27, 2008

இப்படிச் செய்யலாமே!

  1. நாளிதழ் தினமும் படிப்பவர்கள் பழைய தாள்களை ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை பழைய விலைக்குப் போடுவது வழக்கம். அதை நேரடியாகச் செய்யாமல் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்கார அம்மா, அல்லது கட்டிடக்காவல்காரர் அல்லது அது போன்று அந்த நூறு ரூபாய்கள் பெரிதாகப் பயன்படுபவர்களிடம் கொடுத்து விற்றுக் கொள்ளச் சொல்லாமே!
  2. சமையல் வாயுவுக்கு அரசு ஒரு சிலிண்டருக்கு இருநூறு ரூபாய்களுக்கு மேல் மான்யம் வழங்குகிறதாம். அந்தக் கூடுதல் விலையைத் தாங்கிக் கொள்ள முடிந்த நாம் அரசு சமையல் வாயுவை புறக்கணித்து, அரசு நிறுவனங்களிடமிருந்து வணிக முறை இணைப்பையோ அல்லது தனியார் இணைப்பைப் பெற்றுப் பயன்படுத்தலாமே!
  3. பழைய பொருட்களை ஒழிக்கும் போது சட்டையோ, கால்சட்டையோ, பையோ, பாத்திரமோ ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படாமல் இருக்கிறது என்று பார்த்தால் அதைப் பயன்படுத்த முடிபவரிடம் கொடுத்து விடலாமே!

புதன், ஜனவரி 23, 2008

சீனா மனிதர்கள் மூலம் (வாங் ஷிங்)

சீனாவுக்குப் போனதும் யாரையும் பீடிக்கக் கூடிய ஒரு வியாதி உடனடி படிப்பறிவின்மை. அறிவிப்புகள், பெயர்ப்பலகைகள், தெருப்பெயர்கள் எங்கு பார்த்தாலும் சீன மொழி எழுத்துக்கள்தான் வரவேற்கும்.

மொழி கற்றுக் கொள்ளா விட்டால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். வேலை எப்படி பார்ப்பது?

ஆறு மாத கல்லூரி வகுப்பில் சேர்ந்து மொழி அறிவைத் தேத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தால், எங்கள் நிறுவனத்தில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார்கள். ஓய்வு நேரத்தில் கற்றுக் கொண்டால் போதும்.

கூட வேலை பார்த்த சீன நண்பர் யாராவது வார இறுதிகளில் வந்து கற்றுத் தர ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஒரு நாள், 'நம்ம அலுவலகத்தை பெருக்கி தூய்மை செய்ய வரும் அம்மாவின் மகள் உனக்கு சீன மொழி கற்றுத் தருவாளாம்' என்று சொல்ல வேடிக்கையாக இருந்தது.

வாரா வாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் காலை வேளைகளில் 2 மணி நேரம் வகுப்பு. முதல் முதலில் சந்தித்த போது உருண்டை முகம், ச்சின்னக் கண்கள், உப்பிய கன்னங்கள், ஒல்லியான உருவம் என்று குழந்தைப் பொம்மை போல இருந்த அந்தப் பெண்ணா நமக்கு ஆசிரியர் என்று வியப்பாக இருந்தது.

சாங்காய் நார்மல் பல்கலைக் கழகம் என்ற ஆசிரியர் பயிற்சி அளிக்கும் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். வாங் ஷிங் என்று பெயர். வாங் என்பது குடும்பப் பெயர் ஷிங் என்பது கூப்பிடும் பெயர். இது போதாது என்று சீனாவின் இளைஞர்களுக்கு ஆங்கிலப் பெயர் ஒன்றையும் சூட்டி விடுகிறார்கள்.

'நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எங்க ஆங்கில ஆசிரியர் பேர் கொடுத்தார்' எலன் என்ற பெயர். வெளி நாட்டினருக்கு வசதியாக அந்தப் பெயராம். சீனாவின் உலகமயமாக்கலுக்கு மக்களைத் தயார் செய்யும் போக்கு. நம்ம ஊரிலாவது கால் சென்டரில் வேலை செய்யப் போகிறவர்களுக்கு மட்டும்தான் மேல் நாட்டுப் பெயர். இங்கு எல்லா குழந்தைகளுக்குமா!

எனக்கு அத்தகைய ஆங்கிலப் பெயர்களைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கும். யாரையுமே அவர்களது சீனப் பெயராலேயே கூப்பிடுவது என்று உறுதி செய்து கொண்டேன்.

வார நாட்களுக்கு அலுவலகம் வருவது போல சனி, ஞாயிறிலும் காலையில் எழுந்து குளித்து, தரையடி ரயில் பிடித்து 9 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து விடுவேன். 10 மணி முதல் 12 மணி வரை வகுப்பு. அதன் பிறகும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய் விடுவேன்.

'நாங்கெல்லாம் சாங்காய்னீஸ்' என்று பெருமை. 'சீனாவில் 95% ஹான் இனத்தவர்' என்று பாடத்தில் வரும் போது 'நானும் ஹான் இனம்தான்' என்று பெருமை.

1997ல் நான் அங்கு போய்ச் சேர்ந்திருந்த போதுதான் ஆங்காங் சீன ஆட்சியின் கீழ் வரும் நாள் வந்தது. அதற்கான கொண்டாட்டமாக சாங்காயின் மக்கள் மைதானத்தில் பெருங்கூட்டம் கூடியதாம். அடுத்த நாள் வகுப்புக்கு வரும் போது, 'கூட்டத்துக்குப் பிறகு திரட்டிய குப்பையின் அளவு 30 டன்னாம். நாங்கல்லாம் வெட்கப்படணும்.' என்று கண்களை உருட்டிக் கொண்டு சொல்கிறார்.

சில மாதங்கள் வகுப்புக்குப் பிறகு ஒரு நாள், 'எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடணும்' என்று ஆசிரியையும் அவர் அம்மாவும் சொன்னார்கள். 'சரி, போகலாமே' என்று தயார் செய்து கொண்டோம். அலுவலகம் இருக்கும் 20 மாடிக் கட்டிடப் பகுதிக்கு அருகில்தான், ஷான்ஷி தெற்கு தெருவில்தான் வீடு.

வாய்ஹாய் சாலை என்ற பணம் புரளும் சாலையை வெட்டிச் செல்லும் தெரு ஷான்ஷி தெற்குத் தெரு.

(தொடரலாம்)

செவ்வாய், ஜனவரி 15, 2008

மொக்கை

நண்பர் ராமச்சந்திரன் உஷாவின் tagஐத் தொடர்ந்து







மொக்கை






சரிதானே!

வரவேற்கிறேன்!

http://fuelcellintamil.blogspot.com/

'தமிழில் அறிவியல் நுட்பம் சொல்லும் படைப்புகள் பெருக வேண்டும் என்ற நோக்கில்' நண்பர் ஆரம்பித்திருக்கும் இந்த வலைப்பதிவுக்கு வரவேற்புகள்.

வலைப்பதிவுகள் குறித்த தொழில்நுட்ப வேலைகள் ஒன்றிரண்டை செய்ததால் என் பெயரையும் பங்களிப்பாளராக சேர்த்திருக்கிறோம்.

ஞாயிறு, ஜனவரி 13, 2008

இந்து மதம்

தனிமனிதருக்கு அளவற்ற தன்னிச்சை கொடுக்கும் ஒரு அமைப்புதான் இந்து மதம். தம்மை வழிநடத்திக் கொள்ள பிடித்தமான வழிமுறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
  • கோயில்கள் கட்டி
  • அல்லது மூதாதையரின் நினைவுச் சின்னங்களை போற்றி
  • அல்லது பெரியவர் என்று மதிக்கும் மதத் தலைவர்களைப் பின்பற்றி
  • அல்லது தனியாக ஆராய்ந்து
  • அல்லது கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசி
வாழ்க்கை நடத்திக் கொள்ளலாம். இப்படி இருந்தால்தான் ஒருவர் இந்து என்று வரையறை கிடையாது.

சாதி அமைப்பு என்பது இந்து மதத்தைப் பிடித்த சொறிப் புண். உடலெங்கும் புண்ணாகி, குருதியெல்லாம் கிருமிகளாக 'இந்து மதமே அழிந்தால்தான் சாதி ஒழியும' என்று வெறுத்துக் கூறும் அளவுக்கு புரையோடிப் போயிருக்கிறது.

'நாங்கெல்லாம் சாதி பார்ப்பதில்லை' என்று முற்போக்கு பேசும் மேல்தட்டு மக்கள் கூட தம் வீட்டுத் திருமணத்துக்கு இணை பார்க்கும் போது தமது சாதியையே தேடுகிறார்கள்.

'சாதியினால் விளைந்த அநீதிகளை சாதி மூலம் அணி திரள்வதன் மூலம்தான் சரி செய்ய முடியும்' என்று அதற்கான எதிர்வினைகள்.

நோய்க்கு மருந்து நோய்க்கிருமிகளிடமே இல்லை. இன்றைக்கும் சாதிக் கட்சிகள், திருமண விளம்பரங்களில் சாதி உட்பிரிவு உட்படக் குறிப்பிட்டு தேடுவதன் அடிப்படைக் காரணம், இந்து சமூகத்தின் கருத்து உருவாக்கிகள், தமது சாதி ஆதாயத்தை விட்டுக் கொடுக்க விரும்பாததுதான்.

இப்படி தமது சாதிதான் பெரிது என்று பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தால் இந்து மதம் என்ற ஒன்று இல்லாமல் அழிந்து போகும். சடங்குகளும், ஏற்றத் தாழ்வுகளும், மொழி உயர்வு தாழ்வுகளும் இந்து மதம் இல்லை. அந்தப் புற அடையாளங்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினால் அப்புறம் அந்த அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள மதம் இல்லாமல் போய் விடும்.
  • 'மறுமுறை பிறந்தவர்கள், கடவுளின் தலையிலிருந்து பிறந்தவர்கள்' என்று சொல்லும் சாத்திரங்களை முற்றிலும் ஒதுக்கித் தள்ளி, 'நானும் எல்லோரையும் போன்ற மனிதன்தான். நான் யாரை விடவும் குறைந்தவன் இல்லை, வேறு யாரும் என்னை விடக் குறைந்தவர்கள் இல்லை' என்ற பொதுமறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • மக்கள் பேசும் மொழியில் புழங்காத மதத்தை எத்தனை சூலாயுதம் தாங்கிய கட்சி, வன்முறை அமைப்புகள் வந்தாலும் தூக்கி நிறுத்த முடியாது.
  • ஒவ்வொரு இந்துவும் சம உரிமையுடன் புழங்கும்படி மதம் சீர்திருந்த வேண்டும். கோயில்களில் யார் வேண்டுமானாலும் பூசாரி ஆகலாம், கடவுளுக்கு வழிபாடு தமிழ் மொழியிலேயே நடைபெறலாம் என்ற நடை முறை வர வேண்டும்.
  • சாதி அடையாளங்களைக் காட்டும் புறச் சின்னங்களை அவமானமாக ஒதுக்க வேண்டும்.
  • அனைவராலும் செய்ய முடியாத, செய்யத் தேவையற்ற சடங்குகளை மதத்தின் பெயரால் ஒரு சாதியினர் மட்டும் செய்யக் கூடாது.

வியாழன், ஜனவரி 10, 2008

கரையான் புற்றுக்குள் பாம்பு - இசுரேல்

இப்போது இசுரேல் என்று சொல்லப்படும் பகுதி பாலஸ்தீனமாகவே இருந்து வந்தது.

சில மதப் புத்தகங்களைத் தவிர்த்து வேறு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல், அந்த நேரத்தில் ஆண்டு கொண்டிருந்த பிரித்தானியா பாலஸ்தீனத்தை பிரித்து ஒரு பகுதியை யூதர்களின் நாடாகவும், இன்னொரு பகுதியை பாலஸ்தீன அரேபியர்களுக்கும் கொடுக்க முடிவு செய்தது. அதை ஐக்கிய நாட்டுச் சபையும் ஏற்றுக் கொண்டது. ஆனால், பெரும்பான்மையாக அங்கு வசித்த பாலஸ்தீனர்களும் பாலஸ்தீனத்தைச் சுற்றியிருந்த பிற அரபு நாடுகளும் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக பரம்பரை பரம்பரையாக பாவித்து வந்த நிலத்தை விட்டுக் கொடுக்கும் வலியை விட பல மடங்கு பெரியது, தமது நிலத்தை/தொழிலை/வீட்டை யாருக்கோ சொந்த நாடு அமைக்க விட்டுக் கொடுப்பது. அதைத்தான் செய்யும் படி பாலஸ்தீனியர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். உலகெங்கிலுமிருந்தும் யூதர்கள் இசுரேலுக்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டார்கள்.

அப்படி தமது நாட்டை இழந்த பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவான அரபு நாடுகளுக்கும் இருக்கும் வலியும் கோபமும் புரிந்து கொள்ளக் கூடியதே.

அமெரிக்காவின் ஆதரவிலும் ஆயுதங்களினாலும் தமது மக்களின் வீரத்தினாலும் யூதர்களின் புதிய நாடு பாலஸ்தீனிய எதிர்ப்பை ஒடுக்கி வல்லானாக வாய்க்கால் வகுத்துக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனியர்களுக்காக ஒதுக்கப்பட்டபகுதிகளைக் கூடப் பிடித்து வைத்துக் கொண்டு சொந்த ஊருக்குள்ளேயே அகதிகளாக மாற்றி விட்டிருக்கிறது.

பாலஸ்தீனமும் இந்தியா போல பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. தென்சென்னை பகுதியை, பாகிஸ்தான் பிரிவினையால் நாடற்று போய் விட்ட சிந்திக்களுக்கு சொந்த மாநிலம் என்று தனியாகப் பிரித்து விட்டால் எப்படி இருக்கும். மயிலாப்பூரில், திருவல்லிக்கேணியில், அடையாறில், நங்கநல்லூரில் ஆண்டாண்டு காலமாக இருப்பவர்களை எல்லாம் 'பெட்டியைக் கட்டிக் கொண்டு அந்தப் பக்கமா போயிடுங்க இந்த இடமெல்லாம் பாவம் தமக்கென்று நாடு இல்லாத சிந்திக்களுக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டோம்' என்று இந்திய நாடாளுமன்றம் சொன்னால் எப்படி இருக்கும்?

அதே கதைதான், இஸ்ரேலிலும் நடந்தது. யாருடைய நிலத்தை யாரோ எடுத்து யூதர்களுக்கு வழங்கி விட்டார்களாம். அதற்கு பரவலான பிரதிநிதித்துவம் இல்லாத ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் வேறு. கேட்க வேண்டிய அந்த ஊர் மக்களை யாரும் கேட்கவில்லை!

அன்றிலிருந்து அமெரிக்காவின் அடாவடியான இசுரேல் ஆதரவு போக்கால் உலகில் அமைதி குலைந்திருக்கிறது. தனது வணிக நலன்களுக்காக சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களது சர்வாதிகார ஆட்சிகளையும் தாங்கிப் பிடித்து வருகிறது. மக்கள் விருப்பப்படி ஆட்சி நடக்கும் நாடுகள் ஈராக், ஈரான் மட்டுமே. அந்த இரண்டுடன் அமெரிக்காவுக்கு ஆகாது.

எப்போ தீர்வு வரும்?

செவ்வாய், ஜனவரி 08, 2008

நல்லாரும் தீயாரும்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று .

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

-மூதுரை, ஔவையார்

கலைஞர்

போன சட்ட மன்றத் தேர்தலின் போது அதிமுகவின் ஜெயலலிதா, திமுகவின் கருணாநிதி என்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஜெயலலிதாவே மேல் என்று எழுதியிருந்தேன். கலைஞர் ஆட்சி வருவதை விரும்பாததற்கு முக்கிய காரணம் மாறன் சகோதரர்களை எந்த வரைமுறையின்றி முன்னிலைப்படுத்தி அரசியலைக் கொச்சைப் படுத்தும் சிறுமை தலையாய காரணமாக இருந்தது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரான தயாநிதி மாறனுக்கு வாக்களித்திருந்தேன். அதன் பிறகு அவரை மத்திய அமைச்சராக்கி, அவரும் கூச்ச நாச்சமில்லாமல் எல்லா இடங்களிலும் முண்டி அடித்துக் கொண்டு முக்கியத்துவம் தேடிக் கொண்டிருந்த அவலம் கடுப்பேற்றியிருந்தது.

அந்தத் தவறுக்கான விலை கலைஞரும் திமுகவும் கொடுத்து விட்டார்கள். அதே பாதையில் மதுரையில் கொலைக்கும் தயங்காத மு க அழகிரி குழுவினர், சென்னையிலிருந்து கனிமொழி நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டது என்று அந்த நாடகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

திராவிட இயக்கம் தோன்றி ஆட்சியைப் பிடித்த பிறகு அனைவரையும் அணைத்துச் செல்லத் தெரியாத தலைமையாக அமைந்து விட்டது. நான் பிறப்பதற்கு முன்பு நடந்தவை என்றாலும், அறிஞர் அண்ணாவும், பெரியாரும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பெருங்குணம் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அளவுக்கு மீறிய பதவி ஆசை, தலைமைப் பொறுப்பில் குறுக்கிடும் அளவுக்கு குடும்பப் பாசம், எண்பது வயதுக்குப் பின்னும் எதிர்க்கட்சித் தலைவி பெண்மணியின் மீது வக்கிரமாக கமென்டு அடிப்பது, மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது என்று மாநில அரசியலை இரு பிளவாகப் பிரித்த கீழ்மை அவருக்கே சேரும்.

எதிர்க்கட்சியாக இருக்கும் வரை என்னதான் அடாவடி அரசியல் செய்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி புரிகிறோம் என்ற பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் உருவாக்கும் அதே நேரத்தில் அதிலிருக்கும் நியாயங்களை விளக்கி அதனால் அனுபவித்து வரும் சுகங்களை இழக்கும் மக்களையும் அதை ஏற்றுக் கொள்ள செய்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.

நேற்று வரை அடக்கி ஆண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க, அந்தத் தலைமையை ஏற்க பெரும்பான்மையர் முன்வந்திருப்பார்கள். அதுதான் உண்மையான வெற்றி. முப்பத்தைந்து ஆண்டு கால அரசியலுக்குப் பின்னும், அவரது பெயரைக் கேட்டாலே சலித்துக் கொள்ளும் மக்களை உருவாக்கி இருப்பது அவரது தலைமையின் தோல்வி.

ஆரம்பத்திலிருந்தே கொள்கைகளையும் கட்சியையும், தொண்டர்களையும் தனது, தன் குடும்பத்து நலனுக்கு அவை எப்படி் உதவும் என்று கணக்கிட்டு அந்த அளவுக்கு அவற்றைக் கையாண்டு கொண்ட சராசரி அரசியல்வாதிதான் அவர் என்பது என்னுடைய புரிதல். அப்படிப்பட்ட ஒருவரை தமிழினத் தலைவர், ஒப்பற்ற அரசியல்வாதி என்று போற்றும் போது அரசியலின் தரம் தாழ்ந்து விடுகிறது.

தமிழகத்துக்கு தலைவராக இப்படிப்பட்ட ஒருவரை விடப் பல மடங்கு உயர்ந்த பலர் கிடைப்பார்கள். கிடைக்க வேண்டும். கைத்தடி முதலாளித்துவமான அரசியலையும் தொழிலையும் கலந்து தன்னை வளைப்படுத்திக் கொண்ட கீழ்த்தரமான அரசியல்தான் அவரது. ஜெயலலிதாவை விட எந்த வகையிலும் உயர்ந்தவர் கிடையாது கருணாநிதி. அவரது அரசியலால்தான் ஜெயலலிதா போன்றவர்கள் காலூன்ற முடிகிறது. அவர் எவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறுகிறாரோ அவ்வளவு நன்மை தமிழகத்துக்கு.

ஈழ நிலைமை பற்றி மத்திய அரசு ஆலோசனை கூட்டம் கூட்டினால் இவர் போய் கருத்து சொல்வாராம். ஏன்? தமிழினத் தலைவருக்கு இவ்வளவுதான் அக்கறையோ? தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி வாங்கிய சாணக்கியம் தமிழர்களுக்கு ஆதரவு திரட்ட ஏன் பயன்படாமல் போய் விட்டது? மருமகனுக்கு அரசு செலவில் வைத்தியம் வேண்டும் என்று இலாகா இல்லாத அமைச்சராக ஒட்டிக் கொண்டிருந்து விட்டு அவரது மறைவுக்குப் பின் வசதியாக வெளியேறிய புத்திசாலித்தனம் தமிழர் நலனில் மறைந்து விடும்.

தமிழகத்துக்கு இது போன்ற தலைவர்கள்தான் தலைவிதி கிடையாது. 'திறமையைப் பயன்படுத்தி தொழில் செய்தார்கள்' என்று நியாயப்படுத்தப்படும் முதலமைச்சரின் கிளைக்குடும்பங்கள் எல்லாம் கொழிக்கும் இந்த இரண்டு நோய்களும் நம்மை விட்டு விலக வேண்டும்.

நோய்கள்தாம் நமக்கு வரங்கள் என்று கொண்டாடிக் கொண்டிருந்தால் விடிவே இல்லை. பிணி தீர முதற்படி இப்படி ஒரு பிணி இருக்கிறது என்று உணர்ந்து கொள்வதுதானே. அதையே மறுத்துக் கொண்டிருந்தால் என்றைக்கு விடிவு?

'திமுகவின் ஆட்சி தமிழர்களின் நலன் விளையும் ஆட்சி. அதிமுக ஆட்சி சுயநல ஆட்சி' என்று பரவலான கருத்து உண்டு. அந்தக் கருத்தில்தான் எனக்கு மாறுபாடு. ஜெயலலிதா ஆளும் போது தமிழர் நலன் பாதுகாக்கப்படவில்லை என்று விழிப்பாவது இருக்கும். திமுக ஆட்சியில் அது போய் ஒரு பொய்யான ஆறுதல் வந்து விடுகிறது.

எதிரிகளை விட துரோகிகள் அதிக தீமை செய்பவர்கள் என்ற வகையில் திமுக அரசு தமிழர் நலனை குழி தோண்டி புதைப்பதுதான்.
  1. ஈழத் தமிழருக்காக தமிழக முதல்வர் எதுவும் செய்ய முடியவில்லை. தனது பதவியும், குடும்ப நலனும் பெரிதாகப் போய் விட்டன. அதிமுக ஆட்சியில் வெளிப்படையான விரோதம் தெரிந்திருக்கும்.
  2. சட்ட ஒழுங்கு அடாவடி அரசியல் இன்னும் தொடர்கிறது. அதிமுக ஆட்சியில் இதைவிட மேலாக இருந்திருக்கும்.
  3. சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நடக்காமல் போயிருக்கலாம்.
  4. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இதை நடக்க விடாமல் செய்தது இவர்கள்தான்.
மொத்தத்தில் அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் தமிழர் நலன் பொறுத்த வரை பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டு பேருமே சொந்த நலனுக்காக பெரும் ஊழல் செய்பவர்கள். ஜனநாயக மரபுகளை மதிக்காதவர்கள்.

திமுக ஆட்சியில் அப்படி இல்லை என்ற பொய் உணர்வைப் பெறுவதால் நீண்ட கால நோக்கில் அது சமூகத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கிறது என்று நம்புகிறேன். நமது சமூகத்துக்கு இதுதான் தலைவிதி என்று கிடையாது.

சனி, ஜனவரி 05, 2008

கட்சிகளும் கடவுளரும்

'இப்படி இரண்டு பிள்ளைகளுக்கு அப்படி ஒரு அப்பா!' கடவுள் மறுப்பு சொல்லிக் கொண்டிருந்தாராம் எங்க தாத்தா. அவரது மகன்களான அப்பாவும் சரி, சித்தப்பாவும் சரி பெரிய பக்திமான்கள்.

'ஊரெல்லாம் எரிஞ்சுதாம், சீதை மட்டும் எரியலையாம் என்ன கதை!' என்று அவரது வசனம் ஒன்றும் நினைவிருக்கிறது. மற்றபடி எனக்கு விபரம் தெரிந்து அவருடன் பேச, விவாதிக்க முடியும் முன் அவர் போய்ச் சேர்ந்து விட்டார். 'தாத்தா திக காரர்' என்று அவ்வப்போது கேட்டதுண்டு.

அதன் எதிர்வினையோ என்னவோ அப்பா ஆன்மீகத்தில் முழு மூச்சாக ஆழ்ந்தவர். இதைத் தொட்டு அதைத் தொட்டு, ரமணர் முதல், ஓஷோ வரை, காந்தி முதல் அரவிந்தர் வரை எல்லோரையும் படித்துக் கொண்டிருப்பார். அந்த வழியில் தவிர்க்க முடியாத இந்துத்துவா நண்பர்களும் நிறைய உண்டு. அதன் தாக்கம் எங்கள் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

எனக்கு நினைவு தெரிந்து தேர்தல் பற்றிய பேச்சு, வீட்டில் ஒரு நாள் மாலை வேளை. 'இனிமேல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யாருன்னு கேட்டா என்னடே எழுதுவ' அப்பா அண்ணனை இப்படிக் கேட்க, 'எம்ஜிஆர்னு எழுதிடாதே, எதாவது சினிமாக் காரன் என்று ஆயிடும். எம்ஜிராமச்சந்திரன் என்று எழுத வேண்டும்.' எம்ஜிஆர் என்றால் சினிமாக்காரர், எம் ஜி ராமச்சந்திரன் என்றால் முதலமைச்சர்.

அந்தத் தேர்தல் பிரச்சாரக் காலங்களில் ஊரில் தாத்தா வீட்டில் நின்றதாக நினைவு. தினமும் மாலையில் தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு பையன்கள் ஊர்வலமாக வருவார்கள் 'போடுங்கம்மா ஓட்டை, ரெட்டை எலையப் பார்த்தே!' என்று முழக்கம். அந்த ''விசிலடிச்சான் குஞ்சுகள்' 'சினிமா மயக்கத்தில்' கடுமையாக உழைத்திருக்கிறார்கள். 'அக்கா இரட்டை எலைக்குப் போட்டுடுங்க, அத்தே இரட்டை எலைக்கு போட்டுடுங்க' என்று பேசிக் கொண்டே துண்டு பிரசுரங்களைக் கையில் திணிப்பார்கள்.

'ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ள வேலையை விட்டுட்டுல்லா நிக்காராம்'. 'மக்கள் தொண்டாற்ற நான்கு இலக்கச் சம்பளத்தைத் துறந்து விட்டுத் தேர்தலுக்கு நிற்கும் அண்ணன் முத்து கிருஷ்ணனை மறந்து விடாதீர்கள்' என்று அதிமுக வேட்பாளரைப் பற்றிப் பேச்சு. இது 1980 தேர்தல் என்று நினைக்கிறேன். அவரை எதிர்த்து காங்கிரசின் சங்கரலிங்கம். பெரிய கல்லூரியின் தாளாளர். ஊரில் யாருக்கும் தலை வணங்கத் தேவை இல்லாத மனிதர். கடைசியில் இரட்டை இலைதான் வெற்றி பெற்றது.

நாகர்கோவில் தொகுதியில் அதிமுக திமுகவுக்கு இடையிலான போட்டியில் திமுகவின் ரத்தினராஜ் வெற்றி பெற்றார். அவர் அம்மாவின் கூடப் படித்தவர் என்ற அபிமானத்தில் அவருக்கு ஓட்டு போட்டதாக அம்மா சொல்லிக் கொள்வார்கள்.

தமிழாசிரியரான அம்மாவுக்குக் கலைஞர் மீது தனி அபிமானம். 'எங்களை எல்லாம் ஏத்தி வச்சது அவர்தான். தமிழாசிரியர்களின் சம்பள விகிதங்களை உயர்த்திக் கொடுத்தது அவர்தானாம். ஆனால் அவரது கடவுள் மறுப்பு அரசியல் மீது அம்மாவுக்கும் வெறுப்பு உண்டு. அப்பாவின் சித்தி மகன்களில் ஒருவர் திக கடவுள் மறுப்பு புத்தகங்களைக் கொடுப்பார், இன்னொருவர் இந்துத்துவா அரசியலில் ஈடுபடுவார். இரண்டின் மீதும் சம அளவு வெறுப்பு அம்மாவுக்கு. எப்படியாவது பிள்ளைகளை அந்தத் தாக்கங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று நிறையத் திட்டு விழும்.

மஞ்ஞை வசந்தன் என்பவர் எழுதிய 'அர்த்தமற்ற இந்துமதம்' என்ற புத்தகத்தைப் படித்துதான் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் என்று புத்தகம் எழுதியிருக்கிறார் என்றே தெரியும். இந்துமதத்தை பொதுவாகவும், கண்ணதாசனின் கருத்துக்களை குறிப்பாகவும் மறுத்து எழுதப்பட்ட நூல் அது. இன்றைக்கு எந்தப் புத்தகக் கடையிலும் பார்க்க முடிவதில்லை. கண்ணதாசன் பதிப்பகத்தின் மூலம் அர்த்தமுள்ள இந்து மதம் இன்றும் வெளி வந்து கொண்டிருக்கிறது.

அப்பாவுக்கு கலைஞர் மீது பயங்கர வெறுப்பு. 'பஞ்ச காலத்துல அரிசிய எல்லாம் கேரளாவுக்குக் கடத்திட்டான்க' என்று சாடை மாடையாகக் குறிப்பிடுவார். எம்ஜிஆரின் அரசியல் மீதும் பிடிப்பு கிடையாது. 'கோமாளி, நிலையான புத்தி கிடையாது' என்று கடுப்பு.

செவ்வாய், ஜனவரி 01, 2008

சாமி சிரிக்கும்

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயரும் இட்டால்
பொன்னான உலகென்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்

- ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகள்

சாதனைப் பதிவர் - காசி

சந்திப்பின் பின்னணி

திருப்பூருக்கு ஒரு தொழில் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரயிலில் போய்க் கொண்டிருந்தோம்.

தமிழ்மணம் குறித்துப் பேசும் போது அதை உருவாக்கிய காசி பற்றிச் சொல்லி இப்போது அவர் கோவையில்தான் தொழில் நடத்துகிறார் என்று சொன்னதும் வளர்தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணனுக்கு ஆர்வம் வந்து விட்டது. 'சேவை செய்யும் கருவி உருவாக்கி விற்கிறார்' என்று அவரது உதவியாசிரியரிடம் சொல்லி ஒரு பேட்டி எடுத்து வர திட்டம் போட்டார்.

அப்படியே ஓசை செல்லாவுக்குத் தொலைபேசி காசியின் தொடர்பு எண்ணைக் கேட்டால், சிறிது நேரத்தில் காசியே அழைத்தார். வண்டி ஓட்டத்தில் இணைப்பு அறுந்து விட சரிவர பேச முடியாமல் துண்டித்துப் போனது.

திருப்பூர் வந்ததும் விடுதிக்கு அழைத்துப் போக வண்டிகள் ஏற்பாடு. விடுதியில் வந்து சேரும் போது பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. அங்கிருந்து தொலைபேசி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு கோவையில் காசியை பேட்டி காண ஏற்பாடு செய்து கொண்டோம். வளர்தொழில் உதவி ஆசிரியர் முத்து பாண்டியுடன் நானும் போவதாகத் திட்டம் போட்டுக் கொண்டேன். எங்களது கருத்தரங்கம் மாலை நான்கு மணிக்குத்தான் என்பதால், காலையில் எட்டு மணிக்கெல்லாம் பேருந்து பிடித்து கோவை போய் பேசி விட்டு மதியம் இரண்டு மணிக்குள் திரும்பி விடலாம் என்று திட்டம்.

பத்து மணி கோவையில் இருக்க வேண்டும் என்றால் எட்டரைக்கு பேருந்து ஏற வேண்டும், அதனால் ஏழே முக்கால் வாக்கில் கிளம்பி விடுவோம் என்று திட்டமிட்டிருந்தாலும் முத்துபாண்டியும் என்னைப் போலவே அதிகாலை சேவலாக இருக்க ஏழு மணிக்குப் பேருந்து நிலையம் வந்து விட்டோம். ஒரு தேநீரைக் குடித்து விட்டுப் பேருந்தில் ஏறினால், இழுத்து இழுத்து எட்டே முக்காலுக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது. வழி நெடுக பத்திரிகை நடத்துவதில் இருக்கும் சிரமங்களையும் தடைகளையும் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார் முத்துப்பாண்டி.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கி அன்னபூர்ணா கவுரிசங்கரில் சாப்பிட்டு விட்டு தொலைபேசினால் காசியும் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். தனது வண்டியிலேயே வந்து எங்களை ஏற்றிக் கொண்டு அவர்களது விற்பனை அறைக்கு அழைத்துப் போனார்.

சந்தவை, சந்தகை என்று கொங்கு பகுதியில் அழைக்கப்படும், பொதுவாக மற்ற இடங்களில் சேவை என்று அறியப்பட்ட, சிலரால் இடியாப்பம், சேமியா என்று சொல்லப்படும் உணவு தயாரிக்கும் கருவி வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறார்.

ஏழு ஆண்டு திட்டமிடல்

பொறியியல் துறையில் பட்டயப் படிப்பு படித்து அதற்கு மேல் பட்டம் பெற்று சென்னையில் வேலை பார்த்துக் கொண்டே பட்ட மேல்படிப்பு ஐஐடியில் முடித்து விட்டு கோவையில் ரூட்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து கொண்டிருந்தாராம். இளம் வயதிலேயே ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் என்று பதவி உயர்வு பெற்று இன்று வீடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தரை துடைக்கும் கைப்பிடியுடன் கூடிய mopஐ வடிவமைப்பதில் பெரும்பங்காற்றினாராம்.

தனியாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றி நண்பர்களுடன் விவாதித்து மூன்று நண்பர்களாக திட்டம் போட ஆரம்பித்தார்களாம். காசி, புதிய கண்டுபிடிப்புகள், பொருட்கள் உருவாக்கத்தில் வல்லவர், இன்னொரு நண்பர் திட்டங்கள் வகுத்தல், செயல்படுத்தலில் திறமை வாய்ந்தவர், மூன்றாமவர் நடைமுறைப் படுத்தலில் ஆர்வம் உள்ளவர்.

சேவை மேஜிக் என்ற இப்போது உருவாக்கியுள்ள கருவிக்கான எண்ணம் 1999ல் தோன்றியதாம். 2001ல் முதல் மாதிரியைச் செய்து பார்த்து இது சாத்தியமானதுதான் என்று உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் முதலீடு வேண்டும் என்பதை உணர்ந்து சில ஆண்டுகள் அதற்கான பணம் சேமிப்பதில் ஈடுபட்டு விட்டு தொழிலில் இறங்கலாம் என்று முடிவு செய்தார்களாம். வீட்டு பயன்பாட்டுப் பொருளாக விற்கப்படவுள்ள இந்த உருவாக்கத்திற்கான காப்புரிமையையும் அதற்குள் பெற்று விடலாம் என்று முடிவு செய்தார்களாம்.

2002ல் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் சேர்ந்து அவர்களது வாடிக்கையாளரான ஜெராக்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க ஆராய்ச்சிப் பிரிவில் பொறியியல் சேவைப் பிரிவில் பணி புரிய போயிருக்கிறார் காசி. இரண்டு ஆண்டுகள் பணி புரிந்து விட்டுத் திரும்ப வேண்டும் என்று நினைத்திருந்தாலும், அது நீண்டு நீண்டு நான்கு ஆண்டுகளாக ஆகி விட்டது.

அந்த இடைக்காலத்தில்தான் தமிழ்மணம் உருவாகியிருக்கிறது. தமிழ்மணத்தின் சிறப்பும் வெற்றியும் எப்படி உருவாகின என்பதின் பின்னணியும் காசியுடன் பேசும் போதுதான் புரிந்தது. ஒரு தொழிலை உருவாக்க ஏழு ஆண்டுகளாக திட்டமிட்டுத் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்ட அவரது அதே செய்நேர்த்தியும், சிந்தனை ஆழமும்தான் தமிழ்மணம் என்ற திரட்டியை உருவாக்கியிருக்கிறது.

இப்படியே இருந்தால், அமெரிக்க, பெருநிறுவன சொகுசு வாழ்க்கையில் மூழ்கி நம்முடைய முதன்மை நோக்கத்தைக் கைவிட்டு விடுவோம் என்று விழித்துக் கொண்டு வேலையே விட முடிவு செய்து, 'வெளி நாடு போய் விட்டுத் திரும்புபவர்கள் ஆறு மாதங்கள் இந்தியாவில் பணி புரிய வேண்டும்' என்ற டிசிஎஸ்ஸின் விதிமுறையையும் நிறைவு செய்து விட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூஹோம் (NuHom) என்ற தனியார் பங்கு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

பொருளும் சேவையும்

இரண்டு ஆண்டு உழைப்பின், திட்டமிடலின், செயலாக்கத்தின் விளைவு எங்களை வரவேற்றது.

ஒரு பக்கச் சந்தில் சிறிய அலுவலகம். வண்டியை நிறுத்தி விட்டு வெளிக்கதவைத் திறந்து உள்ளே அழைத்தார். ஞாயிற்றுக் கிழமை ஆதலால்் அந்த பார்வை மையத்தில் பணி புரியும் பெண் பத்து மணிக்கு மேல்தான் வருவாராம். முன்னறையில் சமையல் அடுப்பு, சேவை மேஜிக் செய்முறைக்கான ஏற்பாடுகள் ஒரு புறம், பக்க வாட்டுச் சுவரில், செய்முறை குறும்படத்தைக் காட்ட ஒரு காட்சிப் பெட்டி,

உள்ளறையில் பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்க உட்கார்ந்து பணி புரிய மேசை நாற்காலிகளும்.

'நேற்று ஒரு கண்காட்சிக்குப் போய் வந்தோம். எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டும் போனோம். அதான் எல்லாம் தாறுமாறா கிடக்கு' என்று சொல்லப்பட்ட இடத்திலேயே ஒழுங்கும் நேர்த்தியும் தெரியத்தான் செய்தது.

'என்ன காசி பெட்டியில் நிறங்களைக் காணவில்லை' என்று உள்ளே நுழைந்ததும் கண்ணில் பட்ட அட்டைப் பெட்டிகளைப் பார்த்துக் கேட்டேன். இன்னொரு பக்கம் தரையில் வண்ண மயமாக, கடையில் விற்பனைக்கு வைக்கக் கூடிய கவர்ச்சிகரமான பெட்டி வெளிப்புற வடிவமைப்புடன் பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

எங்கிருந்து எடுத்தார் என்று நாம் கவனிக்கக் கூட தேவையில்லாமல் அவர் மேசை மீது ஒரு மாதிரி முளைத்து விட்டிருந்தது.

கீழ்ப் பாத்திரம் சாதாரண ஆறு லிட்டர் குக்கர்தான். கொஞ்சம் விளிம்பில் மாறுபாடுகள் உண்டு. அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதைக் குறிக்க ஒரு வரி போட்டிருக்கிறார்கள். இதை கீழ்ப் பாத்திரம் என்று அழைக்கிறார்.

அந்தப் பாத்திரத்தின் மூடியில் சிறப்பு வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். இது நடுப் பாத்திரம். மாவை ஊற்றுவதற்கு ஒட்டாத பூச்சு பூசப்பட்ட உட்பகுதி. வெளிப் பகுதியில் உலோக முடி. உட்பகுதியின் நடுவில் ஒரு தண்டு.

அரைத்த புழுங்கலரிசி மாவை ஊற்றி மூடி அடுப்பில் வைத்து விட்டால் 25 நிமிடங்களில் மாவு வெந்து விடும். அதன் பிறகு மேல் பாத்திரமான நெகிழியில் (பிளாஸ்டிக்கில்) செய்யப்பட்ட மேல் பாத்திரத்தைப் பொருத்தி குக்கர் வெயிட்டையும் போட்டு விட்டால், நீராவியின் அழுத்தத்திலேயே பிஸ்டன் தண்டு தள்ளப்பட்டு சேவை நடுப்பாத்திரத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரப்பர் அச்சின் வழியாக தள்ளப்பட்டு நெகிழி பாத்திரத்தில் சேர்ந்து விடுகிறது.

இத்தோடு நான்கு பேர் சாப்பிடும் அளவிலான சேவை தயார்.

நம்முடைய பாரம்பரிய உணவான சந்தவையின் செய்முறையை எளிமைப்படுத்தி வேலையைக் குறைத்து பரவலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஆரம்பிக்கப் பட்ட முயற்சி இது.

இந்த உணவின் சிறப்பு இப்போது கொங்கு பகுதிகளில் மட்டும்தான் தெரிகிறது. ஆனால் அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட சேவை நாழிகள் முயற்சித்த எல்லோரையும் கவர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது போல அதிக நேரம் வீணாகாமல், பிசுபிசுப்பு இல்லாமல், துருப்பிடித்து விடாமல், எந்திர இணைப்புகள் இல்லாமல் கிடைக்கும் கருவி, சேவையை அன்றாடம், வாரத்துக்கு மூன்று நான்கு முறை செய்யப்படும் உணவாக ஆக்கி விடலாம்.

இரண்டு நிமிட நூடுல்ஸின் கெடுதல்கள் என்று குங்குமத்தில் வந்த கட்டுரையை பெரிதாக நகலெடுத்து வைத்திருக்கிறார். குழந்தைகள் தொலைக்காட்சியால் மூளைச் சலவை செய்யப்பட்டும், வேலை குறைவு என்று பெற்றோர்களும் 2 நிமிட மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த அதைப் பார்க்கும் மற்றக் குழந்தைகளும் அதையே கேட்க தினமும் அதையே சாப்பிடும் போக்கு கூட வந்து விட்டது.

அதிலிருந்து ஆரம்பித்து, நமக்குத் தோன்றும் கேள்விகளுக்கு எல்லாம் ஏற்கனவே விடை கண்டிருந்தார். இன்னும் நமக்குத் தோன்றாத நூற்றுக் கணக்கான நுணுக்கங்களையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.
ஏன் சேவை என்று பெயர் வைத்தோம், ஏன் காப்புரிமை கிடைக்கும் வரை காத்திருந்தோம் என்றெல்லாம் ஒவ்வொன்றையும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மூடியின் மேல், Important:Read Instructions Before Use என்ற பாதுகாப்பு எச்சரிக்கையை 'ஆங்கிலம் தெரியாத நமது இல்லத் தலைவிகள் எப்படி படிக்க முடியும்' என்று, ஆங்கிலம்/தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் கொடுத்திருக்கிறார்கள்.

கீழ்ப் பாத்திரத்தின் பக்கவாட்டில் செயல்முறை விளக்கப்பட வரிசை ஒன்றையும் பொறித்திருக்கிறார்கள். ஒரு வேளை மற்ற விளக்கங்களை பார்க்காத, அல்லது மறந்து விட்ட ஒருவருக்கும் பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்று.

ஆறு லிட்டர் குக்கர் கடையில் ஆயிரத்து இருநூறு ரூபாய்களுக்குக் கிடைக்கிறதாம். இந்த புதிய கருவியின் விலை இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுதானாம். தேடித் தேடி செலவுகளையும் இழுத்துப் பிடித்து ஆகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்கிறார்கள். இன்னும் உற்பத்தி அளவு அதிகமாகும் போது விலை குறையலாம்.

உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு விற்பனைக்கும் வந்துள்ளது.

சந்தைப்படுத்துதல்
  • ஆரம்பத்தில் வீடு வீடாகப் போய் விற்கும் முறையைப் பின்பற்றினார்களாம். தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று முயன்று பார்க்கக் கொடுப்பதில் ஆரம்பித்து அவர்களது தொடர்புகளுக்கும் விற்பதை செய்திருக்கிறார்கள்.
  • அந்த முறையில் நிறைய உழைப்பும் செலவும் தேவைப்படுவதைப் பார்த்து செயல் விளக்கத் திரைப்படம் ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். அதை குறுவட்டில் பதித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கொடுத்து விடுகிறார்களாம்.
  • மல்லிகா பத்ரிநாத்தை அணுகி முப்பது வகை சேவை சமையல் என்று ஒரு கையேடு எழுதித் தரச் சொல்லி அதையும் இலவசமாக வாடிக்கையாளருக்குக் கொடுக்கப் போகிறார்கள்.
  • கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான விளக்கக் கையேடும் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தயாரித்திருக்கிறார்கள். அதையும் வடிவமைத்து, எழுதி உருவாக்கியவர் காசிதானாம்.
  • பாத்திரக் கடையில் அடுக்கி வைத்திருந்தால் பார்க்க பளிச்சென்று தெரிய வேண்டும் என்று மஞ்சள் நிறத்தில் அட்டைப் பெட்டி வடிவமைப்பு.
  • குடும்பப் பாங்கான முகம் வேண்டும் என்று பளபளப்பான நடிகைகளைத் தவிர்த்து பாண்டவர் பூமி படத்தில் நடித்த நடிகையை விளம்பரத்தில் போட்டிருக்கிறார்கள்.
  • 2750 ரூபாய்களுக்கு கருவியை வாங்கி விட்டு சேவை செய்ய மட்டும் பயன்படுத்த வேண்டுமா என்று நினைப்பவர்களுக்கு நடு மேல் பாத்திரங்களை பயன்படுத்தாமல் தனியாக விற்கும் இன்னொரு மூடியை (+200) வாங்கிப் பொருத்தி சாதாரண உயர் அழுத்தக் கலனாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் ஏற்கனவே இருக்கும் குக்கருடன் இன்னொன்று கூடுதல் வசதிக்காக.
திட்டங்கள்
  • இப்போது மாதம் 500 எண்ணிக்கை தயாரிக்கும் உற்பத்தித் திறனை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களாம். கூடவே விற்பனைக்கான முகவர்களையும் ஒவ்வொருவராக நியமிக்க வேண்டும்.
  • சந்தைப்படுத்தலில் வல்லவராக ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் இன்னும் வேகமாகச் செய்யலாம். இன்னொரு பங்குதாரர் உற்பத்தி சம்பந்தமான பணிகளைப் பார்த்துக் கொள்கிறாராம்.
  • அரிசி மாவில் மட்டுமின்றி ராகி, கோதுமை மாவுகளிலும் சேவை செய்யலாம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.
சில ஆலோசனைகள்
  • இதற்கு இன்னும் சில கூட்டல்கள் வேண்டும். தோசை இட்லி மாவுகளே கடையில் அரைத்துக் கிடைக்கும் இந்தக் காலத்தில் புழுங்கலரிசியை அரைத்து மாவாக்கி சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு மனத்தடை. ஆரம்ப காலத்தில் நியூ ஹோம் நிறுவனமே வேறு யாரிடமாவது இணைந்து அரைத்த புழுங்கலரிசி மாவையும் பொதிந்து விற்கலாம்.
  • சேவை செய்த பிறகு பல்வேறு சுவைகளில் அதை தாளிப்பதற்கான கலவைகளும் தயாரிக்கப்பட வேண்டும். எலுமிச்சை சேவை, தேங்காய் சேவை, புளி சேவை, தக்காளி சேவை என்று பல முயற்சித்து பார்க்கலாம். மேகி நூடில்சில் கொடுப்பது போல முன்தயாரிப்பாக இந்த சுவைப் பொதிகளும் தனியாக விற்கப்பட்டால் சேவை செய்து சாப்பிடுவதற்கான இன்னொரு மனத்தடை விலகலாம்.
பரவலாக தீவிரமாக பிரபலப்படுத்தப்பட்டு, உற்பத்தி, வினியோகம், சந்தைப்படுத்துதல் என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி அரிசி உண்ணும் சமூகங்களான தென் சீனா, வியட்நாம், தென்கிழக்காசிய நாடுகள் என்று ஆரம்பித்து இத்தாலிய பிட்சாவும், நூடுல்சும் சாப்பிடும் அகில உலகுக்கும் பரவ வாய்ப்பிருக்கும் ஒரு கண்டுபிடிப்பு இது.

அதற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டி தகுந்த ஆட்களை வேலைக்கு வைத்து, திறம்படச் செயல்பட்டு இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்க நகரங்களிலும், ஆஸ்திரேலிய நகரங்களிலும் சேவை உணவு விடுதிகள் பரவும் நிலை வந்து விடலாம்.