இது ஒரு தொடர் ஆனால் கதை அல்ல
அலுவலகத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து மூட்டை கட்டச் சொல்லி விட்டார்கள். கிட்டத்தட்ட ஆரம்ப கட்டத்தில் வந்து விட்டிருந்தாள். 'எது போனாலும் போகட்டும். எனக்கென்று ஒரு துணை இருக்கிறதே. அவர்களது கனவு வீடு முழு உருப்பெற்று நனவாகி எழுந்து நின்றது. அதைப் பார்க்கும் போது பூரித்துப் போனது.
' எல்லாம் கெட்டுப் போனாலும், சாகும் வரை துணையென்று இருக்க ஒரு இணை இருக்கிறாரே' என்று திருமணம் செய்து கொள்ளும் முயற்சிகளை ஆரம்பித்தாள். அவருக்கு என்ன கட்டாயமோ, இழுத்த இழுப்புக்கு வந்து கொண்டிருந்தார், சிலசமயம். பல சமயம் வன்மையான எதிர்ப்புகள், கருத்து வேறுபாடுகள். என்ன நடந்தது என்று திரும்பிப் பார்க்கக் கூடத் தவிர்க்க நினைக்கும் அளவில் திருமணம் நடந்து முடிந்தது. அதில் உடைந்த கனவுகள், சரிந்த கோட்டைகள் ஏராளம்.
திருமண வாழ்க்கை ஆரம்பித்தது. இவ்வளவு நாள் 'காதலித்து'க் கைப்பிடித்ததாலோ என்னவோ தேன்நிலவு காலம் என்றெல்லாம் கூட தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே சலிப்புத் தட்டியிருந்தது அவருக்கு. வேறு ஏதாவது நிறுவனத்தில் சேருவதற்கு முயற்சிகள் எதுவுமே எடுக்கவில்லை. 'நம்முடைய வருமானத்தை இவர் எதிர்பார்ப்பாரா என்று தெரியவில்லையே! அதை விடுவோம். வீட்டை நல்லபடியாக வைத்து அவருக்கு குறை இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.'
அவரது அலுவலகப் பணிகளுக்கு நான் எப்படி உதவ முடியும். அலுவலக நண்பர்களுக்கு விருந்து அளிக்க அவருடன் பேசி உற்சாகமாக ஏற்பாடுகள் செய்தாள். அவருடன் பேசி என்னென்ன மாதிரி உதவிகள் வேண்டும் என்று கேட்டுக் கேட்டுச் செய்தாள். அலுவலக வாழ்க்கையில் வெற்றியடைந்தால் அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி என்னிலும் திரண்டு விடாதா என்று தன்னை அதில் மூழ்கடிக்க ஆரம்பித்தாள். பணி அவருடையதா அல்லது இவளுடையதா என்று சண்டை போட்டுக் கொள்ளும் ஒரு கட்டம் வந்து விட்டது. தான் வெளியாள்தான் என்பது உறைக்கவே இல்லை அவளுக்கு. பைத்தியம் போல ஓடிக் கொண்டிருந்தாள்.
உள்ளத்தில் ஏமாற்றங்களுடனும் வெறுமையுடனும் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. வயிற்றில் ஒரு உயிர் அசையும் உணர்வும் கனவும் கற்பனையும் எண்ணங்களும் உடலைத் தழுவின. சில நாட்களுக்கு உறைக்கவேவில்லை. நாமும் ஒரு தாயாக முடியுமா! குழந்தைகள் குழந்தைகள் என்று உருகிக் கொண்டிருந்த நாம் இதுவரை நமக்கு ஒரு குழந்தை என்று நினைத்துப் பார்க்கவே இல்லையே! என் வயிற்றிலும் ஒரு உயிர் உருவாகிறது!
அதற்குக் காரணமான கணவரின் மீது அன்பு பொங்கியது. அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று உறுதிமொழிகள் முளைத்தன. அவர் விட்டேற்றியாக இருந்தார். 'என்ன வேணும்னாலும் செய். எனக்கு வேண்டியதை குறைத்து விடாதே' என்று சொல்லாமல் சொன்னார். முற்றிலும் நோகடிக்கும் நேரங்களில் மட்டும் உதவுவதாக வந்து இவளிடமிருந்து சுடு சொல் வாங்கி காயப்பட்டு ஒதுங்கினார். 'பிறக்கும் குழந்தைக்கும் எனக்கும் தொடர்பே வேண்டாம்' என்று ஒதுங்க ஆரம்பித்தார்.
'இப்போ உங்க பணி வாழ்க்கைக்கு தொந்தரவா இருக்கும் என்றால் இந்தக் கருவை வேணும்னா கலைச்சுரலாம். அப்புறம் நமக்கு குழந்தையா பிறக்காமல் போய் விடும்' தனக்குத் தெரிந்த வழியை மூச்சைப் பிடித்துக் கொண்டு சொல்லிப்பார்த்தாள். சொல்வதில் நம்பிக்கையே இல்லாமல் பேசுவது அவருக்கு வெள்ளிடை மலையாகத் தெரிந்தது. 'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அப்புறம் வாழ்நாள் முழுசும் என் குழந்தையை கலைக்கச் சொன்ன பாதகன் என்று பேச்சுக் கேட்க வேண்டி வரும். ஒன் விருப்பப்படியே பெத்து வளர்த்துக்கோ' மூச்சு விட முடிந்தது.
இவளது வாழ்வும், பேச்சும், மூச்சும் வயிற்றில் வளரும் குழந்தையைச் சுற்றி வர ஆரம்பித்தது. வீட்டு வேலைகளை செய்ய உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டாள். குழந்தைக்கு சரியாக சாப்பாடு கிடைக்க வேண்டுமே, அதற்கு பார்த்துப் பார்த்துக் கடைக்குப் போய் பரிந்து பரிந்து ஊட்டினாள், வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு. தனக்குப் பிடிக்காத உணவுகளைக் கூட குழந்தைக்கு வேண்டுமே என்று சாப்பிட்டுக் கொண்டாள்.
அவருக்குக் கிடைக்கும் நேரம் குறைந்து கொண்டே வந்தது. அவர் வேறு உறவுகளைத் தேடிக் கொண்டார். அவரது அலுவலகப் பணிகளில் மூழ்க ஆரம்பித்தார். அலுவலக நட்பு ஒரு பெண்ணின் வீட்டில் நண்பர்களின் கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. இவள் தன் குழந்தைக்கு கொடுத்த நேரம் போக மீதி கணவனுக்கு உதவி செய்ய முற்பட்டு அது அவருக்கு இன்னும் ஆத்திரத்தை வரவழைக்க ஆரம்பித்தது.
வீட்டில் அது சரியில்லை, இது சரியில்லை என்று வாக்குவாதங்கள் முளைத்தன. இந்த நேரத்தில் சம்பாதிக்கவும் முடியாமல் வீட்டில் குழந்தை பெற உட்கார்ந்து விட்ட இவள் மீது மோகனுக்கு ஆத்திரம் அதிகம். அதை சரிவர வெளிப்படுத்த முடியாமல் அவ்வப்போது வன்முறையாக வெடித்துக் கொண்டிருந்தது.
உள்ளத்துக்கும் உடலுக்கும் எந்த ஆதரவும் இல்லாமல் வயிற்றில் வளரும் இன்பப்பந்தை சுமந்து கொண்டிருந்தாள். இந்தக் குழந்தை தான் பார்த்த சிறுமைகளுக்கும் முடங்கல்களுக்கும் உட்பட்டு விடக் கூடாது என்று நினைத்துக் கொள்வாள். மருத்துவமனைக்குப் போய் வருடி மூலம் வயிற்றில் வளரும் குழந்தையின் படத்தை எடுத்துக் கொண்டாள். அதைப் பார்த்து குட்டிப் பாதம், சின்னக் கை என்று கற்பனை செய்து பூரிக்கப் பார்த்தாள். மற்ற எல்லோருக்கும் வேடிக்கையாகவும் கிண்டலாகவும் இருந்தது அவளது நடவடிக்கைகள்.
அவளது எண்ணங்களும் நினைப்புகளும் முழுவதும் குழந்தையின் பக்கம் திரும்பி விட்டிருந்தன. கூடவே கணவரின் அலுவலகப் பணிகளிலும் தனது மூக்கை நுழைத்துக் கொண்டுதான் இருந்தாள். குழந்தை பிறந்து விட்டால் தன்னால் அவ்வளவு செய்ய முடியுமா?
வாரங்கள் உருண்டோடின. குழந்தை பிறக்க வேண்டும். மருத்துவமனைக்குப் போக வேண்டுமா? எந்த மருத்துவமனைக்கு? இடையில் கிடைத்த ஒரு நல்லுணர்வு இடைவெளியில் ஒரு முனைப்பெடுத்து மருத்துவமனை கூட ஏற்பாடு செய்து விட்டார். தயாரிப்புகள் சுறுசுறுப்பாக செய்தாள். உதவிக்கு வைத்திருந்த அம்மாவும் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் பெரிய அளவில் வாக்குவாதங்களும், புண்படுத்தலும், சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டிருந்தன.
வலி எடுத்து மருத்துவமனைக்குப் போகும் நேரம் வரும் போது கணவன் கூட வர வேண்டும் என்று அவளுக்கு எதுவும் நினைப்பில்லை. 'சண்டை போட்டுக்கிட்டு முறைச்சிட்டு இருந்தா இருக்கட்டும்' என்று வீம்போடு கிளம்பி விட்டாள். உதவிக்கு பக்கத்து வீட்டுப் பையன். அவனை அப்படிப் பயன்படுத்திக் கொள்வது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவனுக்கு ஏதோ பரிவு, ஆர்வமாகவே உதவிகள் செய்தான்.
"நான் குழந்தை பிறந்ததும் வந்து பார்க்கக் கூட மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஏதோ பெரிய ஆள் மாதிரி பேசினாயே, தனியாகவே எப்படி இருந்தது" என்று பிற்பாடு கேட்ட போது எதுவும் வருத்தம் வரவில்லை. இதில் என்ன சொல்லிக்காட்ட இவ்வளவு இருக்கிறது என்றுதான் தோன்றியது.
பிறந்த நாளிலிருந்தே குழந்தைக்கு தரித்திரம்தான் வாய்த்திருந்தது. தாயின் கவனிப்பைத் தவிர அன்பு எந்தத் திசையிலிருந்தும் வரவில்லை. உதவிக்கு வந்த நண்பன் கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் வர இவள் மனது இடம் கொடுக்கவில்லை. எப்படியாவது வளரட்டும் என்று ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துப் பார்த்து பாலூட்டி, சீராட்டி, நீராட்டி, தன்னால் முடிந்த உடை மாட்டி அழகு பார்த்திருந்தாள்.
தந்தை முற்றிலும் ஒதுங்கியிருந்தார். அவளுக்குத் தாங்க முடியவில்லை. கணவனின் அரவணைப்பும், அவருடன் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட நட்புறவுகளும் தனக்கு மறுக்கப்படுகின்றன என்று பொங்கி பொங்கி வந்தது. அந்தச் சின்னஞ் சிறு உயிர் அவளது உடலையும், மனதையும் உயிரையும் முழுமையாக ஆக்கிரமித்த நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் மல்லுக்கட்டி சண்டைக் காரியாகிப் போனாள். கணவருக்கு மிகவும் நல்லதாகப் போய் விட்டது.
தனது வாழ்க்கை தொலைந்து போனதே என்ற ஆத்திரத்துடன் இவளையும் குழந்தையும் இழித்துப் பேசவும் தயங்கவில்லை. மூன்றாவது நபர் மூலமாக அவர் தன்னைக் குறைத்துச் சொன்னது தெரிய வந்த போது குன்றிப் போனாள். அவர் மீது இருந்த அன்பும், ஒரு காலத்தில் பொங்கி வழிந்த காதலும் வெறுப்பாக உருப்பெற்றன. 'இந்தக் குழந்தைக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது'
வீட்டில் சமையல் நின்று போக ஆரம்பித்தது. குழந்தைக்கு மம்மு செய்தால் அதில் ஒரு பகுதியை தானும் சாப்பிட்டுக் கொண்டாள். அவரும் அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. முகத்தில் வாட்டம் சில சமயங்களில் தெரிந்தது. தனக்குத் தெரிந்தபடி நட்புகளையும் உறவுகளையும் வளர்த்து வாழ்வை வேறு திசையில் செலுத்திக் கொண்டிருந்தார்.
இவளும் குழந்தையும் ஒரு அறைக்குள் முடங்கிக் கொண்டால், நண்பர்களை வரவேற்று விருந்துகள் நடத்துவது ஆரம்பித்தது. ஆரம்பத்தில் தாங்க முடியாத ஆத்திரம் வந்தாலும், போகப் போக பழகி விட்டது.
இவளது ஒவ்வொரு செயலும் வாழ்க்கையை குலைத்துக் கொண்டிருந்தது. குழந்தை ஒட்டிக் கொண்டிருந்தது. இவளை விட்டு வேறு யாரிடமும் போவதற்குக் கூட மறுத்தது. குழந்தைக்காக மட்டும் வாழ்வதாகப் போனது. 'இது என்ன பைத்தியக்காரத்தனம்! ஒருவருக்கொருவர் அன்பைச் சொரிய ஒரு வாழ்க்கைத் துணை, அப்பாடா என்று இளைப்பாற ஒரு வீடு, அதில் குழந்தை வளர வேண்டும்' என்றுதான் அவள் கனவு கண்டிருந்தாள். எல்லாமே கனவாகவே போய்க் கொண்டிருந்தன.
இன்னமும் கணவரது விவகாரங்களில் தன்னால் முடிந்தவற்றை செய்ய முயன்று கொண்டிருந்தாள். அதில் கருத்து வேறுபாடுகள் பலமாக வெடித்தன. இந்த நிலைமை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்!
மோசத்திலிருந்து மிக மோசமாக போனது நிலவரம். இருவருக்கும் உறவே அற்றுப் போகும் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. குழந்தைக்கு வளரும் வயதுக்கான ஆகாரங்கள் கொடுக்க முடியாமல். குருணைக் கஞ்சி காய்த்து புகட்டி பசியாற்றும் நாட்கள் அடிக்கடி வந்தன. கஞ்சி குடித்து வளரும் குழந்தைகள் சாதிக்க முடியாதா என்ன என்று வழக்கம் போல தனது தத்துவ மனதால் சமாதானப் பட்டுக் கொண்டாள். குழந்தையை பக்கத்து வீட்டு அம்மாவின் பராமரிப்பில் விட்டு விட்டு பகுதி நேர வேலைகளுக்கு ஓடினாள். அதில் வரும் காசில் ஒரு ஆப்பிள் வாங்கிக் கொடுத்து விட முடியாதா!
என்ன ஆனாலும், கணவனிடம் காசு என்று கேட்டு விடக் கூடாது. அவருக்கு மனதில்லாமல் பொருள் வாங்கி இந்தக் குழந்தைக்குக் கொடுத்து விடக் கூடாது என்று ஒரு வீம்பு. அவனிடம் இவளை விட அதிகமான வீம்பு. 'ஒரு பொம்பளைக்கு என்ன அப்படி ஒரு இறுமாப்பு. எல்லாத்தையும் தானே பார்த்துக்குவோம் என்று திமிர். இறங்கி வராமலா போய் விடுவா' என்ற கடுப்பு.
இப்படி எதிரும் புதிருமான பகை உணர்வு பொங்கும் இரண்டு பேர் ஒரே கூரைக்குள் இருக்க வாழ்க்கை நரகமாகிப் போனது. குழந்தைக்கும் கவனிப்பு குலைந்தது. அவரது வாழ்க்கையும் சீரழிந்தது. ஆனாலும் விட்டு விடுதலையாக இருவருக்கும் மனமில்லை. இழுத்துக் கொண்டே போனது.
குழந்தை அம்மாவைப் போலவே வளர்ந்து வந்தாள். முகம் மலர்ந்து சிரிக்கையில் அம்மாவுக்கு உலகே மறந்து போகும். பக்கத்து வீடுகளில் போய் நட்பு பிடித்துக் கொண்டு வந்தாள். சக வயதுக் குழந்தைகளுடன் விளையாடப் போனாள். அவர்களைப் போல உடுப்புகளும், அவர்களிடம் இருப்பதைப் போல பொம்மைகளும் தன்னிடம் இல்லை என்று குறை சொல்லத் தெரியாத பருவம் அது. அவளது உலகில் மகிழ்ச்சி வருத்தம் என்று பிரித்துப் பார்க்கும் பேதம் வந்து விடவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக