இது ஒரு தொடர், ஆனால் கதை அல்ல
நினைவு தெரிந்த நாளிலிருந்தே பொறுப்பேற்றுக் கொள்வது என்பது அவளுக்கு இயல்பாகவே வந்தது. வீட்டில் கடைசிப் பெண்ணாக பிறந்ததால் அவளது அம்மா சின்னக் குழந்தைகளை எப்படி வளர்த்தார் என்று பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. குழந்தைப் பருவத்தில் அவளுக்கு விருப்பமான கடமைகளில் ஈடுபடாமலேயே வளர்ந்து விட்டாள்.
உடலும் வளர்ந்து உள்ளமும் வளர்ந்து வெளியுலகில் அடியெடுத்து வைத்து, உலகில் தனக்கென இடத்தில் தனக்கென பணிகளை உருவாக்கிக் கொள்ளும் பாதையில் நடக்கும் போது ஒரு தவிப்புடனேயே இருந்து கொண்டிருந்தாள். ஏதோ குறைகிறது. மற்ற மாணவர்கள் எல்லாம் கல்லூரி வாழ்க்கையை "அனுபவித்துக்" கொண்டிருக்கும் போது இதில் அனுபவிக்க என்ன இருக்கிறது என்றுதான் அவளுக்குத் தோன்றியது.
சீக்கிரம் வளர்ந்து உலக வாழ்க்கையில் முற்றிலுமாக மூழ்கி, குடும்பம் ஒன்றை உருவாக்கி, வீட்டு சமூக பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதிலும் ஈடுபடத்தான் மனம் துடித்தது. பணி செய்ய வேண்டும், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்ய வேண்டும், வீட்டுக்குள்ளேயே முடங்கி விடக் கூடாது என்பதை எல்லாம் படித்து துடிதுடிப்புடன் மனதுக்குள் குறித்துக் கொண்டாள்.
வேலைக்குப் போகும் போது அக்காவின் குடும்பத்தில் தங்கியிருந்து அவளது குழந்தைகளை சீராட்ட ஆரம்பித்தாள். வேலையில் அவளைப் போல சமர்த்து கிடையாது. நல்ல சம்பளம், நல்ல பேர், தேவைக்கு மேல் அங்கீகாரங்கள். ஆனால், நிறைவளித்தது அந்த குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம்தான். அக்காவுக்கும் பெருமையோ பெருமை. என் தங்கச்சி எவ்வளவு சமர்த்தா குழந்தைகளை பார்த்துக் கொள்கிறாள். குழந்தைகளும் சித்தியின் மீது பாசத்தை பொழிந்தன.
அக்காவுக்கு இன்னொரு குழந்தை பிறக்கவிருக்கும் போது இவளையே பார்த்துக் கொள்ளச் சொல்லித் தீர்மானித்து விட்டார்கள். இவளுக்கும் கொள்ளாத மகிழ்ச்சி. என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டார்களே. அக்கா தங்கச்சியின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தாள்.
குழந்தை பிறந்த நாட்களில் தனது அலுவலகப் பணிகளுக்குக் கூட இரண்டாம் இடம் கொடுத்து விட்டு முழு மூச்சாக குழந்தை வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்தாள். இந்தக் குழந்தை வலிகள், ஏமாற்றங்கள் இல்லாமல் வளர்த்து மலர்ந்து விட்ட பிறகு நாம் நினைத்தால் அலுவலத்தில் ஒரு தம் பிடித்து மேலே வந்து விட முடியாதா என்ன! இரவுகளும், பகல்களும் விழித்தாள். குழந்தைக்கு தேவைகள் போக நேரம் இருந்தால்தான் அலுவலகம் போவது. உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்று நண்பர்கள் உபதேசிக்கும் அளவு மாற்றம் தெரிந்தது.
இதற்கிடையில் கல்யாணமே எனக்கு வேண்டாம் என்று பதின்மப் பருவ வீம்பு கனிந்து கல்யாணம் செய்தால்தான் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்பது உறைத்தது. மனதுக்குப் பிடித்த நண்பரை மனதுக்கினியவர் ஆக்கிக் கொள்ள முற்பட்டாள். அவருக்கு இவள் மீது அளப்பிலா காதல். ஆனால் அக்கா குடும்பத்துக்காக இப்படி தனது வாழ்க்கையை குலைத்துக் கொள்வதாக ஒரே வாக்குவாதம்.
'ஒருவனை மனதால் நினைத்து விட்டால், வேறு யாரையும் இந்த பிறவியில் நினைக்க மாட்டாள் தமிழச்சி' என்றெல்லாம் உறுதி பூண்டு அவருக்கு பொறுமையாகவும் சண்டை போட்டும் தனது கருத்துக்களை விளக்க முயன்று கொண்டிருந்தாள். அவரும் பிடியை விட்டு விடவேவில்லை. அவரது மனம் கோணக் கூடாதே இன்று சில மாலைகளில் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை விட்டுப் போய் இரண்டையும் நரகமாக்கிக் கொண்டிருக்கிறாள். குழந்தைக்கு முழு கவனம் கிடைக்கவில்லை. முக்கியமான தருணங்களில் அவரது கெடுபிடிக்கு ஈடு கொடுக்கப் போய் அக்காவுக்குக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.
இன்னொரு பக்கம் திருமணம் செய்யும் முன்னாலேயே சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு கொள்கை. மோகனிடம் பேசி அவரும் அதே எண்ணத்தில் இருப்பதைப் பார்த்து பெரிய மகிழ்ச்சி. அது வரை தான் சேமித்த சேமிப்புகளைப் போட்டு புறநகரில் நல்ல ஒரு மனை வாங்கினார்கள். நிலம் வாங்குவது இவள் பொறுப்பு, வீடு கட்டுவது அவரது பொறுப்பு, செலவு என்று பேச்சு. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று நிறுவிக் காட்டும் பெருமை இரண்டு பேருக்கும். அந்த அலைச்சல்களிலின் போது குழந்தை நினைவாகவும், குழந்தையுடன் செலவிடும் நேரங்களில் அவருடன் போட்ட சண்டைகளின் வாட்டமுமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
குழந்தை வளர்ப்பிலும் உறுதியான கருத்துக்கள் உண்டு. குழந்தையை தன் போக்கில் வளர விட வேண்டும். பெரியவர்களின் விருப்பங்களை குழந்தையின் மீது திணிக்கக் கூடாது. 'ஒன்றரை வயது குழந்தை பாட்டுப் பாடிக் காட்ட வேண்டும். ஒரு வயது குழந்தைக்கு ஒப்பனை செய்து காட்சிப் பொருளாக்க வேண்டும்.' என்பதெல்லாம் மடத்தனம் என்பது இவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
அவள் அக்காவுக்கு நாளாக நாளாக ஏமாற்றம். 'நம்ம குழந்தையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவாளோ! மூத்த இரண்டு குழந்தைகளும் நினைவு தெரிந்த பிறகுதான் இவள் பார்த்துக் கொள்ளும் நிலைமை வந்தது. இந்தச் சின்னதை ஆரம்பத்திலிருந்தே இப்படி ஆக்கி விட்டால் என்ன ஆவது.'
அக்கா வீட்டின் வரவேற்பு நின்று போக ஆரம்பித்தது. ஒட்டிக் கொண்டிருந்த குழந்தைகள் பள்ளிக்குப் போக ஆரம்பித்து புதிய ஆயாக்களுடன் உலகைக் காண ஆரம்பித்திருந்தன. குட்டிப் பாப்பாவைப் பார்த்துக் கொள்ள கொஞ்சம் தூரத்து உறவான அத்தை ஒருத்தியை பல குழந்தைகளை வளர்த்து அனுபவம் கொண்டிருந்த அத்தையைக் கொண்டு வந்து விட்டார்கள். வீடு இவளுக்கு அன்னியப்பட ஆரம்பித்தது.
'வேலையை முடித்து விட்டு வந்தால் உன் அறைக்குள் இருக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். சாப்பிடலாம். கடைக்குப் போகலாம். அத்தை, அக்கா, அத்தானுடன் வம்பளக்கலாம்.' குழந்தைகள் பார்க்கும் போது ஹாய் ஹலோ சொன்னார்கள். உரக்க ஆரவாரம் செய்தார்கள். அத்தோடு அவரவர் வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். அத்தை குட்டிப் பாப்பாவை முழு உரிமை எடுத்துக் கொண்டிருந்தாள்.
இந்தக் குழந்தைக்கு என்னென்ன செய்ய வேண்டும். எப்படி எப்படி வளர்க்க வேண்டும் என்றெல்லாம் கண்ட கனவுகள் எல்லாம் நொறுங்கிப் போயின. இதற்கிடையில் மனதில் கொண்டிருந்த மோகனும் பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தார். 'உன்னை நம்பி என் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ள முடியாது.' என்று வேறு நட்புகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அதை இவளால் தாங்கிக் கொள்வது முடியத்தான் செய்தது. 'என் கணவன் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைப்பதெல்லாம் பத்தாம் பசலித்தனம். அவர் பலருடன் நட்பாக இருக்கட்டுமே, என் கணவராகவும் பிற்காலத்தில் இருந்து கொள்ளலாம்' என்று தன் மனதில் சமாதானம் செய்து கொண்டாள்.
இதற்கிடையில் வீடு கட்டும் பணி வேறு. யாரோ கட்டி வைத்த வீட்டில் போய் நாம் வாழக் கூடாது. நாமே பார்த்துப் பார்த்துக் கட்ட வேண்டும் என்று ஒரு பொறுப்பாளரை வைத்துக் கொண்டு இரண்டு பேரும் அலைந்து கொண்டிருந்தார்கள். அதில் கருத்து வேறுபாடுகள். தாம் பிடித்த பிடியில் எளிதில் விட்டுக் கொடுத்து விடாத பிடிவாதக் காரர்கள்தான் இரண்டு பேருமே. நாளொரு சண்டையும் பொழுதொரு வாக்குவாதமுமாக வீட்டை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான செலவு அனைத்தும் மோகனின் வருமானத்திலிருந்து கரைந்து கொண்டிருந்தது.
அக்காவை ஒரு நாள் எதிர் கொண்டு, வேறு இடத்துக்குப் போய் விடுவதாகச் சொன்னாள். 'ஏண்டி, நான் உனக்கு இவ்வளவு செய்த பிறகு இப்படித் திடீர்னு விட்டுட்டுப் போவதாகச் சொன்னால் எப்படி' என்று கண்ணீர் விட்டாள். 'நீ இல்லாமல் குழந்தைங்க எல்லாம் ஏங்கிப் போய் விடாதா' என்று காரணமும் சொன்னாள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று அவளுக்கே தெரியும். குழந்தைகள் இன்றைக்கு டிபனுக்கு மேகி நூடுல்ஸ் இல்லை, ரவா உப்புமா என்று சொன்னது போலக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு விளையாடப் போய் விட்டார்கள்.
வலித்தது, நிறைய வலித்தது. அந்த நேரத்தில் மனதுக்கு ஒத்தடம் கொடுத்திருக்கக் கூடியவர் அவரது கவலைகளில் மூழ்கியிருந்தார். வளர்ந்து கொண்டே போகும் வீட்டைப் பற்றியும், அதற்கு செலவாகும் பணத்தைப் பற்றியும், அதற்கென்று எடுத்த கடனைப் பற்றியும்தான் அவரது பேச்சு இருந்தது. 'அக்கா வீட்டை விட்டுப் போகிறாயா, நல்லது. இனிமேலாவது வேலையில் அதிக கவனம் செலுத்து. நம்ம வீட்டு பணிகளுக்கு நேரத்தைச் செலவளி ' என்று கிட்டத்தட்ட கொண்டாட்டமாக பேசி விட்டார்.
அவரது கரிசனத்தை நம்பி நான் இருக்கக் கூடாது. நான் சுயமாக மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் எங்கள் உறவு ஆரோக்கியமாக இருக்கும்' என்று உறுதி பூண்டு பல்லைக் கடித்துக் கொண்டு பணியில் கவனம் செலுத்தினாள். இன்னொரு ஊரில் இருந்த அலுவலகத்தின் கிளைக்கு மாற்றல் கிடைத்து சம்பளமும் இரண்டு மடங்காக உயர்ந்தது.
அங்கு தங்குவதற்குக் கிடைத்த இடத்தில் ஒரு வெளிநாட்டுத் தம்பதி. அந்தப் பெண்மணிக்குக் குழந்தை பிறக்க இருந்தது. அவர்கள் வீட்டில் கட்டண விருந்தாளியாக பலரை நேர்முகம் கண்டு இவள் அவர்கள் மனதுக்குப் பிடித்துப் போனாள். ஏற்கனவே அக்காவின் குழந்தைப் பிறப்பில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் மனதில் இருத்தி எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருந்தாள். புதிய அலுவலகத்தில் வேலையில் இறங்கி விடவே இல்லை. முதல் அலுவலகத்தில் ஆரம்பத்தில் செய்த சாதனைகள் எல்லாம் கடைசி ஆண்டுகளில் கொஞ்சம் சறுக்கும் போது கை கொடுத்தன். இங்கோ ஆரம்பத்திலிருந்தே கெட்ட பெயர்தான்.
மோகனோ உள்ளும் வெளியுமாக அலைக்கழிந்து கொண்டிருந்தார். இவளையும் அலைக்கழித்தார். அலுவலகப் பணி, நட்பு, மனதுக்கு நிறைவளிக்கும் சின்னஞ்சிறு ஒரு உயிர் என்று மூன்று படகுகளில் கால் வைத்து இழுபட்டுக் கொண்டிருந்தாள்.
அலுவலகப் பணியில் சாண் ஏறினால் முழம் சறுக்கம் என்று வீழ்ச்சி மட்டும் தொடர்கதையாக இருந்தது. அதில் கவனம் செலுத்த மனமே வரவில்லை. அதற்கு மூன்றாவது இடம்தான். இந்த ஐரோப்பியக் குழந்தைக்கு நினைவு தெரிய ஆரம்பித்த பிறகு இவள் அவ்வளவு தேவையாக இல்லை. குழந்தையின் தேவைகளை இவளால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. இடைவெளி வளர்ந்து கொண்டே போனது. 'இது என்ன பெரிய விஷயம். எல்லா இடத்திலும் மனிதர்கள் ஒன்றுதான். இந்தக் குழந்தைக்கு நான் பணி செய்ய முடியாதா என்ன. அன்பு மட்டும் இருந்தால் எதையும் சாதித்து விடலாம்' என்று விடாப்பிடியாக முயன்று கொண்டிருந்தார்கள்.
குழந்தையின் பெற்றோரும் பொறுமையான புரிவுணர்வுடன் இவளுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த வகையில் இவளுக்கு உதவி செய்தார்கள். அது நிச்சயமாக போதுமானதாக இருக்கவில்லை. 'இப்படி ஒவ்வொரு குழந்தைக்குப் பின்னால் ஓடிக் கொண்டே இரு' என்று நாளொரு சச்சரவும் பொழுதொரு தொலைபேசி சண்டையுமாக உறவு வலுவிழந்து கொண்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளில் குழந்தைக்கு தான் எந்தவிதத்திலும் உதவியாக இல்லை என்று இவளுக்கு உறைத்தது. குழந்தையின் அம்மாவுக்கும் தெரிந்தது. தொடர்பை வெட்டுவதை அந்த அம்மாவே செய்தார். 'ஓரிரு மாதங்களில் நாங்கள் எங்க ஊருக்குத் திரும்பப் போறோம். அதுவரை நீதான் குழந்தையை பார்த்துக்கணும்' காரணங்கள் என்னவென்று இரண்டு பேருக்குமே புரிந்தது.
'நானா இருந்தால் அப்படிச் சொன்ன அந்தக் கணமே பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பியிருப்பேன். வெட்கங்கெட்ட பெண் நீ. அதற்குப் பிறகும் அவங்க வீட்டில் தங்க உனக்கு எப்படி மனசு வந்தது'. காயப்படுத்துகிறோம் என்று தெரியாமலேயே ஒருவர் பேசுவாரா என்ன!
1 கருத்து:
மா.சி.
இன்று தான் படிக்க ஆரம்பித்தேன். முடித்துவிட்டு சொல்கிறேன்.
கருத்துரையிடுக